கடந்த அக்டோபர் மாதம் AGR தொடர்பான வழக்கில் முக்கிய தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது உச்ச நீதிமன்றம். இந்த AGR தொகை என்பது ஸ்பெக்ட்ரம் பயன்பாடு மற்றும் உரிமத்துக்காக டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்குத் தர வேண்டிய வருவாய்ப் பங்கீடு. இதை எப்படி வசூலிக்க வேண்டும் என்பதில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் பல வருடங்களாகக் கருத்து வேறுபாடு இருந்துவந்தது. தொலைத்தொடர்பு அமைச்சகம், டெலிகாம் இயக்கம் அல்லாத மற்ற வருவாயிலும் (சொத்துகள், முதலீடுகள், வரிகள்) டெலிகாம் நிறுவனம் பங்கு தர வேண்டும் எனக் கேட்டது. ஆனால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வெறும் டெலிகாம் இயக்கத்தில் வரும் வருவாயின் பங்கை மட்டும்தான் தர முடியும் என்று நிலையாக நின்றது.

அப்படியான சூழலில்தான் இந்த விவகாரத்தில் தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு ஆதரவாக முக்கிய தீர்ப்பை அளித்தது உச்சநீதிமன்றம். இதனால் கிட்டத்தட்ட 1.47 லட்சம் கோடி ரூபாய் வரையிலான பாக்கித்தொகையை அரசுக்குக் கட்ட வேண்டிய நெருக்கடியான சூழலில் சிக்கின இந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள். இந்த கட்டணத்தைக் கட்டுவதற்கான கடைசி தேதியாக ஜனவரி 23 குறிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று, கால அவகாசத்தை அதிகரிக்க வேண்டும் என்ற டெலிகாம் நிறுவனங்களின் முறையீட்டை விசாரிக்கக் கூடியது நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு. இந்த அமர்வு இந்த விவகாரம் கையாளும் விதம் குறித்து கடும் அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறது. நாங்கள் ஏன் நீதிமன்ற அவமதிப்பு செய்ததற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கோபத்துக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது இதைத் தொலைத்தொடர்பு அமைச்சகம் கையாண்ட விதம்தான். குறிப்பிட்ட தேதிக்குள் தொகையைக் காட்டவில்லை என்றாலும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்ற உத்தரவைப் பிறப்பித்திருந்தது தொலைத்தொடர்பு அமைச்சகம். "உத்தரவை அமல்படுத்தும் அதிகாரி தன்னை ஒரு நீதிபதி என்றே நினைத்துவிட்டார்போல, நீதிமன்ற உத்தரவை மீறி இப்படியான அறிவிப்பை எப்படி அவரால் கொடுக்க முடியும்? யார் அந்த அதிகாரி? உடனே அவரை இங்கே அழைத்துவாருங்கள்" என இதனால்தான் கொதித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
"இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது, இங்கு சட்டம் என ஒன்று இருக்கிறதா? நடப்பதையெல்லாம் பார்த்தால் நான் எதற்கு இந்த நீதிமன்றத்தில் பணிபுரிய வேண்டும் என்று தோன்றுகிறது" என இதுகுறித்து கோபத்துடன் பேசியிருக்கிறார் அருண் மிஷ்ரா. "மேல்முறையீட்டு மனுக்களை நிராகரித்தபோதும் இதுவரை ஒரு சிறிய தொகையைக்கூட இந்த நிறுவனங்கள் செலுத்தவில்லை" என இந்த நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்களை மார்ச் 17 ஆஜர் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.
இந்தச் செயல்களுக்குத் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என்றால் இந்த நிறுவனங்கள் மீதும் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்றைய உச்ச நீதிமன்ற நடவடிக்கையால் ஏர்டெல், ஐடியா பங்குகளின் மதிப்பு சரிந்துள்ளது. ஏற்கெனவே வோடஃபோனின் நிலவரம் மோசமாகத்தான் உள்ளது. நீதிமன்றமும் இந்த விஷயத்தில் திடமாக நிற்பதால் விரைவில் இந்தியாவைவிட்டு வோடஃபோன் வெளியேற வாய்ப்புகள் அதிகம் என்கின்றன டெலிகாம் வட்டாரங்கள்.
சமீபத்தில்தான் சந்தைக்கு வந்தது என்பதால் ஜியோ நிறுவனத்துக்கு AGR பாக்கியாக 165 கோடி ரூபாய் மட்டுமே இருந்தது. அதைச் செலுத்திவிட்டு இந்தச் சிக்கல்களிலிருந்து விலகி நின்று வேடிக்கை மட்டும் பார்க்கிறது ஜியோ.