Published:Updated:

பணி ஓய்வுக்காலம்... 30-20 சவால்..!

ஒளிமயமான ஓய்வுக்காலம்
பிரீமியம் ஸ்டோரி
ஒளிமயமான ஓய்வுக்காலம்

ஒளிமயமான ஓய்வுக்காலம்! சூப்பர் பிளானிங் - 2

பணி ஓய்வுக்காலம்... 30-20 சவால்..!

ஒளிமயமான ஓய்வுக்காலம்! சூப்பர் பிளானிங் - 2

Published:Updated:
ஒளிமயமான ஓய்வுக்காலம்
பிரீமியம் ஸ்டோரி
ஒளிமயமான ஓய்வுக்காலம்

இந்தியர்கள், எந்த நிதி இலக்குக்கு (Financial Goal) எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அவர்கள் பிள்ளைகளின் எதிர் காலத்துக்கு (உயர்கல்வி மற்றும் கல்யாணம்) முதல் இடம் கொடுப்பது தெரியவந்தது. அடுத்தடுத்த இடங்களில் சொந்த வீடு, சொந்த கார், வெளிநாட்டுச் சுற்றுலா என இருக்க, கடைசியாகத்தான் ஓய்வுக்காலம் இருந்தது.

ஓய்வுக்காலத் திட்டமிடலுக்கும் முதலீட் டுக்கும் முன்னுரிமை தருவது எந்தளவுக்கு முக்கியம் என்பதை இன்றைக்கு 70 வயதான பிறகும் வேலைக்குப் போய் சம்பாதித்துக் குடும்பத்தை நடத்த வேண்டிய நிலையில் இருக்கும் பெரியோர்களைப் பார்த்து நாம் தெரிந்துகொள்ளலாம்.

ஓய்வுக்காலத்துக்கு நாம் திட்டமிட வேண்டும் என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

என்.விஜயகுமார், நிதி ஆலோசகர், 
https://www.vbuildwealth.com/
என்.விஜயகுமார், நிதி ஆலோசகர், https://www.vbuildwealth.com/

30 - 20 சவால்...

ஒரு காலத்தில் இந்தியர்கள் கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் 18 வயதிலேயே வேலையில் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் 58 வயது வரை 40 ஆண்டுகள் அதாவது, மிக நீண்ட காலம் வேலை பார்த்தார்கள். மேலும், அந்தக் காலத்தில் பென்ஷன் இருந்தது; விலைவாசியும் குறைவாக இருந்ததால் அவர்களால் ஓய்வுக்காலத்தை ஒளிமயமாகக் கழிக்க முடிந்தது.

மேலும், முன்பு ஆயுள் என்பது இப்போது உள்ளது போல் மிகவும் அதிகமாக இல்லை என்றாலும், நோய்ப் பாதிப்புகள் பெரிதாக இல்லை; மருத்துவச் சிகிச்சைக்கான செலவும் இப்போது உள்ளது போல் மிக அதிகமாக இல்லை. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தார்கள், சின்னச் சின்ன நோய் பாதிப்புக்கு எல்லாம் மருத்துவமனைக்கு செல்லவில்லை என்பதால், செலவு என்பது பெரிதாக இல்லை.

ஆனால், இன்றைக்கு அப்படி அல்ல. உயர்கல்வி காரணமாக சுமார் 25 வயதில்தான் அதாவது, முந்தையக் காலத்துடன் ஒப்பிடும் போது சுமார் ஏழு ஆண்டுகள் தாமதமாகத்தான் வேலைக்குச் சேர்கிறார்கள்.

இன்னும் சிலர், படித்து முடித்தவுடன் சின்னச் சின்ன வேலைகளைப் பார்த்துவிட்டு, 28 வயதில்தான் நல்ல வேலையில் சேர்க்கிறார்கள். இவர்கள் 58 வயதில் பணி ஓய்வு பெறுகிறார்கள். அதாவது, இவர்களின் பணிக் காலம் 30 ஆண்டுகளாகக் குறைந்து விட்டது.

பணி ஓய்வுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 80 வயது வரை அதாவது, 20 ஆண்டுகள் உயிர் வாழும் நிலை காணப்படுகிறது. அதாவது, தற்போது பணிபுரியும் ஆண்டுகள் 30. சும்மா இருந்து செலவு செய்யும் ஆண்டுகள் 20 என இருக்கிறது. மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப வசதி காரணமாக, பணி ஓய்வுக்குப் பிறகு இந்தியர்கள் ஆயுள் கணிசமாக அதிகரித்திருக்கிறது. கூடவே செலவுகளும் அதிகரித்திருக்கின்றன. இதை நிதி ஆலோசகர்கள் 30 - 20 சவால் (30 - 20 Challenge) என்கிறார்கள்

அதாவது, சம்பாதிக்கும் 30 ஆண்டுக் காலத்தில், பணி ஓய்வுக்காலமான 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டிய நிலையில் நம் மக்களில் பெரும் பகுதியினர் இருக்கிறார்கள்.

பணி ஓய்வுக்காலம்... 30-20 சவால்..!

புதிய சவால்கள்...

அண்மைக் காலத்தில் புதிய சவால்கள் உருவாகியிருக் கின்றன. காரணம், நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் இடையே யான விசுவாசம் மற்றும் நம்பிக்கை குறைந்து காணப் படுகிறது. நிறுவனம், சம்பளம் தருகிறோம், அதற்காகப் பணி யாளர்கள் வேலை செய்கிறார்கள் என நினைக்கிறது. பணியாளர் களும் கொடுக்கும் சம்பளத்துக்கு வேலை செய்கிறோம் என நினைக்கிறார்கள். விளைவு, அடிக்கடி வேலை மாற்றம் நடக்கிறது.

நிறுவனம், ஒரு பணியாளர் மூலமாக வருமானம் குறைகிறது எனில், தயவுதாட்சண்யம் பார்க்காமல் வேலையை விட்டு அனுப்பிவிடுகிறது. இதேபோல், பணியாளர்களும் சில ஆயிரம் ரூபாய் சம்பளம் கூடுதலாகக் கிடைத்தால் வேறு நிறுவனத் துக்கு உடனடியாக வேலை மாறி விடுகிறார்கள்.

பணி ஓய்வுக்காலம்... 30-20 சவால்..!

புதிய 25:30 சவால்...

இதனால், பணியாளர்கள் 50 வயதில் பணி ஓய்வுபெறும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். தற்போதைய நிலையில், மத்திய, மாநில பணிகள் தவிர, மற்ற பணிகளில் 50 வயதுக்கு மேற் பட்டவர்களை வேலைக்கு வைத்துக்கொள்ள நிறுவனங்கள் அரிதாகவே விரும்புகின்றன.

இதேபோல்தான் பணியாளர் களின் நிலைமையும் காணப் படுகிறது. அவர்களும் 50 வயதுக்குள் எவ்வளவு அதிகமாக சம்பாதிக்க முடியுமோ, அவ்வளவு சம்பாதித்துவிட்டு பணி ஓய்வு பெறவே விரும்புகிறார்கள்.

இப்படி பணி ஓய்வு பெறுகிறவர் கள் 80 வயது வரை வாழ்கிற நிலையில், அவர்கள் 25 வயதில் வேலைக்குச் சேர்ந்து 50 வயதில் ஓய்வு பெற்றால், 25:30 சவாலை சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அதாவது, 25 ஆண்டு சம்பாத்தியத்தில் மிச்ச மாகும் தொகையைக் கொண்டு சும்மா இருக்கப்போகிற 30 ஆண்டு களுக்கு செலவிட வேண்டும்.

ஒருவர், தான் சம்பாதிக்கிற பணத்தில் பெரும் பகுதியை அவரின் ஓய்வுக்காலத்துக்கு என ஒதுக்கி முதலீடு செய்வதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. குடும்பம் என்கிறபோது பிள்ளைகளின் கல்வி, கல்யாணம், சொந்த வீடு என பல முக்கிய நிதி இலக்குகள் இருக்கின்றன. இவற்றுக்கும் முதலீடு செய்துகொண்டுதான் ஓய்வுக் காலத்துக்கும் முதலீடு செய்து வர வேண்டும்.

பணி ஓய்வுக்காலம்... 30-20 சவால்..!

சுமார் 50 வயதில் பணி ஓய்வுக்குத் திட்டமிட்டாலும், அதுவரைக்கும் கற்று வைத்திருக்கும் திறன் மற்றும் திறமையைப் பயன்படுத்தி சம்பாதிப்பதற்கு திட்டமிடுவது நல்லது. இந்த வேலையானது பரபரப்பு இல்லாமல் இருப்பது நல்லது. அதிகம் சம்பாதிக்கவில்லை என்றாலும், ஓரளவுக்கு செலவுகளை ஈடுகட்டுவதாக இருப்பது நல்லது.

குறிப்பாக, தன் துறையில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கு நேரடிப் பயிற்சி, ஆன்லைன் பயிற்சி நடத்தி பணம் சம்பாதிக்கலாம். யூடியூப் சேனல் நடத்துவது மூலம் சம்பாதிக்க முடியும்.

ஆனால், பெரும்பாலானவர் களுக்கு இப்படிப்பட்ட திறமை இருக்கும் என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்டவர்கள் தினசரிப் படி செலவுகளை எதிர்கொள்ள ஏதோ ஒரு வேலையைச் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இன்றைக்கு நம் நாட்டில் இளம் வயதினரே அதிக எண்ணிக்கையில் இருக்கும்போது, 60 வயதை நெருங்கியவர்களுக்கு நல்ல வேலை, அதுவும் நல்ல சம்பளத்தில் கிடைப்பதில்லை. தகுதி குறைந்த ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து, மனம் ஒப்பாமல் அதைச் செய்து முடித்தாக வேண்டிய கட்டாயத்தில் பல முதியோர்கள் இருக்கின்றனர் என்பதை இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

‘‘நான் ஓய்வு பெற இன்னும் பல ஆண்டுகள் இருக்கிறது. அது பற்றி நான் இப்போதே கவலைப்படத் தேவை இல்லை’’ என்கிற எண்ணம் அபாயகரமானது. ஓய்வு பெற 20 ஆண்டுகள் உள்ளது என நினைக்காதீர்கள். 240 மாதங்களே உள்ளன என்று நீங்கள் நினைத்தால், காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பது புரியும். இன்றைய பரபரப்பான உலகத்தில் 240 மாதங்கள் என்பது மிக வேகமாக ஓடி முடிந்துவிடும். எனவே, ஓய்வுக்காலம் குறித்து இப்போதே திட்டமிடுவது அவசியம். அதை எப்படிச் செய்வது?

(திட்டமிடல் தொடரும்)

60 வயதுக்குப் பின்னும்..!

தேசிய அளவில் அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், ஓய்வு பெற்ற முதியோர்கள் 47% பேர் தங்கள் செலவுகளுக்காகக் குடும்பத்தினரை நம்பியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள். அது மட்டுமல்ல, 36% முதியோர்கள் ஓய்வு பெற்ற பிறகு, வேலை செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர். இந்த இருதரப்பினரும் தாங்கள் பணிபுரியும் காலத்தில் ஓய்வுக்காலத்துக்காக எந்த முதலீட்டையும் செய்யாதவர்களாக இருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கும் இளைய தலைமுறையினர் சேமிப்பு மற்றும் முதலீட்டில் பெரிதும் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் ஓய்வுக்காலத்துக்குப் பிறகு, பணிபுரிய தயாராக இருப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் 25, 30 ஆண்டுகளில் 60 சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இளைஞர்கள் தங்கள் ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டை இப்போதே தொடங்குவது அவசியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism