Published:Updated:

மந்தநிலையை தவிர்க்க உதய் கோட்டக் சொல்லும் `உத்தி' எடுபடுமா?

விகடன் டீம்

காலத்தை விஞ்சி நிற்கிற அளவுக்குப் பல புதிய பிசினஸ் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இந்த நிறுவனங்கள் இருப்பதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்

uday kotak
uday kotak

நமது பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும் இந்தச் சமயத்தில், "தயவுசெய்து உங்கள் பிசினஸ் மாடலை மாற்றிக் கொள்ளுங்கள்" என்று வாகன உற்பத்தித் துறை சார்ந்தவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் இந்தியாவின் மிக முக்கியமான தனியார் வங்கியான கோட்டக் வங்கியின் தலைவர் உதய் கோட்டக்.

"சொந்தமாக கார் வாங்கவேண்டும் என்கிற ஆசை இந்தக் காலத்து இளைஞர்களிடம் இல்லை. என் மகனே சொந்தமாக ஒரு கார் வாங்கு வதற்குப் பதிலாக, ஓலா, ஊபர்மூலம் கிடைக்கும் கார்களையே பயன்படுத்தி வருகிறான். எனவே, எந்த வகையிலும் ஈகோ பார்க்காமல், கார் தயாரிக்கும் நிறுவனங்கள் புதிது புதிதாக யோசித்து, உங்கள் தொழிலைக் காலத்துக்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார் அவர்.

இந்தியத் தொழில் துறை வட்டாரத்தில் இன்றைக்குப் பலராலும் மதிக்கப்படுகிறவர் உதய் கோடக். நிதித் துறை தொடர்பான விஷயங்களில் மட்டுமல்ல, தொழில் துறை தொடர்பான விஷயங்களிலும் அவர் சொல்லும் கருத்து கடந்த காலங்களில் சரியாகவே இருந்திருக்கிறது. அந்த வகையில், வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு உதய் கோட்டக் சொல்லியிருக்கும் யோசனையை மனமுவந்து ஆமோதித்து வரவேற்கலாம்.

தொழில் நிறுவனங்களும் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொண்டு, புதிய முயற்சிகளை நம்பிக்கையுடன் மேற்கொள்வதன்மூலமே இப்போது ஏற்பட்டிருக்கும் சிக்கலிலிருந்து மீண்டுவர முடியும்!

வெளிநாடுகளில் பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள், உற்பத்தி என்பதைத் தாண்டி, வாடகை கார் சேவையைத் தருதல், சரக்குப் போக்குவரத்துச் சேவையைத் தருதல் எனப் பல வகைகளில் தங்கள் கிளைகளைப் பரப்பி, தொழில் சிக்கல்களைச் சமாளித்து வருகின்றன. அந்த வகையில், இந்திய வாகன உற்பத்தி நிறுவனங்களும் தற்போது சில புதிய தொழில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், காலத்தை விஞ்சி நிற்கிற அளவுக்குப் பல புதிய பிசினஸ் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இந்த நிறுவனங்கள் இருப்பதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

'மாறுங்கள்' என உதய் கோட்டக் முன்வைத்திருக்கும் இந்த வேண்டுகோளை, விற்பனைச் சரிவு என்கிற பிரச்னையைச் சந்திக்கும் அனைத்துத் தொழில் துறையினருமே தங்களுக்குச் சொல்லப்பட்ட யோசனையாக ஏற்றுக்கொண்டு, தங்கள் தொழிலிலும் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்று சிந்திப்பது அவசியம்.

சற்றும் எதிர்பாராமல் திடீரென வந்துவிட்ட இந்தப் பொருளாதார மந்தநிலையை அரசின் உதவியினால் மட்டுமே எந்தவொரு தொழில் நிறுவனமும் கடந்துசென்றுவிட முடியாது. அரசின் நிதி உதவி, ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு என அரசாங்கம் தன்னாலான பல முயற்சிகளைச் செய்தாலும், தொழில் நிறுவனங்களும் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொண்டு, புதிய முயற்சிகளை நம்பிக்கையுடன் மேற்கொள்வதன்மூலமே இப்போது ஏற்பட்டிருக்கும் சிக்கலிலிருந்து மீண்டுவர முடியும்!

P.Nadaraj
P.Nadaraj

- அந்த வகையில், மாற்றி யோசிக்கும் நிறுவனத்துக்கு எப்போதும் வெற்றிதான் என்பதை நிரூபித்திருக்கிறது கே.பி.ஆர் மில் நிறுவனம். இந்தக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பி.நடராஜ், நாணயம் விகடனுக்கு அளித்த சிறப்புப் பேட்டியை வாசிக்க > சிறப்பு பேட்டி: தொழிலில் மந்தநிலையைத் தவிர்க்கும் ஃபார்முலா! https://www.vikatan.com/news/general-news/interview-with-the-kpr-group-managing-director-pnadaraj

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/