நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

உங்கள் குழந்தையும் கோடீஸ்வரர்தான்! - நிதித் திட்டமிடல் சூட்சுமம்!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு

உங்கள் மகனோ, மகளோ பள்ளிப் படிப்பைப் படித்து முடித்துவிட்டு, கல்லூரியில் படிக்கத் தொடங்கிய பிறகு, பங்குச் சந்தை முதலீடு பற்றி கற்றுக்கொடுக்க ஆரம்பியுங்கள்.

ணவன்-மனைவி இருவருக்குமான தலையாய கடமை, தங்கள் பிள்ளைகளைப் பராமரிப்பது, படிக்கவைப்பது மட்டுமல்ல... தங்களின் குழந்தைகளுக்குச் சேமிப்பு, முதலீடு, நிதித் திட்டமிடல் குறித்த விஷயங்களைச் சொல்லித் தருவதும்தான். இதற்கு என்ன செய்யலாம்?

உண்டியலில் தொடங்குங்கள்..!

உங்கள் குழந்தைக்கு 8 வயதானவுடன் ஒரு சிறு உண்டியலை வாங்கிக்கொடுங்கள். அந்த உண்டியல் உடைக்கக்கூடியதாக இல்லாமல், மறுமுறை பயன்படுத்தும்படியாக இருக்கும்படி வாங்கிக்கொள்ளுங்கள். அவர்களின் கையில் தினமும் 10 ரூபாயைக் கொடுத்து உண்டியலில் போடச் சொல்லுங்கள். இவ்வாறு தொடர்ச்சியாக ஒரு மாதம் செய்யச் சொன்னால், மாதக் கடைசியில் 300 ரூபாய் கிடைக்கும். அந்தப் பணத்தை எடுத்து குழந்தையிடம் கொடுங்கள். தன்னால் பணம் சேமிக்க முடியும் என்ற எண்ணம் அந்தக் குழந்தைக்கு வரும். சேமிப்பின் விதையைச் சிறு வயதில் விதைத்தால், குழந்தை வளர வளர சிக்கனமும் சேமிப்பும் சேர்ந்தே வளரும்.

உங்கள் குழந்தையும் கோடீஸ்வரர்தான்! - நிதித் திட்டமிடல் சூட்சுமம்!

வங்கிக் கணக்கு தொடங்குங்கள்!

8 வயதிலிருந்து 12 வயது வரை உங்கள் குழந்தைக்கு சேமிப்பின் அவசியத்தைச் சொல்லித்தர, உண்டியல் மட்டும் போதும். 13 வயதில் உண்டியலுடன் உங்கள் குழந்தையின் பெயரில் ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்கி, வங்கி ஆர்.டி-யில் பணத்தைச் சேர்க்கக் கொடுங்கள்.

உண்டியல் மூலம் சேர்த்த பணம் 300 ரூபாயை ஒவ்வொரு மாதமும் வங்கி ஆர்.டி-யில் சேர்த்து, அதற்கு 7% வட்டி கிடைத்தால், ஒரு வருட முடிவில் ரூ.3,740 கிடைக்கும். மூன்று வருடங்கள் சேமித்தால், உங்களுக்குக் கிடைப்பது ரூ.12,040 (அசல் ரூ. 10,800, வட்டி, ரூ.1,240). ஐந்து வருடங்கள் சேமித்தால் ரூ. 21,580 (அசல் ரூ. 18,000, வட்டி ரூ.3,580). நீண்டகாலத்துக்கு பணத்தைச் சேமிப்பதன் மூலம் அதிக லாபம் கிடைக்கக் காரணமான கூட்டு வட்டியின் (Power of Compounding) மகத்துவத்தை இதன் மூலம் இளமைப் பருவத்திலேயே குழந்தைகளுக்கு எளிதாகச் சொல்லித் தரலாம்.

சேமிப்பை ஊக்கப்படுத்திக் கிடைக்கப்பெறும் முதிர்வுத் தொகையை அவர்களின் கல்வி, இதர தேவைகளுக்குச் செலவு செய்தால், அவர்கள் சேமிப்பின் பலனை அருமையாகப் புரிந்துகொள்வார்கள். உதாரணமாக, ஒரு வருடச் சேமிப்பில் கிடைக்கும் தொகையை அவர்களின் பிறந்தநாள் செலவுகளுக்குப் பயன்படுத்தலாம். அவர்கள் இன்னும் வளர்ந்த நிலையில் பள்ளிக் கல்விக் கட்டணம் செலுத்த பண்டிகைக்கால செலவுகள் செய்ய என பயன்படுத்தக் கற்றுத் தரலாம்.

சேமிப்பு
சேமிப்பு

இப்படிச் செய்வதால், குழந்தைகள் தங்களின் சேமிப்பின் மூலம் நிதி இலக்கை அடையும் எண்ணம் சிறு வயதிலேயே ஏற்படும்.

சேமிப்பிலிருந்து முதலீட்டுக்கு..!

உண்டியல் மூலம் சேமிப்பின் அவசியத்தை இத்தனை நாளும் குழந்தைகளுக்குச் சொல்லித்தந்த நீங்கள், இனி முதலீட்டின் அவசியத்தைச் சொல்லித் தரலாம். உங்கள் மகனோ, மகளோ 11-ம் வகுப்பு படிக்கும் நேரத்தில் முதலீடு தொடர்பான விஷயங்களைக் கற்றுத் தருவது மிகச் சரியாக இருக்கும்.

