Published:Updated:

பாதுகாப்பு & அதிக லாபம்... முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைக்கும் கலை..!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

முதலீடு

பாதுகாப்பு & அதிக லாபம்... முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைக்கும் கலை..!

முதலீடு

Published:Updated:
முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
முதலீடு

நம்மவர்கள் முதலீடு என்கிறபோது வருமானத்துக்குதான் (Return) அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். ஒரு தரப்பினர், குறைவான வருமானம் கிடைத்தால் போதும்; ஆனால், முதலுக்கு மோசம் வரக் கூடாது’ என்பவர்களாக இருக்கிறார்கள். இன்னொரு தரப்பினர், ‘நான் ரிஸ்க் எடுக்கத் தயார். ஆனால், அதிக வருமானம் வேண்டும்’ என்பவர்களாக இருக்கிறார்கள். இன்னொரு தரப்பினர், முதலீட்டில் இருக்கும் ரிஸ்க் பற்றித் துளியும் தெரியாமல் அதிக ரிஸ்க் கொண்ட திட்டங்களில் பணம் போடுபவர்களாக இருக்கிறார்கள்.

பாதுகாப்பு & அதிக லாபம்... முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைக்கும் கலை..!

இன்றைய தேதியில், அனைத்து முதலீடு களிலும் ரிஸ்க் என்பது இருக்கவே செய்கிறது; அதன் அளவுதான் வேறுபடுகிறது. முதலீட்டில் ரிஸ்க்கைத் தவிர்க்க முடியாது; ஆனால்,

அதை நம்மால் நிர்வகிக்க முடியும். இது எப்படி என்று பார்க்கும்முன், ரிஸ்க் என்றால் என்ன என்று முதலில் பார்த்துவிடுவோம். காரணம், பலரும் ரிஸ்க் என்பதை ஆபத்து (Danger), மோசடி (Fraud), ஏமாற்றுதல் (Cheating) எனப் பலவாறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

ரிஸ்க் என்றால் என்ன?

எந்தவொரு முதலீட்டிலிருந்தும் முதலீட் டாளர் ஒருவர் எதிர்பார்க்கும் வருமானத்தில் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைத்தான் ரிஸ்க் (Risk) என்று நாம் குறிப்பிடுகிறோம். தமிழில் இதை ‘இடர்ப்பாடு’ என்று சொல்ல லாம். ஒரு முதலீட்டாளர்தான் எதிர்பார்த்த வருமானத்தை அடைய முடியாத நிச்சயமற்ற நிலையின் ஓர் அளவீடு ரிஸ்க் ஆகும். உதாரணமாக, ஒரு முதலீட்டின் மூலம் இத்தனை சதவிகிதம் லாபம் கிடைக்கும் என்று நீங்கள் அதில் இறங்குகிறீர்கள். நீங்கள் எதிர்பார்த்த அந்த லாபம் கிடைக்காமல் போவதுதான் ரிஸ்க். இந்த ரிஸ்க்கைக் குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

ஃபிக்ஸட் டெபாசிட்

ரிஸ்க் இல்லாத முதலீடு எதுவும் இல்லை என ஏற்கெனவே பார்த்தோம். உதாரணமாக, வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் எந்த ரிஸ்க்கும் இல்லை என நாம் நினைக்கிறோம். ஆனால், அதிலும் நிறைய ரிஸ்க்குகள் இருக்கவே செய்கின்றன. அதாவது, ஏதோ ஒரு காரணத்தால் வங்கி திவாலானால், அந்த வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் போட்ட ஒருவருக்கு அசல், வட்டி எல்லாம் சேர்ந்து ரூ.5 லட்சம் வரைக்கும்தான் உத்தரவாதம் இருக்கிறது. இந்த உத்தரவாதம் டெபாசிட் இன்ஷூரன்ஸ் திட்டத்தின் கீழ் வழங்கப் படுகிறது.

இதுவே, தபால் அலுவலகச் சேமிப்பு திட்டங்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாற்றத்துக்கு உள்ளாகும். இதனாலும் நாம் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகும்.

இந்த ரிஸ்க்கைக் குறைப்பதற்கான ஒரு வழி, பிரித்து முதலீடு (Diversification) செய்வதுதான். ஃபிக்ஸட் டெபாசிட் என்கிறபோது வங்கி ஒன்றுக்கு ரூ.5 லட்சம் முதலீட்டுக்கு உத்தரவாதம் இருக்கிறது. முதலீட்டை வேறு வேறு வங்கிகளில் பிரித்து முதலீடு செய்வதன் மூலமும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் முதலீட்டைப் பிரித்துப் போடுவது மூலமும் ரிஸ்க்கைக் குறைக்க முடியும்.

கடன் பத்திரங்கள்...

பொதுவாக, மொத்தப் பணத்தையும் ஒரே ஒரு குறிப்பிட்ட கடன் பத்திரத்தில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, பல கடன் பத்திரங்களில் பிரித்து முதலீடு செய்வது மூலம் ரிஸ்க்கைக் குறைக்கலாம். அதுவும் AAA போன்ற நல்ல தரக் குறியீடு கொண்ட கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது மூலம் ரிஸ்க்கை மேலும் குறைக்க முடியும்.

கடன் பத்திரங்களில் மட்டும் நின்றுவிடாமல், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலமும் ரிஸ்க்கைக் குறைக்க முடியும். கடன் ஃபண்டுகளில் திரட்டப்படும் நிதி சுமார் 20 - 30 கடன் பத்திரங்களில் பிரித்து முதலீடு செய்யப்பட்டிருக்கும். மேலும், இதை நிர்வகிக்கக் கடன் சந்தையில் நிபுணத்துவம் கொண்ட ஃபண்ட் மேனேஜரும் அவருக்கு உதவியாக ஒரு பெரிய குழுவும் இருக்கும் என்பதால், ரிஸ்க் என்பது குறைந்து விடுகிறது.

பாதுகாப்பு & அதிக லாபம்... முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைக்கும் கலை..!

பங்கு சார்ந்த முதலீடுகள்...

பங்கு சார்ந்த முதலீடுகள் என்கிறபோது நிறுவனப் பங்குகள், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கின்றன. இந்த இரு முதலீடுகளும் குறுகிய காலத்தில் அதிக ரிஸ்க் ஆனவை. ஆனால், நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாக்கப்பட்டு, பணவீக்க விகித்தைத் தாண்டி நல்ல வருமானத்தைக் கொடுத்து வருகின்றன.

பங்கு சார்ந்த முதலீடுகளில் ரிஸ்க்கைக் குறைக்க இவற்றில் மூன்றாண்டுகளுக்கு உட்பட்ட குறுகிய கால நிதி இலக்கு களுக்காக முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். அடுத்து, பங்குச் சந்தை என்கிறபோது சுமார் ஐந்து துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யலாம். ஐந்தாண்டுக் கால இலக்கு எனில் லார்ஜ்கேப் பங்குகள், அதற்கு மேற்பட்டு 10 ஆண்டுகள் வரை எனில் மிட்கேப் பங்குகள், 10 ஆண்டுகளுக்கு மேல் என்கிறபோது ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்வது மூலம் ரிஸ்க்கைக் குறைத்து வருமானத்தை அதிகரிக்க முடியும்.

இதுவே பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் என்கிறபோது ஒரே ஃபண்டில் முதலீடு செய்யாமல் 5, 6 ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்வது மூலம் ரிஸ்க்கைக் குறைக்க முடியும். மேலும், முதலீட்டுக் காலம் 3 முதல் ஐந்தாண்டுகள் என்கிறபோது லார்ஜ்கேப், மல்ட்டிகேப் மற்றும் ஃபிளெக்ஸிகேப் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. ஐந்தாண்டு முதல் 10 ஆண்டு இலக்கு என்கிறபோது லார்ஜ் அண்ட் மிட்கேப் மற்றும் மிட்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். பத்தாண்டுகளுக்குமேல் எனில் மட்டுமே ஸ்மால்கேப் ஃபண்டுகள், செக்டார் ஃபண்டுகள் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும்.

மூன்று ஆண்டுகளுக்கு உட்பட்ட இலக்கு எனில், பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யக் கூடாது. அந்தத் தேவை களுக்கு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்.

தங்கத்தில் முதலீடு...

பங்குச் சந்தை சரியாக வருமானம் கொடுக்காத காலத் தில் தங்கம் நல்ல வருமானத்தைக் கொடுத்து வருகிறது. இதற்கு அண்மைக் காலத்தில் கொரோனா பாதிப்பு, இப்போது உக்ரைன் – ரஷ்யா போர் சூழலில் தங்கம் விலை அதிகமாக ஏற்றம் கண்டது.

பலரும் தங்கத்தில் முதலீடு செய்து லாபம் பார்க்க விரும்பு கிறார்கள். ஆனால், பெரும் பாலானோர் தங்க நகைகளாக வாங்கிச் சேர்க்கிறார்கள். தங்கத்தை நகையாக வாங்கும் போது அதன் விலை உயர்ந்தாலும் செய்கூலி, சேதாரம் மற்றும் ஜி.எஸ்.டி மூலமான செலவு லாபத்தைக் குறைத்துவிடுகிறது. இதற்குப் பதிலாக, அவர்கள் தங்க நாணயம் அல்லது டிஜிட்டல் வழியில் கோல்டு இ.டிஎ.ஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், கோல்டு பாண்ட் (ஆண்டுக்கு 2.5% வட்டி கிடைக்கும்) ஆகியவற்றில் முதலீடு செய்வது மூலம் அதிக லாபம் பார்க்க முடியும்.

தங்கத்தின் விலை எப்போ தெல்லாம் இறங்குகிறதோ, அப்போதெல்லாம் அதில் வழக்கத்தைவிடக் கூடுதலாக முதலீடு செய்து வர வேண்டும். அதாவது, பங்குச் சந்தை சிறப்பாக செயல்படும் காலத்தில் தங்கத்தின் விலை அதிக ஏற்றம் இல்லாமல் இறங்கிக் காணப்படும். அப்போது கூடுதலாக முதலீடு செய்வது வைப்பது நல்லது.

உலக அளவில் பதற்றம் குறிப்பாக, நாடுகளுக்கு இடையே போர், பொருளாதாரத் தடை விதிப்பு, பொருளாதார வளர்ச்சிக் குறைவு கொரோனா போன்ற பெரும் தொற்று, நிதிச் சிக்கல்கள், தீவிரவாதத் தாக்குதல்கள் போன்ற நேரங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்க ஆரம்பிக்கும். அப்போது தங்கத்தை விற்று பணமாக வைத்துக்கொண்டு, பின்னர் தங்கம் விலை இறங்கும் போது தங்கமாக வாங்கிக்கொள்ள லாம். இதன் மூலம் கூடுதலான அளவில் தங்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அஸெட் அலொகேஷன்...

முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைக்க நமது முதலீட்டைப் பல்வேறு முதலீட்டுப் பிரிவுகளில் பணத்தைப் பிரித்துப் போடுவது (Asset Allocation) முக்கியம்.

அஸெட் அலொகேஷன் என்பது ஒருவர் அவரின் ரிஸ்க் எடுக்கும் திறன், நிதி இலக்கை நிறைவேற்றுவதற்கான கால அளவு ஆகியவற்றைப் பொறுத்து கடன் சந்தை சார்ந்த திட்டங்கள், பங்கு சார்ந்த திட்டங்கள், தங்கம் ஆகியவற்றில் முதலீட்டுத் தொகையைப் பிரித்து முதலீடு செய்வதாகும்.

பொதுவாக, ஒருவரின் வயதை 100-லிருந்து கழித்துக் கிடைக்கும் எண் அளவுக்குப் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். மீதியைக் கடன் சார்ந்த திட்டங்கள் மற்றும் தங்கத்தில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். மேலும், எந்தவொரு சொத்துப் பிரிவில் முதலீடு செய்தாலும், முதலீடுகளைத் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அஸெட் அலொ கேஷனை மாற்றி அமைப்பது அவசியமாகும்.

கையில் கொஞ்சம் ரொக்கப் பணம்...

நம்மிடம் இருக்கும் பணம் முழுக்கவும் முதலீடு செய்யாமல், கையில் எப்போதும் கொஞ்சம் பணம் ரொக்கமாக வைத்திருப்பது அவசியம். இப்படி ரொக்கப் பணம் இருக்கும்போது, சந்தை இறங்கும்பட்சத்தில் புதிதாக முதலீடு செய்ய முடியும். இதற்கு நம்முடைய முதலீட்டின் ஒரு பகுதியை விற்று, அந்தப் பணத்தைக் கையில் வைத்திருப்பது அவசியம். முதலீடு செய்து நல்ல லாபம் கிடைத்திருக்கும் நிலையில், சந்தை உச்சத்தில் இருந்து, ஏதோ ஒரு காரணத்தால் சந்தை இறங்கும் எனக் கணிக்கும் நிலையில், லாபத்தில் ஒருபகுதியை எடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. கொரோனா - 19, உக்ரைன்–ரஷ்யா போர் போன்ற காலங்களில் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் திடீர் இறக்கம் கண்டு மதிப்பு குறைந்தது. இந்தச் சமயத்தில் முதலீட்டில் ஒருபகுதியை விற்று, பணமாக வைத்திருந்தவர்கள் நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்த்து, அதிக லாபம் பார்க்கவே செய்தார்கள்.

பாதுகாப்பு & அதிக லாபம்... முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைக்கும் கலை..!

ரிஸ்க் எடுக்காமல் இருப்பதே ரிஸ்க்...

முதலீட்டில் ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான் மிகப் பெரிய ரிஸ்க் என்பார்கள் நிபுணர்கள். காரணம், முதலீட்டில் ரிஸ்க் எடுக்கவில்லை எனில், பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் கிடைக்காது. அந்த நிலையில், பிள்ளை களின் கல்வி, திருமணம் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்ற கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

முதலீட்டில் ரிஸ்க் மற்றும் ரிட்டர்ன் ஆகிய இரண்டும் எப்போதும் கைகோத்து செயல்படுகின்றன. இதில், எந்த அளவுக்கு அதிக ரிஸ்க் எடுக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, மேற்சொன்ன வழிகளை நீங்கள் கடைப்பிடித்தால அதிக வருமானம் பெறுவீர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism