தொடர்கள்
பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

ஷேர்லக்: தீபாவளி டு தீபாவளி... முதலீட்டுக்கு கவனிக்க வேண்டிய துறைகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஷேர்லக்

வியாழக்கிழமை சரியாக மாலை 4 மணிக்கு நம் அலுவலகத்துக்குள் நுழைந்தார் ஷேர்லக். நம் கேபினுக்கு அழைத் துச் சென்று சிறுதானியங்களில் செய்யப்பட்ட தீபாவளி ஸ்வீட் வகைகளைக் கொடுத்தோம். கொஞ்சம் ருசித்தவர், “அருமை அருமை...” எனப் பாராட்டினார். நாம் நன்றி சொல்லிவிட்டு, கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

டிராக்சன் டெக்னாலஜீஸ் நிறுவனப் பங்கு விலை முதல் நாள் வர்த்தகத்திலேயே அதிகரித்திருக்கிறதே?

‘‘இந்த நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டை (ஐ.பி.ஓ) மேற்கொண்டது. அதன் பங்கு கடந்த அக்டோபர் 20-ம் தேதி வியாழக்கிழமை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. அன்றைய தினத்தில் வெளியீட்டு விலையான ரூ.80-லிருந்து 25% வரை அதிகரித்து, ரூ.100 வரை அதிகரித்து வர்த்தகமானது. அதாவது, வெளியீட்டு விலையைவிட பிரீமியம் விலையில்தான் இந்தப் பங்கானது பட்டியலிடப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனப் பங்கை ஐ.பி.ஓ-வில் வாங்கத் தவறியவர்கள், இப்போது உடனே வாங்கி விடாமல், காலப்போக்கில் இந்தப் பங்கு எப்படி செல்கிறது என்பதைக் கவனித்துப் பார்த்துவிட்டு வாங்குவதே சரியாக இருக்கும்.”

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

நால்கோ, ஹிண்டால்கோ மற்றும் வேதாந்தா நிறுவனத்தின் பங்கு விலை திடீரென சரிய என்ன காரணம்?

“செப்டம்பர் காலாண்டில் உலகளாவிய அலுமினிய நிறுவனமான அல்கோவா (Alcoa) நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்தத் துறையைச் சேர்ந்த இந்திய நிறுவனங்களான நால்கோ, ஹிண்டால்கோ மற்றும் வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் அக்டோபர் 20 அன்று இறக்கத்தில் வர்த்தகத்தை ஆரம்பித்தன. காலை வர்த்தகத்தில் நால்கோ 0.5% விலை சரிந்து ரூ.68.50-க்கும், ஹிண்டால்கோ 1.5% விலை சரிந்து ரூ.382.45-க்கும், வேதாந்தா 0.25% ரூ.276.55-க்கும் என்.எஸ்.இ-யில் வர்த்தகமானது. உலக அளவில் பொருளாதார மந்தநிலை முக்கியமான சில கமாடிட்டிகளின் விலை குறைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் சொல்கிறார்கள். எனவே, இது மாதிரியான பங்குகளில் முதலீடு செய்யும்போது கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்யும் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது நல்லது.”

லூபின் நிறுவனத்தின் பங்கு விலை நிலை இல்லாமல் இருக்கிறதே, ஏன்?

“உலகளாவிய பார்மா நிறுவனங்களில் ஒன்றான சுனோவியன் நிறுவனத்தின் இரண்டு இன்ஹலேஷன் பிராண்டுகளான ப்ரோவனா மற்றும் ஸோபெனெக்ஸ் ஹெச்.எஃப்.ஏ ஆகியவற்றின் அனைத்து உரிமைகளையும் 75 மில்லியன் டாலருக்கு லூபின் நிறுவனம் வாங்கப்போவதாகத் தெரிவித்தது. இதன் காரணமாக லூபின் நிறுவனப் பங்கு விலை கடந்த அக்டோபர் 19-ம் தேதி ரூ.694 வரை விலை அதிகரித்து வர்த்தகமானது. ஆனால், வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் பி.எஸ்.இ சந்தையில் ரூ.670.65 என்கிற நிலையில் வர்த்தகத்தை ஆரம்பித்தது. வர்த்தகம் முடியும்போது 676.85-ஆக வர்த்தகமாகி முடிந்தது.”

இண்டஸ்இண்ட் பேங்க் நிறுவனத்தின் பங்கு விலை திடீரென சரிந்துவிட்டதே..!

“இந்த நிறுவனப் பங்கு விலை கடந்த அக்டோபர் 20-ம் தேதி வர்த்தகத்தின்போது புராஃபிட் புக்கிங் காரணமாக 6% வரை சரிவை சந்தித்து ரூ.1,150-க்கு வர்த்தகமானது. இந்த நிறுவனம் ஜூலை - செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. தனித்த நிகர லாபம் 57% அதிகரித்து, ரூ.1,805 கோடியாக உயர்ந்துள்ளது. கடன் அதிக அளவில் தந்துள்ளதால், நிகர வட்டி வருமானம் இந்த வங்கிக்கு அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் பி.எஸ்.இ சென்செக்ஸ் 7% அதிகரித்திருக்கும் நிலையில், இந்த நிறுவனத்தின் பங்கு விலை 35% அதிகரித்துள்ளது.”

சில நிறுவனங்களுக்கு ஐ.பி.ஓ வெளியிட செபி அனுமதி கொடுத்திருக்கிறதாமே..?

“நடப்பு ஆண்டில் நிறைய நிறுவனங்கள் ஐ.பி.ஓ-க்கள் வெளியிடுவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றன என்பதை முந்தைய வாரத்தில் நான் சொல்லியிருந்தேன். நிறைய நிறுவனங்களுக்கு செபி ஐ.பி.ஓ வெளியிட அனுமதி கொடுத்தும், சாதகமான சந்தை சூழ்நிலைக்காக அந்த நிறுவ னங்கள் காத்துக்கொண்டிருக் கின்றன. பல நிறுவனங்கள் செபியின் அனுமதிக்காகக் காத் திருக்கின்றன. அந்த வகையில், பி.ஐ.பி.ஏ ஃபேஷன், கீஸ்டோன் ரியல்டர்ஸ், பிளாஸா ஒயர் மற்றும் ஹேமனி இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நான்கு நிறுவனங் களுக்கு செபி ஐ.பி.ஓ வெளியிட அனுமதி தந்திருக்கிறது.

பிபா ஃபேஷன் நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடுவதன் மூலம், ரூ.90 கோடி நிதி திரட்டுகிறது. ஓ.எஃப்.எஸ் முறையில் 2.77 கோடி பங்குகளை விற்பனை செய்கிறது. கீஸ்டோன் ரூ.850 கோடியைத் திரட்டுகிறது. இதில் ஓ.எஃப்.எஸ் முறையில் ரூ.150 கோடி மதிப்புள்ள பங்குகளையும், ரூ.700 கோடி மதிப்புள்ள புதிய பங்குகளை யும் இந்த நிறுவனம் விற்பனை செய்கிறது. அதே போல, ஹேமனி இண்டஸ்ட்ரீஸ் ரூ.2,000 கோடி நிதியை முதலீட் டாளர்களிடம் இருந்து திரட் டத் திட்டமிட்டுள்ளது.

ரூ.500 கோடி மதிப்புள்ள புதிய பங்குகளையும், ரூ.1,500 கோடி மதிப்புள்ள பங்குகளை ஓ.எஃ.எஸ் முறையிலும் இந்த நிறுவனம் விற்பனை செய்கிறது. பிளாஸா ஒயர் 1,64,52,000 பங்கு களை ஐ.பி.ஓ வெளியீட்டில் விற்பனை செய்கிறது.”

ஷேர்லக்: தீபாவளி டு தீபாவளி...
முதலீட்டுக்கு கவனிக்க வேண்டிய துறைகள்..!

இப்போதைய நிலையில், முதலீட்டுக்குக் கவனிக்க வேண்டிய துறைகள் என எவற்றைக் குறிப்பிடலாம்?

“அமெரிக்காவிலும் இந்தியா விலும் முன்புபோல் தீவிரமாக வட்டி விகிதங்களை உயர்த்த வாய்ப்பு இல்லை. ஏற்கெனவே உயர்த்தப்பட்ட வட்டி உயர் வால் விரைவில் பணவீக்க விகிதம் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கலாம்.

