இந்தியா முழுக்க உள்ள பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பரபரப்பாகப் பேசும் விஷயமாக மாறியிருக்கிறது சித்ரா ராமகிருஷ்ணா விவகாரம். அரசு விதிமுறைகளை சரியாகப் பின்பற்றுவதிலும் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும் ‘மாடல்’ நிறுவனமாக விளங்கியது என்.எஸ்.இ (NSE) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய பங்குச் சந்தை. ஆனால், 2013-ல் என்.எஸ்.இ-யின் எம்.டி மற்றும் சி.இ.ஓ-வாக சித்ரா ராமகிருஷ்ணா ஆன பிறகு, அதைத் தன் இஷ்டம் போல நடத்த ஆரம்பித்தார். என்.எஸ்.இ தொடர்பாக அவர் எடுத்த பல முடிவுகளை செபிக்கு மட்டுமல்ல, என்.எஸ்.இ-யின் முதலீட்டாளர் களுக்குக்கூட தெரிவிக்கவில்லை.
பங்குச் சந்தையுடன் துளியும் தொடர்பு இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை உயர்பதவியில் உட்கார வைத்து, பல கோடி ரூபாய் சம்பளம் தந்திருக்கிறார். என்.எஸ்.இ தொடர்பான முக்கியமான முடிவுகளை ‘இமயமலை சாமியாருடன்’ கலந்துபேசி எடுத்திருக்கிறார். கோ-லொகேஷன் என்கிற பெயரில் பங்குச் சந்தை பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை சில நிறுவனங்கள் முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் வசதியைச் செய்து தந்திருக்கிறார். இவையெல்லாம் அரசல்புரசலாகக் கசிய ஆரம்பித்தபோது, 2016-ம் ஆண்டு அந்தப் பதவியை விட்டு புத்திசாலித்தனமாக வெளியேறிவிட்டார் அவர்.
இப்போது நம் கேள்வி என்னவெனில், கடந்த ஐந்து ஆண்டுகளாக சித்ரா ராமகிருஷ்ணா மீது ஏன் பெரிய அளவில் விசாரணை நடத்தப்படவில்லை என்பதே. பங்குச் சந்தை என்பது பல லட்சம் கோடி ரூபாய் புழங்குகிற இடம். இதில் சில பெரிய நிறுவனங்கள் எளிதாகப் பணம் சம்பாதிக்கும் வசதியை (கோ-லொகேஷன்) செய்து தந்தது எவ்வளவு பெரிய குற்றம்? அவர் மீது இப்படி ஒரு குற்றச்்சாட்டு இருக்கிறது என ஊருக்கே தெரிந்தபோது, சி.பி.ஐ போன்ற முக்கியமான அமைப்பு ஏன் விசாரிக்கவில்லை, விசாரணை நடக்காமல் செய்தது யார், ஐந்து ஆண்டுகளுக்குப் பின் ‘எல்லாம்’ முடிந்த நிலையில், இப்போது வருமானவரித் துறை சோதனை நடத்துவது முதலீட்டாளர்களை ஏமாற்றும் கண்துடைப்பு நடவடிக்கைதானே என்கிற கேள்விகளுக்கு பிரதமரும் நிதியமைச்சரும் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? பின்னணியில் இருக்கும் சாமியாரைக் காப்பாற்றத்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களா?
90-களில் ஹர்ஷத் மேத்தா போன்றவர்கள் செய்த தவறுகளால் பங்குச் சந்தையிலிருந்து விலகியே இருந்தனர் நம் மக்கள். கடந்த 20 ஆண்டுக் காலமாகத் தான் பங்கு முதலீட்டின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் நம்பிக்கை எந்த வகையிலும் தகர்ந்துவிட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. சித்ரா ராமகிருஷ்ணா மீது விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், பங்குச் சந்தையில் இது போன்ற தவறுகள் நடக்காதபடிக்கு அத்தனை நடவடிக்கைகளையும் மத்திய அரசாங்கம் செய்ய வேண்டும். இதைச் செய்யா விட்டால் பங்குச் சந்தை மீது மக்கள் மீண்டும் நம்பிக்கை இழப்பது நிச்சயம்!
- ஆசிரியர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism