அரசுப் பத்திரங்களில் இனி பொதுமக்களும் நேரடி முதலீடு செய்யலாம்... ப்ளஸ் மைனஸ் என்ன?

சிறு முதலீட்டாளர்கள், அரசுப் பத்திரங்களில் நேரடியாக முதலீடு செய்ய அனுமதி வழங்கும் இந்தத் திட்டத்தின் ப்ளஸ் மைனஸ் என்ன?
கடந்த பிப்ரவரி 1-ம் தேதி, இந்திய மக்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்த `மத்திய பட்ஜெட் 2021'-ஐ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் பிறகு, பிப்ரவரி 3-ம் தேதி இந்திய ரிசா்வ் வங்கியின் முதல் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது.
ஆளுநா் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் மிக முக்கியமாக, அரசு கடன் பத்திரங்களில் சிறு முதலீட்டாளா்கள் ரிசர்வ் வங்கியின் அரசு பத்திரச் சந்தை (Government securities market) வாயிலாக நேரடியாக முதலீடு செய்வதற்கு அனுமதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

பொருளாதார சரிவை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுவரும் நிலையில், வருகிற 2021-2022-ம் நிதி ஆண்டில் பல்வேறு கடன் திட்டங்கள் மூலம் ரூ.12 லட்சம் கோடியைத் திரட்டும் மத்திய அரசின் இலக்கை எட்ட ரிசா்வ் வங்கி இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகத் துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
சிறு முதலீட்டாளர்கள், அரசுப் பத்திரங்களில் நேரடியாக முதலீடு செய்ய அனுமதி வழங்கும் இந்தத் திட்டம் குறித்து, நிதி ஆலோசகரான சுரேஷ் பார்த்தசாரதியிடம் பேசினோம்.
``மத்திய அரசு அதிகளவிலான முதலீடு மற்றும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக, சந்தையில் இருக்கும் பிற பங்குச் சந்தை முதலீட்டுத் தளத்தைப் போலவே, ரீடெய்ல் முதலீட்டாளர்கள் நேரடியாக அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யும் ஒரு சிறப்புத் தளத்தை ரிசர்வ் வங்கி உருவாக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

அரசு இதுநாள் வரையில் அரசுப் பத்திரங்களை வங்கிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் மட்டுமே விற்பனை செய்து முதலீட்டைத் திரட்டிவந்தது. இதனால் ஒவ்வொரு முறையும் அரசுப் பத்திரங்களை விற்பனை செய்ய கடுமையான முயற்சிகளைச் செய்ய வேண்டிய நிலை இருந்தது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பின் மூலம் அரசு தனது பத்திரங்களை மிகவும் எளிதான முறையில், மிகவும் குறைந்த நேரத்தில் விற்பனை செய்ய முடியும். மேலும், அரசுப் பத்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை என்பதால், ரீடெய்ல் முதலீட்டாளர்களுக்கு இது மிகவும் சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறு முதலீட்டாளர்கள் அரசுப் பத்திரங்களை மூன்று வழிகளில் வாங்கலாம். அதில் மிகவும் எளிதான வழி, கில்ட் (Government securities) ஃபண்டுகள் மூலம் வாங்குவது. அதாவது, அரசுப் பத்திரங்களை மியூச்சுவல் ஃபண்ட் மூலம் வாங்குவது. 2013 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட் வாயிலாக அரசுப் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி சுமார் 15,000 கோடி ரூபாய். இரண்டாவது, என்.எஸ்.இ பத்திர ஏல இடத்தில் நேரடியாக பங்கேற்று வாங்குவது. மூன்றாவது, ஒரு புரோக்கர் வழியாக வாங்குவது. இனி நான்காவதாக, ரிசர்வ் வங்கியின் வாயிலாக நேரடியாக அரசு பத்திரங்களை சிறு முதலீட்டாளர்கள் வாங்கலாம்.

இருப்பினும், சிறு முதலீட்டாளர்கள் அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு முன்பாக, பல்வேறு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். ஏனெனில், அரசுப் பத்திரங்களில் கிடைக்கும் வருமானம் அதிக ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும். உதாரணத்துக்கு, 2017-ம் ஆண்டில் பல்வேறு அரசுப் பத்திரங்களின் முதலீடு 0.5% முதல் 4% வரையில் மட்டுமே வருமானத்தைக் கொடுத்திருந்தன. அதே சமயம், அதற்கு முந்தைய 2014- 2016-ம் ஆண்டுகளில் 20% முதல் 22% வரையிலான வருமானத்தையும் கொடுத்திருக்கின்றன.
அதனால், அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்ய நினைப்பவர்கள், பத்திரங்களின் முதிர்வுக்காலம் வரையிலும் பணத்தை வெளியில் எடுக்க மாட்டேன் என்கிற உறுதியோடு இந்த முதலீட்டை பரிசீலிக்கலாம். அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இந்த வகை முதலீட்டுத் திட்டங்கள் வருவதால், ரிஸ்க் இல்லாத முதலீடாகவும், வருமானத்துக்கு உத்தரவாதமும் இருக்கும்" என்றார்.
இந்தப் புதிய முதலீடு தங்களுக்குப் பொருத்தமாக இருக்குமா என்பதை ஆராய்ந்து, முதலீட்டு முடிவை எடுப்பது நல்லது!