Published:Updated:

வேலையிலிருந்து பிஸினஸுக்கு மாறும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய 6 விஷயங்கள்!

ஒருவர், ஆரம்பிக்கப்போகும் தொழில் சார்ந்த துறையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை, வேலையிலிருந்து விலகி தொழில் தொடங்கலாம் என்று நினைக்கும்போது கவனிக்கத் தவறுகிறார்.

‘‘சிறு வயதிலிருந்தே எனக்கு, பலருக்கும் வேலை தரும் ஒரு முதலாளியாக இருக்க ஆசை. பி.ஹெச்டி முடித்துவிட்டு பேராசிரியராக வேலைபார்த்தேன். பிறகு, தொழில் கற்றுக்கொள்வதற்காக ஒருசில ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிந்தேன். என்னைப்போன்ற எண்ணம் உடைய சில நண்பர்கள் கிடைத்தார்கள். நாங்கள் தொழில் தொடங்கலாம் என முடிவுசெய்த பின், ஒரு சோதனை முயற்சியாக, சில கம்ப்யூட்டர்களை மட்டும் கொண்டு, ஓய்வு நேரத்தில் வேலை செய்தோம். எங்கள் கிராமத்தில் இருந்து வேலைக்காக சென்னை வரும் ஒரு சிலருக்கும் அங்கு பயிற்சியளித்தேன்.

அதைப் பார்த்த மற்றொரு நண்பர், “நீங்கள் ஏன் புதியவர்களைக்  கொண்டு ஒரு நிறுவனம் தொடங்கக்கூடாது... உங்களுக்கு முதல் புராஜெக்ட் நான் தருகிறேன்” என்றார். அப்படித் தொடங்கியதுதான் எங்கள் நிறுவனம்.  இன்று, சுமார் 100 பேர் எங்களிடம் பணிபுரிகிறார்கள்" - இவை, இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, என் காதில் வந்து விழுந்த வார்த்தைகள்.  

இந்த நண்பரைப் போலத்தான் நம்மில் பலருக்கும் முதலாளி ஆக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அந்த ஆசையினால், செய்யும் வேலையை விட்டுவிட்டு, கொஞ்சமும் யோசிக்காமல் களத்தில் குதிக்க நினைக்கிறோம். அப்படி யோசிக்காமல் களமிறங்கியவர்களில் பெரும்பாலானவர்களைத் தோல்வியுடன், மீண்டும் சம்பளப் பணிக்கே திரும்பியிருக்கிறார்கள்.

ஒருவர், சம்பளத்துக்காகத் தான் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, சுயமாகத் தொழில் தொடங்க முடிவு செய்யும்போது, என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும், தொழில் தொடங்க  தங்களை எப்படி தயார்படுத்திக் கொள்வது...  எந்தெந்த விஷயங்களில்  முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதைத் தெரிந்து, தொழில் தொடங்கினால்தான் வெற்றிகரமான பிஸினஸ்மேன் ஆக முடியும்.
1

முன்னேற்பாடுகள் முக்கியம்!

எனக்கு தொழில் குறித்த அனுபவம் இருக்கிறது; அதற்கான நிதி வசதியும் இருக்கிறது எனும்போது, எதுவும் அதற்குத் தடையாக இருக்காது. அதேசமயம், இதுவரை வேலையில் இருந்து பழகியவர்கள், திடீரென்று தொழிலுக்குள் அடி எடுத்து வைக்கும்போது, மாதாமாதம் கிடைத்துவந்த வருமானம் தடைபடும். இதைச் சமாளிக்கும் வகையில், போதுமான நிதியையும் தொழிலில் ஏற்படும் செலவுகளுக்குத் தேவைப்படும் பணத்தையும் (குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கான செலவுத் தொகை) முன்பாகவே ஏற்பாடு செய்துகொள்வது அவசியம். ஏனெனில், சொந்தத் தொழிலில் ஆரம்ப காலத்தில் மாதா மாதம் வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. நன்கு வளர்ந்த பிறகு, கிடைக்கும் லாபத்திலிருந்து வேண்டுமானால், மாதா மாதம் குறிப்பிட்ட தொகையைச் சம்பளமாக எடுத்துக்கொள்ளலாம்.

2

டைம் மேனேஜ்மென்ட்!

அலுவலக வேலை என்றால், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரைதான். ஆனால், சொந்தத் தொழிலில் அப்படி கிடையாது. சொந்தத் தொழிலுக்கு அதிக நேரத்தை ஒதுக்க வேண்டியிருக்கும். கடின உழைப்பு மிகவும் முக்கியம். இந்த மனநிலைக்கெல்லாம் தயார் படுத்திக்கொண்டுதான் வேலையிலிருந்து விலகி தொழில் தொடங்க வேண்டுமே தவிர, அஜாக்கிரதையுடன் ஆரம்பிப்பது வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்காது.

3

கவனமான பண நிர்வாகம்!

தொழில் தொடங்குபவர்களுக்கு ரொம்பவே முக்கியமான விஷயம் இது. பண நிர்வாகம் சரியாக இல்லையென்றால், எந்தவொரு தொழிலிலும் நீண்ட நாள்கள் சர்வைவ் ஆக முடியாது. `பர்சனல் வாழ்க்கைக்குத் தேவையான பணத்தையும், தொழில் வளர்ச்சிக்குத் தேவையான பணத்தையும் முறையாக கையாளத் தெரியாமல் விடுவதால்தான், பெரும்பாலான தொழில்முனைவோர்களின் வீழ்ச்சிக்குக் காரணம்’ என பிஸினஸ் ஆலோசகர்கள் தெரிவிக்கிறார்கள். வேலையிலிருந்து விலகி, தொழில் ஆரம்பிப்பவர்கள், இந்த விஷயத்தில் கொஞ்சம் அதிகமாக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.

தொழில்மூலம் கிடைக்கும் லாபத்திலிருந்து, ஒவ்வொரு மாதமும் குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தை தனியாக எடுத்துக் கொண்டு, மீதி லாபப் பணத்தை தனியாக வங்கி சேமிப்புக் கணக்கில் சேமித்துவைக்கலாம். அந்தப் பணத்தை, தொழில் வளர்ச்சிக்குத் தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம். மாதா மாதம் ஒரேமாதிரியான வருமானத்தை தொழில்மூலம் எதிர்பார்க்க முடியாது என்பதால், ஆறு மாதம் குடும்பத் தேவைக்கான தொகையை அவசரகாலத் தேவையாக எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. இதைத் தொழில் தொடங்கும்போதே திட்டமிட்டுக்கொள்வது முக்கியம்.

4

தொழில் வளர்ச்சி!

ஒருவர் ஆரம்பிக்கப்போகும் தொழில் சார்ந்த துறையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை, வேலையிலிருந்து விலகி தொழில் தொடங்கலாம் என்று நினைப்பவர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள். இதுவே, அவர்களைப் பிரச்னைக்கு பெரிதும் ஆளாக்குகிறது. இன்றைய உலகம் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் அவசரகதியில் சுழன்றுகொண்டிருக்கிறது. மனிதர்கள் தங்கள் ஒவ்வொருவரையும் அதனுடன் அப்டேட் செய்துகொண்டே வருகிறார்கள். இப்படி இருக்கையில், தொழிலை ஆரம்பிப்பவர்கள் இன்னும் காலத்துக்கேற்ப புதுமை படைப்பவர்களாய் இருக்க வேண்டும்.

5

30:30 வயது!

30 வயதுக்குக் கீழுள்ளவர்கள், 30 வயதைக் கடந்தவர்கள் என வேலையிலிருந்து பிஸினஸுக்கு மாறுகிறவர்களை இரண்டு வகையாக பிரித்துக்கொள்ளலாம். 30 வயதுக்குக் கீழுள்ளவர்களின் வாழ்க்கை, அவரவர்களின் கையில் இருக்கும். இந்த வயதில் அவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கலாம். அதனால் குழந்தைகளுக்கான கல்விச் செலவு, குடும்பத்துக்கான செலவு என எந்தவொரு நிதி சார்ந்த கமிட்மென்ட்டுகளும் இருக்காது. எனவே, ரிஸ்க் எடுக்கலாம்.

ஆனால் 30 வயதைக் கடந்தவர்களுக்கு, திருமணமாகி குழந்தை இருக்கும். அவர்களின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காகவும், தங்களது ஓய்வுக் காலத்துக்காகவும் பணத்தைச் சேமிக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். நம்மை நம்பி நமது குடும்பம் வாழ்கிறது என்கிற எண்ணத்துடன் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும்.

6

சரியான நேரம்!

ஒருவர், படித்து முடித்ததும் வேலை என்றில்லாமல், தொழில்தான் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார் என்றால், அவர் தொழில் தொடங்க நினைக்கும் துறை சார்ந்த நிறுவனங்களில் வேலைக்குச் சேர வேண்டும். அங்கு கற்றுக்கொண்ட விஷயங்களை, தொழில் செய்வதற்கான நெழிவு சுழிவுகளைக் கற்றுக்கொண்டு, அதைவைத்து தொழிலை ஆரம்பிக்கலாம். அப்போது, ஏற்கெனவே வேலை செய்த நிறுவனத்தின் வாயிலாகத் தொழில் சார்ந்த தொடர்புகள் கிடைத்திருக்கும். அந்தத் தொழில் சார்ந்த அறிவும் வளர்ந்திருக்கும் எனும்போது, வேலையிலிருந்து தொழிலுக்கு மாறுவதில் பிரச்னை இருக்காது.