உள்ளூரில் உற்பத்தி... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி! ‘ஒளிரும்’ சென்னைப் பெண் ஷர்மிளா...!

பிசினஸ்
வீடுகள் முதல் தெருக்கள் வரை எல்லா இடங்களிலும் வெளிச்சம் பாய்ச்சும் மின் விளக்குகளின் பயன்பாடு அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், நம் நாட்டுக்கான பயன்பாட்டுத் தேவையில் 90% மின் விளக்குகள் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதியாகின்றன என்பது வருத்தமான உண்மை. இந்தியாவில் இந்தத் துறையில் மிகக் குறைவான அளவிலேயே இருக்கும் உற்பத்தி நிறுவனங்களில், சென்னையைச் சேர்ந்த ‘கே-லைட் இண்டஸ்ட்ரீஸ்’ (K-Lite Industries) நிறுவனம் முக்கியமானது. பல்வேறு சவாலான சூழல்களையும் கடந்து, 40 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளூர் விற்பனை முதல் வெளிநாட்டு ஏற்றுமதி வரை அசத்திவருகிறது இந்த நிறுவனம்.
இதன் நிறுவனரான திலீப் கும்பட், 4,000 ரூபாய் முதலீட்டில் வெறும் நான்கு ஊழியர்களுடன் தொடங்கிய இந்த நிறுவனம், தற்போது ஆண்டுக்குப் பல நூறு கோடிக்கும் அதிகமான வர்த்தகத்துடன் வீறுநடை போடுகிறது.
திலீப்பின் நான்கு மகள்களும் தற்போது வெவ்வேறு துறைகளில் தொழில்முனைவோர் களாகச் செயல்படுகின்றனர். இரண்டாவது மகள் ஷர்மிளா கும்பட், ‘கே-லைட்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக மொத்த நிர்வாகப் பொறுப்புகளையும் கவனித்து வருகிறார். சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள இந்த நிறுவனத்தின் உற்பத்திக்கூடத்தில் ஷர்மிளாவைச் சந்தித்தோம். தனக்கென தனி அறையைப் பயன்படுத்தாமல், ஊழியர்களுடன் ஊழியராகத் திறந்தவெளி இருக்கையில் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தவர், நிறுவனத்தின் வெற்றிக்கதையை உற்சாகத்துடன் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

“என் பெற்றோர் இருவரும் படித்தவர்கள். எனவே, படிப்பின் அவசியம் புரிந்து நான்கு மகள் களையும் நன்கு படிக்க வைத்தனர். அப்பாவுக்கு பிசினஸ்தான் முதல் குடும்பம். அதற்காகத் தினமும் 18 மணி நேரம் வரை உழைப்பார். என் சிறு வயதில் ஓய்வுநேரங்களில் அப்பாவுடன் இந்த நிறுவனத்தில் தான் உலவிக்கொண்டிருந்தேன்.
பள்ளிப் படிப்பு முடித்ததும் ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் படிக்க ஆசைப்பட்டேன். அதற்கான வாய்ப்பு இந்தியாவில் அமையாததால், ப்ளஸ் டூ முடித்ததுமே கல்லூரிப் படிப்பில் சேராமல், 17 வயதிலேயே நானும் பிசினஸில் இறங்கினேன். ஆரம்பத்திலிருந்தே லைட் தயாரிப்புடன், மெட்டல் கிராஃப்ட் நிறுவனத்தையும் அப்பா நடத்திவந்தார்.
மெட்டல் கிராஃப்ட் தொழிலில் முக்கியமான பொறுப்பில் இருந்த பணியாளர் ஒருவர் பெரிய அளவில் முறைகேட்டில் ஈடுபட்டதால், நிறுவனத்துக்குப் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது. அது என்னை மிகவும் பாதித்தது. அதனால், இரண்டு நிறுவனங்களின் கண்காணிப்புப் பணிகளை மேலோட்டமாகக் கவனித்துவந்த நான், அதன் பிறகு, என் 18 வயதிலேயே மெட்டல் கிராஃப்ட் நிறுவனத்தின் இயக்குநராகச் சேர்ந்தேன். பணிகள் சரியாக நடந்தாலும் எல்லா விஷயங்களிலும் நம் பார்வை எப்போதும் இருக்க வேண்டும்; வேலை, குடும்ப சென்டிமென்ட் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து குழப்பிக்கொள்ளக் கூடாது என்பதை அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்டேன்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அலுவலகங்கள், வீடுகள், முக்கியமான கட்டடங்கள் உட்பட பல தரப் பினருக்கும் வித்தியாசமான, வெளிநாட்டு கட்டடக்கலைக்கு இணையான டிசைன்களில் மெட்டலால் ஆன கதவு, கேட் போன்ற பாகங்களைத் தயாரித்து வழங்கினோம். இதனால், அந்த நிறுவனம் வேகமாக வளர்ந்தது.
1990-களில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் பல்வேறு புனரமைப்புப் பணிகள் நடந்தன. அந்த வீட்டில் காம்பவுண்ட் கேட், கதவு போன்ற பல்வேறு கட்டுமானப் பணிகளையும் செய்துகொடுத்தோம். இதுபோல, ஏராளமான வி.வி.ஐ.பி-களின் வசிப்பிடங்களுக்கும் கட்டுமானப் பணிகளைச் செய்துகொடுத்தோம். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம், இளம் பெண் தொழில்முனைவோருக்கான விருதையும் பெற்றேன்.
ஏழு வருடங்கள் அப்பாவின் பிசினஸைக் கவனித்துக் கொண்ட நிலையில், அதன் பின்னர் திருமணமாகி அமெரிக்காவில் குடியேறினேன். அடுத்தடுத்து மூன்று குழந்தைகள். நான் ஆசைப்பட்ட ஃபேஷன் டிசைனிங் கோர்ஸை அந்த நாட்டில் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதே நேரம், பிரின்டிங் தேவைகளுக்கான பல்வேறு வகையான இயந்திரங்களை, சில தயாரிப்பு நிறுவனங் களிடமிருந்து வாங்கி பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யும் டிரேடிங் தொழிலையும் செய்தேன்.
ஏற்கெனவே, பிசினஸில் முன் அனுபவம் இருந்ததால், சரியான திட்டமிடலுடன் அமெரிக்கா விலும் என் தொழிலைச் சிறப்பாக நடந்த முடிந்ததுடன், வெளிநாடுகளுடனான வர்த்தக விஷயங்கள் குறித்தும் நன்றாகத் தெரிந்துகொண்டேன். எட்டு ஆண்டுகள் அந்த நிறுவனத்தை நடத்திய நிலையில், அதை விற்றுவிட்டு, குடும்பத்துடன் 2012-ல் இந்தியா வந்தேன்” என்ற ஷர்மிளாவுக்கு, அதன் பிறகு தன் அப்பாவின் மின் விளக்கு உற்பத்தி நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக உயர்பொறுப்பில் இருக்கிறார்.
“அமெரிக்காவுக்குச் செல்லும் முன், நான் நிர்வகித்த மெட்டல் கிராஃப்ட் தொழிலை, நான் மீண்டும் சென்னை வந்தபோது என் அக்கா இன்னும் சிறப்பாகவே நடத்தி வந்தார். அப்பா நிர்வகித்து வந்த லைட் தயாரிப்பு தொழிலில் எனக்குப் பெரிதாக முன்அனுபவம் இல்லாவிட்டாலும், எல்லா நிர்வாக வேலைகளையும் முழுமையாகத் தெரிந்து கொண்டேன். அப்போதே எங்கள் ‘கே லைட்’ நிறுவனம் இந்தியாவில் பெரிய வளர்ச்சி யைப் பெற்றிருந்த நிலையில், அதைவிட இன்னும் சிறப்பான வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும் எனக்கு இருந்தது. அதன்படி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக வாய்ப்புகளை அதிக அளவில் பிடித்தோம். தயாரிப்புப் பொருள் களைக் கடைகளுக்கான நேரடி விற்பனைக்கு எப்போதும் நாங்கள் அனுப்புவதில்லை. பெரிய ஆர்டர் களைப் பிடித்து, அவர்களுக்கான மின் விளக்குகளைத் தயாரிக்கவே கவனம் செலுத்துகிறோம்.
இந்தியாவில் ரயில்வே துறைக்கு 40 ஆண்டுகளாக மின் விளக்குகள் சப்ளை செய்கிறோம். ரயில்களுக்கு உள்ளேயும், இந்தியாவிலுள்ள முக்கியமான பல்வேறு ரயில் நிலையங்களிலும், 60-க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள், முக்கியமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தெரு விளக்குகள், பூங்காக்கள், வழிபாட்டுத் தலங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் உட்பட பல்வேறு ஆர்டர்களுக்கான பலவிதமான விளக்குகளையும் தயாரிக்கிறோம். இலங்கை மெட்ரோ ரயில் நிலையம் உட்பட வெளிநாட்டு அரசு ஆர்டர்களும் எங்கள் வசம் இருக்கின்றன. முழுக்கவே இந்தியாவிலேயேதான் எங்களுடைய தயாரிப்புகளை மேற்கொள்கிறோம். தரத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதால், ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் எங்களைத் தேடி நம்பிக்கையுடன் வருகின்றன” என்றார் மகிழ்ச்சியுடன்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடிவங்களில் வெறும் எல்.டி.டி வகை மின் விளக்குகள் மட்டுமே இவரின் நிறுவனத்தில் தயாரிக்கப் படுகின்றன. இந்த நிறுவனத்தில் தான், நாட்டிலேயே அதிக அளவிலான டிசைன்களில் மின் விளக்கு உற்பத்தி நடைபெறு கின்றன. 12 நாடுகளுக்கு ஏற்றுமதி நடக்கும் நிலையில், 750-க்கும் அதிகமான பணியாளர்களுக்கு ஊதியம் கொடுப்பதுடன், ஆண்டுக்குப் பல நூறு கோடி வர்த்தகமும் இந்த நிறுவனத்தில் நடக்கிறது.
“இந்தத் தொழிலுக்கான மூலப்பொருள்கள் நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. வெளிநாடுகளிலிருந்து தான் வரவழைக்கிறோம். மூலப்பொருள்கள் பற்றாக்குறை, தயாரிப்பு செலவு கூடுவது, உற்பத்திக்கேற்ப உரிய விலை நிர்ணயம் செய்ய முடியாதது போன்ற பல காரணங்களால் இந்தத் துறையிலிருந்த பல நிறுவனங்கள் நஷ்டத்தைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து மூடப்படுகின்றன. எனவே, இந்தியாவுக்கான தேவையில் 90 சதவிகிதத்துக்கு அதிகமான விளக்குகள் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதியாகின்றன.
போட்டி இருந்தால்தான் ஆரோக்கியமான வளர்ச்சியும் ஊக்கமும் கிடைக்கும். ஆனால், மின் விளக்குகளுக்கான தயாரிப்பு நம் நாட்டில் மிகக் குறைவான அளவிலேயே நடக்கிறது. எந்தப் பயன்பாட்டுப் பொருளாக இருந்தாலும், முடிந்த வரையில் நம் நாட்டில் தயாராகும் பொருள்களையே பயன்படுத்த ஆரம்பித்தால்தான் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து, மக்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு கொடுக்க முடியும். அந்த மாற்றம் மக்களின் முடிவில்தான் இருக்கிறது. எல்லாத் துறைகளிலும் உள்நாட்டு உற்பத்தி பெருமளவில் உயர்ந்தால்தான், அனைத்துத் தரப்பினருக்கும் சரிவிகித வளர்ச்சி கிடைக்கும்’’ என்கிற கோரிக்கையுடன் பேசி முடித்தார் ஷர்மிளா.