Published:Updated:

ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம் சரிவு... பொருளாதார நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? #GDPData

ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் பெரும் சரிவு ( vikatan )

ஜி.டி.பி விகிதத்தில் ஏற்பட்டுள்ள சரிவைப் பார்க்கும்போது, அரசியல் விவகாரங்களில் காட்டும் அக்கறையை, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் மத்திய அரசு காட்டவில்லையோ என்ற கேள்வி உருவாகிறது.

ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம் சரிவு... பொருளாதார நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? #GDPData

ஜி.டி.பி விகிதத்தில் ஏற்பட்டுள்ள சரிவைப் பார்க்கும்போது, அரசியல் விவகாரங்களில் காட்டும் அக்கறையை, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் மத்திய அரசு காட்டவில்லையோ என்ற கேள்வி உருவாகிறது.

Published:Updated:
ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் பெரும் சரிவு ( vikatan )

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், ஜி.டி.பி வளர்ச்சி விகிதம், 5 சதவிகிதத்திலிருந்து 4.5 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. கடந்த 2018-19 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 7 சதவிகிதமாக இருந்த ஜி.டி.பி வளர்ச்சி விகிதம், தற்போது பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.

ஜி.டி.பி வளர்ச்சி விகிதம்
ஜி.டி.பி வளர்ச்சி விகிதம்

துறைவாரியாகப் பார்த்தால், கட்டுமானத் துறையின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் கடந்த காலாண்டில் 5.7 சதவிகிதமாக இருந்தது. தற்போது, 3.3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தொலைத்தொடர்புத்துறையின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம், 7 சதவிகிதமாக இருந்து 4.8 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. சுரங்கத்துறையில் 2.7 சதவிகிதமாக இருந்த வளர்ச்சி விகிதம், 0.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இந்தக் காலாண்டுதான் மிகவும் குறைவான வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது. 26 காலாண்டுகளுக்கு முன்னர், 2013-ம் ஆண்டின் முதல் காலாண்டில் 4.3% ஜி.டி.பி வளர்ச்சியை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான நிதிப் பற்றாக்குறை அளவு ரூ.7.2 லட்சம் கோடியாக உள்ளது. பட்ஜெட் அறிக்கையின்போது நிதிப்பற்றாக்குறை அளவு 7.03 லட்சம் கோடியாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், 7 மாதங்களுக்குள் அந்த அளவைத் தாண்டிவிட்டது. நடப்பு நிதியாண்டு முடியும்போது, இந்த விகிதம் இரு மடங்காக உயர்வதற்கும் வாய்ப்பு உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜி.டி.பி விகிதத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு, அரசியல் விவகாரங்களில் காட்டும் அக்கறையை நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் மத்திய அரசு காட்டவில்லையோ என்ற கேள்வியை எழுப்புகிறது. காஷ்மீர் விவகாரம், ப.சிதம்பரம் கைது, மாநிலத் தேர்தல்கள் எனப் பல்வேறு அரசியல் விவகாரங்களில் வேகம் காட்டும் மத்திய அரசு, நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைப்பதில் முன்னெச்சரிக்கையாகச் செயல்படவில்லை என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் வீழ்ச்சி
ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் வீழ்ச்சி
vikatan

வாகன உற்பத்தி நிறுவனங்களில் விற்பனைத்தேக்கம் அடைந்ததால், பல நிறுவனங்கள் கட்டாய விடுமுறைகளை அறிவித்தன. பங்குச் சந்தையிலும் தொடர்ச்சியாக பலத்த சரிவு ஏற்பட்டு, அந்நிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை விலக்கிக்கொள்ளத் தொடங்கிய சூழலில்தான் மத்திய அரசு விழித்தது. அவசர அவசரமாக பெருநிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரிவிகிதத்தைக் குறைத்ததோடு, ஜி.எஸ்.டி வரிவிகிதத்தையும் சில பொருள்களுக்குக் குறைத்தது. ரியல் எஸ்டேட் துறைக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாராக் கடன்களைச் சரிசெய்வதற்காக, வங்கிகளை ஒன்றோடொன்று இணைக்கும் நடவடிக்கையை எடுத்தார்கள். ரிசர்வ் வங்கியும் தன் பங்குக்கு அரசுக்கு நிதி உதவி செய்தது. மேலும், இந்த ஆண்டிலேயே தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தையும் குறைத்தது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் இறக்கத்திலிருந்த பங்குச் சந்தை ஏற்றம்பெற்று, வரலாற்று உச்சங்களைத் தொட்டது. பங்குச் சந்தைக்கு அந்நிய முதலீடுகள் குவியத்தொடங்கின. எனினும், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் வழக்கமான உற்சாகம் காணப்படவில்லை. பொருளாதார மந்த நிலையிலும் பெரிய மாற்றம் ஏற்படவில்லை.

ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் வீழ்ச்சி
ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் வீழ்ச்சி

"ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் குறைய என்ன காரணம்? இதே நிலை தொடருமா?"

பொருளாதார நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம்.

"தற்போது, ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் குறைந்திருப்பது, எதிர்பார்த்ததுதான் என்றாலும், வழக்கத்தைவிட சற்று அதிகம்தான். ஆனால், இதைச் சரிசெய்வதற்கு அரசாங்கம் பல்வேறுவிதமான முயற்சிகளை எடுத்துக்கொண்டே இருக்கிறது. புதிய தொழில்களைத் தொடங்குவது, அதன்மூலம் வேலைவாய்ப்பை அதிகரிப்பது, வரிச்சலுகை அளிப்பது எனப் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக எடுத்துவருகிறது. இந்தியப் பொருளாதார வரலாற்றைப் பார்த்தோமானால், இத்தகைய மந்தநிலை என்பது ஒரு சுழற்சியேயாகும். இதற்கு முன்பும் பல்வேறு காலகட்டங்களில், இதேபோன்ற இறக்கத்தைச் சந்தித்து, பின்னர் மீண்டு வந்திருக்கிறோம். தற்போதும் இதிலிருந்து மீண்டு வருவோம். ஆனால், அதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படும்.

நிறுவனங்களில் உற்பத்தியான பொருள்களை வாங்குவதற்கான நுகர்வு தேவைப்பாடு குறைந்திருக்கிறது. இப்படிக் குறைந்திருப்பதை நேரடியாக பொருளாதாரச்சரிவு என்று கருதக்கூடாது. கடந்த காலங்களைவிட, பொருள்களின் உற்பத்தி அதிகரித்திருக்கிறது. உதாரணமாக, கார் உற்பத்தியை எடுத்துக்கொண்டால், பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட தற்போது உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆனால், வாங்குவதற்கான தேவை ஒவ்வொரு ஆண்டும் சீராக உயர்ந்துவருவது இல்லை. எனவே, உற்பத்தித்தேக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழல்தான் தற்போது நிலவுகிறது.

பொருளாதார நிபுணர் வ.நாகப்பன்
பொருளாதார நிபுணர் வ.நாகப்பன்

இதை தற்காலிகமாகச் சரிசெய்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளலாம். விற்பனையாகாமல் இருக்கும் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்வதற்காக, குறிப்பிட்ட காலக்கெடு வைத்து, ஜி.எஸ்.டி விகிதத்தைக் குறைக்கலாம். இதன்மூலம் விலையைக் குறைத்து, கூடுதல் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. அதேபோல வங்கிகளைப் பொறுத்தவரை, வாராக் கடனில் சிக்கிக்கொள்ளக்கூடாதென்பதற்காகக் கடன் கொடுப்பதைத் தவிர்க்கும் சூழல் இருக்கிறது. அதற்கும் தீர்வு கண்டால், தற்காலிகமாக இந்த மந்த நிலையை ஓரளவு சரிசெய்யலாம். ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றிலிருந்தும் தற்போது வருமானம் குறைந்துள்ளது. இதுவும்கூட மந்த நிலைக்குக் காரணமாக இருக்கலாம். இந்தநிலை படிப்படியாக மாறும்" என்றார்.

ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாகச் செய்தி வந்ததற்கு ஒரு நாள் முன்பாகத்தான், ஐந்து லட்சம் கோடி ரூபாய் (70 பில்லியன் டாலர்) சொத்து மதிப்பை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி பெற்றிருந்தார். அதேபோல, அவரது நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளது. ஆக, தனிநபராக முகேஷ் அம்பானி வளர்ச்சியடைகிறார், வெற்றி பெறுகிறார். மக்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்திருப்பதற்கு இவரது நிறுவனத்தின் வளர்ச்சியும் ஒரு காரணமாக இருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவாகப் பார்க்கும்போது வளர்ச்சி, இறக்கத்தில் இருக்கிறது. இந்தக் கேள்விதான் பாமர இந்தியனை குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்
பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்

பொருளாதார மந்தநிலையைச் சரிசெய்வதற்காக அரசாங்கம் எடுக்கும் தொடர் நடவடிக்கைகள் பலனளிக்காமல் போவது ஏனென்று, பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சனிடம் கேட்டோம். "ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதாக, தொடர்ச்சியாக பொருளாதார நிபுணர்கள் பலரும் கூறிக்கொண்டேதான் இருக்கிறார்கள். நானும் பல இடங்களில் இதுகுறித்து கூறியிருக்கிறேன். ஆனால், நம் நிதியமைச்சரின் பார்வையோ வேறாக இருக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'பொருளாதார மந்தநிலை இருக்கலாம்... ஆனால், அபாயகரமாக இல்லை. உங்களுடைய பார்வைக்கு வளர்ச்சி குறைந்ததுபோல தெரியலாம், ஆனால் குறையவில்லை' என்று குறிப்பிட்டார். இப்படி பொருளாதார மந்தநிலை இருப்பதையே அவர்கள் ஒப்புக்கொள்ளாதபோது, அதைச் சரிசெய்வதற்கு சரியான நடவடிக்கையை எடுப்பது கேள்விக்குறியே. நம் நாட்டுப் பொருளாதாரத்தில், உண்மையில் என்ன மாதிரியான சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பதைப் பார்க்கிறார்களா என்பதே தெரியவில்லை.

பொருளாதார மந்தநிலையைச் சரிசெய்வதாகக் கூறி, பெருநிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரியைக் குறைத்ததன்மூலம் ரூ.1.75 லட்சம் கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்படி வரிச்சலுகை கொடுப்பதன்மூலம் ஊக்கமடைந்து முதலீட்டை அதிகரிப்பார்கள் என்றும், அதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றும் மத்திய அரசு கருதுகிறது. ஆனால், வரிச்சலுகையாகக் கிடைத்த தொகையை, முதலீட்டில் செலுத்துவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் குறைவு
ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் குறைவு

அதேவேளை, நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைப்போல் பொதுமக்களுக்கு அரசின் பணம் செல்லுமென்றால், அதைக்கொண்டு கடைகளில் பொருள்கள் வாங்குவது உறுதி. அதன்மூலம், நாட்டில் பணப்புழக்கம் அதிகரிப்பதும் உறுதி. ஆக, யாருக்கு சலுகை காட்டினால் பொருளாதாரம் உயர வழி கிடைக்கும் என்ற தெளிவான சிந்தனையே மத்திய அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை. இப்படி, தொடர்ச்சியாகப் பொருளாதாரத்தை மந்தமாகவே வைத்திருப்பதன்மூலம், அதைச் சரிசெய்வதாகக் கூறிக்கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களைக் கைமாற்றும் வேலையைச் செய்வார்களோ என்ற ஐயமும் எழுகிறது" என்றார்.

பொருளாதாரச் சரிவு குறித்து குற்றச்சாட்டு எழுப்பியபோதெல்லாம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்தே வந்தார். உலக நாடுகளோடு ஒப்பிடுகையில், நம் நாடு நன்றாக இருப்பதாகவும் சமாளித்தார். ஆனால், தற்போது கிடைத்துள்ள ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் மிகக்குறைவாக இருப்பது, நமது பொருளாதார நிலைகுறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. நம் நாட்டின் பொருளாதார நிலை சரியில்லையெனப் பல்வேறு பொருளாதார நிபுணர்கள், ஆர்.பி.ஐ முன்னாள் கவர்னர்கள் எனப் பலரும் குற்றம் சாட்டியபோதெல்லாம் அவர்களது கருத்தை மறுப்பதும், காங்கிரஸ் அரசின்மீது குற்றம் சுமத்துவதுமாகவே இருந்தார்கள். ஆனால், உண்மையிலேயே பொருளாதார நிலை மோசமாக இருப்பதை ஏற்கும் மனநிலையில் அவர்கள் இல்லை.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி அமலாக்கம் ஆகிய அதிரடிகளை நிகழ்த்திக்காட்டிய இதே அரசாங்கம், தற்போது பொருளாதார மந்தநிலையைச் சரிசெய்வது குறித்து இதுவரை சரியான திசையில் செயல்படவில்லையென்றே தெரிகிறது. உடனடியாக, பொருளாதார நிபுணர்கள் பலரின் கருத்துகளையும் கேட்டறிந்து, அதற்கேற்ப தங்களது செயல்பாட்டைச் சீர்படுத்திக்கொள்வதே இந்தியாவை முன்னேற்றப்பாதையை நோக்கி செலுத்த உதவும். 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி இலக்கு என்பது ஒரு தனி நபரின் வளர்ச்சிக்கானதாக இல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism