இந்தியாவில் அண்மைக்காலமாக தினமும் எதாவது ஒரு செய்தி வந்துகொண்டே இருக்கும் துறை என்றால் அது தொலைத்தொடர்பு துறைதான். `இந்தியாவைவிட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை' என்ற வோடஃபோன் தலைவரின் முடிவு, RCom தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் அனில் அம்பானி, சம்பளம் கொடுக்கப்படாமல் தவிக்கும் பி.எஸ்.என்.எல் எனப் பிரச்னைகளால் சூழப்பட்டிருக்கிறது தொலைத்தொடர்பு துறை. இது அனைத்துக்கும் ஆரம்பப்புள்ளி எது என்று தேடினால் அனைத்துமே ஜியோவின் வருகையைத்தான் கைகாட்டுகின்றன.

இலவச அழைப்புகள், குறைந்த விலையில் டேட்டா என சுமார் மூன்று ஆண்டுகளுக்குமுன் இந்திய டெலிகாம் சந்தையில் அதிரடியாக நுழைந்தது ரிலையன்ஸ் ஜியோ. ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ள வேறுவழி தெரியாமல் மற்ற நிறுவனங்களும் தங்களது சேவையின் விலைகளைக் குறைத்தன. இந்த விலைக் குறைப்பு இந்த நிறுவனங்களுக்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்திவந்தது. ஏர்செல் போன்ற சில நிறுவனங்கள் காணாமலேயே போயின. வோடஃபோன், ஐடியா ஒரே நிறுவனமாக இணைந்து ஜியோவின் அழுத்தத்தை எதிர்கொண்டது. இருந்தும் தொடர்ந்து வாடிக்கையாளர்களை இந்த நிறுவனங்கள் இழந்துவந்தன.
இந்தச் சிக்கல் போதாது என்று சமீபத்தில் வெளியான Adjusted Gross Revenue (AGR) குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த நிறுவனங்களுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அதென்ன AGR?
இந்த AGR தொகை என்பது ஸ்பெக்ட்ரம் பயன்பாடு மற்றும் உரிமத்துக்காக டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்கு தரவேண்டிய வருவாய்ப் பங்கீடு. இதை எப்படி வசூலிக்க வேண்டும் என்பதில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. தொலைத்தொடர்பு அமைச்சகம் டெலிகாம் இயக்கம் அல்லாத மற்ற வருவாயிலும் (சொத்துகள், முதலீடுகள், வரிகள்) டெலிகாம் நிறுவனம் பங்கு தரவேண்டும் எனக் கேட்டது. ஆனால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வெறும் டெலிகாம் இயக்கத்தில் வரும் வருவாயின் பங்கை மட்டும்தான் தரமுடியும் என்றது. அக்டோபர் 24-ம் தேதி இந்த வழக்கில் தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியது உச்சநீதிமன்றம்.
இதனால் கிட்டத்தட்ட 92,000 கோடி ரூபாய் வரையிலான பாக்கித்தொகையை அரசுக்கு மூன்று மாதங்களுக்குள் கட்டவேண்டிய நெருக்கடியான சூழலில் சிக்கின இந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள். ஏற்கெனவே இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் பெரும் நஷ்டத்தை அடைந்திருக்கின்றன வோடஃபோன்-ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள். அந்த காலாண்டில் வோடஃபோன் நிறுவனம் மட்டும் 50,921 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்திருக்கிறது. இந்திய வரலாற்றில் எந்த ஒரு நிறுவனமும் ஒரு காலாண்டில் இவ்வளவு நஷ்டத்தை அடைந்ததில்லை.

இதனால் வேறு வழியில்லாமல் தங்கள் சேவையின் விலைகளை உயர்த்தப்போவதாக அறிவித்திருக்கின்றன. இந்த விலை உயர்வை டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளது வோடஃபோன்-ஐடியா. இதனால் இப்போது கட்டுவதைவிட அதிக தொகையை (10%-30%) அடுத்த மாதம் முதல் வாடிக்கையாளர்கள் கட்டவேண்டியதாக இருக்கும்.
ஏர்டெல் விலை உயர்வு எப்போது அமலுக்கு வரும் என்று இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், வோடஃபோன் அளவுக்கு விலை உயர்வு கடுமையாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஜியோவும் ஒத்துழைத்தால்தான் இந்த விலை உயர்வால் இந்த நிறுவனங்கள் பயன்பெறும். இந்த விண்ணப்பத்துக்கு ஜியோ நிறுவனம் பணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், டெலிகாம் துறையில் இருக்கும் அழுத்தத்தை உணர்ந்து நேற்று மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. மேலே குறிப்பிட்ட பெரும் தொகையை செலுத்த இரண்டு வருட காலஅவகாசம் வழங்குவதாக அறிவித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் பேசுகையில், ``பொருளாதார சிக்கலால் எந்த ஒரு தொலைத்தொடர்பு நிறுவனமும் மூடப்பட்டுவிடக் கூடாது" என்றார்.
இப்படி ஏறப்போகும் டெலிகாம் விலைகளால் டிக்-டாக், ப்ரைம் வீடியோ போன்ற டிஜிட்டல் நிறுவனங்களுக்கு பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.