Published:Updated:

வெளிநாட்டு முதலீட்டைப் பெற்றுத்தரும் இந்தியா இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச்!

வி.பாலசுப்ரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
News
வி.பாலசுப்ரமணியன்

முதலீடு

இந்தியாவில் இருக்கும் ஸ்டார்ட்அப் தொழில் நிறுவனங்கள் இனி அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் பங்குகளைப் பட்டியலிட்டு, நிதி திரட்ட வேண்டும் என்ப தில்லை. நம் நாட்டில் உள்ள இந்தியா இன்டர் நேஷனல் எக்ஸ்சேஞ்சில் (சுருக்கமாக, ஐ.என்.எக்ஸ்) பட்டியலிட்டு, நிதி திரட்டலாம். இந்த ஐ.என்.எக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், தலைமைச் செயல் அதிகாரி யாகவும் இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த வி.பாலசுப்ரமணியன். சமீபத்தில் சென்னை வந்திருந்த அவரை நாம் சந்தித்துப் பேசினோம்.

‘‘என்.எஸ்.இ-யின் முக்கிய உயரதிகாரிகள் அனைவரும் ஐ.டி.பி.ஐ வங்கியில் இருந்து அயல்பணியில் வந்தவர்கள். முதல் பணியாள ராக நான் இணைந்தேன். அதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு, நானும் ஆஷிஷ் சவுகானும் மார்கெட்பிளேஸ் டெக்னாலஜி என்னும் நிறுவனத்தை நடத்தினோம். அந்த நிறுவனம் பி.எஸ்.இ-யுடன் இணைந்தது. அதைத் தொடர்ந்து நாங்கள் இணைந்தோம். அங்கு பல முக்கிய பொறுப்புகளை வகித்தேன்.

அந்தச் சமயத்தில், நிதிச் சேவைக்காக ஒரு நகரத்தை உருவாக்க மத்திய அரசு திட்ட மிட்டது. வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக இந்தியச் சந்தையில் முதலீடு செய்வதற்கு ஏதுவாக அந்த நகரம் இருக்க வேண்டும் என்கிற நோக்கில் உருவாக்கப்பட்ட அந்த நகரத்துக்கு கிஃப்ட் சிட்டி என்று பெயர் சூட்டப்பட்டது.

வி.பாலசுப்ரமணியன்
வி.பாலசுப்ரமணியன்

சர்வதேச அளவில் நாம் முக்கியமான நாடு. ஆனால், விலை நிர்ணயம் செய்வதில் (price discovery) நம் பங்கு எதுவும் இல்லை. அது வெளிநாடுகளில்தான் நடக்கிறது. இதற்காக நாம் ஒரு எக்ஸ்சேஞ்சை இந்தியாவில் தொடங்கினால் என்ன என்கிற எண்ணம் சில ஆண்டுகளுக்கு முன் உருவானது. அப்படி உருவான எக்ஸ்சேஞ்ச்தான் இந்தியா இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச். இந்த எக்ஸ்சேஞ்ச் சர்வதேச அளவில் செயல்படுவதால், கிஃப்ட் சிட்டியில் அதைத் தொடங்கினோம். கிஃப்ட் சிட்டியில் தொடங்கப்பட்ட முதல் நிறுவனம் ஐ.என்.எக்ஸ்தான்.

இந்த எக்ஸ்சேஞ்ச் வாரத்தில் ஆறு நாள்களும் 22 மணி நேரமும் வர்த்தகம் நடைபெறும். அனைத்துப் பரிவர்த்தனைகளும் டாலர் அடிப்படையில்தான் நடக்கும் என்பதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு வர்த்தகம் செய்யலாம்.

இந்த எக்ஸ்சேஞ்சில் வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என இருந்தது. உதாரணமாக, ஜப்பானில் வசிக்கும் ஒரு பெண், கிஃப்ட் சிட்டியில் (20-க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன!) வங்கிக் கணக்கைத் தொடங்கி, அதன்மூலம் இந்தியச் சந்தையில் முதலீடு செய்ய முடியும்.

இந்தியாவில் உள்ளவர்கள் வெளி நாட்டுச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டுமெனில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மூலமாக மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்கிற நிலை இருந்தது. இதில் கரன்சி ரிஸ்க், பிற செலவுகள் எனப் பல சிக்கல்கள் இருந்தன. வெளிநாட்டுச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்யும்பட்சத்தில், கரன்சி ரிஸ்க் மற்றும் பிற செலவுகளைத் தவிர்க்க முடியும். தற்போது ஐ.என்.எக்ஸ் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட 31 நாடுகளில் உள்ள 130-க்கும் மேற்பட்ட எக்ஸ்சேஞ்ச்களில் இந்தியாவிலிருந்து நேரடியாக முதலீடு செய்ய முடியும். இதன்மூலம் இந்திய முதலீட்டாளர்களுக்கு சர்வதேச முதலீட்டு வாய்ப்பு கிடைத்துள்ளது. (ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சம் 2.5 லட்சம் டாலர் வரை முதலீடு செய்யலாம்!)

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதுபோல, இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு சந்தையில் நிதி திரட்டுவதற்கான வாய்ப்பையும் இந்த எக்ஸ்சேஞ்ச் மூலம் வழங்குகிறோம். சில நிறுவனங்கள் எங்கள் மூலமாக வெளிநாட்டு சந்தையில் நிதி திரட்டியிருக்கின்றன. ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட சில நிறுவனங்கள் மசாலா பாண்டுகளை ஐ.என்.எக்ஸ் வெளியிட்டுள்ளன.

ஸ்டார்ட்அப் நிறுவனம் வெளிநாட்டில் பட்டிய லிட்டு நிதி திரட்ட விரும்பினால், இனி வெளிநாடு களுக்கு செல்லத் தேவையில்லை. இங்கேயே பட்டிய லிட்டு நிதி திரட்டலாம். உதாரணமாக, சமீபத்தில் ஃபிரெஷ்வொர்க்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் ஐ.பி.ஓ-வை வெளியிட்டது. இனி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எங்களுடைய எக்ஸ்சேஞ்ச் மூலம் நிதி திரட்டிக்கொள்ளலாம்.

சர்வதேச முதலீட்டாளர் மாநாடு இந்த மாதம் குஜராத்தில் நடப்பதையொட்டி, சர்வதேச புல்லியன் எக்ஸ்சேஞ்சைத் தொடங்கயிருக்கிறோம். சர்வதேச அளவில் சீனாவுக்கு அடுத்து தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. ஆனால், இதன் விலை வேறு எங்கோ நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது ஐ.என்.எக்ஸில் புல்லியன் எக்ஸ்சேஞ்ச் தொடங்கப்படுவதால், வரும் காலத்தில் விலை நிர்ணயம் இந்தியாவிலேயே சாத்தியமாகும். மேலும், இந்திய ஜூவல்லரி நிறுவனங்களும் வெளிநாடுகளில் வாங்காமல் இந்தியாவிலே வாங்கும் சூழல் உருவாகும்’’ என்றார்.

அட, நல்ல விஷயம்தானே!