அந்த வகையில் மூலதனப் பொருள்கள் என்கிற கேப்பிடல் கூட்ஸ், மருந்து மற்றும் சிமென்ட் போன்ற துறைகள் அடுத்த ஓராண்டுக் காலத்துக்கு அதாவது, இந்த தீபாவளி முதல் அடுத்த தீபாவளி வரை சிறப்பாகச் செயல்படும் என எதிர்பார்க்கலாம். கூடவே, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், வாகனத்துறை அடுத்த ஓராண்டுக்கு ஏற்றத்தில் இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. இந்தத் துறையில் உள்ள நல்ல நிறுவனங்களை சலித்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும்.”

மல்ட்டிபேக்கர் பங்குகள் பற்றி ஏதாவது செய்தி உண்டா?

‘‘கடந்த 2021-ம் ஆண்டின் நவம்பர் 4-ம் தேதியிலிருந்து கடந்த அக்டோபர் 18-ம் தேதி வரையிலான ஒரு வருடத்துக்குள் 440 பங்குகள் மல்ட்டி பேக்கர் பங்குகளாக மாறியிருக்கின்றன. அதில் பல பங்குகளின் விலை 10,000%-க்கு மேல் அதிகரித்திருக் கிறது. எஸ்.இ.எல் நிறுவனப் பங்கு விலை 10,868% அதிகரித்து உள்ளது. இந்தப் பங்கில் ரூ.10,000 முதலீடு செய்திருந்தால், தற்போது அதன் மதிப்பு ரூ.10.69 லட்சம். கெய்சர் கார்ப்பரேஷன் 9,580% லாபத்தைக் கொடுத்திருக்கிறது. இதில் ரூ.10,000-ஐ முதலீடு செய்திருந்தால், இதன் தற்போதைய மதிப்பு ரூ.9.85 லட்சம் ஆகும். அம்பர் புரோட்டீன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கு விலை 2,635%, ஐ.கே.ஏ.பி செக்யூரிட்டீஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட் 1,850%, ஜென்சல் இன்ஜினீயரிங் 1,640% ஏற்றத்தைச் சந்தித்திருக்கிறது.’’

பங்குத் தரகு நிறுவனங்கள் ஒரு சில பங்குகளைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றனவே..?

‘‘உலகளாவிய பங்குத் தரகு நிறுவனமான கிரெடிட் சூஸ், ஏ.யு ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் நிறுவனத்துக்கு எற்கெனவே வழங்கியிருந்த ‘அன்டர்பெர்ஃபார்ம்’ ரேட்டிங்கைக் குறிப் பிட்டு, அதன் இலக்கு விலையை ரூ.530-ஆக நிர்ணயித்துள்ளது. அதே போல, ஹாவெல்ஸ் இந்தியா நிறுவனத்துக்கு கிரெடிட் சூஸ், மிகச் சிறந்த மதிப்பீட்டை வழங்கி அதன்இலக்கு விலையை ரூ.1,500-ஆக நிர்ணயம் செய்துள்ளது.

போஃபா செக்யூரிட்டீஸ் பங்குத் தரகு நிறுவனம் இண்டஸ் இண்ட் பேங்க் பங்குகளை வாங்கச் சொல்லி முதலீட்டாளர் களுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது. இதன் இலக்கு விலை ரூ.1,400. ஆனால், சி.எஸ்.எஸ்.ஏ தரகு நிறுவனம் இண்டஸ்இண்ட் பேங்க் மதிப்பீட்டைக் குறைத்துள்ளது. இதன் இலக்கு விலையை ரூ.1,400 என நிர்ணயம் செய்துள்ளது. சி.எல்.எஸ்.ஏ தரகு நிறுவனம் அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனத்துக்கு மிகச் சிறந்த மதிப்பீட்டை வழங்கியிருக்கிறது. இதன் இலக்கு விலையை ரூ.7,200-ஆக நிர்ணயம் செய்துள்ளது.’’

ஐ.டி.சி பங்கு விலை அதிகரித்திருக்கிறதே?

