Published:Updated:

7.15% வட்டி தரும் RBI சேமிப்பு பத்திரம்... லாபகரமான முதலீடா இது?

அஞ்சலக மாதாந்தர வருவாய்த் திட்டத்தில் அதிகபட்ச முதலீடு ரூ. 4.5 லட்சம் மட்டுமே. ஆனால், இந்தப் பத்திரத்தில் பணவரம்பு பாராமல் முதலீடு செய்ய முடியும்.

மத்திய - மாநில அரசுகள் தமது நிதித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள அவ்வப்போது சேமிப்புப் பத்திரங்களை வெளியிடுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒன்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) கடந்த 01.07.2020 முதல் அமலாக்கம் செய்துள்ள, மத்திய அரசின் 7.15% மாறுடும் (ஃப்ளோட்டிங்) வட்டி தரும் சேமிப்பு பத்திரம். இதில் குறைந்தபட்ச முதலீடு 1,000 ரூபாய். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு கிடையாது.

எஸ்.பி.ஐ உள்ளிட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் மற்றும் ஐ.டி.பி.ஐ வங்கிகளில் இந்தப் பத்திரங்கள் முதலீட்டுக்கு கிடைக்கும். இப்பத்திரத்தில் தனிநபர்கள், கணவன் மனைவி கூட்டாக, கூட்டுக் குடும்பத்தினர் என அனைத்து தரப்பினரும் முதலீடு செய்யலாம்.

Investment (Representational Image)
Investment (Representational Image)

முதிர்வுக் காலம் 7 ஆண்டுகள். மாறுபடும் வட்டி 7.15% (இதற்கு முன் 7.75% வட்டி வழங்கப்பட்டது) ஆறு மாதத்துக்கு ஒரு முறை வட்டி மாறுபடும். ஜூன், மற்றும் டிசம்பர் என முடிவடைந்த ஒவ்வொரு 6 மாதத்துக்கும் ஜனவரி, ஜூலை மாத முதல் தேதியில் வட்டி தரப்படும்.

மூத்த குடிமக்கள் சலுகை

80 வயது தாண்டிய மிகவும் மூத்த குடிமக்கள் 4 ஆண்டுக்குப் பிறகும், 70-80 வயது வரையுள்ள மூத்த குடிமக்கள் 5 ஆண்டுக்குப் பிறகும் 60 முதல் 70 வயது வரையுள்ளவர்கள் 6 ஆண்டுகளுக்குப் பிறகும் முன் முதிர்வு (Premature) செய்து பணம் பெறலாம். அவ்வாறு பெறும்போது, கடைசி 6 மாத வட்டி, நிர்ணயிக்கப்பட்ட வட்டியில் பாதியாக இருக்கும். மற்ற எவரும் முதிர்வுக் காலத்துக்கு முன் முதலீட்டைத் திரும்பப் பெற முடியாது.

ப.முகைதீன் சேக்தாவூது
ப.முகைதீன் சேக்தாவூது

வட்டி விகிதம்

இதற்கு தேசிய சேமிப்புப் பத்திரத்தைவிட 0.35% அதிக வட்டி. இந்த வட்டி விகிதம் நிலையானதல்ல. தேசிய சேமிப்புப் பத்திரத்தின் வட்டி விகிதத்தைப் பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது. கூடலாம், குறையலாம். வட்டிக்கு வட்டி, அதாவது கூட்டு என்பது கிடையாது. பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் வட்டியைவிட 0.05% வட்டி அதிகம். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்ட வட்டியைவிட 0.25% குறைவு. 5 ஆண்டு அஞ்சலக எஃப்டி வட்டியைவிட 0.45% அதிகம். 5 ஆண்டு மாதந்தர வருவாய் திட்ட வட்டியைவிட 0.55% அதிகம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சாதகமான அம்சங்கள்

* மத்திய அரசின் உத்தரவாதத்துடன் கூடிய இந்தப் பத்திரம் மின்னணு (Electronic Form) வடிவில் உள்ளது. முதலீடு செய்யும் வங்கியில் அதற்கான சான்று தரப்படுகிறது.

* அஞ்சலக மாதாந்தர வருவாய்த் திட்டத்தில் அதிகபட்ச முதலீடு ரூ. 4.5 லட்சம் மட்டுமே. இந்தப் பத்திரத்தில் பணவரம்பு பாராமல் முதலீடு செய்ய முடியும். மேலும், மாதாந்தர வருவாய்த் திட்ட வட்டி 6.6% மட்டுமே.

* மூத்த குடிமக்கள் திட்ட வட்டி, இப்பத்திரம் தரும் வட்டியைவிட 0.05% மட்டுமே அதிகம். ஆனால், அதிகபட்ச முதலீடு 15 லட்சம்தான். இப்பத்திரம் பண வரம்புக்கு உட்படாமல் முதலீடு செய்யத்தக்கதாக உள்ளது.

* ரிஸ்க் கிடையாது.

Rupee
Rupee
Image by Free stock photos from www.rupixen.com

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

* இப்பத்திரத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கோ, முதலீடு தரும் வட்டிக்கோ வரிச்சலுகை கிடையாது.

* பிற சிறு சேமிப்புத் திட்டங்களைப் போல் வட்டி கூட்டு வளர்ச்சியும் பெறாது.

* அவசரமாகப் பணம் தேவைப்படும்பட்சத்தில் மூத்த குடிமக்கள் திட்டம் உள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்களில் முதிர்வுத் தேதிக்கு முன்பே பணம் பெற முடியும். இந்தப் பத்திரத்தில் ஏழு ஆண்டுகள் முடிவடையும் முன்பு பணம் பெற முடியாது. மூத்த குடிமக்களும் கூட வயதுக்கான சான்றை சமர்ப்பித்துதான் 4, 5 மற்றும் 6 வருட முதிர்வுக்குப் பிறகே பணம் பெற முடியும்

* பிற கடன் பத்திரங்களைப் போல் இப்பத்திரத்தின் மீது கடன் பெறும் உதவியும் இல்லை.

* இதன் வட்டி விகிதம் தேசிய சேமிப்புப் பத்திர வட்டியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. தே.சே பத்திர வட்டி 3 மாதத்துக்கு ஒருமுறை மாறுபடும். இதன் வட்டி 6 மாதத்துக்கு ஒருமுறை வேறுபடும்.

யார் தேர்வு செய்யலாம்?

சற்று கூடுதல் வருமானம் பெறும், வரம்பின்றி முதலீடு செய்ய விரும்புகிற இந்திய முதலீட்டாளர்களுக்கு சரியான தேர்வு இந்த 7.15 ஃப்ளோட்டிங் சேமிப்பு பத்திரம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு