Published:Updated:

தாறுமாறாக உயரும் தங்கம் விலை... இப்போது வாங்கலாமா, காத்திருக்கலாமா..? வழிகாட்டும் கணிப்பு

உயரும் தங்கம் விலை...
பிரீமியம் ஸ்டோரி
உயரும் தங்கம் விலை...

கவர் ஸ்டோரி

தாறுமாறாக உயரும் தங்கம் விலை... இப்போது வாங்கலாமா, காத்திருக்கலாமா..? வழிகாட்டும் கணிப்பு

கவர் ஸ்டோரி

Published:Updated:
உயரும் தங்கம் விலை...
பிரீமியம் ஸ்டோரி
உயரும் தங்கம் விலை...

தங்கத்தில் முதலீட்டை மேற்கொண்டவர் களுக்கு உற்சாகத்தையும், சந்தோஷத் தையும் கொடுக்கிற ஒரு வருடமாக 2022-ம் ஆண்டு மாறி வருகிறது. காரணம், தங்கம் விலை கடந்த ஓராண்டில் மட்டும் மிகப் பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது.

ஷியாம் சுந்தர்
கமாடிட்டி நிபுணர்
ஷியாம் சுந்தர் கமாடிட்டி நிபுணர்

2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் இதேபோல் இடைவிடாமல், தொடர்ச்சியாக சர்வதேசச் சந்தையில் அதிகரித்துக்கொண்டே வந்தது. அதாவது, ஒரு டிராய் அவுன்ஸ் (31.10 கிராம்) 2,000 டாலருக்கும் மேலாக வர்த்தகமானது. கோவிட் 19 காரணமாக உலகப் பொருளாதாரம் பாதித்துவிடும் என்ற அச்சத்தில் தங்கத்தின் விலை பயங்கரமாக அதிகரித்தது.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உலக நாடுகள் அதிலிருந்து மீண்டு சகஜநிலைக்கு திரும்பும் நிலையில், தற்போது ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றம் ஏற்பட்டதன் விளைவாக, மீண்டும் அதே நிலைக்கு தங்கத்தின் விலையை சந்தைகள் எடுத்துச் சென்றுள்ளன.

ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதிப்பதால், ரஷ்யாவிலிருந்து ஏற்றுமதியாகக்கூடிய கச்சா எண்ணெய், அலுமினியம் போன்றவை உலகச் சந்தைக்கு வருவது தடைபடும் என்கிற காரணத்தினால், பெரும்பாலான கமாடிட்டி பொருள்களின் விலைகள் குறிப்பாக, உலோகங்கள் நிக்கல், காப்பர், அலுமினியம் அனைத்தும் 2008-ம் ஆண்டின் உச்ச விலையைத் தாண்டி வர்த்தகமாகி வருகின்றன. பதற்றமான இந்தத் தருணத்தின் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்பட்டுவிடும் என்கிற அச்சம் முதலீட்டாளர் களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில், தங்கமானது ஒரு பாதுகாப்பான முதலீடாக முதலீட்டாளார்களால் பார்க்கப்படுகின்றன. அதனால் சர்வதேச சந்தையில் இதன் கணிசமான விலை அதிகரித்து வருகின்றன. அதன் தாக்கத்தைத்தான், நம் நாட்டிலும் நாம் இப்போது உணர்ந்து வருகிறோம்.

முதலீடுகள் இடம்பெயர்தல்

பொதுவாக, முதலீடுகள் என்று சொல்லப் படுபவை – அசையாச் சொத்துகளான மனைகள் மற்றும் கட்டடங்கள், ஃபிக்ஸட் டெபாசிட்டுகள், தங்கம் சார்ந்த முதலீடுகள், பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள், கடன் பத்திரங்கள் மற்றும் கரன்சி முதலியவை ஆகும்.

இந்த முதலீடுகளில் இருந்து இன்னொரு முதலீட்டுக்கு முதலீட்டாளர்கள் அவ்வப்போது மாறிக் கொண்டேயிருப்பார்கள். எதிர்காலத்தில் உலகப் பொருளாதாரத்தில் நிகழக்கூடிய மாற்றங்கள் எவ்வாறு இருக்கக்கூடும் என்பது குறித்து முதலீட்டாளர்களின் கருத்துகள் மற்றும் சிந்தனை ஓட்டம்தான் முதலீடுகள் இடம்பெயரக் காரணம். இதனால், பல பொருள்களின் விலை சந்தையில் தடாலடியாகக் குறைந்தும் அதிகரித்தும் காணப்படுகின்றன.

உலக அளவில் ஒவ்வொரு நிகழ்வையும் சந்தைகள் கூர்ந்து கவனிக்கின்றன. 2020-ல் கோவிட் பாதிப்புகளால் ஏற்பட்ட பாதிப்பின் விளைவாக, 2021-ம் ஆண்டு முதலே கடல் வழிப் போக்குவரத்தில் விநியோகச் சிக்கல் நீடித்து வருகிறது. தவிர, கோவிட் காரணமாகத் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னையும் தீரவில்லை. இந்தச் சிக்கல்களிலிருந்து விடுபட்டு வருவதற்குள், தற்போது போர் பதற்றம் என்று சொல்லும்போது, தங்கத்தின் மீதான முதலீட்டுப் பார்வை வலுப்பெறுகிறது. தங்கத்தின் விலை கிழே இறங்க விடாமல் தடுக்கவும் செய்கிறது.

தாறுமாறாக உயரும் தங்கம் விலை... இப்போது வாங்கலாமா, காத்திருக்கலாமா..? வழிகாட்டும் கணிப்பு

கோல்ட் இ.டி.எஃப் முதலீடுகள்

உலக அளவில் கோல்ட் இ.டி.எஃப் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்குத் தங்கத்தின் விலை சர்வதேசச் சந்தையில் 2040 டாலர்களையொட்டி வர்த்தகமாகி வருகிறது.

தங்கத்தை அடிப்படையாகக் கொண்டு வர்த்தகமாகிற உலகின் மிகப் பெரிய நிறுவனமான கோல்டு இ.டி.எஃப்பில் தங்க முதலீடுகள் 1054 மெட்ரிக் டன்களாக அதிகரித்துள்ளன. இது 2021 மார்ச் மாதத்துக்குப் பிறகு அதிகபட்ச முதலீடு நடைபெற்றிருப்பதாகப் பார்க்கப்படுகின்றன.

இந்தியாவிலும் தங்கம் சார்ந்த கோல்டு இ.டி.எஃப் முதலீடுகள் அதிகரித்துள்ளன. 2021-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் கோல்ட் இ.டி.எஃப் முதலீடு செய்வதற்காக புதிதாக 32.09 லட்சம் அக்கவுன்டுகள் திறக்கப்பட்டுள்ளன. 2020 டிசம்பர் மாதத்தில் இது 8.87 லட்சமாக இருந்தது.

2020-ம் ஆண்டில் டிசம்பர் வரையிலான காலத்தில் ரூ.14,174 கோடியாகக் காணப்பட்ட முதலீடுகள், 2021 டிசம்பர் வரையிலான காலத்துடன் ஒப்பிடுகையில் 30 % அதிகரித்து, ரூ.18,405 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கிகளின் தங்கம் மீதான முதலீடுகள் அதிகரிப்பு

உலக நாடுகளின் மத்திய வங்கிகள் 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2021-ம் ஆண்டில் 82% அதிகரித்து அதாவது, 463 டன்களாகத் தங்கத்தை தனது சேமிப்பாக மாற்றியுள்ளது.

ரஷ்யாவின் மத்திய வங்கியின் டாலர் அடிப்படையிலான முதலீடுகளை வளர்ந்த நாடுகள் முடக்கியுள்ளதால், தங்கத்தின் மீதான கவனத்தை ஈர்த்துள்ளது.

பொதுவாக, ஒவ்வொரு நாடும் அந்நியச் செலாவணி கையிருப் பாக தங்கம் மற்றும் டாலர்களாகச் சேமிக்கின்றன, சில சமயங்களில் ஒரு நாட்டின் மீது விதிக்கிற பொருளாதாரத் தடையால், அந்த நாடு வைத்திருக்கும் டாலர்களை பொருளாதாரத் தடைகள் என்று காரணம் காட்டி முடக்குகிற காரணத்தால் பொருளாதாரத்துக்கு பயனற்ற தாக மாறிவிடுவதால் தங்கம் பாதுகாப்பாகத் தெரிகிறது.

தங்கம் உலகளவில் ஏற்றுக் கொள்ளக்கூடியது என்பதால், அதன் வழியாக வர்த்தகத்தை மேற்கொள்ளலாம் என்கிற எண்ணத்தைத் தூண்டுகிறது.

நமது இந்தியாவும் தங்கத்தை மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பில் ஒரு பகுதியாக வைத்துக்கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கி தனது மொத்தக் கையிருப்பில் 7 சதவிகிதத்தைத் தங்கமாக வைத்துள்ளது. 2009-ம் ஆண்டிற்குப் பிறகு 2021-ம் ஆண்டில் இந்தியா 77 மெட்ரிக் டன்கள் என்ற அளவுக்குத் தங்கத்தை வாங்கியுள்ளது. 2009-ம் ஆண்டு 200 டன்களை வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு நுகர்வு மற்றும் முதலீடுகள்

இந்தியாவைப் பொறுத்தவரை, நுகர்வு கலாசாரம் என்பது விலை அதிகரிக்கும்போது, ஆபரணத் தங்கத்தின் விற்பனை குறைவாக இருக்கிறது. விலை இறங்கும்போது வாடிக்கை யாளர்கள் அதை அதிக அளவில் வாங்குவதால், விற்பனை அதிகரிக்கிறது.

2020-ம் ஆண்டு கோவிட்19 காரணமாகத் தங்கத்தின் விலை (22 காரட்) கிராம் ஒன்றுக்கு ரூ.5,000-மாகக் காணப்பட்டது. அதன் பிறகு 2021 –ம் ஆண்டின் மார்ச் மாதத்தில், தங்கத்தின் விலை (22 காரட்) கிராம் ஒன்றுக்கு ரூ.4,300-ஆக சரிந்து காணப்பட்ட நிலையில், விற்பனை அதிகரித்தது. இதேபோல், தற்போதும், புதிய உச்சத்துக்குச் சென்று, அதிலிருந்து கீழ் இறங்கி வர்த்தகம் நடைபெறும்போது, விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

உலக கோல்டு கவுன்சிலின் கருத்துபடி, இந்தியாவில் தங்கத்தின் மீதான முதலீடு என்பது தனிநபர் வருமானத்தையொட்டி யிருப்பதாகக் கூறியுள்ளது. இந்திய மக்களின் தங்கத்தின் மீதான பார்வை என்பது வருமானம் மற்றும் விலை முக்கியத்துவம் பெறுகிறது. இது தவிர, வங்கிகள் தரும் வட்டி விகிதங்கள், பணவீக்கம், அரசாங்கம் விதிக்கிற இறக்குமதி வரிகள், வருடாந்தர மழைப்பொழிவு போன்றவை காரணமாக இருக்கின்றன.

பொதுவாக, குறுகிய காலத்தில், பணவீக்கம் 1% அதிகரித்தால், தங்கத்தில் மக்கள் முதலீடு செய்வது 2.5% உயர வாய்ப்பிருப்பதாக ஒரு கணக்கு சொல்கிறது. இதே போல், பணவீக்கம் 1% சரிந்தால், 1.2% அளவுக்கு மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரிப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மேற்சொன்னவை அனைத்தும் கடந்த காலத்தில் நுகர்வோரின் மனநிலையை வெளிப்படுத்துவதாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு நிகராக சரிவு

2021 மார்ச் மாதத்தில் மட்டும் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 30 டாலர் அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியாவின் பொருளா தாரத்துக்கு மிகப் பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்கிற காரணத்தால், இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத டாலருக்கு நிகராக 76.90–ஆக இறக்கத்தைச் சந்தித்துள்ளது. இதனால் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கான செலவுகள் அதிகரிக்கும் என்பதும், தங்கத்தின் விலையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் நிச்சயம்.

அமெரிக்க ஃபெடரலின் நிலைப்பாடு

அமெரிக்காவின் பணவீக்கம் கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து 7 சதவிகிதமாகக் காணப் படுகிறது. இதைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு அடுத்த வாரம் நடைபெற இருக்கிற இரண்டு நாள் ஃபெடரல் கூட்டத்தில் 0.5% என்ற அளவுக்கு வட்டி விகிதங்களை உயர்த்தத் திட்டமிட்டிருந்தது. இது பங்குச் சந்தைகளுக்கு எதிர்மறையான செய்தியாகப் பார்க்கப்பட்டது. சந்தைகளும் அதை உள்வாங்கிக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை உற்று நோக்கத் தொடங்கின.

தற்போது, ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் காரணமாக முக்கியமான கமாடிட்டி பொருள்களின் விலைகள் கடும் ஏற்றத்தைச் சந்தித்திருப்பதால், பொருளா தாரத்தில் தொய்வு ஏற்படலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளது. ஆகையால், 0.5% என்பதற்குப் பதிலாக, 0.25% வட்டி விகித உயர்வை அமெரிக்க ஃபெட் அமைப்பு அறிவிக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அதே சமயத்தில், ரஷ்யா-உக்ரைன் பதற்றம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும், ரஷ்யாவின் பதில் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும், வரக்கூடிய காலத்தில் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை எல்லாம் பொறுத்துதான், அமெரிக்க ஃபெடரலின் நடவடிக்கைகள் இருக்கப்போகின்றன. போர்ப் பதற்றம் தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில், ஃபெடரல் அமைப்பு வட்டி விகித அறிவிப்பில் நிதானமான போக்கைக் கடைப்பிடித்தால், தங்கத்தின் விலை மிகப் பெரிய ஏற்றத்தைச் சந்திக்கும் என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

இந்திய அளவில் நுகர்வோரின் முதலீடு எப்படி இருக்க வேண்டும்?

ஆபரணத் தங்கம் வாங்க வேண்டும் என்று முடிவெடுத் திருப்பவர்கள், இடைப்பட்ட காலத்தில் சந்தையில் ஏற்படுகிற இறக்கத்தைப் பயன்படுத்தி இப்போதே வாங்கலாம். ஏனென்றால், அடுத்த ஆறு மாதத்துக்குள்ளாக (திருமணத்துக்காகவோ, வேறு விசேஷங்களுக்காகவோ) வாங்கியே ஆக வேண்டும் எனும்போது, காலம் தாழ்த்த வேண்டியதில்லை.

நீண்டகாலம் கழித்து தங்கம் தேவைப்படும் என்று கருது பவர்கள் கோல்டு இ.டி.எஃப் மூலமாகவோ, எஸ்.ஜி.பி. தங்கப் பத்திரங்கள் மூலமாகவோ முதலீடுகளை மேற்கொள்ளலாம்.

ரஷ்யா, தன் மீது விதிக்கப் பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக, தனது அந்நியச் செலாவணியைத் தங்கத்தில் அதிக அளவில் மாற்றிக்கொள்ள முயற்சி செய்யலாம் என்கிற கருத்து அதிகரித்து வருகிறது. தவிர, சீனாவும் இதே மாதிரியான நிலைப்பாடு எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆகையால், சர்வதேச சந்தை யில் தங்கம் விலை இன்னும் அதிகரித்து, புதிய உச்சத்துக்கு செல்ல அதிக வாய்ப்புண்டு. இதன் தாக்கம், நிச்சயம் நம் உள்நாட்டு விலையில் பிரதிபலிக்கச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

தங்கம் என்பது உலக கமாடிட்டி. உலக நிகழ்வுகளே அதன் விலையை நிர்ணயம் செய்கின்றன என்பதால், உலக நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனிப்பது அவசியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism