Published:Updated:

பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தரும் ஹைபிரிட் ஃபண்டுகள்..!

சேமிப்பும் முதலீடும்
பிரீமியம் ஸ்டோரி
சேமிப்பும் முதலீடும்

சேமிப்பும் முதலீடும் - 20

பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தரும் ஹைபிரிட் ஃபண்டுகள்..!

சேமிப்பும் முதலீடும் - 20

Published:Updated:
சேமிப்பும் முதலீடும்
பிரீமியம் ஸ்டோரி
சேமிப்பும் முதலீடும்

நடுத்தர அளவு ரிஸ்க்கில் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் மற்றும் லாபத்துக்கு குறைவான வருமான வரியை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏற்றதாக ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன. முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணத்தை நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் பிரித்து முதலீடு செய்யப்படுவது ஹைபிரிட் திட்டங்கள் (Hybrid Schemes). இதைத் தமிழில் கலப்பினத் திட்டங்கள் அல்லது கலவைத் திட்டங்கள் எனலாம். இதற்குமுன் இந்த ஃபண்டின் பெயர் பேலன்ஸ்டு ஃபண்ட் என இருந்தது.

சிவகாசி மணிகண்டன் 
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன் நிதி ஆலோசகர், Aismoney.com

ஹைபிரிட் ஃபண்ட் வகைகள்...

இதில் திரட்டப்படும் பணம், முதலீடு செய்யப்படும் விதத்தின் அடிப்படையில் செபி அமைப்பு இந்தக் கலப்பினத் திட்டங்களை ஆறு வகைகளாகப் பிரித்துள்ளன.

1. கன்சர்வேட்டிவ் ஹைபிரிட் ஃபண்ட்: திரட்டப்படும் நிதியில் 75% முதல் 90% வரையில் கடன் சார்ந்த ஆவணங்களிலும், 10% முதல் 25% வரையில் நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சார்ந்த ஆவணங்களில் முதலீடு செய்யப்படுவது கன்சர்வேடிவ் ஹைபிரிட் ஃபண்ட் ஆகும். இந்த ஃபண்டில் ரிஸ்க் குறைவு. அதற்கேற்ப வருமானமும் குறைவாக இருக்கும். இந்த ஃபண்ட் நடுத்தர கால முதலீடு அதாவது, 2 முதல் 4 ஆண்டுக்கால இலக்குகளை நிறைவேற்ற முதலீடு செய்யலாம். உதாரண மாக, கார் வாங்க, வெளிநாடு சுற்றுலா, வீட்டுக் கடன் வாங்க முன் பணம் போன்ற தேவை களுக்கு முதலீடு செய்து வரலாம். மேலும், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், வயதானவர் களுக்கு ஏற்றது.

2. பேலன்ஸ்டு ஹைபிரிட் ஃபண்ட் / அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்ட்

பேலன்ஸ்டு ஹைபிரிட் ஃபண்ட்: திரட்டப் படும் பணத்தில் 40% முதல் 60% வரையில் கடன் சார்ந்த ஆவணங்களிலும், 40% முதல் 60% வரையில் நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சார்ந்த ஆவணங்களில் முதலீடு செய்யப்படுவது பேலன்ஸ்டு ஹைபிரிட் ஃபண்ட். இந்த ஃபண்டில் ரிஸ்க் ஓரளவு குறைவு. நான்கு ஆண்டுகளுக்கு மேற்பட்டு ஐந்தாண்டுகளுக்கு உட்பட்ட இலக்குகளுக்கு இந்தத் திட்டம் ஏற்றதாக இருக்கும். அதே நேரத்தில், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் பிள்ளைகளின் கல்வி, கல்யாணம் மற்றும் தங்களின் ஓய்வுக்கால முதலீட்டை இந்த ஃபண்டில் முதலீடு செய்து வரலாம்.

அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்ட்: திரட்டப் படும் பணத்தில் 65% முதல் 80% வரையில் நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சார்ந்த ஆவணங்களிலும், 25% முதல் 35% வரையில் கடன் சந்தை சார்ந்த ஆவணங்களிலும் முதலீடு செய்யப்படும் திட்டம் அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்ட். இதில் ரிஸ்க் கூடுதலாக இருக்கிறது. அதற்கேற்ப வருமானமும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. செபி விதிமுறைப்படி, ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமானது, அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்ட் அல்லது பேலன்ஸ்டு ஹைபிரிட் ஃபண்ட் இதில் ஒன்றை மட்டுமே வெளியிட முடியும்.

பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தரும் ஹைபிரிட் ஃபண்டுகள்..!

3. டைனமிக் அஸெட் அலொகேஷன் ஃபண்ட்: பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தை யின் சூழ்நிலைக்கேற்ப, நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீட்டைக் கூட்டி குறைத்து முதலீடு செய்வது, டைனமிக் அஸெட் அலொகேஷன் ஃபண்ட். இந்தத் திட்டம் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பங்குச் சந்தை உச்சத்திலிருக்கும்போது கடன் பத்திரங்களில் முதலீடு அதிகரிக்கப்படும். இதுவே பங்குச் சந்தை வீழ்ச்சியிலிருந்தால் நிறுவனப் பங்குகளில் முதலீடு அதிகரிக்கப்படும். சுமார் மூன்று ஆண்டு இலக்குகளுக்கு இந்த ஃபண்டில் முதலீடு செய்வது சரியாக இருக்கும்.

4. மல்ட்டி அஸெட் அலொகேஷன் ஃபண்ட்: திரட்டப் படும் தொகையை, குறைந்தது மூன்று சொத்துப் பிரிவுகளில் குறைந்தபட்சம் தலா 10% வீதம் முதலீடு செய்வது மல்ட்டி அஸெட் அலொகேஷன் ஃபண்ட். மூன்று சொத்துப் பிரிவு என்கிறபோது நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம். சில மல்ட்டி அஸெட் அலொகேஷன் ஃபண்டுகளில் வெளிநாட்டு பங்குகளிலும் முதலீடு செய்யப்படும். இதன் மூலம் ஃபண்டின் ரிஸ்க் குறைக்கப்படுவதுடன், வருமானமும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. பொதுவாக, தங்கத்தின் விலை அதிகரிக்கும்போது பங்குச் சந்தை சரிவில் இருக்கும். அந்த வகையில் இந்த ஃபண்டின் ரிஸ்க் சற்றுக் குறைவாக இருக்கும். மூன்று ஆண்டுக்கு மேற்பட்ட இலக்குகளுக்கு இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

5. ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்: திரட்டப்படும் தொகையில் குறைந்தபட்சம் 65% வரையில் நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சார்ந்த ஆவணங்களில் முதலீடு செய்யப்படும், அதேநேரத்தில், ஆர்பிட்ரேஜ் முறை முதலீடு இந்த ஃபண்டில் பின்பற்றப்படும். 2, 3 ஆண்டுகளுக்கான நிதி இலக்குக்கு இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். முதலீட்டின் மூலம் அதிக லாபம் அல்லது குறைவான இழப்பு என்பது இந்தத் திட்டத்தின் தன்மை. வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட ஓரிரு சதவிகிதம் அதிக வட்டி கிடைக்கக்கூடும்.

6. ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட்: திரட்டப்படும் பணத்தில் குறைந்தபட்சம் 65% நிறுவனப் பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த ஆவணங்களிலும், குறைந்த பட்சம் 10% கடன் சார்ந்த ஆவணங்களிலும் முதலீடு செய்யப்படுவது ஃஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட். இந்த ஃபண்டில் நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும் அதே நேரத்தில், ஆர்பிட்ரேஜ் முதலீட்டு பாணியும் பின்பற்றப்படுகிறது. 2, 3 ஆண்டுகளுக்கான நிதி இலக்குக்கு இதில் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்டில் ரிஸ்க் குறைவாக இருக்கும். வருமானம் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் அளவுக்கு இருக்கும்.

பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தரும் ஹைபிரிட் ஃபண்டுகள்..!

உத்தரவாதமான லாபம்...

மேற்கண்ட ஆறு ஃபண்டுகளும் ஓப்பன் எண்டட் ஃபண்ட். அதாவது, எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இந்தக் கலப்பின ஃபண்டுகளில், முதலீட்டாளர் களிடமிருந்து திரட்டப்படும் தொகை, பங்குச் சந்தை மற்றும் கடன் சார்ந்த ஆவணங்களில் கலந்து முதலீடு செய்யப்படுதால், ஈக்விட்டி ஃபண்ட் அளவுக்கு அதிக ரிஸ்க் கிடையாது. இந்த வகை ஃபண்டுகளில் லாபம் பணவீக்க விகிதத்தைவிட ஓரிரு சதவிகிதம் அதிகமாக இருக்கும்.

வரி விதிப்பு எப்படி?

கலப்பின ஃபண்டுகளில் திரட்டப்படும் நிதி 65 சதவிகிதத் துக்குமேல் நிறுவனப் பங்குகள் மற்றும் அது சார்ந்த ஆவணங் களில் முதலீடு செய்யப்பட்டால் (உதாரணம், ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட், ஆர்பிட்ரேஜ் ஃபண்ட், அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்ட், டைனமிக் அஸெட் அலொ கேஷன் ஃபண்ட்) அந்த ஃபண்டு களுக்கு ஓராண்டுக்கு முன் யூனிட்டுகளை விற்று லாபம் பார்த்தால், 15% வரி கட்ட வேண்டும். இதுவே ஓராண்டுக்கு மேற்பட்ட காலத்தில் யூனிட்டு களை விற்று லாபம் ஈட்டினால், நிபந்தனைக்கு உட்பட்டு லாபத்துக்கு ரூ.1 லட்சத்துக்கு வரி கிடையாது. அதற்கு மேற் பட்ட லாபத்துக்கு 10% வரி கட்ட வேண்டும்.

முதலீட்டாளர்களிடமிருந்து திட்டப்படும் நிதியில் 65 சதவிகி தத்துக்குக்கீழ் நிறுவனப் பங்கு களில் முதலீடு செய்யப்பட்டால் (உதாரணம், கன்சர்வேட்டிவ் ஹைபிரிட் ஃபண்ட், பேலன்ஸ்டு ஹைபிரிட் ஃபண்ட்), அதற்கு கடன் ஃபண்டுகளுக்கு உரிய வருமான வரி விதிக்கப்படும்; அதாவது, இந்த ஃபண்டுகளின் யூனிட்டுகளை மூன்றாண்டுக்குள் விற்றால், ஒருவர் எந்த வருமான வரி வரம்புக்குள் வருகிறாரோ, அதற்கேற்பவே வரி கட்ட வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு லாபம் ஈட்டினால் பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு, 20% வரி கட்ட வேண்டும். மல்ட்டி அஸெட் அலொகேஷன் ஃபண்ட் திட்டத்தில் பங்குகள் மற்றும் அது சார்ந்த ஆவணங்களில் 65%-க்கு மேல் முதலீடு செய்யப்பட்டால், ஈக்விட்டி ஃபண்டுக்குரிய வரி விதிப்பு இருக்கும். 65 சதவிகிதத்துக்கு குறைவாகப் பங்குகள் மற்றும் அது சார்ந்த ஆவணங்களில் முதலீடு செய்யப்பட்டால், கடன் ஃபண்டுகளுக்கு உரிய வரி விதிப்பு இருக்கும்.

(முதலீடு செய்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism