Published:Updated:

எல்லா காலத்துக்கும் ஏற்ற தபால் அலுவலக டைம் டெபாசிட்டுகள்..!

சேமிப்பும் முதலீடும்
பிரீமியம் ஸ்டோரி
News
சேமிப்பும் முதலீடும்

சேமிப்பும் முதலீடும் - 6

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் (எஃப்.டி) பற்றி சில வாரங்களுக்கு முன் விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதில், ‘வங்கி எஃப்.டி-யில் அசல் மற்றும் வட்டி எல்லாம் சேர்ந்து வங்கி ஒன்றில் ரூ.5 லட்சத்துக்குத்தான் உத்தரவாதம் இருக்கிறது’ எனக் குறிப்பிட்டிருந்தோம். இதைப் படித்துப் பார்த்த சேலத்தைச் சேர்ந்த வாசகர் குருமூர்த்தி, ‘‘தபால் அலுவலக முதலீடுகளுக்கு 100% உத்தரவாதம் உண்டே, தபால் அலுவலகத்தில் அனைவரும் போடக்கூடிய ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் ஏதாவது இருக்கிறதா’ எனக் கேட்டிருந்தார். அவருக்குப் பதில் சொல்லும் விதமாக இந்த வாரத்தில் தபால் அலுவலக டைம் டெபாசிட்டுகள் பற்றிப் பார்ப்போம்.

சிவகாசி மணிகண்டன் 
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன் நிதி ஆலோசகர், Aismoney.com

தபால் அலுவலக டெபாசிட்டை ‘டைம் டெபாசிட்’ (Time Deposit) என்பார்கள். தபால் அலுவலக டெபாசிட்டில் போடப்படும் அசல் மற்றும் அதற்கான வட்டி இரண்டும் சேர்ந்து அளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் மூலதனத்துக்கு முழுக்க மத்திய அரசு உத்தரவாதம் அளிக்கிறது. எனவே, ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் தொடங்கி, மூத்த குடிமக்கள், குடும்பத் தலைவிகள் எனப் பலரும் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

இந்த டைம் டெபாசிட்டுகளுக்கான வட்டி, மூன்று மாதத்துக்கு ஒரு முறை மாற்றத்துக்குள்ளாகக்கூடும். 2020 ஜனவரி- மார்ச் காலண்டில் வட்டி விகிதம் 6.9% - 7.7 சதவிகித மாக இருந்தது. இது 2020 ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் 5.5% முதல் 6.7 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. அது முதல் இப்போது வரைக்கும் அதே வட்டி விகிதம்தான் தொடர்கிறது.

டைம் டெபாசிட்டைப் பொறுத்தவரை, டெபாசிட் எப்போது ஆரம்பிக்கும்போது இருக்கும் வட்டி விகிதம், முதலீட்டுக் காலம் முழுக்க வழங்கப் படும். நடுவில் வட்டி விகிதம் மாறினாலும், டெபாசிட்தாரருக்குக் கிடைக்கும் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது.

இந்த டைம் டெபாசிட், ஓராண்டு, இரண்டாண்டு, மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு முதிர்வுக் காலத்தைக் கொண்ட நான்கு திட்டமாக உள்ளது. இந்த டைம் டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் (பார்க்க, அடுத்த பக்கத்தில் உள்ள அட்டவணை). என்பது பணவீக்க விகிதத்தைவிட 0.5-1% அளவுக்குதான் அதிகமாக இருக்கும் என்பதால், ஒருவர் அவரின் மொத்த முதலீட்டையும் இதில் போடுவது லாபகரமாக இருக்காது.

மேலும், வட்டி வருமானத்துக்கு வரியைக் கட்ட வேண்டும் என்பது வருமானத்தைக் குறைக்கும். இந்த டெபாசிட்டுக்கு மூன்று மாதத்துக்கு ஒரு முறை கணக்கில் வட்டி போடப்படும். ஆனால், ஆண்டுக்கு ஒரு முறைதான் தரப்படும்.

எல்லா காலத்துக்கும் ஏற்ற தபால் அலுவலக டைம் டெபாசிட்டுகள்..!

அடிப்படை தகுதி...

இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் இந்த டைம் டெபாசிட்டுகளில் முதலீடு செய்ய முடியும். தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு இருந்தால் முதலீட்டை ஆரம்பித்துவிடலாம். பத்து வயதுக்கு மேற்பட்டவர்கள், அவர்களே இந்த டெபாசிட்டைப் பராமரிக்க முடியும். அதற்கு குறைவான வயதுள்ளவர்கள், பெற்றோர் அல்லது காப்பாளர் மூலம் டெபாசிட் போட வேண்டும். குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 ஆகும். அதன்பிறகு ரூ.100-ன் மடங்கில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்துகொள்ளலாம்.

பான் கார்டு, ஆதார் கார்டு இருந்தால் இந்த டெபாசிட்டை ஆரம்பித்துவிடலாம். டெபாசிட்டை ஆரம்பிக்கும்போது இந்த ஆவணங்களின் ஒரிஜினலைக் கையோடு கொண்டு செல்லவும். நாமினியை நியமிக்கத் தவறாதீர்கள். எந்த ஒரு தபால் அலுவலகக் கிளையிலும் தொடங்க முடியும்.

