Published:Updated:

"வித்தியாசமாக யோசி... புதுமையை அங்கீகரி..!" - ‘மாரிகோ’ ஹர்ஷ் மாரிவாலாவின் வெற்றிக் கதை

இன்றைய இந்தியாவின் வித்தியாசமான தொழில் அதிபர்களில் முக்கியமானவர் பிரபல எஃப்.எம்.சி.ஜி நிறுவனமான மாரிகோ நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷ் சி.மாரிவாலா. மாரிவாலாவுடன் கொஞ்சம் நேரம் பேசினாலே அவரது குணாம்சம் அத்தனையும் பளிச்சென வெளிப்படும்.

Mariwala
Mariwala ( Vikatan )

படிப்பு டூ தொழில்...

ஹர்ஷ் மாரிவாலாவுக்கு இப்போது 69 வயது. 1970-களின் ஆரம்பத்தில் அவர் மும்பையில் உள்ள சைடெண்ஹாம் கல்லூரியில் படித்து முடித்தவுடன் குடும்பத் தொழிலுக்கு வந்துவிடும்படி அவரது தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது. அப்பா சொன்னால் தட்டவா முடியும்?

மாரிவாலாவின் அப்பா நடத்திய கம்பெனியின் பெயர், பாம்பே ஆயில். சமையல் எண்ணெய், மசாலாப் பொருள்களை பெரிய அளவில் வாங்கி விற்கிற தொழிலை மும்பையில் வெற்றிகரமாகச் செய்துவந்தார் மாரிவாலாவின் அப்பா. சில ஆண்டுகளிலேயே குடும்பத் தொழிலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுத் தேர ஆரம்பித்தார் மாரிவாலா.

பொருள்களை வாங்கி விற்றால் மட்டும் போதுமா, நமக்கே நமக்கென்று சில பொருள்களையாவது தயார் செய்து நம்முடைய பிராண்டில் அதை விற்க வேண்டாமா என்கிற கேள்விகள் மாரிவாலாவின் மனதில் திரும்பத் திரும்ப எழுந்துகொண்டிருந்தன. கூடிய விரைவிலேயே தனது யோசனையை செயல்படுத்தவும் செய்தார். ‘பாராசூட்’ என்கிற பெயரில் தேங்காய் எண்ணெயும் சஃபோலா என்கிற பெயரில் சமையல் எண்ணெயும் அவர் அறிமுகம் செய்த பிராண்டுகள் வாடிக்கையாளர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தன. பாம்பே ஆயில் என்கிற பெயரை மாரிகோ என்று மாற்றவும் செய்தார். இந்த மாற்றங்களுக்குப்பிறகு மாரிகோ நிறுவனத்தின் வேகம் ஜெட் வேகத்தில் வளரத் தொடங்கியது.

Mariwala
Mariwala
Vikatan

இந்தியா டூ ஆப்பிரிக்கா

தனது தொழிலில் பல புதுமைகளைக் கொண்டுவந்ததன்மூலம் பிசினஸை பெரிதாக வளர்த்தெடுத்தவர் மாரிவாலா. டின்களில் அடைக்கப்பட்டு விற்கப்பட்டுவந்த எண்ணெயை பிளாஸ்டிக் கேனில் அடைத்துவிற்கும் நடைமுறையை இவர்தான் முதலில் கொண்டுவந்தார். சமையல் எண்ணெயை டின்னிலிருந்து பிளாஸ்டிக்கு மாறியபோது மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், ஒரு சொட்டு எண்ணெய்கூட ஒழுகாத வகையில் கொடுத்தபோது, மக்கள் தானாக முன்வந்து வாங்கத் தொடங்கினார்கள். இந்தியாவில் பிரபலமான எஃப்.எம்.சி.ஜி நிறுவனமாக மாறியபின்பு, புதிய சந்தைகளைத் தேட ஆரம்பித்தார் மாரிவாலா. இந்தியாவைப் போலவே இருக்கும் பங்களாதேஷில் தன்னுடைய தயாரிப்புகளை விற்பனை செய்யத் தொடங்கினார். அங்கும் மிகப்பெரிய வெற்றி கிடைத்தபின்பு, ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தனது தயாரிப்புகளைக் கொண்டு சென்று அங்கும் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்.

65 வயதுக்குமேல்...

குடும்பத் தொழிலாக இருந்த நிறுவனத்தில் புரபஷனல்களைக் கொண்டுவந்து, நிறுவனத்தின் வளர்ச்சியை இன்னும் பல மடங்காகப் பெருக்கியவர் மாரிவாலா. பாம்பே ஆயில் நிறுவனம் மாரிகோவாக மாறுவதற்கு முன்பே புரபஷனல்களின் உதவியுடன் நிறுவனத்தை சிறப்பாக நடத்தத் தொடங்கிவிட்டார் மாரிவாலா. தொழிலை எப்படி நடத்தலாம் என்று புரபஷனல்களுக்கு வழிகாட்டலாம். ஆனால், ஒவ்வொரு விஷயத்தையும் இப்படிச் செய், அப்படிச் செய் என்று தினம் தினமும் குறுக்கீடு செய்யக்கூடாது என்கிற கொள்கை கொண்டவர் மாரிவாலா. எனவே, தனக்குக்கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கு எவ்வளவு சுதந்திரம் தரமுடியுமோ, அந்த அளவுக்குத் தந்தார் மாரிவாலா. அதேசமயம், அவர்கள் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறார்களா என்பதையும் கவனிக்கத் தவறவில்லை.

மாரிவாலாவுக்கு 65 வயதானபோது, தொடர்ந்து தலைவர் பதவியில் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. கடந்த 2014-ல் அவருக்கு 65 வயது. மாரிகோவின் எம்.டி மற்றும் சி.இ.ஒ பதவியினைத் தானாக முன்வந்து துறந்துவிட்டு, அதனை சவ்கட்டா குப்தாவுக்குக் கொடுத்தார். நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு அவரிடம் கொடுத்தபிறகு, தினப்படி நடவடிக்கையில் அவர் தலையிடுவதே இல்லை. எந்தெந்த வேலையை யார், யார் செய்ய வேண்டும் என்பது குறித்து இருவருமே தெளிவாகப் பேசிக்கொண்டார்கள். பொருளாதாரம் உள்படப் பொதுவான விஷயங்களை மட்டுமே மாரிவாலா பேசுவார். மாரிகோவின் நிறுவனம் பற்றிப் பேசவேண்டும் என்றால், அதை எம்.டி.யான குப்தாவிடம் பேசச் சொல்லிவிடுவார்.

Mariwala
Mariwala
Vikatan

புதுமை படைப்பவர்களுக்குப் பாராட்டு

டின்னிலிருந்து பிளாஸ்டிக்கு மாறியபோதுதான் புதுமை படைக்க (Innovation) வேண்டியதன் அவசியம் குறித்து ஆழமாகப் புரிந்துகொண்டார் மாரிவாலா. புதுமை படைப்பவர்களைப் பாராட்டி, தகுந்த முறையில் அங்கீகரித்து, கெளரவப்படுத்த வேண்டும் என்று அவர் நினைத்ததன் விளைவாக, 2002-ம் ஆண்டு மாரிகோ இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் என்கிற அமைப்பினைத் தொடங்கினார். இந்தியா முழுக்க இருக்கும் புதுமை படைப்பாளர்களை அங்கீகரிக்கிற மாதிரி விருது வழங்கி கெளரவிக்கும் வேலையை இந்த அமைப்பு ஆண்டுதோறும் செய்துவருகிறது. புதுமை படைப்பவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்று, அவர்கள் கண்டுபிடித்த விஷயங்கள் எந்த அளவுக்குத் தனித்துவம் மிக்கவை என்பதை ஆராய்ந்து, அவர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறது மாரிகோ இன்னோவேஷன் ஃபவுண்டேஷன். ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் மாரிவாலா.

தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டுதல்

தொழில்முனைவோர்கள் எல்லா விஷயங்களையும் தெரிந்துகொண்டு தொழில் செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. சில விஷயங்களில் அவர்களுக்குப் பல கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கவே செய்யலாம். இந்தக் கேள்விகளுக்கான பதில் எங்கு கிடைக்கும் என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள். இதுமாதிரியான தொழிலதிபர்களுக்குக் கைகொடுக்கிற மாதிரி ‘அசென்ட் ஃபவுண்டேஷன்’ என்கிற அமைப்பினை நடத்தி வருகிறார் மாரிவாலா. கடந்த 2011-ம் ஆண்டில் மும்பையில் இந்த அமைப்பின் முதல் சேப்டரினை ஆரம்பித்தார். உடனே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த அமைப்பில் உறுப்பினராக முன்வந்தார்கள். ஆனால், அவர்களிலிருந்து 360 பேர் மட்டுமே இந்த அமைப்பில் உறுப்பினராக முடிந்தது. காரணம், சேவைத் துறை என்றால் ரூ.1 கோடி, உற்பத்தித் துறை என்றால் ரூ.5 கோடி டேர்ன் ஓவர் கொண்டவர்கள் மட்டும் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் தரப்பட்டு வருகின்றன.

இந்த அமைப்பின் சேப்டர் கடந்த ஆண்டில் சென்னையிலும் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை, ஈரோடு, கோவை எனப் பல்வேறு நகரங்களில் இருக்கும் தொழில்முனைவோர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக மாறிவருகிறார்கள். அடுத்த ஆண்டுக்குள் சென்னை சேப்டரில் நூறு பேரையாவது உறுப்பினர்களாக ஆக்கவேண்டும் என்று விரும்புகிறார் மாரிவாலா.

சேவைத் துறை என்றால் ரூ.1 கோடி, உற்பத்தித் துறை என்றால் ரூ.5 கோடி டேர்ன் ஓவர் கொண்டவர்கள் மட்டும் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் தரப்பட்டு வருகிறது.

இரண்டுமுறை போனஸ், முப்பது முறை டிவிடெண்ட்

1996-ஆம் ஆண்டில் மாரிகோ நிறுவனத்தின் பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியல் இட்டார். பட்டியலிடப்பட்டபின் சுமார் எட்டு ஆண்டுகள் வரை மாரிகோ பங்கு விலை 10 ரூபாய்க்குமேல் உயரவே இல்லை. ஆனால், 2005-க்குப்பிறகு மாரிகோ பங்கு விலை எக்ஸ்பிரஸ் வேகத்தில் உயரத் தொடங்கியது. 2010-ல் 50 ரூபாயைத் தொட்ட மாரிகோ பங்கு விலை, 2015-ல் 200 ரூபாயைத் தொட்டது, தற்போது 380 ரூபாய்க்கு மேல்வர்த்தகம் ஆகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தப் பங்கு 772% லாபம் தந்திருக்கிறது. இத்தனை லாபத்தைப் பெற்றுத் தந்தததில் மாரிவாலாவின் உழைப்பு நிறையவே இருக்கிறது.

மாரிகோ நிறுவனத்துக்குக் கிடைக்கும் லாபத்தினை தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர் அல்ல மாரிவாலா. காலாண்டு முடிவினை அறிவிக்கும்போதெல்லாம் பங்குதாரர்களுக்கு அவர் டிவிடெண்டினை அறிவிக்கத் தவறியதே இல்லை. கடந்த 2002 முதல் இன்று வரையில் முப்பதுக்கும் மேற்பட்டமுறை டிவிடெண்டினை அறிவித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, 2002-ல் ஒருமுறையும், 2004-ல் ஒருமுறையும் என இரண்டு முறை போனஸ் ஷேரையும் தந்து, தன்னுடைய முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் மாரிவாலா.

Marico
Marico

தினமும் பயிற்சி

எளிய உணவு, தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, கால்ஃப் விளையாட்டு, புத்தகம் படிப்பது, பேரக் குழந்தைகளுடன் விளையாட்டு என்று மாரிவாலா தனது வாழ்க்கையை எளிமையாக வைத்திருப்பதைப் பார்க்கும்போது, அவர் வித்தியாசமான தொழிலதிபர்தான் என்பது மீண்டும் மீண்டும் சொல்லவே தோன்றுகிறது!