ஜியோவின் அதிரடி வருகைக்குப் பின், தொலைத்தொடர்புத் துறைகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இலவச அழைப்புகள், குறைந்த விலையில் டேட்டா என விளக்கு, பூச்சிகளை ஈர்ப்பதைப் போல் மக்களை ஈர்த்தது ஜியோ. இதனால் வேறு வழி தெரியாமல் மற்ற நிறுவனங்களும் இறங்கிவந்து விலைகளைக் குறைத்தன. இப்படியான மாற்றங்கள்தான் உலக அளவில் குறைந்த விலையில் டேட்டா கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்றியது. ஆனால், இந்த நிலை மீண்டும் அப்படியே தலைகீழாக மாற உள்ளது.
ஜியோ ஏற்படுத்திய இந்த அழுத்தத்துடன், சமீபத்தில் வெளியான Adjusted Gross Revenue (AGR) குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் சேர, பெரும் நெருக்கடிக்கு உள்ளாகின தொலைத்தொடர்பு நிறுவனங்கள். இப்போது லாபம்பார்க்கும் ஒரே டெலிகாம் நிறுவனமாக ஜியோ இருக்கிறது. மற்ற நிறுவனங்கள் அனைத்துமே பெரும் நஷ்டத்தைச் சந்தித்துவருகின்றன. வோடஃபோன், இந்தியாவை விட்டு வெளியே செல்லலாம் என்னும் அளவுக்கு பிரச்னை பெரிதானது.
இந்த AGR தீர்ப்பு மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பெரும் நஷ்டம் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள, கீழே உள்ள கட்டுரையைப் படியுங்கள்!
இதனால் தொலைத்தொடர்புத் துறையை மீண்டும் சீர்படுத்த சேவை விலைகளை உயர்த்தலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு ஜியோவும் ஒத்துழைப்பு தருவதாகத் தெரிவித்தது. அதன்படி, வோடஃபோன், ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது புது விலைப்பட்டியல்களைத் தற்போது அறிவித்திருக்கின்றன. இந்த விலையேற்றங்கள் 15% முதல் 47% வரை இருக்கிறது.
ஏர்டெல்லைப் பொறுத்த வரை விலைப்பட்டியலில் மாற்றங்கள் நாளொன்றுக்கு 50 பைசாவிலிருந்து 2.85 ரூபாய் வரையில் இருக்கிறது. மாதம், குறைந்தபட்சம் கட்டும் தொகை 35 ரூபாயிலிருந்து 49 ரூபாயாக உயர்ந்துள்ளது.

முன்புபோல மாதத் திட்டங்களுடன் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம், wynk மியூசிக் போன்ற சேவைகளும் ஏர்டெலில் கிடைக்கும்.
வோடஃபோன், ஐடியாவின் புதிய விலைகளும் கிட்டத்தட்ட ஏர்டெல் விலைகளைப் போலவேதான் இருக்கின்றன. ஆனால், பிற நிறுவன அழைப்புகளுக்கு (off-net calls) கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. ஏர்டெல், வோடஃபோனின் இந்த மாற்றங்கள், நாளை (டிசம்பர் 3) முதல் அமலுக்கு வரும்.

"ஜியோவின் 'All-in-one' திட்டங்களின் விலை 40% அதிகமாக இருக்கும். ஆனால், வாடிக்கையாளர்களுக்கு 300% அதிக பலன்கள் கிடைக்கும்" என ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜியோவிலும் இத்தனை நிமிடங்கள்தான் பிற நிறுவன அழைப்புகள் பேசமுடியும் என்ற கட்டுப்பாடு இருக்கும். அதன்பின், கூடுதலாக ரீசார்ஜ் செய்யவேண்டியதாக இருக்கும். ஜியோவின் விலையேற்றங்கள் டிசம்பர் 6 முதல் அமலுக்கு வரும்.