Published:Updated:

டேர்ம் பிளான் ஆன்லைனில் எடுக்கலாமா? - ‘வெல்த் லேடர்’ எஸ்.ஸ்ரீதரன்

கேளுங்கள், பதில் சொல்கிறோம்!

பிரீமியம் ஸ்டோரி
முழுமையான ஆயுள் காப்பீட்டு பாலிசியான டேர்ம் பிளான் இன்ஷூரன்ஸ் குறித்து நாணயம் விகடன் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் நிதி ஆலோசகரும், வெல்த் லேடர் (Wealthladder.co.in) நிறுவனத்தின் நிறுவனருமான எஸ்.ஸ்ரீதரன்.

மாற்றுத் திறனாளிகளுக்கு ஊனத்தின் தன்மையைப் பொறுத்து, டேர்ம் இன்ஷூரன்ஸ் கிடைக்காது என்பது சரியா?

- சதீஷ்குமார் பிரணதார்த்திஹரன், முகநூல் மூலம்

‘‘மாற்றுத்திறனாளிகள் வருமானம் ஈட்டும் நபராக இருந்து, குடும்பம் அவர்களின் வருமானத்தைச் சார்ந்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் கொடுக்கப்படும். மேலும், அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து, அவர்களின் ஊனத்தின் எதிர்விளைவுகளின்படி பிரீமியம் முடிவு செய்யப்படும். அதே நேரத்தில், மனநலம் பாதிக்கப்பட்டோர், கண் பார்வை இழந்தோர் அல்லது கோமாவால் அசைவற்ற நிலையில் முடக்கப்பட்டோருக்கு பாலிசி வழங்கப்பட மாட்டாது.’’

டேர்ம் பிளான்
டேர்ம் பிளான்

டேர்ம் பிளான் எடுக்க வருமான வரிக் கணக்கைக் கண்டிப்பாகத் தாக்கல் செய்ய வேண்டுமா... சம்பள ரசீது கொடுக்க முடியாதவர்களுக்கு மாற்று வழி என்ன?

- சங்கர் பண்டரிநாதன், முகநூல் மூலம்

‘‘டேர்ம் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, ஒருவரின் வருமானத்தை வைத்தே எந்த அளவுக்குக் காப்பீடு எடுப்பது / கொடுப்பது என்று முடிவு செய்யப்படும். ஆகவே, வருமான வரிக் கணக்கு தாக்கல் என்பது அவசியம். அது இல்லாதபட்சத்தில் வங்கிக் கணக்கு பரிவர்த்தனை அறிக்கையைச் சமர்ப்பித்து ஆயுள் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம்.’’

‘‘என்.ஆர்.ஐ-ஆன என் வயது 34. நான் ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கு விண்ணப்பித்தேன். விடுமுறையில் பஹ்ரைனிலிருந்து இந்தியா வந்தபோது மருத்துவப் பரிசோதனையும் செய்துவிட்டேன். விடுமுறை முடிந்து வெளிநாட்டுக்கு வந்த பிறகு என்னுடைய பாலிசி விண்ணப்பம் தள்ளுபடியாகிவிட்டது. காரணம், `எஸ்.எல்.ஏ மீறல்’ (SLA Breach) என்று மெயில் வந்தது. அப்படியென்றால் என்ன, இனி அடுத்த பாலிசி எடுப்பதற்கு, அடுத்த விடுமுறை வரை காத்திருக்க வேண்டும். ஏனென்றால், ஆயுள் காப்பீடு கொடுக்கும் நிறுவனங்கள் `இந்தியாவில் மட்டும்தான் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்’ என்கின்றன. 2-3 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் விடுமுறைக்கு வரும் என்னைப் போன்றவர்கள் எப்படி பாலிசி எடுப்பது... தவிர, வயது ஆக ஆக பிரீமியம் தொகை கூடுமே!

- முகமது ஆரிஃப், மெயில் மூலம்

‘‘இன்ஷூரன்ஸ் என்பது ஒரு தனிநபருக்கும், இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குமான ஒப்பந்தம். எஸ்.எல்.ஏ என்பது ஒரு சேவை நிலை ஒப்பந்தம். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் கேள்விக்குத் தகுந்த விளக்கம் அளிக்கவில்லையென்றால், எஸ்.எல்.ஏ மீறல் விதிமுறைப்படி அவர்கள் இன்ஷூரன்ஸ் பாலிசியை ரத்து செய்வார்கள்.

தற்போது ஒரு சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், தாங்கள் இருக்கும் ஊரிலேயே மருத்துவப் பரிசோதனை செய்து, மருத்துவப் பரிசோதனை முடிவுகளை இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பி பாலிசி பெற வழிவகுத்துள்ளன. ஆனால், இந்த மருத்துவப் பரிசோதனைக்கான செலவுகளை பாலிசி கேட்டு விண்ணப்பம் செய்பவரே ஏற்க வேண்டும். இந்தக் கட்டுப்பாட்டை ஏற்கும்பட்சத்தில் பஹ்ரெய்னில் இருந்துகொண்டே டேர்ம் இன்ஷூரன்ஸை எடுக்கலாம்.’’

நான் பணி ஓய்வு பெற ஆறு வருடங்கள் உள்ளன. என் வயது 52. என்னிடம் ரூ.80 லட்சத்துக்கு டேர்ம் பாலிசி இருக்கிறது. என் மாத வருமானம் ரூ.1 லட்சம். என்னுடைய டேர்ம் பாலிசி தொகை சரியா அல்லது அதிகரிக்க வேண்டுமா?

- கிருஷ்ணகுமார் இ-மெயில் மூலம்

‘‘உங்களுடைய ஆண்டு வருமானத்தில் குறைந்தபட்சம் 10 மடங்கு காப்பீட்டுத் தொகை இருக்க வேண்டும். மேலும், தங்களுக்கு வீட்டுக் கடன் உள்ள பட்சத்தில் வீட்டுக் கடனுக்கான நிலுவைத் தொகையையும் சேர்த்துக்கொண்டு சிறிது அதிக கவரேஜ் எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.’’

எஸ்.ஸ்ரீதரன்
எஸ்.ஸ்ரீதரன்

`டேர்ம் பிளானை ஏஜென்ட் மூலம் எடுப்பதைவிட, ஆன்லைனில் எடுத்தால் பிரீமியம் மிகக் குறைவாக இருக்கும்’ என்கிறார்கள்... இது உண்மையா?

- மல்லிகா மூர்த்தி, திருச்செந்தூர்

‘‘டேர்ம் இன்ஷூரன்ஸ் எனபது பாலிசிதாரர் இறக்கும் நிலையில் அவரது குடும்பத்தினர் நிதிச் சிக்கலில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க எடுக்கப்படுவது. இவ்வாறு இருக்கும்பட்சத்தில், பாலிசிதாரர் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த பாலிசியின் தன்மையை விளக்கி, அவர்களுக்குப் புரிந்துகொள்ளும் தன்மை இருக்கும்பட்சத்திலும், பாலிசிதாரருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் தறுவாயில், பாலிசிதாரரின் குடும்ப உறுப்பினர் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புகொண்டு காப்பீட்டைத் திரும்பப் பெறும் நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்லைனில் எடுக்கலாம். மேலும், கடந்த சில வருடங்களாக ஆன்லைன் மற்றும் ஏஜென்ட்டின் மூலமாக எடுக்கும் பாலிசிகளின் பிரீமியம் தொகைக்கான வித்தியாசம் குறைந்து காணப்படுகிறது.

ஆன்லைன் பாலிசியில், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் இணையதளத்தில் எடுத்தால் மட்டுமே பிரீமியம் தொகை குறைவாக இருக்கும். சில இணையதள நிறுவனங்கள் ஆன்லைன் பாலிசிகளை வழங்குகின்றன. இந்த நிறுவனங்களும் ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் ஏஜென்ட்டுகளாகவே செயல்படுகின்றன. அப்படிப்பட்ட நிலையில் பிரீமியத்தில் அதிக வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை.’’

டேர்ம் பிளான் உடன் எந்த மாதிரியான ரைடர்களை எடுக்க முடியும்?

- சுரேஷ் பாபு, சென்னை–32

‘‘டேர்ம் பிளானுடன் விபத்தால் உண்டாகும் மரணம், நிரந்தரச் செயலிழப்பு அல்லது ஏதோ ஒரு சில உடல்பாகங்கள் இழப்பு என்பது ஒருவகையான ரைடர். இந்த ரைடரைப் பொறுத்தவரை, பிரீமியம் சற்று குறைவாகவும், கவரேஜைப் பொறுத்தவரை அதிகமாகவும் இருக்கும்.

இது தவிர, `கிரிட்டிக்கல் இல்னெஸ்’ எனப்படும் ஒரு சில தீவிர நோய்களுக்கான ரைடர் என்பது அடுத்த வகை. இதைப் பொறுத்தவரை, பாலிசியின் பிரீமியம் சற்று அதிகமாக இருக்கும். இந்த ரைடரில் அதிகபட்சமாக 15 வகையான தீவிர நோய்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும். ஆகவே, கிரிட்டிகல் இல்னெஸைப் பொறுத்தவரை, ஒரு தனி பாலிசியாக அவரவரின் குடும்பப் பாரம்பர்ய மருத்துவ குணங்களைப் பொறுத்து எடுத்துக்கொள்ளலாம்.’’

எஸ்.ஸ்ரீதரன்
எஸ்.ஸ்ரீதரன்

டேர்ம் பிளான் பாலிசிகளில் ஆண்களைவிட பெண்களுக்கு பிரீமியம் குறைவா?

- கலைச் செல்வி, தர்மபுரி

‘‘டேர்ம் பாலிசி பிரீமியம் ஆண்களைவிடப் பெண்களுக்கு சற்று குறைவாகவே இருக்கும். பெண்களின் இறப்பு சதவிகிதம் ஆண்களின் இறப்பு சதவிகிதத்தைவிட சற்றுக் குறைவு என்பதே காரணம்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டேர்ம் பிளான், பிரீமியம் ரிட்டர்ன் டேர்ம் பிளான் இவை இரண்டில் எதை எடுப்பது நல்லது?

- கே.ஜெய்சங்கர், காஞ்சிபுரம்

‘‘எப்போதுமே இன்ஷூரன்ஸையும் முதலீட்டையும் ஒன்றாக இணைக்காமல், இன்ஷூரன்ஸைத் தனியாகவும், முதலீட்டைத் தனியாகவும் செய்ய வேண்டும். டேர்ம் பிளானைப் பொறுத்தவரை, தாங்கள் செலுத்தும் பிரீமியம் இன்ஷூரன்ஸுக்கு மட்டுமே செல்வதால், இந்த பிளானில் எந்தவிதமான முதிர்வுத் தொகையும் இருக்காது. இதுவே பிரீமியம் ரிட்டர்ன் பாலிசிகளில் தாங்கள் செலுத்தும் பிரீமியத்தில் ஒரு தொகை காப்பீட்டுக்காகவும், ஒரு தொகை முதலீட்டுக்காகவும் பிரிக்கப்பட்டு பாலிசி முடியும்போது செலுத்திய பிரீமியத்தைத் திருப்பித் தருகின்றனர். இவ்வகையான பாலிசிகளின் பிரீமியம் சாதாரணமான டேர்ம் பாலிசிகளைவிட சற்று அதிகமாக இருக்கும். ஆகவே, பிரீமியம் ரிட்டர்ன் பாலிசிகளைத் தவிர்த்துவிடுவதே நல்லது.’’

50 வயதுக்கு மேல் டேர்ம் பிளான் கிடைப்பது கஷ்டம் என்கிறார்களே, உண்மையா?

- மோகன சுந்தரி, திருநெல்வேலி

‘‘டேர்ம் இன்ஷூரன்ஸை குறைந்த வயதில் எடுக்கும்போது பிரீமியம் குறைவாக இருக்கும். மேலும், இன்றைய நிலையில் 40 வயதுக்குமேல் சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் ஏற்படுதல், உணவுப் பழக்கவழக்கம் மாறுவது ஆகியவற்றால் உண்டாகும் நோய்கள் மிகவும் பொதுவானவையாக இருப்பதால், பிரீமியம் தொகை மாறுபடுவதுடன், பாலிசி எடுப்பதிலும் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது. டேர்ம் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவரை, ஆரோக்கியமான உடல்நலம் உள்ளவர்கள் இன்ஷூரன்ஸில் உச்சவரம்பான 60 வயது வரை டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கலாம்.’’

கேளுங்கள், பதில் கிடைக்கும்!

டேர்ம் பிளான் ஆன்லைனில்  எடுக்கலாமா? - ‘வெல்த் லேடர்’ எஸ்.ஸ்ரீதரன்

வீட்டுக் கடன் குறித்த உங்கள் கேள்விகளுக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, சென்னை தலைமை அலுவலகத்தின் ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டு வசதி வணிகப் பிரிவின் துணைப் பொதுமேலாளர் பா.மணிவாசகம் பதிலளிக்கிறார்.

உங்கள் கேள்விகளை navdesk@vikatan.com என்ற இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு