Election bannerElection banner
Published:Updated:

திடீரென 50% சரிந்த மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீடு... என்ன காரணம்?

Investment
Investment ( Image by Charles Thompson from Pixabay )

எது எப்படி இருந்தாலும் சிறு முதலீட்டாளர்கள் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தி வைப்பது அவ்வளவு லாபகரமாக இருக்காது.

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் சிஸ்ட்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் செய்யப்படும் முதலீடு அண்மைக் காலத்தில் கணிசமாகக் குறைந்திருக்கிறது. இது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் துறையை நெறிப்படுத்தும் செபி அமைப்பை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

ஹசன் அலி, ஆலோசகர், Siptiger.com
ஹசன் அலி, ஆலோசகர், Siptiger.com

2019-20 நிதியாண்டில் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் மாதம்தோறும் எஸ்.ஐ.பி முறையில் செய்யப்படும் முதலீடு சராசரியாக ரூ.5,600 கோடியாக இருந்திருக்கிறது. இது 2020 ஏப்ரல் முதல் மே வரையிலான காலகட்டத்தில் ரூ. 6,200 - ரூ.6,400 கோடியாக அதிகரித்துள்ளது. அதன் பிறகு ஈக்விட்டி ஃபண்ட்களில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வது படிப்படியாகக் குறைந்து வந்திருக்கிறது. 2020 நவம்பர் முதல் 2021 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் ஈக்விட்டி ஃபண்ட் எஸ்.ஐ.பி நிகர முதலீடு ரூ.3,000 கோடிக்கும் கீழே குறைந்துள்ளது. இது சுமார் 50 சதவிகித வீழ்ச்சியாகும்.

இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

இதற்கு முன்னால் தனிப்பட்ட முதலீட்டாளர்கள், மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முறையில் பிரதானமாக முதலீடு செய்து வந்திருக்கிறார்கள். ஆனால், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க போடப்பட்ட ஊரடங்கு முதலீட்டாளர்களை மாற்றியிருக்கிறது. அவர்கள் ஊரடங்கு காலத்தில் முதலீடு தொடர்பான பல்வேறு முதலீடுகளை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். நேரடி பங்கு முதலீட்டிலும் பணத்தைப் போட ஆரம்பித்திருக்கிறார்கள். ரியல் எஸ்டேட் விலை கணிசமாகக் குறைந்திருப்பதோடு, கூடவே வீட்டுக் கடனுக்கான வீழ்ச்சி 6.7% சதவிகித அளவுக்கு வீழ்ச்சி கண்டிருப்பதால் வீடு வாங்கவும் திட்டமிடுகிறார்கள்.

Investment
Investment
Image by Nattanan Kanchanaprat from Pixabay

முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைக்கும் நோக்கத்தோடு கடன் சந்தை சார்ந்த திட்டங்களான ஃபிக்ஸட் டெபாசிட், கடன் ஃபண்ட்களில் முதலீடு செய்யவும் ஆரம்பித்திருக்கிறார்கள். இது போன்ற காரணங்களால் அவர்கள் ஈக்விட்டி ஃபண்ட்களில் முதலீட்டைக் குறைத்திருக்கலாம்.

அடுத்து, சந்தை மிகவும் உச்சத்திலிருப்பதால் அதிக என்.ஏ.வியில் முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. சந்தை இறங்கினால் குறைந்த என்.ஏ.வி மதிப்பில் முதலீடு செய்யலாம் என ரொக்கப் பண இருப்பை அதிகரித்திருக்கக் கூடும். சிறு முதலீட்டாளர்கள் தரப்பில் இன்னொரு பிரச்னையும் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறது.

நடுத்தர வருமானப் பிரிவினர் அதிகம் பேர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வருகிறார்கள். கொரோனா பாதிப்பால் பலருக்கு வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு நடந்திருக்கிறது. அது இன்னும் சரியாகவில்லை என்பதால், எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர முடியாமல் இருப்பது, எஸ்.ஐ.பி முதலீடு குறைந்திருப்பதற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. குறைக்கப்பட்ட சம்பளம் முழுமையாக உயர்த்தப்பட்டு, சம்பள உயர்வு கொடுக்கப்பட்டால் முன் போல் எஸ்.ஐ.பி முதலீடு வேகம் எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

mutual fund
mutual fund
மியூச்சுவல் ஃபண்ட்... டிவிடெண்ட் Vs குரோத் ஆப்ஷன்... எது பெஸ்ட்? #MutualFund

எது எப்படி இருந்தாலும் சிறு முதலீட்டாளர்கள் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தி வைப்பது அவ்வளவு லாபகரமாக இருக்காது. காரணம், சந்தையில் நேரம் பார்த்து முதலீடு செய்பவர்களைவிட, சந்தைக்குள் நேரம் காலம் பார்க்காமல் இருப்பவர்களே அதிக வருமானம் ஈட்டுகிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே, எஸ்.ஐ.பி முதலீட்டை தொடருங்கள். நீண்ட காலத்தில் செல்வத்தை உருவாக்குங்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு