Published:Updated:

‘‘தங்கம்,ரியல் எஸ்டேட் தவிர்த்து ஃபண்டிலேயே முதலீடு செய்கிறேன்!’’

பி.கதிர்வேல்
பிரீமியம் ஸ்டோரி
பி.கதிர்வேல்

சூப்பர் இன்வெஸ்டார் - முதலீட்டு அனுபவம்

‘‘தங்கம்,ரியல் எஸ்டேட் தவிர்த்து ஃபண்டிலேயே முதலீடு செய்கிறேன்!’’

சூப்பர் இன்வெஸ்டார் - முதலீட்டு அனுபவம்

Published:Updated:
பி.கதிர்வேல்
பிரீமியம் ஸ்டோரி
பி.கதிர்வேல்

வாழ்க்கையில் மிகக் காலதாமதமாகத் தான் நான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆரம்பித்தேன். ஆனால், இன்று என் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளத் தேவையான அளவுக்கு பணத்தைச் சேர்த்திருக்கிறேன்’’ என்று மனநிறைவுடன் பேசுகிறார் கோவை தொண்டாமுத்தூரைச் சேர்ந்த பி.கதிர்வேல். தனியார் நிறுவனத்தில் கணக்கு எழுதிக்கொண்டிருந்தவர் சூப்பர் முதலீட்டாளராக எப்படி மாறினார்..? அவரே சொல்கிறார்...

பி.கதிர்வேல்
பி.கதிர்வேல்

‘‘நான் தொண்டாமுத்தூரிலேயே பிறந்து வளர்ந்தவன். ப்ளஸ் டூ வரை படித்தேன். படித்து முடித்த பிறகு, ஒரு மில்லில் வேலைக்குச் சேர்ந்தேன். மிகச் சொற்பமான வருமானம்தான் கிடைத்தது. எனக்கு சொந்த வீடு இருந்ததால், வாடகை பிரச்னை இல்லை. என்றாலும் வருமானம் போதவில்லை. எனவே, தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்கு எழுதும் வேலைக்கு மாறினேன். அதன் பிறகு, என் சம்பளம் கொஞ்சம் கொஞ்சமாக உயரத் தொடங்கியது.

பத்திரிகைகளைத் தீவிரமாகப் படிக்கும் பழக்கம் எனக்குண்டு. ஒருமுறை பத்திரிகை வாங்கச் சென்றபோது, ‘நீங்கள் கேட்கும் பத்திரிகை தீர்ந்துவிட்டது. நாணயம் விகடனைப் படியுங்கள்’ என்று கொடுத்தார் கடைக்காரர். புதுசா இருக்கே... என்று வாங்கிவந்து முழுவதுமாகப் படித்தேன். அதில், முதலீடு செய்வதில் கிடைக்கும் லாபம் பற்றி, அதிலும் குறிப்பாக, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் சிறப்புகளை எளிதாகப் புரிகிற மாதிரி ஒரு கட்டுரை இருந்தது. அதன் பிறகுதான் எனக்கு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும் என்கிற எண்ணமே வந்தது.

2011-ல் கோவையில் உள்ள ஆலோசகர் மூலம் முதன்முதலாக கோல்டு இ.டி.எஃப் திட்டத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்தேன். பிறகு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செயல்படும் விதத்தைப் புரிந்துகொண்ட பின், பங்குச் சந்தை சார்ந்த வேறு திட்டங்களிலும் முதலீடு செய்தேன். ஆனால், முதலீடு செய்த பணத்தை நினைத்தபோது எடுப்பதும், மீண்டும் அதில் முதலீடு செய்வதுமாகவும் இருந்தேன்.

இப்படி ஒருமுறை பணத்தை எடுக்க மியூச்சுவல் ஃபண்ட் ஆபீஸுக்குச் சென்றிருந்த போதுதான், கோவை கண்ணன் என்கிற ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டரைச் சந்தித்தேன். ‘ஃபண்டில் முதலீடு செய்த பணத்தை எடுப்பதும், போடுவதுமாக இருக்கிறீர்களே, இது தப்பாச்சே’ என்று என்னிடம் கேட்டார் அவர். மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யும்போது பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள் பற்றி அவர் எனக்குத் தெளிவாக எடுத்துச் சொன்னார். முதலீடு குறித்து அவர் சொன்ன விஷயங்கள் மிகவும் பிடித்துப் போனதால், என் மொத்த முதலீட்டையும் அவரிடம் தந்துவிட்டேன்.

2017-க்குப் பிறகு, அவர் மூலமாகக் கணிசமான தொகையை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய ஆரம்பித்தேன். நீண்ட காலத்தில் இரட்டை இலக்க விகிதத்தில் லாபம் தருகிற மாதிரியான ஒரு போர்ட்ஃபோலியோவை அவர் எனக்கு உருவாக்கித் தந்தார். கிடைத்த சம்பளத்தில் சிறு பகுதியை மட்டும் வீட்டுச் செலவுக்குத் தந்துவிட்டு, மீதமுள்ள பணத்தை மியூச்சுவல் ஃபண்டிலேயே முதலீடு செய்தேன்.

மனைவி தமிழரசியுடன் கதிர்வேல்
மனைவி தமிழரசியுடன் கதிர்வேல்

எல்லாப் பணத்தையும் ஃபண்டில் முதலீடு செய்வதால், நஷ்டம் வந்துவிடுமோ என்கிற கவலையும் பயமும் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், தொடர்ந்து முதலீடு செய்து, என் முதலீடு 10, 20 லட்சம் ரூபாய்க்குமேல் போனபோது, பயம் போய்விட்டது. பிற்பாடு சந்தை விழுந்தபோதெல்லாம் என் முதலீட்டின் மூலம் கிடைத்த லாபம் குறைந்ததே தவிர, நஷ்டம் என்கிற நிலை வந்ததே இல்லை. சந்தை மீண்டும் உயரத் தொடங்கிய பிறகு, லாபம் மீண்டும் உயர்ந்து, பழைய நிலைக்கு வருவதைப் பலமுறை பார்த்திருக்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன் என் வீட்டை விற்றபோது எனக்குக் கிடைத்த பணத்தையும் பங்கு சார்ந்த ஃபண்டில்தான் முதலீடு செய்தேன். எனக்கு எப்போது பணம் கிடைத்தாலும் அதைத் தங்கம், ரியல் எஸ்டேட் என வேறு எதிலும் முதலீடு செய்யா மல், மியூச்சுவல் ஃபண்டிலேயே முதலீடு செய்கிறேன். ரிடையர்ட் ஆகிவிட்ட நிலையில் இப்படிச் செய்வது தவறு என்றுகூட சிலர் நினைக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை, நான் இப்போது சம்பாதித்திருக்கும் லாபம் வேறு எந்த முதலீட்டி லாவது கிடைத்திருக்குமா எனில், நிச்சயம் கிடைத்திருக்காது. எனவேதான், தைரியமாக இதில் முதலீடு செய்கிறேன்.

ஃபண்ட் முதலீட்டின்மூலம் சேர்த்திருக்கும் பணத்திலிருந்து ரூ.10,000-த்தை மாதம்தோறும் எடுத்து என் வீட்டுச் செலவுக்கு பயன்படுத்தி வருகிறேன். என் மகள் தாரிணியின் திருமணச் செலவு இருப்பதால், முதலீட்டை அப்படியே வளரும்படி விட்டுவிட்டேன்’’ என்று பேசி முடித்தார் கதிர்வேல்.

தனியார் துறையில் சாதாரண கணக்காளர் ஒருவர் சூப்பர் முதலீட்டாளராக ஆக முடியும் எனில், உங்களாலும் முடியுமே!