Published:Updated:

கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு; சரியான நேரமா இது? - பணம் பண்ணலாம் வாங்க - 33

அரசாங்கத்தால் தயாரிக்கப்படும் கரன்சிகள், வங்கிக் கணக்குகள் மூலமும், கிரெடிட் கார்டுகள் மூலமும் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. அரசாங்கங்களின் தலையீடு பிடிக்காத சுதந்திர மனிதர்கள் கண்டு பிடித்ததே கிரிப்டோ கரன்சி.

நண்பர் ஒருவரின் 24 வயது மகன், ``புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறேன். கிரிப்டோ அக்கவுன்ட் ஒன்று ஆரம்பித்து விட்டேன். வேறெங்கு முதலீடு செய்யலாம்?” என்று கேட்டபோதுதான் கிரிப்டோ கரன்சி எவ்வளவு தூரம் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது என்று தெரிய வந்தது. உலக அளவில் அதிக கிரிப்டோ கரன்சி வாங்குவதில் வியட்நாமுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது.

ஆனால் ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சரகமும் ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கின்றன - ``இந்தியாவில் அரசு அல்லாத தனி நபர் கிரிப்டோ கரன்சி செல்லாது” என்பதே அது. இதற்கான ஆணையும் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதைக் கேட்ட பல இளம் முதலீட்டாளர்கள், ``நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியதுதான்” என்று கொதிக்கிறார்கள். நாட்டை விட்டுக் கூட வெளியேறும் அளவு அந்த கிரிப்டோ கரன்சியில் என்னதான் இருக்கிறது?

Bitcoin (Representational Image)
Bitcoin (Representational Image)

கிரிப்டோ கரன்சி

அரசாங்கத்தால் தயாரிக்கப்படும் கரன்சிகள், வங்கிக் கணக்குகள் மூலமும், கிரெடிட் கார்டுகள் மூலமும் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. அரசாங்கங்களின் தலையீடு பிடிக்காத சுதந்திர மனிதர்கள் கண்டு பிடித்ததே கிரிப்டோ கரன்சி. 2009-ல் சடோஷி நகமோடோ என்ற முகம் தெரியாத மனிதரால் பிட்காயின் எனும் கரன்சி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. கிரிப்டோ ஒரு ஃபிஸிக்கல் கரன்சி அல்ல; டிஜிட்டல் கரன்சி. இவை பிளாக்செயின் என்ற டெக்னாலஜி மூலம் இணையதள பரிவர்த்தனைக்காகத் தயாரிக்கப்படுபவை. கிரிப்டோ கரன்சியில் டெதர், போல்காடாட், லைட் காயின், எதீரியம் என்று சுமார் 6,700 வகை உண்டு.

டாலர், பவுண்ட், ரூபாய் போன்றவை அந்தந்த நாடுகளில் மட்டுமே செல்லுபடியாகும். ஆனால், உலகம் முழுவதும் செல்லுபடியாகும் நாணயங்களாக கிரிப்டோ காயின்கள் உள்ளன. இந்த நாணயத்தின் மதிப்பை எந்த ஒரு நாட்டாலும் நிர்ணயம் செய்ய முடியாது. அதாவது, ஒரு நாட்டின் வர்த்தக வீழ்ச்சியால் இந்த நாணயத்தின் மதிப்பு சரிந்துவிடும் என்று கூறுவதற்கு இல்லை.

கிரிப்டோகாயினை வாங்க வேண்டும், விற்க வேண்டும் என்றால் அந்த அந்த நாட்டின் கிரிப்டோகாயின் மாற்று அமைப்புக்கான இணையதளத்தில் கணக்கு இருக்க வேண்டும். இந்த இணையதளங்களில் மட்டுமே கிரிப்டோகாயினை வாங்கவும், விற்கவும் முடியும். இந்த இணையதளங்களில் கணக்கு வைத்துக் கொள்ள எந்தக் கட்டணமும் இல்லை. வெளிநாடுகளில் இதற்காக ஏடிஎம் இயந்திரங்கள் இருக்கின்றன. டெபிட் கார்டு வசதி கூட உண்டு. ஆதலால் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

Bitcoin (Representational Image)
Bitcoin (Representational Image)
அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு இந்தப் பங்குகளில் முதலீடு செய்யப்போகிறீர்களா? கவனம்! - 30

ஏன் கிரிப்டோ?

முதலீட்டு வகைகளில் ஒன்றாக மாறி வரும் இவற்றை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டும் காரணங்கள்:

  1. டாலர் போன்ற கரன்சிகள் மதிப்பிழந்து வருகின்றன.

  2. பணவீக்கத்தில் இருந்து காக்கும் கருவியாக இருப்பவை தங்கமும், கிரிப்டோகரன்சியுமே.

  3. நாடுகள் தங்கள் கரன்சியை டிஜிட்டல் மயமாக்குவது, டிஜிட்டல் கரன்சியின் தாக்கம் அதிகரிப்பதைக் காட்டுகிறது.

  4. பல நாடுகளும் மக்களுக்கு அளிக்கும் நிதியுதவி கிரிப்டோகரன்சிகள் மூலம் வழங்கப்படலாம். ஏனெனில், கள்ள நோட்டு அடிப்பது போல இந்த கிரிப்டோ கரன்சிகளை தயாரிக்க முடியாது.

  5. எத்தனை கிரிப்டோகாயின்கள் தயாரிக்கலாம் என்பதற்கு லிமிட் இருப்பதால் இவை எதிர்காலத்தில் அதிக விலையேற்றம் காணும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏன் கிரிப்டோ கூடாது?

கிரிப்டோ கரன்சி எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் வாதங்கள்:

  1. ஒரு பங்கை ஆராய்ந்து பார்க்கப் பல வழிகள் உண்டு. ஆனால், கிரிப்டோவின் மதிப்பு ஏன் ஏறுகிறது; ஏன் இறங்குகிறது என்பது யாருக்குமே புரியாத மர்மம். ஆகவே, இதில் முதலீடு செய்வது சூதாட்டம் போலத்தான்.

  2. பரிவர்த்தனைகள் முகமற்றவை என்பதால் இதை யார் வாங்குகிறார்கள், தனியாரா, நிறுவனங்களா போன்ற எதுவும் யாருக்கும் தெரியாது.

  3. எந்த அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழும் இந்த கிரிப்டோ கரன்சிகள் வருவதில்லை என்பதால் மாஃபியாக்கள், போதை மருந்து வியாபாரிகள், ஆள் கடத்தல் அடியாட்கள் போன்றவர்களின் அண்டர்கிரவுண்ட் ஆட்டங்களுக்கு உதவலாம்.

Bitcoin (Representational Image)
Bitcoin (Representational Image)
எஃப் அண்ட் ஓ; இளம் முதலீட்டாளர்களின் டார்லிங்காக மாறக் காரணம் என்ன? பணம் பண்ணலாம் வாங்க - 32

4. தங்கத்தைப் போல் இது ஒன்றும் அரிதான பொருள் இல்லை. ஒரு கம்ப்யூட்டரும், இன்டர்நெட் வசதியும் இருந்து, கரன்சியின் ஓப்பன் ஸோர்ஸ் கோடிங் முறையும் தெரிந்துவிட்டால் யார் வேண்டுமானாலும் இவற்றைத் தயாரிக்க முடியும்.

5. இதன் மதிப்பு தாறுமாறாக ஏறி இறங்குவதால் இதை கரன்சியாகப் பயன்படுத்தாமல் பதுக்குவதையே பலரும் விரும்புவர்.

6. பங்கு வர்த்தகத்தில் வரக்கூடிய லாப, நஷ்டங்களைக் கணக்கிட்டு வரி கட்டுவதே சிறு முதலீட்டாளர்களுக்கு பெரும்பாடு. கிரிப்டோ கரன்சி கணக்குகள் இன்னும் கடினமானவை.

7. 2014-ல் உலகளாவிய ஒரு நிறுவனமே தன் கிரிப்டோ கரன்சி முதலீட்டை சைபர் திருடர்களிடம் பறிகொடுத்து, திவாலாகிப் போனது. சிறுமுதலீட்டாளர்கள் எம்மாத்திரம்?

இப்படியாக ஒரு பக்கம் வாத, விவாதங்கள் நடந்துகொண்டிருக்க, எலான் மஸ்க் போன்ற பெரிய தலைகள் ஒரு நாள் ஆதரவு, மறுநாள் எதிர்ப்பு என்று கட்சி மாறுவதில் கிரிப்டோவின் மதிப்பு உச்சிக்கும் பாதாளத்துக்குமாக அல்லாடுகிறது.

Investment (Representational Image)
Investment (Representational Image)
ஒரு கம்பெனியின் பேலன்ஸ் ஷீட்டை புரிந்துகொள்வது எப்படி? ஓர் எளிய விளக்கம்! - பணம் பண்ணலாம் வாங்க 31

நாம் என்ன செய்யலாம்?

கிரிப்டோ எதிர்காலத்துக்கான கரன்சி. இதற்கென தனிச் சந்தை உருவாகியுள்ளது. யுடெமி போன்ற புகழ் பெற்ற தளங்களில் கிரிப்டோ பற்றிய ஆன்லைன் வகுப்புகள் அணி வகுக்கின்றன. பின்னொரு காலத்தில் இது பங்குச் சந்தை போன்று பலராலும் விரும்பப்படும் முதலீட்டு வழியாகலாம். ஆனால், இன்றைய தேதியில் இது ஒரு நிலையற்ற முதலீடாக விளங்குவதால் சிறு முதலீட்டாளர்கள் அவசரமாக இதில் இறங்காமல் பொறுமை காப்பது நல்லது.

- அடுத்து புதன் கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு