நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

வெற்றிகரமான முதலீட்டாளர்களின் சரியான முதலீட்டுப் பழக்கங்கள்!

முதலீட்டுப் பழக்கங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீட்டுப் பழக்கங்கள்

முதலீட்டுப் பழக்கங்கள்

ஒரு முதலீட்டாளரின் வெற்றி என்பது அவரின் நிதி இலக்குகளான பிள்ளை களின் உயர்கல்வி மற்றும் கல்யாணச் செலவுகளுக்கான தொகை, ஓய்வுக்காலத் தொகுப்பு நிதி ஆகியவை சரியான நேரத்தில் சேர்ப் பதில் இருக்கிறது. அதற்கு முதலீட்டாளரின் சரியான முதலீட்டுப் பழக்கங்களே (Effective Investment Habits) முக்கியமான காரணங்களாக இருக்கும். அந்தக் காரணங்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ராமகிருஷ்ணன் வி நாயக் நிறுவனர், https://www.dakshincapital.com/
ராமகிருஷ்ணன் வி நாயக் நிறுவனர், https://www.dakshincapital.com/

தெளிவான நிதித் திட்டத்தை வைத்திருப்பார்கள்...

முதலீட்டை மேற்கொள்ள ஒரு நிதித் திட்டத்தை (Financial Plan) உருவாக்கும் போதே அதன் வெற்றி உறுதி யானதாக மாறிவிடுகிறது. இதை வெற்றிகரமான முதலீட்டாளர்கள் நிச்சயம் மேற்கொண்டிருப்பார்கள். அவர்கள், நிதித் திட்டத்தைக் குறுகிய கால இலக்குகள், நடுத்தர கால இலக்குகள், நீண்ட கால இலக்குகள் எனப் பிரித்துக்கொள்வதன் மூலம் முதலீட்டில் எளிதில் வெற்றி பெறுகிறார்கள். முதலீட்டுக் காலத்துக்கேற்ப முதலீட்டுத் திட்டங்களை அவர்கள் தேர்வு செய்வதே இந்த வெற்றிக்குக் காரணம்.

ஓராண்டு முதல் மூன்று ஆண்டுக்கு உட்பட்ட குறுகிய கால இலக்குகள் என்கிற போது, அதிக ரிஸ்க் இல்லாத வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டு கள், கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகியவற்றில் முதலீட்டை மேற்கொண்டு வருவார்கள்.

சுமார் மூன்று ஆண்டுக்கு மேற்பட்டு ஐந்து ஆண்டுக்கு உட்பட்ட நடுத்தர கால இலக்கு என்கிறபோது ஓரளவுக்கு ரிஸ்க் கொண்ட கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட், கடன் பத்திரங்கள், ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருவார்கள். ஐந்து ஆண்டுக்கு மேற்பட்ட காலம் என்கிறபோது நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் வெற்றிகரமான முதலீட்டாளர்கள் பணத்தைப் போட்டு வருவார்கள்.

உதாரணமாக, இன்னும் பத்து ஆண்டுகளில் சொந்த வீடு வாங்கத் திட்டமிட்டால், நல்ல நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருவார்கள்.

இதுவே, பிள்ளைகளின் கல்வித் தேவைக்கு இன்னும் மூன்று ஆண்டுகளில் பணம் தேவை எனில், வெற்றிகரமான முதலீட்டாளர்கள் ஏற்கெனவே ஈக்விட்டி ஃபண்டுகளில் செய்திருக்கும் முதலீட்டை கடன் ஃபண்டு களுக்குப் பாதுகாப்பாக மாற்றிவிட்டு, மேற்கொண்டு கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்வார்கள்.

வெற்றிகரமான முதலீட்டாளர்களின் சரியான முதலீட்டுப் பழக்கங்கள்!

தொடர் முதலீட்டை மேற்கொள்வார்கள்...

வெற்றிகரமான முதலீட்டாளர்கள் தொடர் முதலீட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாக இருப்பார்கள். நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதாக இருந்தாலும், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதாக இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து சிஸ்டமேட்டிக் இன்வெஸ்மென்ட் பிளான் (Systematic Investment Plan - SIP) முறையில் முதலீட்டை மேற்கொண்டு வருவார்கள். அவர்கள் பங்குச் சந்தையின் இறக்கத்தைக் கண்டு பயப்படாதவர்களாக இருப்பார்கள். எக்காரணம் கொண்டும் எஸ்.ஐ.பி முதலீட்டை இடையில் நிறுத்தாமல் மேற்கொண்டு வருவார்கள். மேலும், வெற்றிகரமான முதலீட்டாளர் கள், அவர்களின் சம்பளம், சம்பாத்தியம் அதிகரிக்கும் போது முதலீட்டுத் தொகையையும் சீராக அதிகரித்து வருவார்கள்.

அவசரச் செலவுக்கென தனியே பணம் ஒதுக்குவார்கள்...

அவசரச் செலவுகள் எப்போதும் சொல்லிக் கொண்டு வருவதில்லை. எனவே, அதை எப்போதும் சமாளிக்கும் விதமாக வெற்றிகரமான முதலீட் டாளர்கள், தனியே ஒரு தொகையை ஒதுக்கி வைத் திருப்பார்கள். அவர்கள் முதலீட்டை ஆரம்பிக்கும் முன்பே இந்த நல்ல விஷயத்தைச் செய்திருப்பார்கள். அவர்கள் அவசரத் தேவைக்கு என அவர்களிடம் இருக்கும் முதலீடு, பொருள்கள் எதையும் நஷ்டத்துக்கு விற்க மாட்டார்கள். மேலும், இந்த அவசரத் தேவைக்கு என ஒதுக்கி வைத்திருக்கும் பணத்தை வேறு எந்தக் காரியத்துக்கும் பயன்படுத்த மாட்டார்கள். இந்தப் பணத்தை உடனடியாக எடுத்து செலவு செய்யும் விதமாக அதை வங்கிச் சேமிப்புக் கணக்கு, மியூச்சுவல் ஃபண்ட் லிக்விட் ஃபண்ட் போன்றவற்றில் போட்டு வைத்திருப்பார்கள்.

வெற்றிகரமான முதலீட்டாளர்கள் அவர்களின் மாத வருமானத்தைப் போல சுமார் 6 மடங்கு தொகையை அவசரச் செலவுக்காக வைத்திருப்பார்கள். இதனால், ஏதாவது ஓர் அவசரச் செலவு ஏற்பட்டால் அவர்களின் குடும்பச் செலவுகள், கடன் தவணைகள், முதலீடு என எதுவும் தடைபடாது.

முதலீட்டைப் பிரித்து மேற்கொண்டிருப்பார்கள்...

வெற்றிகரமான முதலீட்டாளர்களுக்கு அனைத்து முதலீடுகளும் எப்போதும் வருமானம் தராது என்பது அவர்களுக்குத் தெரியும். பங்குச் சந்தை நன்றாகச் செயல்பட்டிருக்கும் காலத்தில் தங்கத் தின் விலை அதிகமாக ஏறாது என்பது அவர் களுக்குத் தெரியும்.

அதே போல, தங்கத்தின் விலை மிக வேகமாக உயரும் காலத்தில் பங்குகளின் விலை வீழ்ச்சியைச் சந்திக்கும் என்பதும் அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். எனவே, வெற்றிகரமான முதலீட்டாளர்கள் எப்போதும் மொத்தப் பணத் தையும் ஒரே சொத்து பிரிவில் முதலீடு செய்ய மாட்டார்கள்.

இதற்கு கடன் சந்தை சார்ந்த திட்டங்கள் (ஃபிக்ஸட் டெபாசிட்டுகள், கடன் மியூச்சுவல் ஃபண்டுகள்), பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள் (நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகள்), தங்கம் (கோல்டு இ.டி.எஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், கோல்டு பாண்ட்), ரியல் எஸ்டேட் (மனை, வீடு, கட்டடங்கள், ரியல் எஸ்டேட் பங்குகள்/ மியூச்சுவல் ஃபண்டுகள்) ஆகியவற்றில் பணத்தைப் பிரித்து முதலீடு செய்திருப்பார்கள்.

அஸெட் அலொகேஷன்படி முதலீடு செய்திருப்பார்கள்...

கூடவே, ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் முதலீட்டுக் காலத்துக்கு ஏற்ப அஸெட் அலொகேஷன் முறையில் முதலீடு செய்திருப் பார்கள். குறைந்தது ஓராண்டுக்கு ஒருமுறை சொத்து பிரிவுகளில் செய்யப்பட்டிருக்கும் முதலீட் டைப் பரிசீலனை செய்து, முதலீட்டின் அளவுகளை சமன் செய்வார்கள்.

உதாரணமாக, ஒரு வெற்றிகர மான முதலீட்டாளரின் வயது 40 என வைத்துக்கொள்வோம். அவரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக் கேற்ப அவர் மொத்த முதலீட்டுத் தொகையில் 30% தொகையை கடன் சந்தை சார்ந்த திட்டங் களிலும் 50% தொகையை பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களிலும் 10% தொகையை ரியல் எஸ்டேட் டிலும் மீதி 10% தொகையைத் தங்கத்திலும் முதலீடு செய்ய வேண்டும். அதாவது, அவரின் முதலீட்டுக் கலவை 30:50:10:10 என்பதாக இருக்கும்.

அதாவது, அவரிடம் உள்ள 100 ரூபாயை 30:50:10:10 என மேற்கண்டவாறு பிரித்து முதலீடு செய்திருப்பதாக வைத்துக் கொள்வோம். ஓராண்டு கழித்து கடன் ஃபண்டுகளில் செய்யப் பட்டிருக்கும் ரூ.30 முதலீடு 10% வளர்ச்சியில் ரூ.33-ஆக அதிகரித் துள்ளது. ஈக்விட்டி ஃபண்டில் செய்யப்பட்ட ரூ.50 முதலீடு, 20% வளர்ச்சியில் ரூ.60-ஆக அதிகரித்துள்ளது. தங்கத்தில் மற்றும் ரியல் எஸ்டேட்டில் செய்யப்பட்டிருக்கும் ரூ.10 முதலீடு 10% வளர்ச்சியில் தலா ரூ.11-ஆக அதிகரித்திருக்கும். அதாவது, ரூ.100 முதலீடு என்பது ரூ115-ஆக உயர்ந்துள்ளது. இதை ஒரிஜினல் அஸெட் அலொகேஷன் 30:50:10:10 என்ற ஃபார்முலாபடி பிரித்து முதலீட்டை அமைத்துக்கொள்ள வேண்டும்.

கடன் ஃபண்டுகளில் ரூ.37.95, ஈக்விட்டிஃபண்டுகளில் ரூ.52.17, தங்கத்தில் ரூ.12.65, ரியல் எஸ்டேட்டில் ரூ.12.65 என முதலீட்டை மாற்றி அமைக்க வேண்டும். இதற்கு அதிக லாபத்தில் இருக்கும் ஈக்விட்டி ஃபண்டு களிலிருந்து சுமார் ரூ.8 மதிப்புள்ள யூனிட்டுகளை விற்று, கடன் ஃபண்டுகளில் ரூ.4.95 முதலீடு செய்ய வேண்டும். மீதியைத் தலா ரூ.1.5 எனப் பிரித்து, தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்போது அஸெட் அலொகேஷன் 30:50:10:10 என ஒரிஜினல் அளவுக்கு வந்து விடும். இதில் ஓரிரு சதவிகிதம் முன் பின் இருக்கலாம், தவறில்லை. மேலும், வயது அதிகரித்து வரும் நிலையில் வெற்றிகரமான முதலீட் டாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீட்டை சுமார் 5% அளவுக்குக் குறைத்து, அதை இதர அஸெட் பிரிவுகளில் அதிகரித்து வருவார்கள். இப்படி பல்வேறு சொத்துகளில் பணத்தைப் பிரித்து முதலீடு செய்வதன்மூலம் அவர்கள் ரிஸ்க்கைக் குறைப் பதுடன், வருமானத்தை அதிகரிக் கவும் செய்கிறார்கள்.

நீண்ட கால நோக்கில் முதலீடு செய்வார்கள்...

வெற்றிகரமான முதலீட்டா ளர்கள் அவசரச் செலவு மற்றும் குறுகிய காலத்துக்குத் தேவையான பணத்தை வங்கிச் சேமிப்புக் கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட், கடன் ஃபண்டுகளில் பிரித்து வைத் திருப்பார்கள். அவர்கள் பிள்ளை களின் உயர்கல்வி, கல்யாணம், சொந்த வீடு ஆகியவற்றுக்கு தேவையான பணத்தைத் திரட்ட அவர்கள் நீண்ட கால முதலீட்டைத் தான் மேற்கொண்டு வருவார்கள். மேலும், அவர்கள் குறுகிய கால கண்டோட்டத்தில் ஒரு பங்கு அல்லது ஃபண்ட் கொடுத்திருக்கும் வருமானத்தின் அடிப்படையில் அவற்றை தேர்வு செய்ய மாட்டார்கள். கடந்த 3, 5, 10 ஆண்டுகளில் சராசரியாக பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் தந்திருக்கும் நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில்தான் முதலீட்டை மேற்கொள்வார்கள்.

அவர்கள் நீண்ட கால முதலீட்டாளர்களாக இருப்பதால் கூட்டு வளர்ச்சியின் (Compound Growth) பலனை முழுமை யாக அடைகிறார்கள். இதனால், அவர்கள் நிதி இலக்குகளை நிறைவேற்ற ஒருபோதும் கடன் வாங்குவதில்லை.

வெற்றிகரமான முதலீட்டாளர்களின் சரியான முதலீட்டுப் பழக்கங்கள்!

முதலீட்டை சீக்கிரமாக ஆரம்பிப்பார்கள்...

வெற்றிகரமான முதலீட்டாளர்களுக்குக் கூட்டு வளர்ச்சியின் வலிமை தெரிவதால், அவர்கள் முதலீட்டை இளம் வயதிலேயே எவ்வளவு சீக்கிரமாக ஆரம்பிக்க முடியுமோ, அவ்வளவு விரைவிலேயே ஆரம்பித்துவிடுவார்கள். இளம் வயதில் முதலீட்டை ஆரம்பிப்பதால், பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் அதிக ஏற்ற இறக்கம் இருந்தாலும் நீண்ட காலத்தில் முதலீட்டின் மீதான லாபம் அபரிமிதமாக இருக்கும். பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் குழப்பமாகத் தோன்றினாலும், வெற்றிகரமான முதலீட் டாளர்களுக்கு அது லாபகரமாக இருந்துவருவதை நடைமுறையில் காண முடிகிறது.

இதர விஷயங்கள்...

வெற்றிகரமான முதலீட்டாளர்களின் செலவு வரவுக்குள் இருக்கும். அதற்கு ஏற்பதான் அவர்களின் வாழ்க்கைமுறை (Lifestyle) செலவுகளும் இருக்கும். அடுத்து மிக முக்கியமாக, அவர்களின் முதலீடுகள் வருமான வரியை மிச்சப்படுத்து வதாகவும் குறைவான வருமான வரி கட்டுவதாகவும் இருக்கும். இவை தவிர, வெற்றிகரமான முதலீட்டாளர்கள் முதலீட்டுக்கான செலவு குறைவாக இருக்கும் திட்டங்களைத் தேர்வு செய்வார்கள். அவர்கள் அதிக ஏஜென்ட் கமிஷன் மற்றும் அதிக கட்டணங்களை கொண்ட எண்டோவ்மென்ட் பிளான்கள், யூலிப் பாலிசிகள், பொன்ஸி திட்டங்களைத் தவிர்ப்பார்கள். முதலீடுகளின் நிபுணத்துவம் மற்றும் பழுத்த அனுபவம் கொண்ட நிதி ஆலோசகர்களின் உதவியுடன் முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்வார்கள்.

வெற்றிகரமான முதலீட்டாளர்களிடம் காணப்படும் இந்தப் பழக்கங்களில் உங்களிடம் எத்தனை உள்ளன என்பதை யோசித்துப் பாருங்கள். இந்தப் பழக்கங்கள் உங்களிடம் இல்லை எனில், உடனே உருவாக்கிக் கொள்ளுங்கள்!