Published:Updated:

முட்டுச்சந்தில் நிற்கும் வோடஃபோன்... கைகொடுக்குமா பி.எஸ்.என்.எல் ஃபார்முலா?

வோடஃபோன் & ஐடியா
News
வோடஃபோன் & ஐடியா

5G ஸ்பெக்ட்ரம் வேறு விரைவில் ஏலத்திற்கு வரும் என்பதால், இரு நிறுவனங்கள் மட்டும் இருக்கும் சூழல் ஏற்பட்டால், அது எப்படியான தாக்கத்தை விட்டுச்செல்லும் என்பது தெரியவில்லை.

Published:Updated:

முட்டுச்சந்தில் நிற்கும் வோடஃபோன்... கைகொடுக்குமா பி.எஸ்.என்.எல் ஃபார்முலா?

5G ஸ்பெக்ட்ரம் வேறு விரைவில் ஏலத்திற்கு வரும் என்பதால், இரு நிறுவனங்கள் மட்டும் இருக்கும் சூழல் ஏற்பட்டால், அது எப்படியான தாக்கத்தை விட்டுச்செல்லும் என்பது தெரியவில்லை.

வோடஃபோன் & ஐடியா
News
வோடஃபோன் & ஐடியா

சில வார இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் தலைப்புச் செய்திகளில் தொலைத்தொடர்புத்துறை அடிபடுவதைப் பார்க்க முடிகிறது. இதற்குக் காரணம், டெலிகாம் நிறுவனங்களையும் தொலைத்தொடர்பு அமைச்சகத்தையும் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கடுமையாகச் சாடியதுதான். கடந்த அக்டோபர் மாதம், டெலிகாம் நிறுவனங்களுக்கும் தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கும் இடையேயான AGR தொடர்பான வழக்கில் முக்கியத் தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது, உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பு, தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு ஆதரவாக வெளிவந்தது. இதனால், கிட்டத்தட்ட 92,000 கோடி ரூபாய் வரையிலான AGR பாக்கித் தொகையை அரசுக்கு கட்டவேண்டிய நெருக்கடியான சூழலில் சிக்கிய இந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள். ஏற்கெனவே நஷ்டத்திலிருந்த வோடஃபோன்- ஐடியா, ஏர்டெல், டாடா டெலிகாம் நிறுவனங்கள் இதைக் கட்டவில்லை.

அதென்ன AGR தொகை எனக் கேட்கிறீர்களா? கீழ்காணும் கட்டுரையைப் படியுங்கள்.

இப்படியான சூழலில்தான், கால அவகாசத்தை அதிகரிக்க வேண்டும் என்ற டெலிகாம் நிறுவனங்களின் முறையீட்டை விசாரிப்பதற்கு கூடியது, நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு. இந்த அமர்வுதான், இந்த விவகாரம் கையாளும் விதம்குறித்து கடும் அதிருப்தியைத் தெரிவித்தது. 'குறிப்பிட்ட தேதிக்குள் தொகையைக் கட்டவில்லை என்றாலும் நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படாது' என்ற உத்தரவைப் பிறப்பித்திருந்தது தொலைத்தொடர்பு அமைச்சகம். இந்த அறிவிப்புதான் உச்ச நீதிமன்றம் கொதித்ததற்கு முக்கியக் காரணம்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

"உத்தரவை அமல்படுத்தும் அதிகாரி, தன்னை ஒரு நீதிபதி என்றே நினைத்துவிட்டார்போல, நீதிமன்ற உத்தரவை மீறி இப்படியான அறிவிப்பை எப்படி அவரால் கொடுக்க முடியும்? இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது, இங்கு சட்டம் என ஒன்று இருக்கிறதா?" என இதுகுறித்து கோபத்துடன் பேசினார் அருண் மிஷ்ரா. தங்களது நம்பகத்தன்மையை நிரூபிக்க, உடனடியாக ஏதேனும் தொகையைக் கட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் இதற்கு விளக்கம் அளிக்க, இந்த டெலிகாம் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்களை மார்ச் 17ல் ஆஜர் ஆகும்படி உத்தரவிட்டுள்ளது. இவர்கள் கொடுக்கும் விளக்கம் சரியாக இல்லையென்றால், இந்த நிறுவனங்கள் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும்.

இந்த நெருக்கடியான சூழலில், ஏர்டெல் 10,000 கோடி ரூபாயை சில நாள்களுக்கு முன் செலுத்தியது. வோடஃபோன்-ஐடியா 2,500 கோடி ரூபாயைச் செலுத்தியிருக்கிறது. விரைவில் 1,000 கோடி ரூபாய் செலுத்தப்படும் எனத் தெரிவித்திருக்கிறது. ஆனால், மீதி இருக்கும் தொகையை எப்படி அந்த நிறுவனம் செலுத்தும் எனத் தெரியவில்லை. AGR அல்லாமல் அரசுக்குத் தரவேண்டிய பிற பாக்கித் தொகையும் வோடஃபோன் - ஐடியாவிடம் இருக்கிறது. மொத்தம் சுமார் 53,000 கோடி ரூபாய். ஏற்கெனவே ஜியோவுடனான போட்டியில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துவருகிறது வோடஃபோன்-ஐடியா நிறுவனம். இதனால் விரைவில் வோடஃபோன்-ஐடியா நிறுவனம் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இப்படி வோடஃபோன்-ஐடியா கலைக்கப்பட்டால், அது இந்தியப் பொருளாதாரத்திற்கு பெரும் பின்னடைவாகவே அமையும். மொத்தமாக வங்கிகளிடமிருந்து டெலிகாம் நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி ரூபாயைக் கடனாக வாங்கியிருக்கின்றன. இதில், வோடஃபோன் SBI வங்கியிடமிருந்து மட்டும் கடனாக 12,000 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இதுபோக, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, IndusInd, ICICI, HDFC எனப் பல வங்கிகளிடமிருந்து வோடஃபோன் கடன் வாங்கியிருக்கிறது. இதனால் வோடஃபோன்-ஐடியா திவாலானால் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை (fiscal deficit) 40 புள்ளிகள் குறையும் என்கின்றனர் வல்லுநர்கள்.

இதுமட்டுமல்ல, 37 கோடி சந்தாதாரர்களைக் கொண்ட ஒரு நிறுவனம் திவாலானால், அது பலரையும் பாதிக்கும். ஏற்கெனவே 15+ நிறுவனங்கள் இருந்த டெலிகாம் சந்தை, இன்று 4 நிறுவனங்களாகச் சுருங்கிவிட்டது (பி.எஸ்.என்.எல்-ஐ சேர்த்து). இப்போது, வோடஃபோன் - ஐடியாவும் கிளம்பிவிட்டால், இரண்டே தனியார் நிறுவனங்களின் கையில் இருக்கும் சந்தையாக தொலைத்தொடர்புச் சந்தை மாறிவிடும். இது, ஆரோக்கியமானது அல்ல. வாடிக்கையாளர்கள் இரண்டு நிறுவனங்களுள் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவர். இதனால் அந்த இரண்டு நிறுவனங்கள் சொல்வதுதான் தொலைத்தொடர்புத் துறையில் சட்டம் என ஆகிவிடும். டிராய் என்ற ஒழுங்குமுறை ஆணையம் இருக்கவேண்டிய அவசியமே இல்லாமல் போய்விடும்.

வோடஃபோன் | Vodafone
வோடஃபோன் | Vodafone

மேலும், திவாலாகும் வோடஃபோன்-ஐடியா சொத்துகளை, கடன் கொடுத்த வங்கிகள் குறைவான விலைக்கு ஏலம் விடும் சூழல் ஏற்படும். 13,500 ஊழியர்கள் வேலை இழப்பர். விற்பனையாளர்கள் போன்ற மேலும் பலர் மறைமுகமாக பாதிக்கப்படுவர். இதனால் வோடஃபோன் - ஐடியாவின் நிலை நேரடியாக இந்தியப் பொருளாதாரத்தைப் பாதிக்கும்.

இந்த நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்களும் இனி எதுவும் செய்யமுடியாது எனக் கைவிரித்துவிட்டனர்.

"இவ்வளவு பணம் இழந்துவிட்ட பிறகும் எங்களால் கூடுதல் முதலீடு செய்யமுடியாது."
வோடஃபோன் - ஐடியா தலைவர் குமாரமங்கலம் பிர்லா

வோடஃபோனின் சர்வதேச CEO-வான நிக் ரீடும், அரசு உதவி இல்லை என்றால், நிறுவனத்தைக் கலைப்பதைத் தவிர வேறு வழியில்லை என முன்பே தெரிவித்திருந்தார். இதுவரை அரசு உதவி என்று எதுவும் வந்ததாகத் தெரியவில்லை.

குமாரமங்கலம் பிர்லா
குமாரமங்கலம் பிர்லா

முன்பு சொன்னது போல இதில் பெரிய ஆதாயம் பார்க்கப்போவது ஏர்டெல்லும் ஜியோவும்தான். வோடஃபோன் - ஐடியாவின் வாடிக்கையாளர்கள், இந்த இரு நிறுவனங்களுக்கும் மாறுவார்கள். இது, ஏர்டெல்லுக்கு 60 சதவிகிதம், ஜியோவுக்கு 40 சதவிகிதம் என்ற அளவில் இருக்குமென கணிக்கப்படுகிறது. இதனால் உச்ச நீதிமன்றம் கூடிய அன்று, ஏர்டெல் பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. ஆனால், இத்தனை புதிய வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கும் கட்டமைப்பு தற்போது அவர்களிடம் இல்லை. அதனால் இதற்காக இந்த நிறுவனங்கள் கூடுதல் முதலீடு செய்யவேண்டியதாக இருக்கும். 5G ஸ்பெக்ட்ரம் வேறு விரைவில் ஏலத்திற்கு வரும் என்பதால், இரு நிறுவனங்கள் மட்டும் இருக்கும் சூழல் ஏற்பட்டால், அது எப்படியான தாக்கத்தை விட்டுச்செல்லும் என்பது தெரியவில்லை.

அரசு என்ன செய்யலாம்?

இந்த வீழ்ச்சியைத் தடுக்க அரசு சில நடவடிக்கைகளை எடுக்கலாம். ஒன்று, மொத்தமாக இந்த AGR கணக்கீட்டை மாற்றியமைப்பது. 1998ல் இதேபோன்ற ஒரு சிக்கலான சூழலில் சிக்கியது தொலைத்தொடர்புத்துறை. அரசு மட்டுமே நடத்திவந்த தொலைத்தொடர்புத்துறையில் தனியார் நிறுவனங்கள் நுழைந்த நேரம் அது. நெட்வொர்க் கட்டமைப்புகள் மற்றும் பிற தேவைகளுக்காகவும் மிகப்பெரிய முதலீட்டுடன்தான் களமிறங்கியிருந்தன தனியார் நிறுவனங்கள். அப்படி இருந்த போதும் லாபம் பார்க்கமுடியாமல் திணறின அந்த நிறுவனங்கள். காரணம், உரிமத்திற்காகப் பெறப்பட்ட தொகை. இந்தத் தொகை மிகவும் அதிகமாக இருக்க, திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

Telecommunication | தொலைத்தொடர்பு துறை
Telecommunication | தொலைத்தொடர்பு துறை

அப்போது, ஒரு வருடத்தில் எத்தனை சந்தாதாரர்களை ஒரு நிறுவனம் பெறும் என்கிற கணிப்பை வைத்து, ஒரு குறிப்பிட்ட தொகைக்கு உரிமை கொடுக்கப்பட்டது. இந்த முறைதான் சிக்கலுக்குக் காரணம். கணிக்கப்பட்டதைவிட குறைவான சந்தாதாரர்களையே பெற்றன இந்த நிறுவனங்கள். அதிலும் சந்தாதாரர்கள் பலரும் சேவைகளைப் பயன்படுத்தவும் இல்லை. இதனால் ARPU (Average Revenue per user) எனப்படும் ஒரு சந்தாதாரரிடமிருந்து வரும் சராசரி வருமானம் மிகவும் குறைவாக இருந்தது.

இதனால் மிகவும் மோசமான சூழலிலிருந்தது தொலைத்தொடர்புத்துறை. அப்போது, தவற்றை ஒப்புக்கொண்டு அரசே கொள்கையை மாற்றியமைத்தது. அதன்படிதான் இப்போதைய வருவாய் பங்கீட்டு முறை நடைமுறைக்கு வந்தது. இதனால் டெலிகாம் நிறுவனங்கள் பயனடைந்தன. புதிய நடைமுறை கொண்டுவந்த மாற்றத்தை தெளிவாகப் பார்க்கமுடிந்தது. இதேபோன்ற ஒரு சிக்கல்தான் தற்போதும் இருக்கிறது. இதனால் அரசே இந்த வருவாய் பங்கீட்டில் இருக்கும் சிக்கல்களை உணர்ந்து, AGR கணக்கீட்டை மாற்றியமைக்கலாம்.

மற்றொரு தீர்வாக பல வல்லுநர்களும் அரசே வோடஃபோன்-ஐடியா நிறுவனத்தை வாங்கவேண்டும் என்கின்றனர். தற்போது வோடஃபோன் நிறுவனம் அரசுக்குத் தரவேண்டிய பாக்கித்தொகையான 50,000 கோடி ரூபாய்க்குப் பதிலாக, வோடஃபோன் - ஐடியாவின் 90 சதவிகித பங்குகளை அரசு வாங்கலாம். அதை அப்படியே பிஎஸ்என்எல்-லிடம் கொடுக்கலாம். இதனால் என்ன பயன் எனக் கேட்கிறீர்களா?

இப்படிச் செய்வதன்மூலம் 37 கோடி வாடிக்கையாளர்களைத் தன்வசப்படுத்தும் பிஎஸ்என்எல். இதுபோக, துவண்டு போயிருக்கும் பிஎஸ்என்எல்-லுக்கு வோடஃபோன் - ஐடியாவின் ஸ்பெக்ட்ரம் மற்றும் நெட்வொர்க் கட்டமைப்பும் கிடைக்கும். டிராயின் செப்டம்பர் அறிக்கைப்படி, இந்தியாவின் மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை சுமார் 117 கோடி. இதில், ஏர்டெல்லிடம் 32.5 கோடி சந்தாதாரர்களும், ஜியோவிடம் 35.5 கோடி சந்தாதாரர்களும் உள்ளனர். வோடஃபோன்-ஐடியா, பிஎஸ்என்எல்-லுடன் இணைந்தால், சுமார் 50 கோடி வாடிக்கையாளர்களுடன் மிகப்பெரிய நிறுவனமாக மாறும்.

BSNL
BSNL

இது, ஊழியர்களின் வேலையைக் காப்பாற்றும், வங்கிகளின் இழப்பைத் தடுக்கும். பரபரவென வளர்ந்துவரும் தொலைத்தொடர்புத் துறையைத் தடம்புரள விடாமல் தடுக்கும். மொத்தத் துறையும் இரு நிறுவனங்களின் கைகளில் சிக்குவதைத் தடுக்கும். இதுமட்டுமல்லாமல், இன்றைய சூழலில் வேறு எந்த வெளிநாட்டு நிறுவனமும் இந்திய தொலைத்தொடர்புத் துறையில் முதலீடு செய்யத் தயாராக இல்லை. மற்ற இந்திய நிறுவனங்களிடமும் கூடுதலாக முதலீடு செய்ய பணம் இல்லை. இதனால் அரசால் மட்டுமே இவ்வளவு பெரிய முதலீட்டைச் செய்யமுடியும்.

ஆனால், BSNL, MTNL என இருக்கும் இரு அரசு நிறுவனங்களே மிகவும் பரிதாப நிலையில்தான் இருக்கின்றன. அதை லாபகரமாக நடத்துவதிலேயே பல சிக்கல்கள் இருந்துவருகிறது. இந்நிலையில் இவற்றுடன் வோடஃபோனையும் இணைப்பது எப்படியான முடிவுகளை தரும் எனத் தெரியவில்லை.

இதுகுறித்து இந்திய செல்லுலார் ஆபரேட்டர்ஸ் சங்கத்தின் (COAI) தலைமை இயக்குநர் ராஜன் மாத்தியூஸிடம் கேட்டபோது, "முதலில் வோடஃபோன்-ஐடியா வெளியேறும் என்ற தீர்மானமான முடிவுக்கே வந்துவிட முடியாது. அப்படி வெளியேறும் சூழல் வந்தால் அது தொலைத்தொடர்பு துறைக்கு பெரிய இழப்பாகத்தான் இருக்கும். BSNL நிறுவனத்துடன் இணைப்பதும் அபாயகரமானதுதான். அரசுதான் வேறு ஒரு தீர்வை இதற்கு தர வேண்டும்" என்று கூறினார்.

இதனால் இனிவரும் நாள்களில் தொலைத்தொடர்புத் துறை தொடர்பான மேலும் பல முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். இந்த சில நாள்களில் எடுக்கப்படும் முடிவுகள்தாம், மொத்த தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியையும் நிர்ணயிக்கும்.