Published:Updated:

எஃப் அண்ட் ஓ; இளம் முதலீட்டாளர்களின் டார்லிங்காக மாறக் காரணம் என்ன? பணம் பண்ணலாம் வாங்க - 32

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
Stock (Representational Image)
Stock (Representational Image) ( Image by Sergei Tokmakov Terms.Law from Pixabay )

சின்னதாக ஒரு அயிரை மீனைப் போட்டு, பெரிய திமிங்கிலத்தைப் பிடிக்கும் அந்த முறைக்குத்தான் ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் (F&O) என்று பெயர். இன்றைய இளம் முதலீட்டாளர்கள் பலரும் இந்த எஃப் & ஓ மார்க்கெட்டில்தான் கதியாய்க் கிடக்கிறார்கள்.

ஒரு லட்ச ரூபாய் முதல் போட்டு பத்தாயிரம் ரூபாய் லாபம் பெறுவது சரியா அல்லது ஐயாயிரம் ரூபாய் முதல் போட்டு ஐயாயிரம் ரூபாய் லாபம் பெறுவது சரியா? எது புத்திசாலித்தனம் என்று இரண்டாவதைத்தானே சொல்வீர்கள்... ஆம், சின்னதாக ஒரு அயிரை மீனைப் போட்டு, பெரிய திமிங்கிலத்தைப் பிடிக்கும் அந்த முறைக்குத்தான் ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் (F&O) என்று பெயர். இன்றைய இளம் முதலீட்டாளர்கள் பலரும் இந்த எஃப் & ஓ மார்க்கெட்டில்தான் கவர்ச்சியில் சிக்கி, கதியாய்க் கிடக்கிறார்கள்.

டெரிவேட்டிவ்ஸ்:

எஃப் அண்ட் ஓவைப் புரிந்துகொள்ள முதலில் டெரிவேடிவ்ஸ் (Derivatives) அதாவது, யூக வணிகம் என்றால் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும். டெரிவேட்டிவ் என்பது ஒரு ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் மதிப்பு அதற்கு அடித்தளமாக அமைந்திருக்கும் சொத்தின் மதிப்பைச் சார்ந்தது. பத்திரங்கள், பங்குகள், தங்கம், கரன்சி, இண்டெக்ஸ், கமாடிட்டீஸ் என்று எது வேண்டுமானாலும் அடித்தளமான சொத்தாக இருக்கலாம்.

ஒரு ஒப்பந்தத்தை வாங்கும்போது, உங்களால் அதன் எதிர்கால விலையை சரியாக ஊகிக்க முடிந்தால் உங்கள் காட்டில் மழைதான். ஆப்ஷன்ஸ், ஃபியூச்சர்ஸ், ஃபார்வர்ட்ஸ், ஸ்வாப்ஸ் என்று நான்கு வகையான ஒப்பந்தங்கள் உள்ளன. இவற்றில் பிரபலமாக உள்ள ஆப்ஷன்ஸையும் ஃப்யூச்சர்ஸையும் பார்க்கலாம்.

Stock Market (Representational Image)
Stock Market (Representational Image)
Photo by M. B. M. on Unsplash

ஆப்ஷன்ஸ் டிரேடிங்:

ஆப்ஷன்ஸ் டிரேடிங்கில் கால் ஆப்ஷன், புட் ஆப்ஷன் என்று இரண்டு விதமான டிரேடிங் முறைகள் உள்ளன.

இதில் ஒப்பந்தத்தை (Option) வாங்குபவர் ஒரு சொத்தை குறிப்பிட்ட விலையில் வாங்கவோ, விற்கவோ உரிமை பெறுகிறார். விரும்பினால் ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் கைவிடவும் அவருக்கு உரிமை உண்டு.

உதாரணமாக, ஏ.பி.சி என்ற கம்பெனியின் பங்குகளைக் கீழ்க்கண்ட ஒப்பந்தத்தின்படி வாங்குவதாக வைத்துக் கொள்வோம்:

ஸ்ட்ரைக் ப்ரைஸ்: (ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும் யூனிட் விலை) - ரூ. 1,000/பங்கு

லாட் சைஸ்: (ஒப்பந்தத்தில் வாங்க வேண்டிய யூனிட்டுகள்) - 100 பங்குகள்

பிரீமியம்: (ஒப்பந்தத்தில் உரிமை பெற, வாங்குபவர், விற்பவருக்கு ஒப்பந்த நாளில் தர வேண்டிய பணம்.) ரூ.5,000/ (100 பங்குகள்@ ரூ. 50 பிரீமியம் ஒரு ஷேருக்கு.)

எக்ஸ்பைரி டே: (ஒப்பந்தம் வாங்கியவர் தன் உரிமையை நிலை நாட்ட வேண்டிய முடிவு தேதி) : ஜூன் 30

ஜூன் 30 அன்று பங்கின் விலை ரூ. 1,100 ஆக உயர்கிறது எனில், நூறு பங்குகளை ரூ.1,000-க்கு வாங்க நமக்கு உரிமை இருப்பதைப் பயன்படுத்தி வாங்கி, ரூ.1,100-க்கு விற்கலாம். இதில் நமக்கு நிகர லாபம் ரூ.10,000 - ரூ. 5,000/ (பிரீமியம்) = ரூ.5,000/.

ஒருவேளை, பங்கின் விலை ரூ.900-க்கு இறங்கிவிட்டால், உரிமையைப் பயன்படுத்தும்போது நமக்கு ரூ.10,000 நஷ்டம் ஏற்படும். அதைத் தவிர்க்க நாம் நம் உரிமையைப் பயன்படுத்தாமல் விட்டுவிடலாம். நாம் பிரீமியமாகக் கொடுத்த ரூ. 5,000/ மட்டுமே நஷ்டமாகும்.

விலை ஏறக்கூடிய சொத்துகளில் கால் ஆப்ஷன் நல்ல பலன் தரும்.

Stock Market (Representational Image)
Stock Market (Representational Image)
Photo by Joshua Mayo on Unsplash

புட் ஆப்ஷன்: இதில் வாங்கியவர் ஒப்பந்தத்தின் முடிவு நாளுக்கு முன்பாகவோ, அந்த நாளிலோ ரூ.1,000/ ஸ்ட்ரைக் ப்ரைசில் ஏ.பி.சி கம்பெனியின் நூறு பங்குகளை விற்கும் உரிமையைப் பெறுகிறார். ஜூன் 30 அன்று பங்கின் விலை ரூ.900 எனில், ஆப்ஷன் உரிமையாளர் நூறு பங்குகளை ரூ.900-க்கு வாங்கி, ரூ.1,000-க்கு விற்று, நிகர லாபமாக ரூ.5,000 பெறலாம்.

ஒருவேளை, பங்கின் விலை ரூ.1,100 ஆக ஏறிவிட்டால், உரிமையாளர் தன் உரிமையைப் பயன்படுத்தாமல் விடுவதன் மூலம் ரூ. 5,000 நஷ்டத்துடன் வெளியேற முடியும். பங்கின் விலை இறங்கும் என்று முடிவு செய்பவர்கள் புட் ஆப்ஷனை பயன்படுத்தலாம்.

மேற்கண்ட இரண்டிலுமே நஷ்டம் அதிகபட்சமாக ரூ. 5,000 வரலாம். ஆனால், வரக்கூடிய லாபத்துக்கு எல்லை இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஃப்யூச்சர்ஸ் டிரேடிங்:

ஆப்ஷன்ஸ் டிரேடிங்கில் கூறப்பட்டுள்ள அத்தனை அம்சங்களும் ஃப்யூச்சர்ஸ் டிரேடிங்கிலும் உண்டு. ஒரு சில வித்தியாசங்களும் உண்டு.

  • ஆப்ஷன் வாங்குபவர் நஷ்டம் ஏற்படும்பட்சத்தில் தன் உரிமையை உபயோகப்படுத்தாமல் வெளியேறி விட முடியும் என்பதால், அவர் நஷ்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. ஃப்யூச்சர்ஸ் வாங்குபவர் லாபமோ, நஷ்டமோ தன் உரிமையை உபயோகப்படுத்தியே தீர வேண்டும் என்பதால், அவருக்கு ஏற்படக்கூடிய நஷ்டத்துக்கு எல்லை இல்லை.

  • ஆப்ஷன்ஸ் வாங்குபவர், ஒப்பந்தத்தின் முடிவு நாளுக்கு முன்பாகவோ, அந்த நாளிலோ தன் உரிமையை உபயோகப்படுத்தலாம். ஆனால், ஃப்யூச்சர்ஸ் வாங்குபவர் ஒப்பந்தத்தின் முடிவு நாளன்று மட்டுமே செயல்பட முடியும்.

  • ஆப்ஷன்ஸ் வாங்குபவர் பிரீமியத்தையும், ஒரு சில கமிஷன்களையும் முதலிலேயே செலுத்த வேண்டும். ஃப்யூச்சர்ஸ் வாங்குபவர் கமிஷனை மட்டும் முதலில் செலுத்தினால் போதும்.

Stock Market (Representational Image)
Stock Market (Representational Image)
Image by Sergei Tokmakov Terms.Law from Pixabay

கமாடிட்டிஸ், கரன்சி மற்றும் இண்டெக்ஸ் சந்தைகளில் ஃப்யூச்சர்ஸ் டிரேடிங் அதிகமாகப் பயன்படுகிறது. இவற்றுக்குக் கிடைக்கக்கூடிய லீவரேஜ் (கடன்) லெவலும் அதிகம்.

எஃப் அண்ட் ஓ டிரேடிங்கில் குறைந்த அளவு முதலீடு போதும். மேற்கண்ட உதாரணத்தில், நூறு பங்குகளைச் சந்தையில் வாங்க ரூ.1 லட்சம் தேவைப்படும். ஆப்ஷன் அல்லது ஃப்யூச்சர்ஸில் வாங்கும்போது ரூ. 5,000 செலுத்தினால் போதும். இதனால் லாப மார்ஜின் அதிகரிக்கிறது. ஆகவே, எஃப் அண்ட் ஓ மார்க்கெட் மிகவும் பிரபலமாகி வருகிறது.

புரிந்துகொள்ளவும், செயல்படுத்தவும் மிக எளிமையான விளையாட்டுதான் இந்த எஃப் அண்ட் ஓ என்றாலும், மிக மிக கவனமாகச் செய்ய வேண்டிய விஷயம் இது. மிக அதிகமான லாபம் வரும்போது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதில் மனிதர்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால், மிக அதிகமான நஷ்டம் வரும்போது இடிந்துபோய்விடக் கூடாது. அந்த மனதைரியமும் நிதித் தாராளமும் இருப்பவர்கள் மட்டும் இந்த விளையாட்டில் இறங்கலாம். அதிலும், உரிய பயிற்சி இன்றி, இதில் இறங்கவே கூடாது என்பது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய ஆலோசனை!

(மீண்டும் திங்கள் காலை சந்திக்கலாம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு