ஓய்வுக்கால முதலீட்டை இலக்கு வைத்துக்கொண்டு எவ்வளவு சீக்கிரமாக ஆரம்பிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்க வேண்டும். மேலும், அந்த முதலீட்டை இடையில் நிறுத்தாமல் இருப்பது மிக முக்கியம்.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் வேலைக்குச் சேர்ந்த உடனேயே இளம் வயதில் ஓய்வுக்காலத்துக்கென பங்கு சார்ந்த முதலீடு களில் (நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகள்) ஒரு குறிப்பிட்டத் தொகையை போட்டுவருவார்கள். இந்தத் தொகை சுமார் 25, 30 ஆண்டுகளில் பெரிய தொகையாக வளர்ந்து நிற்கும்.

முதலீட்டை எப்போது ஆரம்பிக்க வேண்டும்?
ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டை முதல் சம்பாத்தியம் அல்லது முதல் சம்பளத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஆரம்பிக்கும் போது முதலீட்டுத் தொகை மிகக் குறைவாக இருக்கும். உதாரணமாக, ஒருவர் வேலைக்கு சேர்ந்த 25-வது வயதிலிருந்து ஓய்வுக்காலத்துக் காக மாதம் ரூ.3,000 வீதம், அவரின் 60 வயது வரை 35 ஆண்டுகள் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருவதாக வைத்துக்கொள்வோம். அவர் செய்திருக்கும் மொத்த முதலீடு ரூ.12.60 லட்சம் ஆகும். ஆனால், 60 வயதில் அவரிடம் சேர்ந் திருக்கும் மொத்தத் தொகை ரூ.1.9 கோடியாக இருக்கும். இது பணவீக்க விகிதத்தைக் கணக்கில் எடுக்காத கணக்காகும்.
இதுவே 35 ஆண்டுகளில் சராசரி பணவீக்க விகிதம் 6% எனில், ரூ.1.9 கோடியின் உண்மை யான மதிப்பு இன்றையிலிருந்து 35 ஆண்டுகள் கழித்து ரூ.43 லட்சம்தான். எனவே, சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க முதலீட்டை அதிகரித்து வருவது நல்லது. ரூ.3,000-க்கு பதில் ரூ.6,000 முதலீடு செய்தால், ரூ. 3.9 கோடி சேர்ந்திருக்கும். 6% பணவீக்க சரிக்கட்டலுக்குப் பிறகு, அதன் மதிப்பு ரூ.86 லட்சமாக இருக்கும். அந்த வகையில், சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க ஓய்வுக்காலத் தேவைக்கான முதலீட்டை அதிகரித்துவருவது அவசியமாகும்.
25 வயதாகும் கணவன், 23 வயதான மனைவி இருவருக்கு இன்றைய சராசரி குடும்ப மாதச் செலவு ரூ.25,000 என்று வைத்துக்கொள்வோம். ஆண்டு சராசரி பணவீக்க விகிதம் 6% எனில், 60-வது வயதில் மாதச் செலவுக்கு சுமார் ரூ.1.92 லட்சம் தேவைப்படும். இதற்கான தொகுப்பு நிதி ரூ.2.89 கோடி இருக்க வேண்டும். இதைத் திரட்ட மாதம் ரூ.4,495 முதலீடு செய்து வர வேண்டும். தற்போது 30, 35, 40, 45 மற்றும் 50 வயதுள்ளவர்கள், அவர்களின் 60 வயதில் மாதச் செலவுக்கு எவ்வளவு தேவை, அதற்கான தொகுப்பு நிதி எவ்வளவாக இருக்க வேண்டும், அதற்காக மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்கிற விவரங்களை அட்டவணையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

சம்பளம் / சம்பாத்தியத்தில் எவ்வளவு முதலீடு..?
ஓய்வுக்காலத்துக்கென ஒருவரின் சம்பளத்தில் 10% - 15% முதலீடு செய்து வர வேண்டும் என்பது பொதுநிதி விதிமுறை (Financial Rule of Thumb) ஆகும். 10% அளவுக்கு செய்யும் தொகை ஓய்வுக்கால செலவுகளை ஈடுகட்டுவதாக இருக்கும். அதுவே தற்போதுள்ள வாழ்க்கை முறையை (Lifestyle) அப்படியே தொடர வேண்டும் எனில், சம்பளம் அல்லது சம்பளத்தில் குறைந்தது 15% சேமிப்பது அவசியமாகும்.
வேலைக்குச் சேர்ந்து ஆரம்பக் காலத்தில் 15% தொகையை முதலீடு செய்ய முடியவில்லை எனில், அப்போது குறைந்தது 5%, பிறகு 10%, 15%, 20% என அதிகரித்து வருவது அவசியமாகும். ஓய்வுக் காலத்துக்கு என சம்பாத்தியத்தில் சுமார் 30% முதலீடு செய்து வருவது மிகவும் சிறப்பாகும்.
மாதச் சம்பளக்காரர் எனில், அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 12% தொகை, பணியாளர் சேமநல நிதியாகப் (Employees Provident Fund - EPF) பிடிக்கப்படும். இந்தத் தொகையை வேலைக்குச் சேர்ந்தது முதல் ஓய்வுக்காலம் வரை அப்படியே விட்டு வைத்தால், அதுவே கோடிக் கணக்கான ரூபாயாக சேர்ந்திருக்கும். மத்திய அரசு ஊழியர் களின் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (National Pension System - NPS) சேர்த்துவரும் பணத்தை எடுக்காமல் இருந்தால், பணி ஓய்வு பெறும்போது ஒருவர் நிச்சயம் கோடீஸ்வரராக இருப்பார்.
சம்பளத்தில் இ.பி.எஃப், என்.பி.எஸ் சந்தா பிடிக்கப்படாத, சுயதொழில் செய்பவர்கள் அவர் களின் வருமானத்தில் மாதம் தோறும் 10% - 15% வரை சேர்த்து வரும்பட்சத்தில் அவர்கள் ஓய்வுக்கால செலவுகளுக்காக பிறரின் கையை எதிர்பார்த் திருக்கத் தேவையில்லை. அவர்கள் தங்களின் வயது, ரிஸ்க் எடுக்கும் திறன், முதலீட்டுக் காலம் ஆகியவற்றுக்கேற்ப பொது சேமநல நிதி (Public Provident Fund -PPF), ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், கடன் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், நிறுவனப் பங்குகள் போன்றவற்றில் முதலீடு செய்து வரலாம்.

முதலீட்டைத் தாமதமாக ஆரம்பித்தால்...
இளம் வயதில் முதலீட்டை ஆரம்பித்தால் கோடீஸ்வரராக சிறிய தொகையை முதலீடு செய்து வந்தாலே போதும். ஓய்வுக்கால இலக்குத் தொகை ரூ.1 கோடி தேவை. எதிர்பார்க்கும் ஆண்டு சராசரி வருமானம் 12% என்கிற நிலையில், முதலீட்டை 28 வயதில் ஆரம்பித்தால், மாதம் சுமார் ரூ.2,835 முதலீடு செய்துவந்தால் போதும்.
இதுவே ஓய்வுக்கால இலக்கு தொகை ரூ.1 கோடி என்கிற நிலையில், 10 ஆண்டுகள் தாமதமாக 38 வயதில் முதலீட்டை ஆரம்பித் தால் தேவையான மாத முதலீடு சுமார் ரூ. 10,000 ஆகும். 10 ஆண்டு தாமதத்தால் முதலீட்டுத் தொகை கிட்டத்தட்ட 250% உயர்ந்துள்ளது.
இளம் வயதைத் தவற விட்டு விட்டு, முதலீட்டுத் தொகையைப் பல மடங்கு அதிகரித்தாலும், தொகுப்பு நிதி மிக அதிகமாக சேராது. உதாரணமாக, முதலீட்டை ஆரம்பிக்கும் வயது 25 எனவும், மாத முதலீடு ரூ. 5,000 என்றும் எதிர்பார்க்கும் ஆண்டுக்கு சராசரி வருமானம் 12% எனில், 60 வயதில் கிடைக்கும் மொத்த தொகை ரூ.2.73 கோடியாக இருக்கும்.
இதுவே முதலீட்டை ஆரம்பிக்கும் வயது 45 எனவும், மாத முதலீடு ரூ.20,000 எனவும் எதிர்பார்க்கும் ஆண்டுக்கு சராசரி வருமானம் 12% எனில், 60 வயதில் கிடைக்கும் மொத்தத் தொகை ரூ.94.3 லட்சமாக இருக்கும். அதாவது, முதலீட்டுத் தொகை 300% உயர்வானாலும் தொகுப்பு நிதி ரூ.1.78 கோடி குறைவாக உள்ளது.
ஓய்வுக்காலத்துக்கு வழக்கமாகச் செய்துவரும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் முதலீட்டுத் தொகையைக் குறிப்பிட்ட இடைவெளியில் அதிகரித்து முதலீடு செய்து வருவது டாப்அப் எஸ்.ஐ.பி ஆகும்

எஸ்.ஐ.பி முதலீடு...
முதலீட்டை ஆரம்பிக்கும் வயது 30, ஓய்வு பெறும் வயது 60, மாத முதலீடு ரூ.5,000 எனில், மொத்த முதலீடு ரூ.18 லட்சம் ஆகும். முதலீட்டுக்கு ஆண்டுக்கு 12% வருமானம் கிடைத்தால், தொகுப்பு நிதி (60 வயதில்) ரூ.1.54 கோடி சேர்ந்திருக்கும்.
முதலீட்டை ஆரம்பிக்கும் வயது 30, ஓய்வு பெறும் வயது 60, ஆரம்ப மாத முதலீடு ரூ.5,000, ஆண்டுதோறும் அதிகரிக்கப்படும் எஸ்.ஐ.பி தொகை ரூ.500 என்றால் மொத்த முதலீட்டுத் தொகை ரூ.44.10 லட்சம் கோடியாக இருக்கும். இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 12% வருமானம் எதிர்பார்த்தால் தொகுப்பு நிதி (60 வயதில்) ரூ.2.66 கோடி என அதிகமாக இருக்கும். ஒருவர் சம்பளத்தில் 15% மற்றும் ஆண்டுதோறும் முதலீட்டுத் தொகையை அதிகரித்து வந்தால், ஒளிமயமான ஓய்வுக்காலத்தைப் பெறலாம்!
(திட்டமிடல் தொடரும்)