Published:Updated:

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அரசு பென்ஷன் திட்டங்கள்..!

அமைப்புசாரா தொழிலாளர்
பிரீமியம் ஸ்டோரி
அமைப்புசாரா தொழிலாளர்

ஒளிமயமான ஓய்வுக்காலம்! சூப்பர் பிளானிங் - 13

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அரசு பென்ஷன் திட்டங்கள்..!

ஒளிமயமான ஓய்வுக்காலம்! சூப்பர் பிளானிங் - 13

Published:Updated:
அமைப்புசாரா தொழிலாளர்
பிரீமியம் ஸ்டோரி
அமைப்புசாரா தொழிலாளர்

ஓய்வுக்காலத்தில் பென்ஷன் இல்லை எனில், டென்ஷன்தான். இதை உணர்ந்த மத்திய அரசு, அமைப்புசாரா (Unorganised) தொழிலாளர்களும் வயதான காலத்தில் பென்ஷன் பெறும் விதமாக மூன்று திட்டங் களைச் செயல்படுத்தி வருகிறது. இவை, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் (Social Security Scheme) கீழ் வருவதால், மத்திய அரசும் இதில் பங்களிப்பு தொகையைத் தருகிறது.

என்.விஜயகுமார், நிர்வாக இயக்குநர்,
https://www.click4mf.com/
என்.விஜயகுமார், நிர்வாக இயக்குநர், https://www.click4mf.com/

அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana - APY), பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் (Pradhan Mantri Shram Yogi Maan-dhan - PMSYM), வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme for Traders & Self Employed Persons Yojna - NPSTSY) ஆகியவை அந்தத் திட்டங்களாகும். இதில், அடல் பென்ஷன் யோஜனா 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மற்ற இரு திட்டங்களும் 2019-20-ம் நிதி ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.

முக்கியமான நிபந்தனைகள்...

இந்த மூன்று திட்டங்களிலும் வருமான வரி செலுத்தும் எந்த இந்தியக் குடிமகனும் சேர முடியாது. மேலும், மூன்று திட்டங்களில் ஏதாவது ஒரு திட்டத்தில் மட்டுமே சேர்ந்து பயன் அடைய முடியும்.பணியாளர் பிராவிடன்ட் ஃபண்ட், என்.பி.எஸ், இ.எஸ்.ஐ.சி ஆகிய திட்டங்களில் பயன் அடைபவர்கள் இந்தத் திட்டம் எதிலும் சேர முடியாது. மூன்று திட்டங்களிலும் 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் சேர முடியும். மூன்று திட்டங்களும் 60 வயது மற்றும் அதற்கு மேல்தான் பென்ஷன் பெற முடியும். இவற்றில் சேர ஒருவர் இந்தியக் குடிமகனாக இருப்பது அவசியமாகும்.

யாருக்கு ஏற்றது?

தொழிற்சாலைகளில் குறைந்த சம்பளத்துக்கு வேலை பார்க்கும் அமைப்புசாரா நிறுவனங்களுக்கு ஏற்ற திட்டமாகும். மேலும், சுய தொழில் செய்யும் வியாபாரிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஏற்றதாகும். இந்த மூன்று திட்டங்கள் பற்றிப் பார்ப்போம்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அரசு பென்ஷன் திட்டங்கள்..!

அடல் பென்ஷன் யோஜனா

மத்திய அரசின் இதர எந்த நலத் திட்டத்திலும் இணையாத அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வுக்காலத்தில் நிலையான ஒரு தொகையை பென்ஷனாக வழங்கும் திட்டமாகும். இந்த பென்ஷன் தொகைக்கு மத்திய அரசின் உத்தரவாதம் இருக்கிறது. 2015 - 16 நிதி ஆண்டுக்குப் பிறகு, இந்தத் திட்டத்தில் அரசின் பங்களிப்பு தொகை நிறுத்தப்பட்டிருக்கிறது. குறைந்த பட்ச நுழைவு வயது 18 மற்றும் அதிகபட்ச நுழைவு வயது 40 ஆகும். அதாவது, இந்தத் திட்டத்தில் முதன்முதலில் சேரும் போது 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

60 வயதுக்கு முன் இந்தத் திட்டத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுகிறது. அப்போது சந்தாதாரர் கட்டிய தொகை மற்றும் அதற்குரிய வருமானம் மட்டுமே வழங்கப் படுகிறது. அவருக்காக அரசு போட்ட பணத்தையும் அதற்கான வருமானத்தையும் தரமாட்டார்கள். இந்தத் திட்டத்தில் துணைவர் (கணவர்/மனைவி) இறந்துவிட்டால், மற்றவர் தொடர முடியும். இருவரும் இல்லை எனில், சேர்ந்திருக்கும் தொகுப்பு நிதி நாமினியிடம் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில் கட்டிவந்த பணத்துக்கேற்ப, 60 வயதில் குறைந்தபட்ச பென்ஷன் ரூ.1,000, அதிகபட்சம் ரூ.5,000 கிடைக்கும். கட்டும் பணத்துக்கேற்ப ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000 என்பது போலவும் பென்ஷன் கிடைக்கும். 18 வயதுள்ள ஒருவர் 60 வயதில் ரூ.1,000 பென்ஷன் பெற விரும்பினால், அவர் மாதம் ரூ.42 முதலீடு செய்து வர வேண்டும். இதுவே 40 வயதில் ஒருவர் இந்தத் திட்டத்தில் சேர்ந்தால், அவர் மாதம் ரூ.291 கட்டிவரும் பட்சத்தில் 60 வயதில் மாதம் ரூ.1,000 பென்ஷன் கிடைக்கும்.

