Published:Updated:

தங்க நகை டு தங்க பத்திரங்கள்; மக்களின் முதலீட்டு மாற்றத்துக்கு என்ன காரணம்?

தங்கம்
தங்கம்

தங்க நகைகள் மீது இந்தியர்களுக்கு இருக்கும் ஆர்வம் என்றைக்கும் குறைந்தது கிடையாது. அந்தஸ்தின் அடையாளமாகத் தங்கம் பார்க்கப்படுவதுதான் இதற்கு மிக முக்கிய காரணம்.

மத்திய அரசின் தங்க முதலீட்டுப் பத்திரத் திட்டத்தின்கீழ் தங்கப் பத்திரங்கள் ஒவ்வொரு நிதியாண்டிலும் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் நடப்பு 2021- 2022-ம் நிதி ஆண்டில் மொத்தம் ஆறு பிரிவுகளாக செப்டம்பர் மாதம் வரையில் தங்கப் பத்திரங்கள் விற்பனை நடைபெறும் என ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.

இந்த ஆண்டுக்கான முதல் சீரீஸ் விற்பனை மே 17-ம் தேதி தொடங்கிய நிலையில், இரண்டாவது சீரீஸும் உடனடியாக மே 24-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த முறை தங்க முதலீட்டுப் பத்திரத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,842 என நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த முறை இதன் விலை ரூ.4,777-ஆக இருந்தது.

RBI
RBI
Photo: Vikatan / Ashok kumar.D

அரசு தங்கப் பத்திரத்தின் இரண்டாவது சீரீஸ் விற்பனை, நேற்று முடிவடைந்துள்ள நிலையில், இதன் மூலம் மொத்தம் ரூ.2,540.87 கோடி மதிப்பிலான தங்கப் பத்திரம் முதலீட்டாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் அளவைக் கொண்டு கணக்கிடும்போது, மொத்தம் 5.31 டன் தங்கம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன்பாக கடந்த 2020-ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் தங்கப்பத்திர வெளியீட்டின் போது அதிகபட்சமாக 6.35 டன் தங்கம் விநியோகிக்கப்பட்டது. தற்போதைய அளவு இரண்டாவது அதிகபட்ச அளவாகும்.

தங்க நகைகள் மீது இந்தியர்களுக்கு இருக்கும் ஆர்வம் என்றைக்கும் குறைந்தது கிடையாது. அந்தஸ்தின் அடையாளமாகத் தங்கம் பார்க்கப்படுவதுதான் இதற்கு மிக முக்கிய காரணம். ஆனால், சமீப காலமாக, அரசு வெளியிடும் தங்கப் பத்திரங்கள் மீது மக்களின் கவனம் திரும்பக் காரணம், கொரோனா ஊரடங்கு நடைமுறைதான். தற்போது நிலவிவரும் கொரோனா காலகட்டத்தில் நகைக் கடைகள் இல்லை என்பது ஒரு முக்கியமான காரணம். தவிர, தங்கத்தைப் பத்திரங்களாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம் எனப் பணம் வீணாவதில்லை என்பதை மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கின்றனர். அதனால், வெறுமனே தங்கமாக அல்லாமல், பேப்பர் தங்களாக வாங்கி வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Gold
Gold
Photo by vaibhav nagare on Unsplash

மேலும், தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5% வட்டி கிடைக்கும். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், விலை உயர உயர வட்டி வாயிலாக அதிக லாபமும் தங்கப் பத்திர முதலீட்டின் மூலம் கிடைக்கும். இதன் மூலம் முதலீடு செய்திருக்கும் தங்கத்துக்கு வட்டி வாயிலாக அதிக வருமானம் ஈட்டிக்கொள்ள முடியும் என்பதாலும் மக்களின் ஆர்வம், பிசிக்கல் தங்கத்திலிருந்து தங்கப் பத்திர முதலீட்டின் மீது திரும்பியிருக்கிறது.

ஆரம்பத்தில் இந்த தங்க பத்திரத் திட்டம் சந்தையில் தங்கத்தின் தேவையைக் குறைக்கும் விதமாகத் தொடங்கப்பட்டது. ஆனால், தொடங்கிய சிறிது காலத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது சிறந்த ஒரு கவர்ச்சிகரமான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.

தங்கம்...
தங்கம்...

தற்போதைய நிலையில், அரசின் தங்கப்பத்திர வெளியீட்டின் முதல் மற்றும் இரண்டாம் சீரீஸ் முடிந்திருக்கும் நிலையில் மூன்றாவது சீரீஸ் மே 31-ம் தேதி தொடங்கி, ஜூன் 4-ம் தேதி முடிவடைகிறது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3-ம் சீரீஸ் தங்கப்பத்திர வெளியீட்டில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,889 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது!

அடுத்த கட்டுரைக்கு