Published:Updated:

“மாதம் ரூ.35,000 முதலீடு... 15% சராசரி வருமானம்..!”

அனுராதா
பிரீமியம் ஸ்டோரி
அனுராதா

சூப்பர் இன்வெஸ்டார்

“மாதம் ரூ.35,000 முதலீடு... 15% சராசரி வருமானம்..!”

சூப்பர் இன்வெஸ்டார்

Published:Updated:
அனுராதா
பிரீமியம் ஸ்டோரி
அனுராதா

நிதித் திட்டமிடலுக்காக அக்டோபர் 2011-ல் நாணயம் விகடனுக்கு விண்ணப்பம் செய்திருந்தேன். அன்று நாணயம் விகடன் எனக்கு வழங்கிய நிதித் திட்டமிடல்தான், இன்று என்னையும் என் குடும்பத்தையும் பொருளாதார ரீதியில் உயர்த்தியிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஃபைனான்ஷியல் சவால்கள் பலவற்றைப் பொருளாதார ரீதியில் எதிர்கொண்டு, நானும் என் குடும்பமும் இன்று மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்” என மனநிறைவுடன் பேசுகிறார் சென்னை பள்ளிக் கரணையைச் சேர்ந்த அனுராதா. கடன் சிக்கல்கள் பலவற்றைச் சமாளித்து, அவர் சூப்பர் முதலீட்டாளராக எப்படி மாறினார்..? அவரே சொல்கிறார்...

“நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் தலைவராக இருக்கிறேன். என் கணவரும் மற்றொரு பன்னாட்டு நிறுவனத்தில் துணைத் தலைவராக இருக்கிறார். என் மகன் பரதன் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறான். மகனின் உயர் கல்விக்கான நிதி, அவனுடைய திருமணச் செலவுகளுக் கான நிதி என பரதன் என் வயிற்றில் இருக்கும் போதிலிருந்தே திட்டமிட ஆரம்பித்துவிட்டோம். நாங்கள் இருவரும் 50 வயதில் விருப்ப ஓய்வு பெற வேண்டும் எனத் திட்டமிட்டிருக்கிறோம். அப்போது தேவைப்படும் ஓய்வுக்கால நிதிக்காக, தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவருகிறோம்.

அனுராதா
அனுராதா

நாங்கள் 2011-ம் ஆண்டில் அதிகமான நிதி நெருக்கடிக்கு ஆளானோம். அப்போது இரண்டு வீட்டுக் கடன்கள், அதற்காக மாதம்தோறும் செலுத்த வேண்டிய இ.எம்.ஐ, தனிநபர் கடன், திருமணச் செலவுகளுக்காக வாங்கிய கடன் என ஏராளமான கடன்கள் எங்களை வாட்டி வதைத்த காலகட்டம் அது. சொந்த ஊரில் வீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டிவிட்டு, ஒரு சில ஆண்டுகளிலேயே சென்னையிலும் கடன் மூலம் வீடு வாங்கினோம். இந்த இரண்டு வீட்டுக் கடன்களைச் சமாளிப்பது பெரும் போராட்டமாக இருந்தது. பேறுகாலம் மற்றும் குழந்தை வளர்ப்புக்காக நான் ஓய்வு எடுத்துக்கொள்ள நினைத்தும், கடன் கமிட்மென்டுகளால் ஓய்வு எடுக்க முடியவில்லை.

பொருளாதாரச் சவால்கள் ஒருபக்கம், உணர்வு பூர்வமான போராட்டம் இன்னொரு பக்கம் என திக்குமுக்காடச் செய்தது. தவறு செய்து சிக்கலில் சிக்கிக் கொண்டோமோ என்ற எண்ணம் அடிக்கடி வர ஆரம்பித்தது. அப்போதுதான் நாணயம் விகடனின் ‘நேற்று... இன்று...நாளை!’ பகுதியின் மூலம் நிதி ஆலோசகர், பத்மநாபன் எங்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். எந்தக் கடன்களை எப்படி அடைப்பது, எந்தத் தேவைகளுக்கு எதில் முதலீடு செய்வது என முழுமையான தீர்வாக அந்த நிதி ஆலோசனை இருந்தது.

அவரை ஒருநாள், நானும் என் கணவரும் நேரில் சென்று பார்த்தோம். இருக்கும் பிரச்னைகள், எதிர்கால இலக்குகள் குறித்து இன்னும் விளக்கமாக அவரிடம் எடுத்துச் சொல்லி ஆலோசனைகளை வாங்கிக்கொண்டோம். அன்றைய நிலையில், டேர்ம் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸின் அவசியம் எங்களுக்குப் புரியாமல் இருந்தது. அவர் தந்த ஆலோசனையின்படி, முதலில் எனக்கும் என் கணவருக்கும் போதுமான அளவுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொண்டோம். அதே போல, ஹெல்த் இன்ஷூரன்ஸும் எடுத்துக்கொண்டோம். அலுவலக பாலிசிகள் தவிர, ரூ.40 லட்சம் கவரேஜ் கொண்ட ஃபேமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியையும் எடுத்து வைத்திருக்கிறோம்.

“மாதம் ரூ.35,000 முதலீடு... 15% சராசரி வருமானம்..!”

எங்களுடைய முதல் இலக்கு, வீட்டுக் கடனை முறையாகக் கட்டி, இரண்டு வீடுகளையும் சொந்தமாக்க வேண்டும் என்பது தான். அதற்காக முறையாகத் திட்டம் வகுத்தோம். அந்தத் திட்டத்தை சரியாக நிறை வேற்றியதால், எங்களால் இன்று இரண்டு வீட்டையும் சொந்தமாக்க முடிந்திருக்கிறது. 15 வருடங்களில் முடிக்க வேண்டிய வீட்டுக் கடன்களை 10 வருடத்தில் முடிந்திருக்கிறோம்.

அதே போல, நிதித் திட்டம் ஆரம்பித்த ஒரு சில ஆண்டு களிலேயே மற்ற சில கடன் களையும் கட்டி முடித்து விட்டோம். அன்று கடன்களால் தத்தளித்த நாங்கள், இன்று கடன் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு களை ஆரம்பிக்கும்போது, அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. வங்கியில் பணம் போட்டால், அது நம் வங்கிக் கணக்கில் இருப்பது நமக்கு தெரியும். ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் போடும் பணம் எங்கே, யாரிடம் இருக்கிறது, அதை யார் நிர்வகிக்கிறார்கள் என்று தெரியாததால், அந்த முதலீட்டின் மீது முழுமையான நம்பிக்கை அப்போது எங்களுக்கு வரவில்லை.

ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் சார்ந்த விவரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்து தெரிந்து கொண்ட பிறகு, நம்பிக்கை வர ஆரம்பித்தது. அதன் பிறகு எங்களுடைய முதலீட்டுத் தொகையின் மதிப்பை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தோம்.

ஆரம்பத்தில் மாதம் 5,000 ரூபாயை மூன்று ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்து வந்தோம். இப்போது என் பெயரிலும், என் கணவர் பெயரிலும் சுமார் 20 ஃபண்டுகளில் மாதம் 35,000 ரூபாய் முதலீடு செய்துவருகிறோம். இது போக, இதர சேமிப்பு மற்றும் இன்சன்டிவாகக் கிடைக்கும் தொகையையும் மொத்தமாக, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறோம்.

மியூச்சுவல் ஃபண்ட் ஆப்ளிகேஷன் வாயிலாக, நாங்கள் முதலீடு செய்திருக்கும் ஃபண்டுகளின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது பார்ப்பது வழக்கம். சில ஃபண்டுகள் பெரிய அளவில் லாபம் கொடுக்காமல் போனால், அதை உடனே மற்றொரு ஃபண்டுக்கு மாற்றுவது, சம்பளம் அதிகரிக்கும் போதெல்லாம் முதலீடு செய்யும் தொகையை அதிகரிப்பது என முதலீட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் இருவரும் சம்பாதிக்கும் பணம், நாளை எங்கள் இருவருக்குமே சம்பாதித்துக் கொடுக்கும் வகையில் முதலீடு செய்திருப்பது திருப்தியாக இருக்கிறது.

நிதித் திட்டமிடல் செய்யாமல் விடுபவர்கள், பெரும்பாலும் நிலத்திலும் தங்கத்திலும், வங்கிக் கணக்குகளிலும் பணத்தைப் போட்டு வைப்பார்கள். ஆனால், அது தரும் லாபம் எதிர்காலத் தேவைகளுக்கு நிச்சயம் போதாது.

ஆனால், நீண்ட கால அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் தரும் லாபம், எதிர்கால இலக்குகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு நிச்சயம் உதவி செய்யும். அதே போல, நீண்டகால நோக்கில் முதலீடு செய்யும்போது, ஏற்ற இறக்கங்களைத் தாண்டி, நம் முதலீடுகள் நல்ல லாபத்தைக் கொடுக்கும் என்பதை நாங்கள் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இன்றைய நிலையில் எங்களுடைய அனைத்து முதலீடுகளும் சராசரியாக 15% வரை லாபத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. இடையூறுகள் எதுவும் இல்லாமல், இதே நிலை இப்படியே தொடர்ந்தாலும் எங்களால், எங்களுடைய எதிர்கால இலக்குகளை எளிதில் அடைந்துவிட முடியும்.

மேலும், நாங்கள் இருவருமே டிராவல் செய்வதை அதிகம் நேசிப்பவர்கள். வருடம் ஒரு முறையேனும் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்ல வேண்டும் என்பது எங்களின் திட்டம். அதற்காகவும் நாங்கள் தனியாகப் பணத்தைச் சேமித்துக் கொண்டிருக்கிறோம்.

நிகழ்காலம் நலமாக இருக்க வேண்டியது எப்படி நம் கைகளில் இருக்கிறதோ, அதேபோல நம் எதிர் காலம் பிரச்னைகள் இல்லாமல் இருப்பதும் நம் கைகளில்தான் இருக் கிறது. நாங்கள் இன்று செய்திருக்கும் முதலீடுகள், எங்களை என்றென்றைக்கும் சுகமாக, சந்தோஷமாக வைத்திருக்கும் என்பதில் எங்களுக்குத் துளியும் ஐயமில்லை” என்றார் பெருமையாக.

ஒருவர் செய்யும் முறையான நிதித் திட்டம், அவருடைய வாழ்க்கையையே மாற்றும் என்பதற்கு அனுராதா சிறந்த உதாரணம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism