“சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் தென் மாவட்டங்கள் சாதிக்கும்!” அமைச்சர் மனோ தங்கராஜ் நம்பிக்கை

சிறப்புப் பேட்டி
தென் மாவட்டங்களில் பெரிய தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கைகூடாமலே உள்ளன. இந்த நிலையில், தென் மாவட்டங்களை மையமாகக் கொண்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை மேம்படுத்தும் பணிகளை மும்முரமாக செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறார் தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ். இதன் முதல்கட்டமாக, தென் மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்குகளைத் தொடர்ந்து நடத்திவரும் அமைச்சர் நமக்கு அளித்த பேட்டி இனி...

வரும் மார்ச் மாதம் சென்னையில் மிகப் பெரிய ஐ.டி மாநாடு நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறீர்களே...
‘‘ஐ.டி துறையில் தமிழகத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல உலகத் தரம் வாய்ந்த மாநாடு வரும் மார்ச் 23 முதல் 25-ம் தேதி வரை சென்னை டிரேட் சென்டரில் நடத்துகிறோம். சிறு நிறுவனங்கள் முதல் பெரும் நிறுவனங்கள் வரை இதில் கலந்துகொண்டு தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்த இருக்கின்றன. உலகத் தரம் வாய்ந்த 250 பேச்சாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் பேச உள்ளனர். மூன்று நாள் நடக்கும் இந்த மாநாட்டில் 10,000 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். அதில் தொழில் முதலீட்டாளர்கள், துணிகர முதலீட்டாளர்கள் (venture capital) கலந்துகொள்ள உள்ளனர். புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு ஆக்கபூர்வமான உதவிகள் செய்வதற்கு ‘தமிழ்நாடு டெக்னாலஜி ஹப்’ என்கிற திட்டம் கொண்டுவந்துள்ளோம். நம் இளைஞர்களுக்கு உதவ இஸ்ரேல், பிரான்ஸ், பின்லாந்து, இங்கிலாந்து நாடுகளிடம் பேசியுள்ளோம்.’’
தமிழகத்தில் ஐ.டி துறை வளர்ச்சி காண்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?
“இன்றைக்குத் தகவல் தொழில்நுட்பத்தில் பன்னாட்டு அளவில் போட்டியிடும் திறன் உள்ள இளைஞர்களை நாம் உருவாக்க வேண்டும். அதற்காக இளைஞர்களிடம் திறன்களை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் இப்போது சுமார் 9 லட்சம் பேர் ஐ.டி துறையில் வேலை செய்கிறார்கள். 2030-ம் ஆண்டில் இது 25 லட்சமாக உயர வேண்டும். அதில் தென் மாவட்டத்தின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும். அதற்காகத் தான் ஐ.சி.டி அகாடமி (ICT Academy) மூலம் திறன் வளர்க்கும் தொழில் பயிற்சிகளைக் கொடுத்து வருகிறோம்.
நம்மிடம் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் இருந்தாலும் ஆழ்நிலைத் தொழில்நுட்பம் (Deep technology) பற்றிய அறிவு குறைவுதான். இந்தத் திறன் இடைவெளியைக் (Skill gap) முழுமையாக்க ஐ.சி.டி அகாடமி மூலம் தமிழ்நாட்டின் அனைத்துக் கல்லூரிகளிலும் உள்ள ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறோம். கடந்த ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு மட்டும் பயிற்சி அளித்தோம். இந்த ஆண்டு அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி மாணவர் களுக்கும், பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப் போகிறோம். படிக்கும் மாணவர்கள் மட்டுமன்றி, வேலை இல்லாத இளைஞர்களுக்கும் பயிற்சி அளிக்கிறோம்.
ஐ.டி துறையில் தமிழகம் சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தத்தில் ரூ.1,76,000 கோடி மதிப்பிலான மென்பொருள்களை ஏற்றுமதி செய்து, நாட்டில் மூன்றாவது இடத்தில் நம் மாநிலம் இருக்கிறது.
சாஃப்ட்வேர் ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது எனில், அதற்கான வேலைவாய்ப்பும் அதிகரித்திருக்கிறது என்றுதான் அர்த்தம். அமேசான், ஜூம் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் நம் மாநிலத்தில் புதிதாக அலுவலகங்கள் தொடங்கி யுள்ளன. இதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளன. மேலும், நிறைய சாஃப்ட்வேர் நிறுவனங் கள் இங்கு அலுவலகங்களைத் தொடங்கியுள்ளன.’’
தென் மாவட்டங்களில் ஐ.டி துறை வளர்ச்சி எப்படி இருக்கிறது?
“தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தென் மாவட்டங் களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். நாகர்கோவிலில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்காக நிலம் கண்டு பிடிப்பதில் கொஞ்சம் சிரமம் இருந்தது. இப்போது நிலம் கண்டுபிடிக்கப்பட்டு கைமாறு வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற் கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. முதல் கட்டமாக ஒரு லட்சம் சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க உள்ளோம். தொடர்ச்சியாக அதை விரிவாக்கம் செய்யவும் உள்ளோம்.
சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் இந்திய அளவில் சாதாரணமாக 7% - 8% வளர்ச்சிதான் தமிழ்நாடு இருக்கும். நாம் இப்போது 18% வளர்ச்சியில் இருக்கிறோம். இந்த வளர்ச்சியில் தென் மாவட்டங்களில் மதுரையில் மட்டும் 30% வளர்ச்சியை எட்டியிருப்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம். வருங்காலங்களில் சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் தென் மாவட் டங்கள் முக்கியமான இடத்தைப் பிடிக்கும்.’’

அரசுத் துறை அலுவலகங்களில் கணினிமயமாக்கல் இன்னும் சரியாக நடக்கவில்லையே..!
“இதுவரை அரசுத் துறை களில் கணினிமயமாக்கும் பணி ஒழுங்காக நடக்க வில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் எல்லா மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகங்களில் இ-ஆபீஸ் (E-Office) ஏற்படுத்த வேண்டும் எனக் கடந்த ஜூன் 30-ம் தேதி அறிவித்தோம். அதற்காக தீவிரமாக வேலை பார்த்து வருகிறோம். இ-ஆபீஸ் வரும்போது பல ஆயிரம் டன் காகிதத்தை மிச்சப்படுத்த முடியும். மனிதர்கள் செய்யும் வேலை குறையும். அதிகாரிகள் எங்கிருந்தாலும் ஃபைலைப் பார்க்க முடியும். முக்கியமான ஃபைல்கள் காணாமல் போவது போன்ற பிரச்னை வராது. மனு கொடுத்தவர்களே மனு எந்த நிலையில் இருக் கிறது என்று டிராக் செய்ய முடியும். காலதாமதம் குறையும்.
அதுபோல, இ-சேவையில் முன்பு சுமார் 99 சேவைகள் இருந்தன. அதிலும் நிறைய புகார்கள் இருந்தன. அவற்றை நன்கு முறைப்படுத்தி இப்போது 235 சேவைகள் வழங்கப்படுகின்றன. சர்வர் கெப்பாசிட்டியை வெகுவாக அதிகரித்திருக்கிறோம். இ-சேவை 2.0 மூலம் அதிநவீனப்படுத்தும் பணிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ‘இ-சேவை 2.0’ வரும்போது அரசினுடைய சேவைகள் எல்லாமே ஆன்லைன் மூலம் கிடைக்கும்.
அரசிடம் என்னென்ன திட்டங்கள் உள்ளன என அறிந்துகொள்ளவும், அந்தத் திட்டங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என மக்கள் தெரிந்துகொள்ளவும் நெல்லையில் ‘சாட் பாட்’ (Chatbot) ஆப்ஸ் ஒன்றை வெளியிடப்போகிறோம். விரைவில் இதைத் தமிழ்நாடு முழுக்க கொண்டு வர உள்ளோம். இதை இ-சேவையில் இணைக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். இ-சேவையின் அடுத்த கட்டத்தில் ‘சிட்டிசன்ஸ் போர்ட்டல்’ வர உள்ளது. அதன் மூலம் யார் வேண்டுமானாலும் தங்களுக்கு வேண்டிய ஆவணங்களை மொபைல் போன் மூலம் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.
தரவுகள் அடிப்படையிலான அரசு (Database governance) என்ற திட்டத்தைக் கொண்டு வருகிறோம். எல்லாவற்றுக்குமே நமக்குத் தரவுகள் வேண்டும். ஒரு திட்டம் கொண்டு வருகிறோம் எனில், அந்தத் திட்டத்தின் தேவை என்ன, எவ்வளவு பேர் அதற்கான தேவையோடு இருக்கிறார்கள், எப்படிப்பட்ட மக்களுக்கு அந்தத் திட்டம் போய்ச் சேர வேண்டும் என்பதை அறிய டேட்டா வேண்டும். தரவுகள் இல்லாமல் திட்டமிடுவதுதான் நிறைய பாதிப்பு களுக்குக் காரணம். தரவுகள் இருந்தால் உண்மையான பயனாளிகள் யார் எனத் தெரியவரும். அதன்மூலம் உண்மையான பயனாளிகள் விடுபடாமல் இருப்பார்கள். தவறான பயனாளிகள் பயன் பெறாமல் தவிர்க்கலாம். அரசின் திட்டங்கள் மக்களுக்குச் சென்று சேர்ந்திருக்கிறதா என்பதையும் கண்காணிக்க முடியும். அதனால்தான் தரவுகளின் அடிப்படை யிலான அரசு எனச் சொல்லி மாநிலத் தரவுத் தளம் ஏற்படுத்த உள்ளோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிற 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் குறைந்தபட்சம் 10% ஐ.டி செக்டார் மூலமாக நிறைவேற்றிக் காட்டுவோம். 2030-ல் 100 பில்லியன் இலக்கை ஐ.டி துறை அடைய வேண்டும் என்ற இலக்கை முன்வைத்து பணி செய்துவருகிறோம்” என்று பேசி முடித்தார் அமைச்சர் மனோ தங்கராஜ்!