Published:Updated:

தங்கம் விலை 30,000 ரூபாயைத் தொடுமா... அதிரடி விலை உயர்வுக்குக் காரணம் என்ன?!

கடந்த 7 தசாப்தங்களில் இந்தியாவில் தங்கத்தின் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம், இந்திய மக்களுக்குத் தங்கத்தின் மீதான மோகம் தொடர்ந்து அதிகரித்து வருவதுதான்.

தங்கம் விலை உயர்வு
தங்கம் விலை உயர்வு

ஆசை தீர வாங்கி அணிந்துகொள்ளும் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருவதைப் பார்த்து, மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார்கள். நடப்பு ஆண்டின் தொடக்கத்திலிருந்தே 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில்தான் இருந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி தங்கம் விலை ஒரு கிராம் 3,021 ரூபாய்க்கும், ஒரு பவுன் 24,168 ரூபாய்க்கும் விற்பனையானது. அதன்பின்னர், தங்கத்தின் விலை இறங்கவே இல்லை. தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

GOld Rate Chennai
GOld Rate Chennai

தங்கத்தின் விலை உயர்வு, முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தாலும், சாமான்ய மக்களுக்கு வருத்தத்தை வழங்கியிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட தங்கம், அன்றைய தினத்தில் ஒரு பவுன் 27,064 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகமானது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை, ஒரு கிராம் 3,473 ரூபாய்க்கும், ஒரு பவுன் 27,784 ரூபாய்க்கும் விற்பனையானது. சீக்கிரமாகவே ஒரு பவுன் தங்கம் 28,000 ரூபாயைத் தொடும் என நிபுணர்கள் சொல்லி வந்த நிலையில், ஆகஸ்ட் 7-ம் தேதி அந்த விலையையும் தாண்டி ஒரு பவுன் ஆபரணத்தங்கம் 28,352 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.

விலை உயர்வுக்கு என்ன காரணம்?

இந்திய ரூபாய் மதிப்பின் இயக்கம் தங்கத்தின் விலைகளில் மாற்றத்தைத் தீர்மானிக்கும் மிகப் பெரிய காரணியாகும். எப்போதுமே அமெரிக்க டாலர்களுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறையும் போது தங்கத்தின் விலை அதிகரிக்கும். அதே போல ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும் போது தங்கத்தின் விலை குறையும். சமீப நாள்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இது தங்கத்தின் விலை உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், சர்வதேச அளவில் அமெரிக்க டாலர் போக்கில் நிச்சயமற்ற தன்மை இருக்கும் என்று முதலீட்டாளர்கள் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது.

Gold Rate India
Gold Rate India

சீனா, ரஷியா ஆகிய இரண்டு நாடுகள் 2019-ம் ஆண்டின் முதல் காலாண்டில் தங்கத்தின் மீது முதலீடு இருமடங்கு அதிகம் செய்துள்ளது. சீனா, ரஷியா நாடுகளில் பொதுவான கரன்சியான டாலரை விற்று தங்கமாக மாற்றிக் கொள்கின்றனர். சீனா-அமெரிக்க இடையே வர்த்தகப் போர் நடைபெறுகிறது. இந்த நாடுகள் தங்கள் கரன்சிகளின் மதிப்பைக் குறைத்து கொள்கின்றன.  இதனால் பொருளாதார மந்தம் ஏற்படுமோ என்ற  நிலை உள்ளது. மேலும், உலகப் பொருளாதார மொத்த வளர்ச்சி விகிதம் 3.6 விகிதத்திலிருந்து 3.5 ஆகக் குறையும் என்று ஐ.எம்.எஃப் கணித்துள்ளது. இதுபோன்ற நிலையற்ற தன்மையால், தங்கத்தின் முதலீடு அதிகரித்து, விலையும் உயர்கிறது.

மேலும், 2019-20ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தி அறிவித்தார். 10 சதவிகிதமாக இருந்த வரியைச் 4 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என பட்ஜெட்டுக்கு முன் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இந்தக் கோரிக்கைக்கு மாறாகத் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 2 சதவிகிதம் உயர்த்தி 12 சதவிகிதம் ஆக்கப்பட்டது. தற்போதைய தங்கம் விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணியாகும்.

1947 முதல் 2019-வரை!

கடந்த 7 தசாப்தங்களில் இந்தியாவில் தங்கத்தின் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம், இந்திய மக்களுக்குத் தங்கத்தின் மீதான மோகம் தொடர்ந்து அதிகரித்து வருவதுதான். தங்கத்தின் மீதான தேவை அதிகமாக இருப்பதால், அதன் நுகர்வு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தங்கத்தின் மீது அதிக அளவில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் விலை உயர்வு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

Gold Rate
Gold Rate

சொன்னால் நம்ப மாட்டீர்கள்! இந்தியா சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டு ஒரு கிராம் தங்கத்தின் விலை 8.86 ரூபாய் மட்டுமே!. கடந்த 2006-ம் ஆண்டில் கூட ஒரு கிராம் தங்கம் 840 ரூபாய் என்கிற அளவில்தான் வர்த்தகம் செய்யப்பட்டிருக்கிறது. அதன் பிறகுதான் தங்கத்தின் மீதான நுகர்வு அதிகரிக்க, அதிகரிக்க இன்று ஒரு கிராம் தங்கம் 3,544 ரூபாய்க்கு உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் மொத்த இறக்குமதி பொருள்களில் 10-15 சதவிகிதம்  வரை தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அடுத்ததாக உள்ளது.

Gold Rate
Gold Rate

தொடர்ந்து உயருமா?

தங்கம் விலை சில நாள்களுக்குக் கொஞ்சம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும், அதன் பின்னர் மீண்டும் உயரத் தொடங்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிலவி வரும் பொருளாதார யுத்தம் நீடிக்கும் வரை தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கும் என்றே அவர்களின் தரப்பில் கூறப்படுகிறது. சில நாள்களில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 30,000 ரூபாயைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.