நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஏற்ற மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்..!

ஓய்வுக்காலம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓய்வுக்காலம்

ஒளிமயமான ஓய்வுக்காலம்! சூப்பர் பிளானிங் - 17

தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை அடுத்து அதிக வருமானம் தரும் திட்டமாக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme - SCSS) உள்ளது.

என்.விஜயகுமார், நிர்வாக இயக்குநர்,
https://www.click4mf.com/
என்.விஜயகுமார், நிர்வாக இயக்குநர், https://www.click4mf.com/

வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட இந்தத் திட்டம் பல வகையில் லாபகரமாக இருக்கிறது. தவிர, இது மத்திய அரசின் திட்டம் என்பதால், அசல் மற்றும் வட்டிக்கு முழுமை யாக பாதுகாப்பு இருக்கிறது.

இது முதன்முதலில் 2004-ம் ஆண்டு மூத்த குடிமக்களுக்கு நிலையான வட்டி வழங்கும் நோக்கத்துடன் மத்திய அரசால் ஆரம்பிக்கப் பட்டது. இந்தத் திட்டம் மூத்த குடிமக்களுக்கு அவர்களின் பணி ஓய்வுக் காலத்தில் நிலையான வருமானத்தைத் தருவதற்கேற்ப உருவாக்கப் பட்டிருக்கிறது.

யாருக்கு ஏற்றது, யாருக்கு ஏற்றதல்ல..?

பணி ஓய்வுக் காலத்தில் ரிஸ்க் எதுவும் இல்லாமல் நிலையான வருமானம் எதிர்பார்ப்பவர்களுக்கேற்ற ஓய்வூதியத் திட்டமாக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் உள்ளது. முதலீட்டின் மூலம் நிலையான வருமானம் தேவை இல்லாதவர்கள் மற்றும் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் மற்றும் வாழ்கைமுறை (Lifestyle) செலவுகளை ஈடுகட்டும் விதமாக கூடுதல் வருமானம் எதிர்பார்ப் பவர்களுக்கு இது ஏற்றதல்ல.

மாற்றுத் திட்டங்கள் என்னென்ன?

ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களின் பென்ஷன் திட்டங்கள், தபால் அலுவலக மாத வருமானத் திட்டம் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா ஆகியவையும் மாற்றுத் திட்டங்களாக உள்ளன. மேலும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களின் ஈக்விட்டி, ஹைபிரிட் மற்றும் கடன் ஃபண்டுகளின் முதலீட்டுக் கலவை (Portfolio) அல்லது கடன் ஃபண்ட் தொகுப்பு நிதியிலிருந்து (Corpus) சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP) மூலம் குறிப்பிட்டத் தொகையை மாதம்தோறும் பென்ஷன்போல் பெறும் வசதி போன்றவை நல்ல மாற்றுத் திட்டமாக இருக்கும்.

பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஏற்ற மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்..!

அடிப்படை தகுதி...

இந்தத் திட்டத்தில் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட தனிப்பட்ட நபர்கள் சேரலாம். மேலும், விருப்ப ஓய்வுத் திட்டத்தின் (VRS) கீழ் ஓய்வுபெற்ற 55 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இதில் சேரலாம். மேலும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ராணுவத்திலிருந்து பணி ஓய்வு பெற்றவர்கள் 50 வயதுக்கு மேல் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பலன் பெற முடியும்.

ஒரு தனிநபர் குறைந்தபட்ச வைப்புத் தொகையாக 1,000 ரூபாயில் இந்தக் கணக்கைத் திறக்கலாம்; அதிகபட்சமாக கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகை 1,000 ரூபாயின் மடங்குகளாக இருக்க வேண்டும். தவிர, ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். ஆனால், அனைத்துக் கணக்குகளிலும் செய்யப்படும் முதலீடு அதிகபட்சம் ரூ.15 லட்சத்தைத் தாண்டக் கூடாது.

ஒருவர் தனியே கணக்கு ஆரம்பிக்கலாம். அல்லது துணைவருடன் (கணவர்/மனைவி) இணைந்து கூட்டுக் கணக்காகத் தொடங்கலாம். தம்பதிகளாகச் சேர்ந்து ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஆனால், ஒரு கணக்கில் ஒரு முறைதான் முதலீடு செய்ய முடியும்.

இந்தக் கணக்கில் முதல் வைப்புத் தொகையாளர் முதலீட்டாளராக இருப்பார். அவர்தான் வரிச் சலுகை பெற முடியும். நாமினி நியமிக்கும் வசதி உள்ளது. இதைக் கணக்கைத் தொடங்கும்போது அல்லது இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ள முடியும்.

எங்கே ஆரம்பிக்கலாம்?

தபால் அலுவலகம், பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கி ஆகியவற்றில் இந்த மூத்த குடிமக்களுக் கான சேமிப்புத் திட்டத்தில் சேரலாம்.

இந்தியன் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, எஸ்.பி.ஐ, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், யூகோ பேங்க், ஐ.டி.பி.ஐ பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் போன்ற வங்கிகளில் இந்தக் கணக்கை ஆரம்பிக்கலாம். ஆன்லைன் மூலமும் இந்தத் திட்டத்தில் சேர முடியும்.

இதற்கென இருக்கும் பிரத்யேக படிவத்தை நிரப்பித் தர வேண்டும். மேலும், உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள் (KYC) படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும்; இரண்டு பாஸ் போர்ட் அளவு புகைப் படங்கள், ஆதார் கார்டு தேவைப்படும். முகவரி மற்றும் அடையாளத்துக் கான ஆதாரம் (ஆதார், பாஸ் போர்ட், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவை) தர வேண்டும். பான் கார்டு தர வேண்டும். அது இல்லை எனில், படிவம் 60 அல்லது 61-ஐ நிரப்பித் தர வேண்டும். வயதுச் சான்றிதழ். பணியிலிருந்து ஓய்வு பெற்ற தேதியைக் குறிப்பிடும் பணி யாளர் சான்றிதழ், பதவியின் பெயர் மற்றும் பணியில் இருந்த காலம் ஆகிய விவரங் களைச் சொல்ல வேண்டும்.

கணக்கை ஆரம்பிக்கும் போது ஒரிஜினல் ஆவணங் களைக் காட்ட வேண்டியது அவசியம் என்பதால், அவற்றைக் கையுடன் எடுத்துச் செல்வது அவசியம் ஆகும்.

வருமானம் எப்படி?

தற்போது இந்தத் திட்டத் தில் ஆண்டுக்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது. இது நாட்டின் சராசரி பண வீக்கத் தைவிட சிறிது அதிகம் என்பதால், இது ஓரளவுக்கு நல்ல வருமானமே.

இந்தத் திட்டத்தின் வட்டி மூன்று மாதத்துக்கு ஒருமுறை மாற்றத்துக்கு உள்ளாகும். அதே நேரத்தில், முதலீட்டை ஆரம்பிக்கும்போது என்ன வட்டி நிர்ணயம் செய்யப்படு கிறதோ, அது முதிர்வுக் காலம் முழுக்க வழங்கப்படுவது இதன் சிறப்பு அம்சமாகும்.

இந்த வட்டித் தொகை காலாண்டுக்கு ஒரு முறை ஆட்டோமேட்டிக்காக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதன் வட்டி யானது டெபாசிட் தேதி யிலிருந்து மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் வழங்கப்படும். இந்த வட்டித் தொகை ஏதாவது காரணத் துக்காக முதலீட்டாளர் கணக்கில் சேரவில்லை எனில், அந்தத் தொகைக்கு வட்டி வழங்கப்பட மாட்டாது.

இந்தத் திட்டத்தின்கீழ் முதிர்வுக் காலம் மற்றும் லாக் இன் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். முதிர்வடைந்தபிறகு அந்தக் கணக்கை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு தேவைப்பட்டால் நீட்டித்துக்கொள்ளலாம். இந்தத் திட்டம் முதிர்வடைந்த ஓராண்டுக் காலத்துக்குள் இதைச் செய்துவிட வேண்டும். இந்த நீட்டிக்கப்பட்ட கணக்குக்கு முதிர்வுத் தேதியில் என்ன வட்டி இருக்கிறதோ, அது வழங்கப்படும். மேலும், நீட்டிக்கப்பட்ட ஓராண்டுக்குப் பிறகு எந்த ஒரு கழிவும் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் அந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.

அடமானக் கடன்...

இந்த மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்க முடியாது. அது ஓய்வுக்கால பலனைப் பாதிக்கும் என்பதால், மத்திய அரசு அடமானக் கடனுக்கு அனுமதி அளிக்கவில்லை.

முதிர்வுக்குமுன் கணக்கை முடித்தல்...

மத்திய நிதித்துறை அமைச்சகம், அண்மையில் அரசாணை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதில், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் பணத்தை ஓராண்டு வரை திரும்ப எடுக்க முடியாது என்ற நிலை இருந்தது. இது மூத்த குடிமக்களுக்கு வசதி குறைவாக இருந்து வந்தது. குறிப்பாக, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைக்கு அவர்களால் தங்களுடைய சொந்தப் பணத்தை எடுக்க முடியாத நிலை இருந்தது.

இந்த நிலையில், இந்தத் திட்டத்தில் தற்போது கொண்டு வந்துள்ள புதிய மாற்றத்தின்படி, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். முன்புபோல் ஓராண்டு முடியும் வரை காத்திருக்கத் தேவையில்லை. அதேபோல், இந்தக் கணக்கை எப்போது வேண்டுமானாலும் முடித்துக்கொள்ளலாம். அதே சமயம், இவ்வாறு முன்கூட்டியே பணத்தை எடுக்கும்போது, அதற்கான வட்டி வழங்குவதில் பழைய விதிமுறைகளே கடைப்பிடிக்கப்படும் என்பதை கவனத்தில்கொள்வது அவசியமாகும்.

வருமான வரிச் சலுகை...

இந்தத் திட்டத்தின்கீழ் செய்யப்படும் முதலீட்டுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி-யின்கீழ் நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வருமான வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. வட்டிக்கு வரி கட்ட வேண்டும். வட்டி வருமானம் ரூ.50,000-ஐ தாண்டும் போது நிபந்தனைக்கு உட்பட்டு வரி கட்ட வேண்டிவரும். மேலும், நிபந்தனைக்கு உட்பட்டு மூலத்தில் வரி (TDS) பிடிக்கப்படும். வருமான வரி வரம்புக்குள் வராதவர்கள் 15G/15H படிவத்தை நிரப்பிக் கொடுத்தால் டி.டி.எஸ் பிடிக்க மாட்டார்கள்.

மூத்த குடிமக்களுக்கு 80TTB பிரிவின்கீழ் அனைத்து வகை யான வங்கி டெபாசிட்டுகள், கூட்டுறவு டெபாசிட்டுகள், தபால் அலுவலக டெபாசிட்டுகளுக்கு நிதி ஆண்டில் ரூ.50,000 வரைக்கும் வரிக் கழிவு இருக்கிறது.

(திட்டமிடல் தொடரும்)

கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

1. இந்தக் கணக்கை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (NRIs), இந்துக் கூட்டுக் குடும்பங்கள் (HUFs) ஆரம்பிக்க முடியாது.

2. இந்த மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டக் கணக்கில் வரைறுக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டால், அதிகப்படியான தொகை டெபாசிட்டருக்கு உடனடியாகத் திருப்பித் தரப்படும்.

3. முதலீட்டாளர் இறந்துவிட்டால், அவர் இறந்த தேதிக்குப் பிறகு, தபால் அலுவலக சேமிப்புக் கணக்குக்கான வட்டிதான் வழங்கப்படும்.

4. ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு இந்தக் கணக்கை மாற்ற முடியும். இதே போல், ஒரு தபால் அலுவலக கிளையிலிருந்து வேறு கிளைக்கு மாற்றிக்கொள்ளலாம்.

5. வட்டி வருமானம் இ.சி.எஸ் முறையில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.