பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

தபால் அலுவலக மாத வருமானத் திட்டம்... யாருக்கு ஏற்றது, யாருக்கு ஏற்றதல்ல?

தபால் அலுவலகம்...
பிரீமியம் ஸ்டோரி
News
தபால் அலுவலகம்...

ஒளிமயமான ஓய்வுக்காலம்! சூப்பர் பிளானிங் - 18

நம்மவர்களுக்கு முதலீட்டிருந்து மாதம்தோறும் வருமானம் வருகிறது எனில், அந்தத் திட்டத்தின் மீது எப்போதும் ஓர் இனம் புரியாத கவர்ச்சி இருக்கும். அதுவும் முதலீடு மற்றும் வருமானத்துக்கு முழு உத்தரவாதம் இருக்கிறது எனில், சொல்லவா வேண்டும்? அது போன்ற ஒரு திட்டம்தான் தபால் அலுவலக மாத வருமானத் திட்டம் (Post Office Monthly Income Scheme - PO MIS) ஆகும்.

இந்தத் திட்டம் யாருக்கு ஏற்றது, யாருக்கு ஏற்றதல்ல என விரிவாகப் பார்ப்போம்.

என்.விஜயகுமார், நிர்வாக இயக்குநர்,
https://www.click4mf.com/
என்.விஜயகுமார், நிர்வாக இயக்குநர், https://www.click4mf.com/

மத்திய அரசு உத்தரவாதம்...

தபால் அலுவலக மாத வருமானத் திட்டம் என்பது தபால் அலுவலகத்தின் முதலீடு செய்யக்கூடிய உத்தரவாத திட்டமாகும். இந்த உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்தத் தபால் அலுவலகத் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு மாதம்தோறும் நிலையான வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம், முதலீட்டாளருக்கு நிலையான வருமானம் வழங்குவதாக இருக்கிறது

வட்டி வருமானம் எவ்வளவு?

தற்போது இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 6.60% வட்டி வருமானம் வழங்கப்படுகிறது. இதற்கு முன் 7.6% வட்டி வழங்கப்பட்டது. வட்டி மாதம்தோறும் வழங்கப்படுவதால்தான் மாத வருமானத் திட்டம் என அழைக்கப்படுகிறது.

முதலீடு செய்த மறுமாதத்திலிருந்து வட்டி வருமானம் வழங்கப் படும். இந்த வருமானம் நாட்டின் சராசரி பணவீக்க விகிதத்தைவிட சுமார் 1% - 1.5% என்கிற அளவுக்குதான் அதிகமாக இருந்துவருகிறது.

தபால் அலுவலக மாத வருமானத் திட்டம்... யாருக்கு ஏற்றது, யாருக்கு ஏற்றதல்ல?

யாருக்கு ஏற்றது, யாருக்கு ஏற்றதல்ல?

குறைவான வருமானம் என்றாலும் ரிஸ்க் எதுவும் இருக்கக் கூடாது; மாதம்தோறும் வருமானம் வர வேண்டும் என்று நினைக் கிறவர்களுக்கேற்ற திட்டம் இதுவாகும்.

நிலையான வருமானம் எதிர்பார்க்காதவர்கள் மற்றும் பணவீக்க விகிதம் மற்றும் வாழ்க்கைமுறை (LIfesstyle) பணவீக்க விகிதத்தைச் சமாளிக்கும் விதமாக அதிக வருமானத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்தத் திட்டம் ஏற்றது அல்ல!

இந்தத் திட்டத்துக்கான வட்டியானது, மூன்று மாதத்துக்கு ஒரு முறை மாற்றத்துக்கு உள்ளாகும். ஆனால், ஒருவர் முதலீட்டை மேற்கொள்ளும்போது என்ன வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படுகிறதோ, அந்த வட்டி இந்தத் திட்டத் தின் முதலீட்டுக் காலமான ஐந்து ஆண்டுகளுக்கு மாற்றம் இல்லாமல் இருக்கும். அதாவது, இப்போது முதலீடு செய்தால், 6.6% வட்டி என்பது இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இருக்கும்.

மாற்றுத் திட்டங்கள்...

ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் பென்ஷன் திட்டங்கள், தபால் அலுவலகம் மற்றும் வங்கியில் செயல்படுத்தப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், மூத்த குடிமக்களுக்கான பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா ஆகியவையும் மாற்று முதலீட்டுத் திட்டங்களாக உள்ளன.

மேலும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் ஈக்விட்டி, ஹைபிரிட் மற்றும் கடன் ஃபண்டுகளின் முதலீட்டுக் கலவை (Portfolio) அல்லது கடன் ஃபண்ட் தொகுப்பு நிதியி லிருந்து (Corpus) சிஸ்ட மேட்டிக் வித்ட்ராயல் பிளான் (Systematic Withdrawal Plan - SWP) மூலம் குறிப்பிட்டத் தொகையை மாதம்தோறும் பென்ஷன்போல் பெறும் வசதி மாற்றுத் திட்டமாக உள்ளது.

அடிப்படைத் தகுதி...

இந்தத் திட்டத்தில் சேர இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு கட்டாயம் ஆகும்.

டெபாசிட் போடுவதற்கான படிவம் தபால் அலுவலகத்தில் கிடைக்கும். அதை நிரப்பிக் கொடுக்க வேண்டும். மேலும், இரண்டு மார்பளவு புகைப் படங்கள் தேவைப்படும்,

முகவரி மற்றும் அடை யாளத்துக்கான ஆதாரம் (ஆதார், பாஸ்போர்ட், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவை) தர வேண் டும். பான் கார்டு தர வேண்டும். அது இல்லை எனில், படிவம் 60 அல்லது 61-ஐ நிரப்பித் தர வேண்டும். கணக்கு ஆரம்பிக்க தபால் அலுவலகம் செல்லும் போது அனைத்து ஆவணங் களின் ஒரிஜினலையும் எடுத்து செல்லவும்.

முதலீட்டுக்கு நாமினியை நியமிக்கும் வசதி இருக்கிறது. நாமினியை முதலீட்டை ஆரம்பிக்கும்போதே நியமிப் பது நல்லது.

இந்தத் திட்டத்தில் சேர வயது வரம்பு எதுவும் இல்லை. மைனர்கள் பெற்றோர் அல்லது காப்பாளர் மூலம் முதலீடு செய்யலாம். 10 வயதுக்கு மேற் பட்ட மைனர்கள் அவர்கள் பெயரிலேயே இந்தக் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம்.

குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.1,000 ஆகும். தனிநபர் ஒருவர் அதிகபட்சம் ரூ.4.5 லட்சம் முதலீடு செய்யலாம். தம்பதியாக இணைந்து முதலீடு செய்வதாக இருந்தால், அதிகபட்சம் ரூ.9 லட்சம் டெபாசிட் போடலாம்.

அதிகபட்சம் மூன்று பேர் சேர்ந்து இந்தக் கணக்கை ஆரம்பிக்கலாம். இப்படி ஜாயின்ட் கணக்கை ஆரம் பிக்கும்போது ஒவ்வொரு வருக்கும் சமபங்களிப்பு செய்யலாம். ஒருவரின் பங்களிப்பு ரூ.4.5 லட்சத்தைத் தாண்டக் கூடாது.

மைனர் பெயரில் கணக்குத் தொடங்கும்போது மைனருக் கான வரம்பு, காப்பாளருக் கான வரம்பு தனித் தனியாகும். வரம்புக்கு அதிகமாக முதலீடு செய்தால், அந்தப் பணம் முதலீட்டாளருக்குத் திருப்பி அளிக்கப்படும். அந்தக் குறிப் பிட்ட காலத்துக்கு சேமிப்புக் கணக்குக்கான வட்டி மட்டுமே வழங்கப்படும்.

முதலீட்டை இடையில் எடுத்தால்...

முதலீடு செய்த ஓராண் டுக்கு முன் டெபாசிட்டை எடுக்க அனுமதி இல்லை. அதன் பிறகு அபராதத்துடன் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். டெபாசிட் செய்து ஓராண்டு முதல் மூன்று ஆண்டுக்கு முன் பணத்தை எடுத்தால், ஆரம்பத்தில் செய்யப்பட்ட முதலீட்டுத் தொகையில் 2% அபராதமாக விதிக்கப்படும். முன்கூட்டியே பணத்தை எடுப்பது எனில், அதற்கென இருக்கும் பிரத்யேக படிவத்தை நிரப்பித் தர வேண்டும். ஐந்து ஆண்டுக்குப் பிறகு, தேவைப்பட்டால் கணக்கை முடித்துக்கொள்ளலாம்.

முதிர்வுக்கு முன் டெபாசிட் போட்டவர் இறந்து விட்டால் கணக்கு முடிக்கப்பட்டு நாமினி அல்லது சட்டப்படியான வாரிசுகளுக்கு பணம் வழங்கப்படும்.

மூன்று ஆண்டுக்குப் பிறகு, வைப்புத் தொகையை எடுத்தால் 1% அபராதம் கழிக்கப்படும்.

வட்டியை டெபாசிட்தாரர் பெற்றுக்கொள்ள வில்லை எனில், வட்டிக்கு வட்டி வழங்கப்படாது.

தபால் அலுவலக மாத வருமானத் திட்டம்... யாருக்கு ஏற்றது, யாருக்கு ஏற்றதல்ல?

வரிச் சலுகை உண்டா?

இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுத் தொகை மற்றும் வட்டி வருமானத்துக்கு வருமான வரிச் சலுகை எதுவும் கிடையாது.

வட்டி வருமானம் ஒருவரின் இதர வருமானமாகக் கணக்கிடப்பட்டு அவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டிவரும். அடிப்படை வரி வரம்புக்குள் வரவில்லை எனில், வரி எதுவும் கட்ட வேண்டியிருக்காது.

முதலீடு செய்யலாமா?

இந்தத் திட்டத்தின் கவர்ச்சிகரமான அம்ச மாக இருப்பது, மாத வட்டி வருமானம் மட்டுமே. மற்றபடி முதலீடு மற்றும் வட்டிக்கு வரிச் சலுகை இல்லை என்பது பாதகமான அம்சமே. மேலும், மூத்த குடிமக்களுக் கான சேமிப்புத் திட்ட வட்டி 7.4 சதவிகித்துடன் ஒப்பிட்டால் இதில் வட்டி குறைவாகும்.

முதலீடு மற்றும் வருமானத்தில் ரிஸ்க் எதுவும் வேண்டாம் என நினைக்கிற மூத்த குடிமக்கள், இதர முதலீட்டுத் திட்டங்களான மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (அதிகபட்ச முதலீடு ரூ.15 லட்சம்), பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா (அதிகபட்ச முதலீடு ரூ.15 லட்சம்) ஆகியவற்றில் முதலீட்டு வரம்பைத் தாண்டும்போது மட்டுமே இந்தத் திட்டத்தைப் பரிசீலனை செய்யலாம்!

(திட்டமிடல் தொடரும்)