Published:Updated:

பிரதம மந்திரி வய வந்தனா யோஜனா... மூத்த குடிமக்களுக்கான பென்ஷன் திட்டம்..!

ஓய்வுக்காலம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓய்வுக்காலம்

ஒளிமயமான ஓய்வுக்காலம்! சூப்பர் பிளானிங் - 19

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மூத்த குடிமக்களுக்காக 2016-ம் ஆண்டு புத்தாண்டில் அறிவித்த ஓய்வூதியத் திட்டம் தான், பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (Pradhan Mantri Vaya Vandana Yojana - PMVVY) ஆகும். இந்தத் திட்டத்தின் நோக்கம், மூத்த குடிமக்களுக்கு நீண்ட காலத்துக்கு நிலையான வட்டி வருமானம் வழங்குவதாக இருக்கிறது.மேலும், மத்திய அரசு நடத்தும் திட்டம் இது என்பதால், முதலீடு செய்யும் தொகை மற்றும் வட்டி வருமானத்துக்கு உத்தரவாதம் இருக்கிறது.

என்.விஜயகுமார், நிர்வாக இயக்குநர்,
https://www.click4mf.com/
என்.விஜயகுமார், நிர்வாக இயக்குநர், https://www.click4mf.com/

எல்.ஐ.சி நிர்வகிக்கும் திட்டம்...

இந்தியாவில் உள்ள 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான அரசு மானியம் பெறும் இந்த பென்ஷன் திட்டத்தை எல்.ஐ.சி நிர்வகித்து வருகிறது. தற்போதைய நிலையில், இந்தத் திட்டத்தில் சேர்வதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2023 ஆகும். இந்தத் தேதி பின்னர் நீட்டிக்கப்பட வாய்ப்பு உண்டு என்று சொல்லப்பட்டாலும், இப்போதைக்கு இதுவே கடைசி தேதி.

யாருக்கு ஏற்றது, ஏற்றதல்ல..?

ஓரளவுக்கு நல்ல வட்டி வருமானம், ரிஸ்க் எதுவும் இல்லாமல் வருமானம் கிடைக்க வேண்டும் என நினைக்கிறவர்களுக்கு ஏற்ற திட்டமாக இது இருக்கிறது.

விலைவாசி உயர்வு மற்றும் வாழ்க்கை முறை (LIfe’s style) செலவு களைச் சமாளிக்கும் விதமாக அதிக வருமானத்தை எதிர்பார்ப்பவர்களுக்கும், நிலையான வருமானம் எதிர்பார்க்காதவர்களுக்கும் இந்தத் திட்டம் ஏற்றதல்ல.

மாற்றுத் திட்டங்கள்...

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பென்ஷன் பிளான்கள், தபால் அலுவலகம் மற்றும் வங்கியில் செயல்படுத்தப்படும் மூத்த குடி மக்கள் சேமிப்புத் திட்டம் ஆகியவை மாற்று முதலீட்டுத் திட்டங்களாக உள்ளன. மேலும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் ஈக்விட்டி, ஹைபிரிட் மற்றும் கடன் ஃபண்டுகளின் முதலீட்டுக் கலவை அல்லது கடன் ஃபண்ட் தொகுப்பு நிதியிலிருந்து சிஸ்ட மேட்டிக் வித்ட்ராயல் பிளான் (எஸ்.டபிள்யூ.பி) முறையில் குறிப் பிட்ட தொகையை மாதம்தோறும் பென்ஷன் போல பெறும் வசதி கொண்டவை மாற்றுத் திட்டங்களாக உள்ளன.

பிரதம மந்திரி வய  வந்தனா யோஜனா... மூத்த குடிமக்களுக்கான பென்ஷன் திட்டம்..!

எப்படி சேர்வது..?

எல்.ஐ.சி நிறுவனத்தின் ஏஜென்டுகள் மூலம் இந்தத் திட்டத்தில் சேரலாம். மேலும், எல்.ஐ.சி-யின் கிளை அலுவலகத்துக்கு நேரில் சென்றோ, இணையதளம் (www.licindia.in) மூலமாகவோ இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரம் தேவைப்படும். முக்கியமாக, ஆதார், பான் எண்கள் கட்டாயம் தேவை.

இந்தத் திட்டத்தில் மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டுக்கு ஒரு முறை எனத் தேவைக்கேற்ப பென்ஷன் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1,62,162 ஆகும்.அதிகபட்ச முதலீடு ரூ.15 லட்சம் ஆகும். அதாவது, மாதாந்தர ஓய்வூதியத்துக்குக் குறைந்தபட்சம் ரூ.1,62,162, அதிகபட்சம் ரூ.15 லட்சம் முதலீடு செய்ய வேண்டும் காலாண்டு ஓய்வூதியத் துக்கு குறைந்தபட்சம் ரூ.1,61,074, அதிகபட்சம் ரூ.14,89,933 முதலீடு செய்யலாம்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பென்ஷன் பெற குறைந்த பட்சம் ரூ.1,59,574, அதிகபட்சம் ரூ.14,76,064 முதலீடு செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை பென்ஷன் பெற குறைந்த பட்சம் ரூ.1,56,658, அதிகபட்சம் ரூ.14,49,086 முதலீடு செய்யலாம்.

இந்தத் திட்டத்தில் மாத ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.1,000 ஆகவும், அதிகபட்சம் ரூ.9,250-ஆகவும் உள்ளது. இதேபோல, காலாண்டு ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.3,000 ஆகவும், அதிகபட்சம் ரூ.27,750 ஆகவும் உள்ளது. அரையாண்டு ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.6,000-ஆகவும் அதிகபட்சம் ரூ.55,500-ஆகவும் உள்ளது. ஆண்டு ஓய்வூதியம் குறைந்த பட்சம் ரூ.12,000-ஆகவும் அதிகபட்சம் ரூ. 1,11,000-ஆகவும் உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 10 ஆண்டுகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

வட்டி வருமானம்...

2023 மார்ச் 31 வரை இந்தத் திட்டத்தில் சேர்பவர்களுக்கு வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.40% ஆகும். மாதம்தோறும் இந்த வட்டிக்கு பென்ஷன் பெற்றால், அது ஆண்டுக்கு 7.66 சதவிகிதத் துக்கு இணையாக இருக்கும். எனவே, மாதம்தோறும் பென்ஷன் தொகை பெறுவது லாபகரமாக இருக்கும்.

இந்தத் திட்டத்தில் தரப்படும் வட்டியானது ஆண்டுதோறும் மாற்றத்துக்கு உள்ளாகக்கூடும். ஆனால், இதில் சேரும்போது என்ன வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படுகிறதோ, அந்த வட்டியே 10 ஆண்டு காலத் துக்கும் வழங்கப்படும்.

பிரதம மந்திரி வய  வந்தனா யோஜனா... மூத்த குடிமக்களுக்கான பென்ஷன் திட்டம்..!

கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

* இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தத் தொடங்கிய பின் வெளியேற நினைத்தால், ஏஜென்டுகள் மூலம் முதலீடு செய்திருக்கும்பட்சத்தில் 15 நாள்களிலும், ஆன்லைன் மூலம் முதலீடு செய்திருக்கும் பட்சத்தில் 30 நாள்களிலும் பாலிசியை சரண்டர் செய்து பணத்தைத் திரும்பப் பெற முடியும். அப்படி செய்யும் போது, முத்திரைத் தாள் கட்டணம் உள்ளிட்டவை கழிக்கப்பட்டு மீதித் தொகை வழங்கப்படும்.

* பாலிசி காலத்தின்போது ஒருவர் எப்போது வேண்டு மானாலும் பாலிசியை சரண்டர் செய்யக்கூடிய வசதி உள்ளது.

* பத்தாண்டு முடிவில் ஆரம்பத்தில் செய்யப்பட்ட முதலீட்டுத் தொகை திரும்ப வழங்கப்படும்.

* பத்தாண்டுக்குமுன் டெபாசிட்தாரர் இறந்தால், டெபாசிட் தொகை நாமினிக்கு வழங்கப்படும்.

* பத்தாண்டுக்குள் டெபாசிட்தாரர் இறந்து விட்டால், எல்.ஐ.சி அலுவல கத்தில் 90 நாள்களுக்குள் நாமினி இறப்புச் சான்றிதழுடன் பணத்தைக் கேட்டு கோரிக்கை வைக்க வேண்டும்.

* தொடர்ந்து பென்ஷன் தொகை பெற வாழ்நாள் சான்றிதழ் (Life Certificate) ஆண்டுக்கு ஒரு முறை சமர்ப்பிக்க வேண்டும். இதை சேவை கிளை மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ சமர்ப்பிக்க முடியும்.

* பாலிசி எடுக்கும்போதே நாமினியை நியமிக்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்டவர்களை நாமினியாக நியமித்து அவர்களுக்கு எத்தனை சதவிகித தொகையை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடலாம். மேலும், மைனரையும் நாமினியாக நியமிக்கலாம்.

* இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது 8% வட்டி வழங்கப்பட்டது. அப்போது மாதம் அதிகபட்ச பென்ஷன் ரூ.10,000-ஆக இருந்தது. அப்போது சேர்ந்தவர்களுக்கு 8% வட்டி வருமானம் வழங்கப்பட்டு வருகிறது.

* இந்தத் திட்டத்துக்கு சேவை வரி / ஜி.எஸ்.டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

* டெபாசிட்தாரருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட் டால், இடையில் பணத்தை எடுக்க முடியும். 98% தொகை திரும்ப அளிக்கப்படும்.

* இந்தத் திட்டத்தின் ஆவணத்தை அடமானம் வைத்து எல்.ஐ.சி நிறுவனத்திலேயே கடன் பெற முடியும். அதற்கு முதலீடு செய்து, மூன்றாண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். முதலீட்டுத் தொகையில் 75% வரை கடன் பெற முடியும். இதற்கான வட்டி, டெபாசிடுக்கான வட்டியைவிட ஓரிரு சதவிகிதம் கூடுதலாக இருக்கும்.

மூத்த குடிமக்களுக் கான சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி 2022 செப்டம்பர் 30–ம் தேதி வரை 7.4 சதவிகிதமாக இருந்தது. இந்த நிலையில், 2022 அக்டோபர் 1-ம் தேதி முதல் அது 7.6 சதவிகிதமாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

எனவே, முதலீடு மற்றும் வருமானத்தில் ரிஸ்க் எதுவும் வேண்டாம் என நினைக்கிற மூத்த குடிமக்கள், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் அதிகபட்ச முதலீடு ரூ.15 லட்சத்தைத் தாண்டும் பட்சத்தில் மட்டுமே இந்த பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தைப் பரிசீலனை செய்ய கவனத்தில் கொள்ளலாம்!

(திட்டமிடல் தொடரும்)