Published:Updated:

Sovereign Gold Bond: தொடங்கிய தங்க கடன் பத்திர விற்பனை; வாங்குவதால் என்ன நன்மை?

பிசிக்கல் தங்கமாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம் என்ற செலவினங்கள் உள்ளன. அவற்றோடு பாதுகாப்பு பிரச்னை உள்ளது. தரம் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. எனவே, அடுத்தடுத்து பிசிக்கல் தங்கமாக அல்லாமல், அவற்றை டிஜிட்டல் தங்கமாக வாங்கி வைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தத் தீபாவளிக்கு தங்கம் வாங்க நினைப்பவர்கள், இப்போது ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தங்கத்தை நகைகளாக வாங்காமல், தங்கப் பத்திரமாக வாங்குவதுதான் இதன் சிறப்பு. சாவரின் கோல்ட் பாண்ட் என்கிற பெயரில் மத்திய அரசாங்கம் இந்தத் தங்கப் பத்திரங்களை வெளியிட்டு வருகிறது.

தங்க முதலீட்டுப் பத்திரத் திட்டத்தின்கீழ் தங்கப் பத்திரங்கள் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படுகின்றன. இந்த ஆண்டில் இதுவரை 6 சீரிஸ் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், 7-வது சீரிஸ் இன்று திங்கள்கிழமை தொடங்கி இருக்கிறது. அக்டோபர் 25 முதல் 29-ம் தேதி (வெளிக்கிழமை) வரை முதலீட்டாளர்கள் இந்தத் தங்கப் பத்திரங்களை வாங்க முடியும். செட்டில்மென்ட் தேதி நவம்பர் 2 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில், தங்கத்துக்கான விலை முன்னதாகவே நிர்ணயிக்கப்படும். அதன்படி, ஒரு கிராம் தங்கப் பத்திரத்தின் விலை ரூ.4,765 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் தங்கப் பத்திரங்களை வாங்குபவர்களுக்கு 50 ரூபாய் சலுகை விலை. அதாவது, ஒரு கிராம் தங்கப்பத்திரத்துக்கு அவர்கள் ரூ.4,715 செலுத்தினால் போதும்.

பொதுவாக, ஒரு தனிநபர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை வாங்கிக் கொள்ளலாம். இதே அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக்கொள்ள முடியும்.

Gold (Representational Image)
Gold (Representational Image)
Photo by vaibhav nagare on Unsplash
`100 ரூபாய்க்கும் தங்கம் வாங்கலாம்!' - முதலீட்டாளர்களுக்கு வரப்பிரசாதமா டிஜிட்டல் கோல்டு?

பிசிக்கல் தங்கம் தவிர்த்து, பேப்பர் கோல்டில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இந்த சாவரின் கோல்டு பாண்டு (sovereign gold bond) மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, தங்கத்தை வாங்க நினைக்கும் மக்கள் அதிகம். குறிப்பாக, தமிழகத்தில் மிக அதிகம். தற்போதைய காலகட்டத்தில் டிஜிட்டல் தங்கத்தின் மீதும் ஆர்வம் கூடிக்கொண்டே செல்லும் நிலையில், இந்த பேப்பர் தங்கம் என்பது மிகச் சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, பிசிக்கல் தங்கமாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம் என்ற செலவினங்கள் உள்ளன. அவற்றோடு பாதுகாப்பு பிரச்னை உள்ளது. தரம் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. எனவே, அடுத்தடுத்து பிசிக்கல் தங்கமாக அல்லாமல், அவற்றை டிஜிட்டல் தங்கமாக வாங்கி வைப்பதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்தாலும், மூன்றாவது அலையின் தாக்கம் பற்றிய அச்சமும் எழுந்துள்ளது. உருமாற்றம் அடைந்து பரவிவரும் கொரோனாவின் தாக்கம் என்பது, இன்னும் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் நிலவி வருகிறது. ஆக, இது நீண்டகால நோக்கில் தங்க விலைக்கு ஆதரவாக அமையலாம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்த நிலையில்தான் டிஜிட்டல் தங்கமும் சிறந்த முதலீட்டு ஆப்ஷனாக பார்த்து வருகின்றனர் தங்க முதலீட்டாளர்கள்.

தங்கம்
தங்கம்
சாவரின் கோல்டு பாண்டு... தங்கப் பத்திர முதலீடு லாபம் தருமா?

இந்தத் தங்கப் பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ-யில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இங்கு தங்கம் வாங்க டீமேட் கணக்குத் தேவைப்படும். வங்கிகள், அஞ்சல் அலுவலகம், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மூலமும் வாங்கிக்கொள்ளலாம். பிசிக்கல் தங்கத்தைப் போலவே, இந்தத் தங்க பத்திரத்தையும் பிணையமாக வைத்து கடன் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தத் தங்கப் பத்திரங்களுக்கு வருடத்துக்கு 2.5% வட்டி விகிதம் முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும். தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், நீண்டகால மூலதன ஆதாய வரி விதிக்கப்படுவதில்லை. ஆனால், முன்கூட்டியே உங்கள் தங்கப் பத்திரத்தை எக்ஸ்சேஞ்சில் விற்றுக்கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து வருடம் தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால், இந்த இரண்டிலும் மூலதன வரி உண்டு.

அடுத்த சீரிஸ் எப்போது?

எட்டாவது சீரிஸ் வெளியிடுவதற்கான தேதியாக நவம்பர் 29-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதி வரையிலும், 9-வது சீரிஸ் வெளியீட்டுத் தேதி 2022-ம் ஆண்டின் ஜனவரி மாதம் 10 - 14-ம் தேதி வரையிலும், 10-வது சீரிஸ் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 முதல் மார்ச் 4-ம் தேதி வரையிலும் இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தங்கம் விலை இனி வெகுவாக அதிகரிக்க வாய்ப்புண்டு என்று கருதப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு வெளியிட்டும் இந்தத் தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வது சிறந்த முடிவாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு