Published:Updated:

ஷேர்லக்: டிஜிட்டல் மயமாக்கல்... கவனிக்க வேண்டிய ஐ.டி பங்குகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

ஷேர்லக்

ஷேர்லக்: டிஜிட்டல் மயமாக்கல்... கவனிக்க வேண்டிய ஐ.டி பங்குகள்..!

ஷேர்லக்

Published:Updated:
ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
ஷேர்லக்

காலையில் 8 மணிக்கே ஷேர்லக், “எனக்கு மாலை 4 மணிக்கு முக்கியமான ஆன்லைன் மீட்டிங் இருப்பதால், மூன்று மணிக்கே வந்துவிடுவேன். 20 நிமிடம்தான் உங்களுக்கு...” என வாட்ஸ்அப் தகவல் அனுப்பியிருந்தார். அவர் சொன்னபடி சரியாக வந்து சேர, நாம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

வேதாந்தா நிறுவனம் இடைக்கால டிவிடெண்ட் அறிவித்திருக்கிறதே?

“கடந்த வாரம் செப்டம்பர் 1-ம் தேதி, இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், பங்கு முதலீட்டாளர்களுக்கு இடைக்கால டிவிடெண்ட் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், பங்கு ஒன்றுக்கு ரூ.18.5 இடைக்கால டிவிடெண்ட் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் 132% வளர்ச்சி அடைந்திருக்கிறது. 2021-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து 85% மற்றும் கடந்த ஒரு வாரத்தில் 9% வளர்ச்சி அடைந்திருக்கிறது. புதன்கிழமை வர்த்தகம் முடியும்போது 298.05 ரூபாய்க்கு வர்த்தகமானது. கடந்த வியாழன் அன்று 2.6% அதிகரித்து, ரூ.305.80-க்கு வர்த்தகம் ஆனது.’’

ஷேர்லக்: டிஜிட்டல் மயமாக்கல்...
கவனிக்க வேண்டிய ஐ.டி பங்குகள்..!

மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் பங்கு விலை குறுகிய காலத்தில் 4,000 ரூபாயைத் தாண்டும் என்று சொல்லப்படுவதை நம்பலாமா?

“நம்பலாமா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். சிறப்பான பிசினஸ் ஆர்டர், வருவாய் வளர்ச்சி மற்றும் நிலையான மார்ஜின் போன்ற காரணங் களால் இந்தப் பங்கு விலை ஏற்றத்தின் போக்கில் காணப்படுகிறது.

கொரோனா காலகட்டத்தில் மிகச் சிறப்பான வருமானத்தை தனது முதலீட்டாளர் களுக்கு மைண்ட்ட்ரீ பங்குகள் வழங்கின. மேலும், டிஜிட்டல் மயமாக்கலில் அதிக கவனம் செலுத்தும் நிறுவனமாக இந்த நிறுவனம் இருக்கிறது. இதன் ஊழியர்கள் தற்போது வீட்டிலிருந்து வேலை செய்வதால், இந்த நிறுவனத்தின் செயல்பாட்டுச் செலவுகள் வெகுவாகக் குறைந்திருக்கின்றன.

கடந்த ஆண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு, தனது முதலீட்டாளர்களுக்கு மூன்று மடங்கு லாபத்தைத் தந்தது. இந்தப் பங்கை வைத்திருக்கும் நீண்டகால முதலீட்டாளர்கள், தொடர்ந்து வைத்திருக்க சில பங்குத் தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளன. காரணம், இன்னும் 3 - 6 மாதங்களுக்கும் இதன் பங்கு விலை 4,000 ரூபாயைத் தாண்டும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. வியாழக்கிழமை வர்த்தக முடிவில் ரூ.3,742 என்கிற விலையில் இருந்தது.’’

நிஃப்டி ஐ.டி இண்டெக்ஸ் நடப்பு ஆண்டில் இதுவரைக்கும் 40 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்திருப்பது ஆச்சர்யம்தானே!

“நிச்சயமாக. 2021-ம் ஆண்டில் இதுவரைக்கும் நிஃப்டி ஐ.டி (Nifty IT) இண்டெக்ஸ் 40 சதவிகித்துக்குமேல் உயர்ந்திருக்கிறது. இந்தக் காலகட்டத்தில், நிஃப்டி குறியீடு சுமார் 20 சதவிகிதம்தான் உயர்ந்திருக்கிறது. முடிந்த ஆகஸ்ட் மாதத்தில் நிஃப்டி 9% உயர்ந்துள்ள நிலையில், ஐ.டி இண்டெக்ஸ் 13% அதிகரித்து உள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் புதிய இயல்பு வாழ்க்கை என்பது அதிக அளவில் டிஜிட்டல் சார்ந்ததாக இருக்கிறது. உலக அளவில் வீட்டிலிருந்தே வேலை என்கிற கருத்து இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக மாறியிருக்கிறது. அதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் மிகவும் தேவைப்படுகிறது. அந்த வகையில், தொழில்நுட்ப நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சி மிகவும் உறுதிப்பட்டதாக இருக்கிறது. ஐ.டி நிறுவனங்கள் வசம் ஏராளமான பணி ஆணைகள் இருக்கின்றன. மேலும், அதிக லாபவரம்பு இருக்கிறது. இதனால்தான் இப்போதைய நிலையிலும் ஐ.டி நிறுவனப் பங்குகளை வாங்க முன்னணிப் பங்குத் தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்து வருகின்றன.

ஒட்டுமொத்த ஐ.டி துறை நடந்த 2021-22-ம் ஆண்டில் சுமார் 15% வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவின் சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்களிப்பு கிட்டத்தட்ட 65 சதவிகிதமாக இருக்கிறது.

இன்ஃபோசிஸ், டி.சி.எஸ், மைண்ட்ட்ரீ, விப்ரோ, ஹெச்.சி.எல், சையன்ட், பிர்லா சாஃப்ட், எல் அண்ட் டி இன்ஃபோடெக், கே.பி.ஐ.டி டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா, உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலை அண்மைக் காலத்தில் மிகவும் உயர்ந்துள்ளது. இந்த உயர்வு தொடரும் என்கிற மாதிரியே பல்வேறு பங்குத் தரகு நிறுவனங்களின் பரிந்துரை இருக்கிறது. அதே நேரத்தில், முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகளில் கண்ணை மூடிக் கொண்டு முதலீடு செய்யக் கூடாது. அவர்களின் ரிஸ்க் எடுக்கும் திறன், முதலீட்டுக் காலம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, அலசி ஆராய்ந்து முதலீட்டு முடிவை சொந்தமாக எடுக்க வேண்டும்.”

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் நிறுவனப் பங்கின் சந்தை மதிப்பு அதிகரித்திருப்பது பற்றி...

“கடந்த வாரம் புதன்கிழமை அன்று இந்திய பங்குச் சந்தைகள் வரலாறு காணாத ஏற்றத்தில் வர்த்தகமாகின. இதன் காரண மாக, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் பங்கு விலை உச்ச விலையை அடைந்து, ரூ.734.90-க்கு வர்த்தகமானது. இதன் காரணமாக இந்த நிறுவனப் பங்கின் சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது. நடப்பு ஆண்டில் இதுவரை சென்செக்ஸ் 20% வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கும் நிலையில், இந்த நிறுவனப் பங்கின் விலை 36% அதிகரித்திருக்கிறது.”

ஷாப்பர்ஸ் ஸ்டாப் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“கடந்த வாரம் புதன்கிழமை அன்று, ஷாப்பர்ஸ் ஸ்டாப் பங்கு விலை 6% வரை அதிகரித்து ரூ.254.50-க்கு வர்த்தகமானது. இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான கிராஸ்வோர்டு புக்ஸ்டோர் பிசினஸை சுமார் ரூ.42 கோடிக்கு விற்பனை செய் வதற்கான ஒப்புதலை ஆகஸ்ட் 31-ம் தேதி நடந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு வழங்கியிருக்கிறது. நிறுவனத்தின் தரப்பிலிருந்து இந்த அறிவிப்பு வெளியானதும், ஷாப்பர்ஸ் ஸ்டாப் நிறுவனத்தின் பங்கு விலை உயர்ந்தது. வியாழன் அன்று வர்த்தக முடிவில் இந்த நிறுவனப் பங்கின் விலை ரூ.246.10 என இருந்தது.’’

அமி ஆர்கானிக்ஸ் ஐ.பி.ஓ வெற்றியடைந்ததா?

“இந்த நிறுவனம் ரூ.570 கோடி நிதி திரட்டும் நோக்கில் ஐ.பி.ஓ-வுக்கு வந்தது. முதல் நாளிலேயே, பங்கு வெளியீட்டு அளவைவிட 1.62 மடங்குக்கு பங்குகள் வேண்டி முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்தன. அதாவது, இந்த ஐ.பி.ஓ-வில் 65.42 லட்சம் பங்குகள் வெளியிடப்பட்டன. ஆனால், இதற்கான தேவை 1.06 கோடி பங்குகளாக இருக்கிறது. தகுதிவாய்ந்த முதலீட் டாளர்களுக்காக ஒதுக்கப்படும் பங்குகள் முழுவதும் ஏலம் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரிவில் 1.39 மடங்குக்கு விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. சிறு முதலீட் டாளர்கள் பிரிவில் 2.31 மடங்குக்கு பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்துள்ளன. நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில் 32% விண்ணப்பங்கள் வந்துள்ளன.’’

மேப்மை இந்தியா நிறுவனம் ஐ.பி.ஓ வருவது பற்றி...

“மேப்மை இந்தியா நிறுவனம் தனது பங்குதாரர்களின் பங்குகளை பங்குச் சந்தையில் (ஓ.எஃப்.எஸ் முறை) விற்பனை செய்ய உள்ளது. இதற்கான அனுமதியைக் கேட்டு இந்த நிறுவனம் செபியிடம் ஆவணங்களைச் சமர்ப்பித்து உள்ளது.

ராஷ்மி வர்மா, குவால்காம் மற்றும் ஜப்பானிய வரைபட தயாரிப்பு நிறுவனம் ஜென்ரின் ஆகியோர்களின் பங்குகள் இந்த ஐ.பி.ஓ-வில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. தற்போதைய நிலையில், மேப்மை இந்தியா நிறுவனத்தில் போன்பே நிறுவனம் 36.11% பங்குகளை வைத்திருக்கிறது. ஜென்ரின் நிறுவனம் 17.82% பங்குகளையும், ராஷ்மி மற்றும் ராகேஷ் வர்மா 17.66% மற்றும் 14.11% பங்குகளையும், குவால்கம் நிறுவனம் 8.48% பங்குகளையும் கொண்டிருக்கிறது.”

ரிலையன்ஸ் உட்பட பல பங்குகளின் விலை அதிகரிக்க என்ன காரணம்?

``கடந்த வாரத்தில் ஆட்டம் கண்ட பங்குச் சந்தை, இந்த வாரத்தில் நல்ல உயர்வு கண்டது. ரிலையன்ஸ் நிறுவனப் பங்கு விலை கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டது. வியாழக்கிழமை வர்த்தக முடிவின் போது இந்தப் பங்கு விலை ரூ.2,294-ஆக இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தப் பங்கின் விலை ரூ.2,369-ஆக இருந்தது. அதன் பிறகு விலை குறைந்து, தற்போது இந்த நிலைக்கு வந்திருக்கிறது. என்றாலும் பழைய உச்சத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட இன்னும் எத்தனை நாளாகுமோ தெரியாது!’’

சமீபத்தில் ஐ.பி.ஓ வந்த கெம்ப்ளாஸ்ட் சன்மார் பங்கு விலை அதிகரித்திருக்கிறதே!

