Published:Updated:

இண்டஸ்இண்ட் வங்கியை வாங்கவுள்ளதா கோட்டக் மஹிந்திரா வங்கி... பின்னணியில் நடப்பது என்ன?

கோட்டக் மஹிந்திரா பேங்க்
கோட்டக் மஹிந்திரா பேங்க்

ஹிந்துஜா குழுமத்தின் உரிமையாளர்களான ஶ்ரீசந்த் ,கோபிசந்த், பிரகாஷ் மற்றும் அஷோக் ஆகிய நான்கு சகோதரர்களிடையே ஏற்பட்ட சொத்து தகராறுதான் இதற்குக் காரணமா?

தனியார் துறை வங்கியான கோட்டக் மஹிந்திரா பேங்க் நிறுவனம், இண்டஸ்இண்ட் பேங்க் நிறுவனத்தை வாங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால், இதை இண்டஸ்இண்ட் பேங்க் நிறுவனத்தின் புரமோட்டர் நிறுவனமான ஹிந்துஜாஸ் இண்டஸ்இண்ட் இன்டர்நேஷனல் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதே சமயம், கோட்டக் பேங்க் இதைப் பற்றி எந்தக் கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

 இண்டஸ்இண்ட் பேங்க்
இண்டஸ்இண்ட் பேங்க்

இண்டஸ்இண்ட் பேங்க் 1994-ம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்ட தனியார் துறை வங்கியாகும். இதன் உரிமையாளராக விளங்கும் ஹிந்துஜா குழுமம், வங்கி செயல்படத் தொடங்கிய காலம் முதல், பல்வேறு ஏற்ற இறக்கங்களிலும் பொருளாதார நெருக்கடிகளிலும் வங்கியுடன் துணை நின்றுள்ளது. இதோடு பிற நிறுவனங்களையும் கைப்பற்ற உதவியுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு இண்டஸ்இண்ட் என்டர்பிரைஸஸ் மற்றும் ஃபைனான்ஸ் லிமிடெட்டை, இண்டஸ்இண்ட் பேங்க் கைப்பற்றியது. அதே போல, 2004-ல் அசோக் லேலாண்டு ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், 2019-ல் பாரத் ஃபைனான்ஷியல் இன்க்லூஷன் லிமிடெட் (BFIL) ஆகிய நிறுவனங்களையும் கைப்பற்றியது.

இவ்வாறு இருந்த இண்டஸ்இண்ட் வங்கியைத்தான் கோட்டக் மஹிந்திரா பேங்க் வாங்கப் போவதாக செய்திகள் வருகின்றன. அதுவும் இரு தரப்புக்கும் முக்கியமானவர்களே இதைப் பற்றி பொதுவெளியில் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், ஹிந்துஜா குழுமத்தின் உரிமையாளர்களான ஶ்ரீசந்த், கோபிசந்த், பிரகாஷ் மற்றும் அஷோக் ஆகிய நான்கு சகோதரர்களிடையே ஏற்பட்ட சொத்து தகராறுதான் இதற்குக் காரணம் என்றும் ஒருபுறம் கூறப்படுகிறது. இதற்கான வழக்கும் லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

bank
bank

இண்டஸ்இண்ட் பேங்க், கோட்டக் மஹிந்திரா பேங்க் நிறுவனத்தால் வாங்கப்பட்டால் ஒருவகையில் அது லாபகரமானதாகவும் இருக்கும். சில்லறை வணிகத்தில் கோட்டக் பேங்கைவிட இண்டஸ்இண்ட் வங்கி சிறப்பான முறையிலேயே வளர்ந்து வருகிறது. இண்டஸ்இண்ட் வங்கியின் காசா (CASA) வைப்பு நிதி மட்டும் ரூ.84,473 கோடி ஆகும். இது ஜுன் மாதத்தில் வங்கியின் மொத்த வைப்பு நிதியில் 40 சதவிகிதமாகும். இண்டஸ்இண்ட் பேங்கிற்கு நாடு முழுவதும் 2,000 கிளைகள் உள்ளன. இதில் முறையே 26 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

அதே நேரத்தில், கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு இந்தியா முழுவதும் 1,600 கிளைகளே உள்ளன. மேலும், 2,516 ஏ.டி.எம்கள் உள்ளன. இந்த இணைப்பு மூலம் கோட்டக் வங்கி இதுவரை கால் தடம்பதிக்காத துறைகளுக்கும் செல்ல இயலும். இரண்டு வங்கிகளுடைய நிதி நிலைமையுமே நல்ல முறையில்தான் உள்ளன.

ஜுன் காலாண்டில் இண்டஸ்இண்ட் பேங்கு கொடுத்த கடன் அளவானது 2 சதவிகிதம் உயர்ந்து, ரூ.1.98 டிரில்லியனாக உள்ளது. இதனுடைய வைப்புத்தொகை (deposits) அளவும் 5 சதவிகிதம் உயர்ந்து ரூ.2.11 டிரில்லியனாக உள்ளது.

கோட்டக் மஹிந்திரா வங்கி தந்த கடன் ஜூன் இறுதியில் ரூ. 2.04 ட்ரில்லியனாக உள்ளது. இதனுடைய வைப்புத்தொகையும் ரூ.2.62 ட்ரில்லியனாக உள்ளது.

கோட்டக் மஹிந்திரா பேங்க் நிறுவனம்
கோட்டக் மஹிந்திரா பேங்க் நிறுவனம்

இவ்வாறு நல்ல முறையில் இயங்கும் வங்கிகள் இணைவது நிச்சயம் கோட்டக்கிற்கு பயனளிக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கும் என துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், கொரோனா காலகட்டத்தில் இந்த இணைப்பு நடைபெறுமா என்பதுதான் அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. முக்கியமாக, இண்டஸ்இண்ட் பேங்க் தரப்பிலிருந்து இதற்கு மறுப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த இணைப்பு நடக்குமா அல்லது நடக்காதா என்பது தெரிய இன்னும் சில நாள்கள் ஆகும்!

அடுத்த கட்டுரைக்கு