குறைந்தபட்சம் ₹1,000-லிருந்து தொடங்கும் `சரல் யோஜனா' பென்ஷன் திட்டம்... யாரெல்லாம் பயன்பெறலாம்?

ஓய்வுக் காலத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு நிச்சய வருமானம் மிகுந்த பலன் அளிக்கும். அந்த நிச்சய வருமானத்தை பென்ஷன் மூலமாக நாம் எளிதாகப் பெற முடியும்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஓய்வுக் காலத்தில் பென்ஷன் கிடைக்க வழி வகுக்கும் எளிமையான திட்டத்தை அறிமுகப்படுத்த இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ), காப்பீட்டு நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. நம் நாட்டில் பென்ஷன் என்றால் வேலைக்குச் செல்பவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது. அதுவும் பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு பென்ஷன் கிடைக்காத சூழ்நிலையே நிலவுகிறது. அதனால்தான் நம்மில் பெரும்பாலானோருக்கு அரசு வேலையின் பேர் ஈர்ப்பு இருக்கிறது.
சுயதொழில் புரியும் நபர்களுக்கும் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பென்ஷன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் அனைவருக்கும் பயன்படும் எளிமையான திட்டத்தை அனைத்து வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும் வழங்க வேண்டும் என்ற நோக்கில் இதை ஐ.ஆர்.டி.ஏ.ஐ அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டம், 2021 ஏப்ரல் 1 முதல் அறிமுகமாக இருக்கிறது. பாரத ஸ்டேட் வங்கி போன்ற பிரபல வங்கிகளும், பல காப்பீட்டு நிறுவனங்களும் இந்தத் திட்டத்தை வழங்க இருக்கின்றன.
இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச திட்ட தொகையாக மாதம் 1,000 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். இந்தத் தொகையை மாதாந்தர தவணைகளிலோ, மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ, ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ, வருடத்திற்கு ஒரு முறையோ செலுத்தி வரலாம். ஒருமுறை மட்டும் பிரீமியம் செலுத்தும் திட்டமும் இதில் அடக்கம். அதிகபட்சமாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் ஒருவர் செலுத்தலாம். எவ்வளவு அதிகமாக பிரீமியம் செலுத்துகிறோமோ அந்த அளவுக்கு ஓய்வு காலத்துக்குப் பிறகு, பென்ஷன் பணம் ஒருவருக்குக் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தில் 40 முதல் 80 வயது உடையவர்கள் அனைவரும் சேரலாம். இந்தத் திட்டம் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. முதல் திட்டத்தில் பென்ஷன் தொகை ஒருவரின் ஓய்வு காலத்துகுப் பிறகு வழங்கப்படும். அவருடைய இறப்புக்குப் பிறகு மொத்தத் தொகை நாமினிக்கு வழங்கப்படும். இது சிங்கிள் லைஃப் ஆனுட்டி (Single life Annuity) வகை திட்டமாகும்.

மற்றொரு திட்டத்தில் ஒருவரின் ஓய்வு காலத்துக்குப் பிறகு, அவருக்கு பென்ஷன் வழங்கப்படும். அவருடைய இறப்புக்குப் பிறகு, அவரின் நாமினிக்கு பென்ஷன் தொகை வழங்கப்படும். நாமினியும் இறந்துவிட்டால் மொத்த தொகை அவருடைய சட்டப்பூர்வ வாரிசுக்கு வழங்கப்படும். இது ஜாயின்ட் லைஃப் ஆனுட்டி (Joint life Annuity) வகை திட்டமாகும்.
இந்தத் திட்டத்தில் ஒருவர் சேர்ந்த ஆறு மாத காலத்தில் தமது திட்டத்தை சரண்டர் செய்து பென்ஷன் தொகையைப் பெற முடியும். உதாரணமாக, ஒருவர் ஒருமுறை ரூ.10 லட்சம் ப்ரீமியமாகச் செலுத்திவிட்டால் மாதம் 5,000 ரூபாய் வரை பென்ஷன் தொகை வழங்கப்படும்.
சிங்கிள் லைஃப் ஆனுட்டி திட்டத்தில் பாலிசிதாரரின் இறப்புக்கு பிறகு 10 லட்சம் ரூபாய் நாமினிக்கு கொடுக்கப்படும். ஜாயின்ட் லைஃப் ஆனுட்டி திட்டத்தில் பாலிசிதாரரின் இறப்புக்கு பிறகு 5,000 ரூபாய் பென்ஷன் அவரது நாமினிக்கு வழங்கப்படும். நாமினியின் இறப்புக்குப் பிறகு 10 லட்சம் ரூபாய் அவர்களின் சட்டபூர்வ வாரிசுதாரரிடம் கொடுக்கப்படும்.
இந்தத் திட்டத்தில் முக்கிய அம்சம் என்னவென்றால் ஒருவரின் ஓய்வுக் காலத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு நிச்சய வருமானம் பென்ஷன் மூலம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட பணத்துக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும். மேலும், இதில் வளர்ச்சியடையும் முதலீட்டுத் தொகைக்கு பென்ஷன் பெறும் காலம் வரை முழுவதும் வருமான வரி விலக்கு அளிக்கப்படும். இவ்வாறு பாதுகாப்பு, வளர்ச்சி, வருமான வரி விலக்கு என்ற மூன்று வழிகளில் பலன் அளிக்கும் திட்டமாகும்.
ஒய்வு காலத்துக்குப் பிறகு, ஒருவருக்கு கிடைக்கும் பென்ஷன் தொகைக்கு ஏற்ப தனி நபரின் வருமான வரி படிநிலைகளின் படி வருமான வரி கணக்கீடு செய்யப்படும். ஒருவர் ஒய்வு பெற்ற பிறகு, வேறு வருமானங்கள் இல்லையென்றால் எந்த வரியும் செலுத்தாமல் முழுத் தொகையும் பென்ஷன் ஆக கிடைக்கும்.

இந்தத் திட்டத்தில் நாம் செய்யும் முதலீடு பாதுகாப்பான முதலீடுகளில்தான் முதலீடு செய்யப்படும். இந்தத் திட்டம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யாது என்பதால் ரிஸ்க் குறைவாக உள்ள திட்டமாக உள்ளது.
ஓய்வுக் காலத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு நிச்சய வருமானம் மிகுந்த பலன் அளிக்கும். அந்த நிச்சய வருமானத்தை பென்ஷன் மூலமாக நாம் எளிதாகப் பெற முடியும். அந்த பென்ஷனைப் பெறுவதற்கு ஐ.ஆர்.டி.ஏ.ஐ அறிமுகப்படுத்தியுள்ள சரல் யோஜனா திட்டம் ஒரு சிறந்த திட்டமாகும். தேவை இருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.