“இந்த பங்கு ஐ.பி.ஓ வந்து பங்குச் சந்தையில் பட்டியலானபோது நல்ல லாபத்தைத் தராமல் ஏமாற்றிவிட்டதாகவே பல முதலீட்டாளர்கள் நினைத்தனர். ஆனால், அதன் பிறகு, இந்தப் பங்கின் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயரத் தொடங்கியது. கடந்த ஆறு தினங்களாக இந்தப் பங்கு விலை குறைந்ததில் இருந்து 21% உயர்ந்திருக்கிறது. இந்த நிறுவனம் 2019-ல் வெளியிட்ட என்.சி.டி-க்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றுவிட்டதாக செய்தி வெளியான தைத் தொடர்ந்து இந்தப் பங்கின் விலை உயர்ந்திருக்கிறது’’ என்றவர் புறப்படும் முன், ‘‘சந்தை உச்சத்தில் இருக்கும் நிலையில், கிளப் ஹவுஸ் வலைதளத்தில் நீங்கள் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சி முதலீட்டாளர்களுக்கு நிச்சயம் பயன்படும். முதலீட்டாளர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன் பெறலாம்’’ என்றவர், ‘‘அடுத்த வாரம் விநாயகர் சதுர்த்தியையொட்டி ஊருக்குப் போகிறேன். எனவே, வியாழன் அன்று சீக்கிரமே உம்மை சந்திக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்!

‘பம்பர் டூ பம்பர்’ இன்ஷூரன்ஸ்... தற்காலிகமாக நிறுத்த உத்தரவு!

“செப்டம்பர் 1-ம் தேதியிலிருந்து விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் ‘பம்பர் டூ பம்பர்’ காப்பீடு கட்டாயம் ஆக்க வேண்டும்’’ என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த உத்தரவை நடைமுறைக்குக் கொண்டு வர தமிழகப் போக்குவரத்து துறை கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி அரசாணையை வெளியிட்டது. இந்த இதழில் இதுபற்றிக் கட்டுரை வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில், செப்டம்பர் 2-ம் தேதி, வியாழக்கிழமை காலை, ‘பம்பர் டூ பம்பர் காப்பீடு’ இன்ஷூரன்ஸ் கட்டாயம் என்ற உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தத் தகவலை கவனத்தில் கொண்டு அந்தக் கட்டுரையைப் படிக்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம்!

பிரபல முதலீட்டுக் குருக்களின் தனிநபர் நிதிப் பாடங்கள்..!

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் ‘பிரபல முதலீட்டுக் குருக்களின் தனிநபர் நிதிப் பாடங்கள்..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 12 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 முதல் 12 மணி வரை நடைபெறுகிறது.

இதில் முதலீட்டு ஆலோசகர்கள் சுரேஷ் சடகோபன், வ.நாகப்பன், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்வி உதவித் துணைத் தலைவர் கே.எஸ்.ராவ், பிராந்தியத் தலைவர் கே.சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். அனுமதி இலவசம். அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறலாமே!

பதிவு செய்ய: http://bit.ly/NV-Aditya-Birla

ரெஜி தாமஸ்
ரெஜி தாமஸ்

உச்சத்தில் சந்தை... இப்போது செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும் என்ன?

பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கிறது. முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோ நல்ல லாபத்தில் இருக்கிறது. ஆனால், சில பங்குகளின் விலை கணிசமாகக் குறைந்திருக்கிறது.

இந்த நிலையில் ஒரு முதலீட்டாளர் செய்ய வேண்டியது என்ன, செய்யக் கூடாதது என்ன, லாபத்தில் இருக்கும் பங்குகளை விற்றுவிடலாமா, வாங்கிய விலையைவிட கணிசமாகக் குறைந்துள்ள பங்குகளை மீண்டும் வாங்கிச் சேர்க்கலாமா அல்லது விற்றுவிடலாமா எனப் பல கேள்விகள் முதலீட்டாளர்களின் மனதில் எழுகின்றன.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பொதுவான பதிலைத் தருகிற மாதிரி, வரும் 06.09.2021 (திங்கள்) மாலை 7.15 மணி முதல் 8.15 வரை நாணயம் விகடன் கிளப் ஹவுஸ் வலைதளத்தில் நடத்தும் நிகழ்ச்சியில் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் பேசுகிறார். https://bit.ly/3zHxFnG என்கிற லிங்கை க்ளிக் செய்து, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைத்து முதலீட்டாளர்களும் பயன்பெறலாமே!