`சேமிப்பும் முதலீடும் ஒன்றுதானே...’ எனப் பலரும் நினைக்கிறார்கள். இரண்டும் வெவ்வேறு என்பதை முதலில் பல பெற்றோர்களுக்கே புரியவைக்க வேண்டியிருக்கிறது. சேமிப்பு, அசலுக்கு உத்தரவாதம் தருவது. அதன் மூலம் கிடைக்கும் வருமானம் குறைவாகவே இருக்கும். ஆனால், முதலீடு என்பது நீண்டகாலத்தில் பல்கிப் பெருகும் தன்மைகொண்டது என்பதை நன்கு வளர்ந்துவிட்ட உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு தொடர்பாக அறிமுகம் செய்ய இது மிகச் சிறந்த காலமாக இருக்கும். எடுத்த எடுப்பில் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை அறிமுகம் செய்யாமல், ஒரு வருடத்துக்குக் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யக் கற்றுக்கொடுத்த பிறகு, இரண்டாம் ஆண்டில் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யக் கற்றுத் தரலாம். ஒரு மாதத்துக்கு ரூ.1,000 முதலீடு, நீண்ட காலத்தில் எதிர்பார்க்கும் வருமானம் 12%, தொடர்ச்சியாக 30 வருடங்களுக்கு எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்தால் கிடைக்கக்கூடிய பணம் ரூ.25 லட்சங்களுக்குமேல் இருக்கும் என்பதை உங்கள் குழந்தைக்குப் புரியவையுங்கள்.

சேமிப்பு
சேமிப்பு

முதலீட்டுத் தொகை ஒரு மாதத்துக்கு ரூ.3,000-ஆக இருந்தால், 12% லாபம் கிடைக்கும்பட்சத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1 கோடி கிடைக்கும் என்ற கணக்கு குழந்தைகள் முதலீட்டைத் தொடர்ந்து செய்ய நிச்சயம் உதவும்.

பங்குச் சந்தையை அறிமுகப்படுத்துங்கள்..!

உங்கள் மகனோ, மகளோ பள்ளிப் படிப்பைப் படித்து முடித்துவிட்டு, கல்லூரியில் படிக்கத் தொடங்கிய பிறகு, பங்குச் சந்தை முதலீடு பற்றி கற்றுக்கொடுக்க ஆரம்பியுங்கள். பங்குச் சந்தை என்றால் என்ன, அது எப்படிச் செயல்படுகிறது, என்பதையெல்லாம் விளக்கிச் சொல்லிவிட்டு, பெயரளவில் முதலீடு செய்யும் பேப்பர் இன்வெஸ்ட்மென்ட்டைச் சொல்லிக் கொடுங்கள். இது ஒரு பங்கை வாங்குவதல்ல. வாங்குகிற மாதிரி ஒரு நோட்டில் எழுதிக்கொள்வது. இப்படிச் சில பங்குகளைத் தொடர்ந்து ஃபாலோ செய்வதன் மூலம் பங்கு விலை ஏன் உயர்கிறது/குறைகிறது என்பது பற்றி எளிதாகப் புரிந்துகொள்வார்கள். எடுத்த எடுப்பில் மிட்கேப், ஸ்மால்கேப் என பங்குச் சந்தையைப் பணம் அள்ளும் இயந்திரமாக எடுத்துச் சொல்லாமல், லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்வது பற்றி சொல்லித் தரலாம்.

முதலீடு
முதலீடு

ஒவ்வொரு முதலீட்டு சாதனத்திலுமுள்ள ரிஸ்க் தன்மையைப் புரிந்து அதற்கேற்றாற் போல், முதலீட்டு பரவலாக்கத்தை (Asset Allocation) விளக்கிச் சொல்லுங்கள். எந்தவொரு காலத்திலும் வருவாயைப் பெருக்கும் முதலீட்டு உத்திகளைக் கற்றுக்கொடுங்கள். அது பிற்காலத்தில் பிள்ளைகளின் குடும்ப நிதிநலனைச் சிரமப்படுத்தாமல் ரிஸ்க் தன்மையைக் கையாள உதவும்.

முன்னேற்றத்துக்கு மூன்று ஏணிகள்..!

உங்கள் மகனோ, மகளோ கல்லூரிப் படிப்பைப் படித்து முடித்த பிறகு வேலைக்குச் செல்லும்போது ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு மற்றும் அவசரகால நிதி ஆரம்பிப்பதற்கான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுங்கள். இந்த மூன்றும் ஒரு தனிப்பட்ட நபரின் நிதி முன்னேற்றத்துக்கான ஏணிகள். இதற்காகச் செய்யப்படும் செலவு மிக மிக அவசியம் என்பதை உணர்ந்துவிட்டால், இதன் மூலம் கிடைக்கும் நன்மை மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பது பிற்பாடு எல்லோருக்கும் புரியத் தொடங்கும்.

சேமிப்பு / முதலீடு / நிதித் திட்டமிடல் பற்றி உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சொல்லிக் கொடுக்கும் விஷயங்கள் அவர்கள் வளர்ந்த பிறகு அவர்களைக் கோடீஸ்வரர்களாக மாற்றும் என்பது நிச்சயம்.