‘‘எஃப்.எம்.சி.ஜி துறையின் மிக முக்கியமான நிறுவனமான ஐ.டி.சி நிறுவனத்தின் பங்கு விலை வியாழக்கிழமை வர்த்தகத் தில் ஐந்து ஆண்டுக் கால உச்சத்தைத் தொட்டு ரூ.350.90 வரை அதிகரித்து வர்த்தகமானது. இதற்குமுன், கடந்த செப்டம்பர் 23-ம் தேதி இதே போல, ரூ.249.50 என்கிற ஐந்து ஆண்டுக்கால உச்சத்தைத் தொட்டு வர்த்தகமானது. நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை இந்த பங்கானது 60% வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டிலும் இந்த பங்கானது நிஃப்டி சந்தையில் இரண்டாவது சிறந்த பங்காக இருந்தது.’’

தீபக் ஃபெர்டிலைசர்ஸ் பங்கு விலை அதிகரித்திருக்கிறதே?

‘‘தொழில்துறை ரசாயனங்கள் மற்றும் உரங்கள் தயாரிக் கும் முன்னணி நிறுவனமான தீபக் ஃபெர்டிலைசர்ஸ் அண்டு பெட்ரோ கெமிக்கல்ஸ் கார்ப்பரேஷன் (DFPCL) நிறுவனப் பங்கு வலுவான தேவையின் காரணமாக கடந்த வாரம் வியாழக்கிழமை வர்த்தகத்தில் பி.எஸ்.இ சந்தையில் 6% அதிகரித்து, புதிய உச்ச விலையான ரூ.1,048-ஐ எட்டியது. இதன் பங்கு விலை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்ந்து வர்த்தகம் ஆனது. இந்த கால கட்டத்தில் 17% உயர்ந்தது.

இந்தப் பங்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 290% வருமானத்தை அதன் முதலீட் டாளர்களுக்கு வழங்கியிருக் கிறது. கடந்த ஓர் ஆண்டில் 10% வருமானத்தை இந்தப் பங்கு வழங்கியிருக்கிறது. கடந்த வார வியாழக்கிழமை அன்று வர்த்தகம் முடியும் போது இதன் பங்கு விலை ரூ.282.60’’ என்று அவர் பேசிக் கொண்டே போனவர், ‘‘நாணயம் விகடன் வாசகர் கள் அனைவருக்கும் பங்கு மற்றும் ஃபண்ட் முதலீட் டாளர்கள் அனைவருக்கும் தீபாவளித் திருநாள் வாழ்த் துகள். இந்த நன்னாளும், இந்த நன்னாளில் நீங்கள் செய்யும் முதலீடும் உங்களுக்கு நன்மையையும் பாதுகாப்பும் தரட்டும். அனைவருக்கும் ஹேப்பி தீபாவளி’’ என்றவர், நாம் தந்த நவதானிய ஸ்வீட் பாக்ஸை எடுத்துக்கொண்டு கிளம்பினார்!

ஷேர்லக்: தீபாவளி டு தீபாவளி...
முதலீட்டுக்கு கவனிக்க வேண்டிய துறைகள்..!

சரியான மியூச்சுவல் ஃபண்ட்... தேர்வு செய்வது எப்படி?

நாணயம் விகடன் மற்றும் மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து நடத்தும் ‘சரியான மியூச்சுவல் ஃபண்ட்: தேர்வு செய்வது எப்படி?’ என்ற நிகழ்ச்சி, கோவையில் நவம்பர் 5-ம் தேதி சனிக்கிழமை (மாலை 6.30 pm – 8.30 pm) நடைபெறுகிறது. இதில் நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன், மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஏரியா ஹெட் (ரீடெய்ல் சேல்ஸ்) சுரேஷ் பாலாஜி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். அனுமதி இலவசம். பதிவு செய்ய https://bit.ly/3d2WG6G

தீபாவளி முகூர்த்த டிரேடிங்!

தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி அன்று பங்குச் சந்தை வர்த்தகத்துக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். எனினும், தீபாவளி பண்டிகை அன்று தங்கம் வாங்குவது, பங்குகள் வாங்குவது என்பது வட இந்தியாவில் பிரபலம். எனவே, அந்த நாளில் சிறப்பு முகூர்த்த டிரேடிங் நடக்க செபி ஏற்பாடு செய்யும். இந்நிலையில், வரும் தீபாவளி நாளில் மாலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை முகூர்த்த டிரேடிங் நடக்க உள்ளது. இந்த நாளில் ஒரு சில பங்குகளை சாஸ்திரத்துக்கு வாங்கலாமே தவிர, அன்றை தினம் டிரேடிங் எல்லாம் செய்யக் கூடாது!