Published:Updated:

`சமூகப் பிரச்னைகள்தான் எங்கள் பிசினஸ் ஐடியா!’ - சாதிக்கும் சோசியல் என்டர்பிரைசஸ்கள்

ஆ வல்லபி

புனிதத்தைப் பற்றிக் கவலைப்படும் நாம், அந்தப் பூக்களால் நீர்நிலைகள் மாசடைந்து, நீர்வாழ் உயிரினங்கள் அழிவதை மறந்துவிடுகிறோம்.

Social Enterprises
Social Enterprises ( Vikatan )

பிசினஸ்களில் சமீப காலமாகப் பிரபலமடைந்து வருகிறது சமூகநோக்கத்துடன் செயல்பட்டு, லாபம் சம்பாதிக்கும் ‘சோசியல் என்டர்பிரைசஸ்’கள் (social enterprise). சமூகத்தில் இருக்கும் பல வகையான பிரச்னைகள்தான், எங்களுக்கான பிசினஸ் ஐடியா என்கின்றன இந்த வகை நிறுவனங்கள்.

இந்தியா முழுக்க இருக்கும் சில சோசியல் என்டர்பிரைசஸ்கள் பற்றிப் பார்ப்போம்.

பிராண்ட்... பிசினஸ் வளர்ச்சிக்கு ஏன் அவசியம்?

கழிவைச் சுத்தமாக்கி வளரும் ‘ஹெல்ப் அஸ் கிரீன்’...

2015-ம் ஆண்டு, அங்கித் அகர்வால் மற்றும் கரன் ரஸ்தோகி என்கிற இரு இளைஞர்களால் ‘ஹெல்ப் அஸ் கிரீன்’ (Help Us Green) என்ற சமூக நிறுவனம் தொடங்கப்பட்டது. சுற்றுப்புறச்சூழலின்மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள், உத்தரப்பிரதேசம் கான்பூரைச் சேர்ந்த அங்கித் அகர்வால் மற்றும் கரன் ரஸ்தோகி. உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் பிரச்னைகளை ஆய்வு செய்தாலும் தங்களின் சொந்த மண்ணிலேயே கங்கை நீர் மாசடைவதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

"கோயில்கள், குருத்வாரா போன்ற புனிதமான இடங்களில் காணிக்கையாகச் செலுத்தப்படும் மலர்கள், கங்கைபோல் புனிதமான இடத்திலேயே கொட்டப்பட வேண்டும் என்ற நம்பிக்கை நம்மிடம் உள்ளது. புனிதத்தைப் பற்றிக் கவலைப்படும் நாம், அந்தப் பூக்களால் நீர்நிலைகள் மாசடைந்து, நீர்வாழ் உயிரினங்கள் அழிவதை மறந்துவிடுகிறோம். ஆண்டுதோறும் எட்டு லட்சம் டன் பூக்கழிவுகள் கங்கையில் கொட்டப்படுகின்றன. கங்கையின் அழிவுக்கு இதுவும் பெரும் காரணமாக இருந்துவருகிறது” என்கிறார் அங்கித்.

Help Us Green Ankit Agarwal and Karan Rastogi
Help Us Green Ankit Agarwal and Karan Rastogi
Vikatan

உலகின் மொத்த ஆர்கானிக் பொருள்களின் சந்தை ரூ.48,743 கோடி. தூபக்குச்சிகள் சந்தை மட்டும் உலகளவில் சுமார் ரூ.3,000 கோடி. பல்வேறு நிபுணர்களின் யோசனைகளைக் கேட்டு, மண்புழுக்கள், காபிக்கழிவுகளின் உதவியுடன் பூக்களைக் கொண்டு உரம் தயாரிப்பதற்காக, ‘சரியான 17 ரெசிபி’யை (17 இயற்கைப் பொருள்கள்) கண்டுபிடித்தனர். காபிக்கழிவு கான்பூரில் உள்ள காபி கடைகளிலிருந்து பெறப்படுகிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் உரம், ‘மிட்டி’ என்ற பெயரில் விற்கப்படுகிறது. எவ்வித ரசாயனமும் சேர்க்கப்படாத இந்த உரத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

பூக்கழிவுகளைக் கொண்டு இவர்கள் ஊதுவத்திகளும் தயாரிக்கின்றனர். ‘ஸ்டிக்ஸ் அண்ட் ஸ்டோன்ஸ்’ என்ற பெயரில் விற்கப்படும் ஊதுவத்திகள் சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறன. வாய்ப்புகள் அதிகமுள்ள உலகச் சந்தையின் கத்தைப் பிடிப்பதே இவர்களின் கனவு.

இந்தத் தொழில் திட்டம் ‘ஐ.எஸ்.பி ஐடியா சேலஞ்ச் 2015’, ‘ஐ.ஐ.எம் இந்தோர் கல்பவ்ரிக்ஷா சேலஞ்ச் 2015’ மற்றும் ‘ஐ.ஐ.டி கான்பூர் சமூக சவால் 2015’ ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர். இதில் கிடைத்த அங்கீகாரம் அவர்களுக்குப் பல்வேறு நிதியுதவிகளைப் பெற்றுத் தந்தது.

இருபது ரூபாயில் இயற்கை விவசாயம்… அசத்தும் வேஸ்ட் டீகம்போஸர்!

பெண்களை முன்னேற்றும் ஹோலி வேஸ்ட்

தாழ்த்தப்பட்ட பெண்களைக் கொண்டு சோப்பு மற்றும் ஊதுவத்தி தயாரிக்க ‘ஹோலி வேஸ்ட்’ என்ற நிறுவனத்தை 2018-ல் மினால் டால்மியா மற்றும் மாயா விவேக் தொடங்கினர். இருவரும் ஒரே வகுப்பில் படிக்கும் தங்கள் குழந்தைகளின் மூலம் சந்தித்தனர். அவர்கள் ஒன்றிணையக் காரணம், சமூகத்தின் பெரிய நன்மைக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பம். இவர்கள் மீது அக்கறை கொண்ட நண்பர் ஒருவரும் ஆர்வமுள்ள தோட்டக்காரரும் மலர்க் கழிவுகளை வைத்து சோப்பு மற்றும் ஊதுவத்தி செய்யுமாறு பரிந்துரைத்தார்கள்.

ஆனால், பூக்களுக்கு எங்கே செல்வது? பூக்களைப் பெற கோயில்களே சிறந்த இடம் என்பதால், அவர்கள் ஹைதராபாத்தில் உள்ள கோயில்களின் உதவியை நாடினர். பூக்கழிவுகளை செலவு செய்து வெளியேற்றுவதைவிட, ஹோலி வேஸ்டுக்குத் தந்துவிடலாம் என்று ஹைதராபாத் மாநகராட்சி முடிவு செய்ய, கோயில்களும் இந்த முயற்சிக்குக் கைகொடுத்தன.

HolyWaste Minal Dalmia and Maya Vivek
HolyWaste Minal Dalmia and Maya Vivek

குண்ட்லாபோச்சம்பள்ளியின் பஞ்சாயத்துத் தலைவியின் உதவியுடன், அந்தச் சமூகக்கூடத்தில் பூக்கழிவுகளைப் பிரிக்கும் பணி நடந்தது. அந்தப் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட பெண்கள் பணியமர்த்தப்பட்டனர். குழந்தைகளின் பள்ளிநேரத்தைக் கருத்தில்கொண்டு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை.

'ஹோலி வேஸ்ட்’ தினமும் 200 மெட்ரிக் டன் பூக்கழிவுகள் நீர்நிலைகளை மாசடையாமல் வைக்க உதவுகிறது.

சோப்பு மற்றும் ஊதுவத்தித் தயாரிக்க இயந்திரங்களைப் பயன்படுத்தாமல், பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என்பதே இவர்களது நோக்கம். பேட்டல் என்ற பெயரில் சோப்பும், விமோக்ஷ் என்ற பெயரில் ஊதுவத்தியும் தயாரித்து விற்கின்றனர். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் முதலில் விற்றுவந்த இவர்கள், ஹைதராபாத்தில் உள்ள நாடக அரங்குகளில் ஸ்டால்கள் திறந்தனர். கைத்தறிப் புடவைகளாலான கவர்களில் பொருள்களை பேக் செய்வது, இளம்வயது பெண்களை வெகுவாக ஈர்த்தது. அவர்களின் முயற்சி ஐதராபாத்தில் உள்ள ஐ.சி.ஏ.ஆர்-நேஷனல் அகாடமி ஆஃப் அக்ரிகல்சர் ரிசர்ச் மேனேஜ்மென்ட்டில் உள்ள வேளாண்மையில் தொழில்முனைவோர் கண்டுபிடிப்பு மேம்பாட்டுச் சங்கத்தில் சேர வழிவகுத்தது.

Vikatan

ஆன்லைனில் ஒரு வலைதளத்தைத் தொடங்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ‘ஹோலி வேஸ்ட்’ தினமும் 200 மெட்ரிக் டன் பூக்கழிவுகள், நீர்நிலைகளை மாசடையாமல் வைக்க உதவுகிறது.

“மக்கள் எங்களை பூக்களுடன் தொடர்புபடுத்த வேண்டும், அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் ‘ஹோலி வேஸ்ட்’ பற்றி சிந்திக்க வேண்டும். இதுவே எங்கள் நோக்கம்” என்கிறார் மினால்.

ஆந்திரா முதல் அமெரிக்கா வரை ‘பெல்லி பூல ஜடா'

'பெல்லி பூல ஜடா’வை (மணப்பெண் ஜடை அலங்காரம்) எனது இரண்டாவது கர்ப்பக் காலத்தில் நிறுவினேன். குழந்தையைப் பராமரிக்க வேண்டியிருந்ததால், எனது சாஃப்ட்வேர் வேலையை விட்டுவிட்டேன். மணப்பெண் அலங்காரத்திற்கான பூத்தொடுக்கும் வேலையைச் செய்யலாம் என்று நினைத்தேன். இது எனக்குக் குறைவான வருமானத்தைத் தந்தாலும் என்னை பிஸியாக வைத்திருக்கும் என்று நினைத்தேன். ஃபேஸ்புக்கில் ‘பெல்லி பூல ஜடா’ வணிகத்தைத் தொடங்கியது எனக்கு வாய்ப்புகளின் உலகத்தைத் திறந்தது. அதன்பிறகு ஐ.டி. வேலையை நான் திரும்பிப் பார்க்கவில்லை. இப்போது ‘பெல்லி பூல ஜடா’ எனது மூன்றாவது குழந்தை” என்கிறார், ‘பெல்லி பூல ஜடா’வின் நிறுவனர் கல்பனா.

Floral for bride
Floral for bride

இந்த ஐடியா பக்கத்து வீட்டுப் பெண்களின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. பூக்கள் மாடியிலும், அலுவலகங்களிலும் வளர்க்கப்பட்டன. முகநூலில் இந்த அலங்காரத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. திருமண மாதங்களில் மாதம் ரூ.8000 முதல் ரூ.10,000 வரை வருவாய் கிடைக்கும். வருமானம் அதிகரிக்க, புதிய கிளைகளும் தொடங்கப்பட்டன. பூக்களை வளர்ப்பதற்காக ஷம்ஷாபாத், மேற்கு கோதாவரி மற்றும் தமிழ்நாட்டிலும் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்தனர். எளிதில் கிடைக்கும் என்பதால், இவர்கள் நாட்டு வகைப்பூக்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

பிசினஸை மேலும் வளர்க்க ப்ரான்சைஸ் (franchise) முறையை நாடியது பெல்லி பூல ஜடா. இதை வெளிமாநிலப் பெண்களும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஆர்வத்துடன் எடுத்துக்கொண்டனர். மாவட்டத்திற்கு ஒரு பிரான்சைஸ் மட்டுமே வழங்கப்படுவதால், போட்டி தவிர்க்கப்படுகிறது. இன்று ஆந்திரா முதல் முதல் அமெரிக்கா வரை 40 கிளைகள் உள்ளன. ஒவ்வொரு கிளையிலும் ஏறக்குறைய நான்கு முதல் பத்துப் பெண்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஒரு பெண் வேறொருவரைச் சேர்த்துவிடும்போது அவர்களுக்கு போனஸ் தரப்படுகிறது.

Vikatan

“நான் மாதத்திற்கு சுமார் ₹ 20,000 லாபம் ஈட்டுகிறேன். இரண்டு முழுநேர ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளேன். வேலையும் செய்ய முடிகிறது, வீட்டையும் கவனிக்க முடிகிறது” என்கிறார் ‘பெல்லி பூல ஜடா’வின் பிரான்சஸை எடுத்து நடத்தும் தமிழகத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர்.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் - மீரா ராஜ்புத் திருமணத்திலும் இவர்கள் மலரலங்காரம் செய்துள்ளனர்.

“தொழில்முனைவோருக்கு சமூக வலைதளம் பெரிய வரம். தொழில் தொடங்க மனம் இருந்தால் எதுவும் சாத்தியம்” என்பதுதான் கல்பனாவின் அறிவுரை.

உங்கள் ஊரில் இருக்கும் சமூகப் பிரச்னைகளிலிருந்து உங்கள் பிசினஸுக்கான ஐடியா கிடைக்கிறதா?