எல்லா காலத்துக்கும் ஏற்ற தபால் அலுவலக டைம் டெபாசிட்டுகள்..!

யாருக்கு ஏற்றது?

சேமிப்புக் கணக்கைவிட சற்றுக் கூடுதல் வருமானம், மூலதனத்துக்குப் பாதுகாப்பு விரும்பும் ஓராண்டு முதல் மூன்றாண்டு கழித்து பணம் தேவைப்படுபவர்கள் இந்த டைம் டெபாசிட்டைத் தேர்வு செய்யலாம். இது மொத்த முதலீடாக டெபாசிட் போடுபவர்களுக்கு ஏற்ற திட்டமாகும்.

டைம் டெபாசிட்டில் ஐந்தாண்டுக் காலத் திட்டத்தைத் தேர்வுசெய்து, முதலீடு செய் பவர்களுக்கு வருமான வரிப் பிரிவு 80சி-யின்கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு, ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை இருக்கிறது. வரிச் சலுகையும் வேண்டும்; மூலதனத் துக்கும் ரிஸ்க் இருக்கக் கூடாது; ஓரளவுக்கு வட்டி வருமானம் (ஐந்தாண்டு டைம் டெபாசிட் வட்டி வருமானம் 6.7%) வேண்டும் என்பவர்கள் இதைத் தேர்வு செய்யலாம்.

யார் முதலீடு செய்யக் கூடாது?

மூன்று ஆண்டுக்கு மேற்பட்ட நிதி இலக்கைக் கொண்டவர்கள், முதலீட்டில் ரிஸ்க் எடுக்கத் தயார், பணவீக்க விகிதத்தைத் தாண்டிய வருமானம் வேண்டும், வருமானத்தில் வரி அனுகூலம் தேவை என்பவர்கள் இந்த டைம் டெபாசிட் முதலீட்டைத் தவிர்ப்பது நல்லது. அது போன்ற வர்கள் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள், ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டு களைத் தேர்வு செய்து முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.ஆர்.டி மற்றும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) போன்ற தொடர் முதலீடு மேற்கொள்பவர்களுக்கு ஏற்ற திட்டம் இது அல்ல.

கடன் வசதி...

இந்த டைம் டெபாசிட் முதலீட்டை, முதலீடு செய்து ஆறு மாதத்துக்குள் எடுக்க முடியாது. அதன் பிறகு அபராதத்துடன் எடுத்துக் கொள்ளலாம். டெபாசிட்டை ஆரம்பித்து ஆறு மாதத்துக்கு மேல் ஒராண்டுக்குள் எடுத்தால், தபால் அலுவலக சேமிப்புக் கணக்குக்கு வழங்கப்படும் 4% வட்டிதான் தருவார்கள். ஓராண்டுக்குப் பிறகு எடுத்தால், வட்டி வருமானத்தில் 2% கழித்துகொள்ளப் பட்டு, மீதமுள்ள பணம் தரப்படும். இந்தப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்கும் வசதியும் இருக்கிறது. ஒரு தபால் அலுவலகத்திலிருந்து இன்னொரு தபால் அலுவலகத்துக்கு இந்த டெபாசிட்டை மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கிறது. டெபாசிட்டின் முதிர்வுக் காலத்தை அதிகரிக்கும் வசதியும் இருக்கிறது.

வருமான வரிச் சலுகை...

டைம் டெபாசிட் திட்டங்களில் ஐந்து ஆண்டு முதிர்வு கொண்ட திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு (ஆண்டு வட்டி 6.7%) மட்டும் 80சி பிரிவின்கீழ் நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு, ரூ.1.5 லட்சம் வரைக்கும் வருமான வரிச் சலுகை இருக்கிறது. இந்த வட்டி வருமானத்துக்கு வரி இருக்கிறது. இந்த வட்டி வருமானத்தை இதர வருமானமாக காட்டி வரி கட்ட வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.50,000 வரைக்கும் வட்டி வருமானத்துக்கு வரி இல்லை.

மாற்று முதலீட்டுத் திட்டங்கள்...

சற்று ரிஸ்க் எடுப்பவர்கள், குறிப்பிட்ட கால முதிர்வைக் கொண்ட அதிக வட்டி கிடைக்கும் வங்கிகள் மற்றும் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்களின் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்யலாம். இவற்றின் வட்டி வருமானம் டைம் டெபாசிட்டை விட சுமார் 1-2% அதிகமாக இருக்கும். ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு தபால் அலுவலகத்தின் தேசிய சேமிப்பு திட்டம் (என்.எஸ்.சி வட்டி வருமானம் 6.8% மற்றும் முதலீட்டுக்கு 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை கிடைக்கும்), ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்கக்கூடியவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கடன் ஃபண்டுகள் ஏற்றதாக இருக்கும். முதலீடு மற்றும் வட்டி வருமானத்துக்கு முழுக்க பாதுகாப்பு இருப்பாதால், ரிஸ்க் எடுக்க விரும் பாதவர்களுக்கு ஏற்ற முதலீடாக இருக்கும்.