இடையில் அதிக தொகையைக் கட்டி பென்ஷனை அதிகரித்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. இந்த அடல் பென்ஷன் திட்டத்தை ஒருவர் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், தபால் அலுவலகங் களில் தொடங்க முடியும். வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் அவசியம் இருக்க வேண்டும். ஆன்லைன் மூலமும் இந்தக் கணக்கைத் தொடங்க முடியும்.

வங்கிச் சேமிப்புக் கணக்கில் இருந்து மாதம், காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் ஆட்டோ டெபிட் வசதி மூலம் சந்தா செலுத்தும் வசதி இருக்கிறது. அடல் பென்ஷன் யோஜனாவுக்கு என பிரத்யேக இலவச மொபைல் செயலி இருக்கிறது.

பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன்

இந்தத் திட்டத்தில் சேர அமைப்புசாரா துறை நிறுவனங் களில் பணிபுரிபவர்களின் மாதச் சம்பளம் ரூ.15,000-க்குக் கீழ் இருக்க வேண்டும். நடைபாதை கடை வியாபாரிகள், சத்துணவு பணியாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், செங்கல் சூளைப் பணியாளர் கள், வீட்டு வேலை செய்பவர் கள், சலவைத் தொழிலாளர் கள், கூலித் தொழிலாளர்கள், ரிக்‌ஷா ஓட்டுபவர்கள், விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலா ளர்கள், பீடித் தொழி லாளர்கள், கைவினைத் தொழிலாளர்கள், தோல் தொழிலாளர்கள் ஆகியோர் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பென்ஷன் பெறலாம்.

60 வயதில் மாதம் ரூ.3,000 பென்ஷன் கிடைக்கும். வயதுக்கேற்ப பங்களிப்பு தொகை இருக்கும். பங்களிப்பு தொகை மாதத்துக்கு ரூ.55 முதல் ரூ.200 வரை இருக்கும். அதாவது, 18 வயதில் இந்தத் திட்டத்தில் சேர்ந்தால், மாதம் கட்டும் தொகை ரூ.55-ஆகவும் 40 வயதில் சேர்ந்தால் ரூ.200- ஆகவும் இருக்கும். இதே அளவு தொகையை மத்திய அரசும் கட்டும்.

இந்தத் திட்டத்திலிருந்து 60 வயதுக்கு முன் வெளியேற அனுமதி இருக்கிறது. இந்தத் திட்டத்தில் சேர்ந்து 10 ஆண்டுகளுக்குள் வெளியேறி னால் தொழிலாளர் கட்டிய தொகை, அதற்கான வங்கி சேமிப்புக் கணக்கு வட்டி மட்டுமே கொடுக்கப்படும். பத்தாண்டுகளைத் தாண்டி அதே நேரத்தில், 60 வயதுக்குள் இருந்தால், தொழிலாளர் கட்டிய தொகை, வங்கி சேமிப்புக் கணக்கு வட்டி அல்லது பென்ஷன் கணக்கில் சேர்ந்திருக்கும் வட்டி, எது அதிகமோ அது தரப்படும். பென்ஷன் பெற்றுவரும் நிலையில் பென்ஷன்தாரர் இறந்துவிட்டால், துணை வருக்கு (கணவர்/ மனைவி) 50% பென்ஷன் தொகை வழங்கப்படும். அவருடன் பென்ஷன் நின்றுவிடும். இதுவே 60 வயதுக்குள் தொழிலாளர் இறந்துவிட்டால், துணைவர் திட்டத்தைத் தொடர முடியும்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அரசு பென்ஷன் திட்டங்கள்..!

வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டம்...

இந்தத் திட்டத்தில் வர்த்தகர்கள், கடை உரிமை யாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான ஆண்டு விற்று முதல் ரூ.1.5 கோடிக்குள் இருக்க வேண்டும். அரிசி ஆலை உரிமையாளர்கள், எண்ணெய் ஆலை உரிமையாளர்கள், கமிஷன் ஏஜென்டுகள், ரியல் எஸ்டேட் ஏஜென்டுகள், சிறிய ஹோட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்டவர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம். இவர்களுக்கும் 60 வயதில் மாதம் ரூ.3,000 பென்ஷன் கிடைக்கும். வயதுக்கேற்ப பங்களிப்புத் தொகை இருக்கும். இந்தத் திட்டத்தில் சேர்பவர்களுக்கு வியாபாரி ஓய்வூதியக் கணக்கு எண் (Vyapari Pension Account Number -VPAN) தரப்படும்.

பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் திட்டப் பயனாளிகள் எவ்வளவு தொகை கட்டுகிறார்களோ, அதே அளவு தொகையை இவர்களும் கட்டுவார்கள். இதே போல், 60 வயதுக்குள் வெளியேறும்போது அதே நிபந்தனைகள் இவர் களுக்கும் பொருந்தும்.இந்த மூன்று திட்டங் களிலும் நாமினி நியமிக்கும் வசதி இருக்கிறது.

இந்தத் திட்டங்களில் புதிதாக சேர்பவர்களுக்கு அடல் பென்ஷன் திட்டத் தில் அரசின் பங்களிப்பு கிடையாது என்பதால், ரூ.15,000-க்குக் கீழ் மாதச் சம்பளம் வாங்கும் அமைப்புசாரா தொழிலாளர்கள், பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் திட்டத்தைத் தேர்வு செய்வது லாபகரமாக இருக்கும்.

இந்தத் திட்டங்களில் கிடைக்கும் பென்ஷன் தொகை குறைவாக இருக்கும். எனவே, இடை யிடையே கிடைக்கும் பணத்தை எஃப்.டி, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து, தொகுப்பு நிதியை உருவாக்கி, ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக இருக்கலாம்!

(திட்டமிடல் தொடரும்)