மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கரூர் கிரவுன் சோடா... தலைமுறைகளைக் கடந்த வெற்றி... சக்சஸ் சீக்ரெட்..!

பாலக்குமரன், தட்சணாமூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
News
பாலக்குமரன், தட்சணாமூர்த்தி

நேட்டிவ் பிராண்ட் - 13

இப்போதைய போட்டி நிறைந்த உலகத்தில் ஒரு தொழிலை 10 வருடங்கள் தொடர்ந்து நடத்துவதே குதிரைக்கொம்பாக இருக்கிறது. ஆனால், குடிசைத் தொழிலாகக் கரூரில் தொடங்கி, 101 வருடங்களாகத் தொடர்ந்து மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.

கரூர் பரபரப்பான வியாபார ஸ்தலமாக விளங்குகிற ஜவஹர் பஜாரில் இயங்கி வருகிறது, கிரவுன் என்ற பெயரிலான அந்த சோடா கம்பெனி. சபாபதி ஆரம்பித்த இந்த நிறுவனத்தை, அவரின் மகன் தட்சணா மூர்த்தியை அடுத்து, இப்போது பேரன் பாலக்குமரன் சிறப்பாக நடத்தி வருகிறார். சோடா தயாரிப்பு, சர்பத் விற்பனை என்று பரபரப்பாக இருந்த அந்தக் கடைக்கு ஒரு விசிட் அடித்தோம். முதலில் நம்மிடம் பேசினார் பாலக்குமரனின் தந்தையான தட்சணாமூர்த்தி.

பாலக்குமரன், தட்சணாமூர்த்தி
பாலக்குமரன், தட்சணாமூர்த்தி

“எங்க அப்பா கே.பி.சபாபதி பிள்ளை ஆரம்பிச்ச கம்பெனி அது. இதே பகுதி அப்போ சந்தைப்பேட்டைனு அழைக்கப்பட்டுச்சு. எங்கப்பா நிறைய வேலைகளைப் பார்த்தார். வறுமையான குடும்ப சூழல். அதனால, சொந்தக்கால்ல நின்னு முன்னுக்கு வரணும்னு நினைச்சார். அப்போதான், இங்குள்ள மக்கள்கிட்ட சோடா மேல ஈர்ப்பு இருக்கிறதைத் தெரிஞ்சுகிட்டு, 1921-ம் வருஷம் கிரவுன் கோலி சோடா கம்பெனியை ஆரம்பித்தார். கிரவுன் (Crown) என்பது அப்போதைய பிரிட்டிஷ் ராஜாவோட கிரீடத்தின் பெயர். அந்தப் பெயரை வைத்தால், அப்போது ஆட்சி புரிந்த வெள்ளைக்காரங்க கிட்ட ஈஸியா கடைக்கு அனுமதி வாங்கலாம்னு அந்தப் பெயரை வைத்திருக்கிறார். ஆனா, கடையில் காந்தி போட்டோதான் வச்சிருந்தார்.

பன்னீர் சோடா, பிளைன் சோடா உள்ளிட்டவற்றைக் கோலி சோடா பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்தார். அதோடு, ஆரஞ்ச், லெமன், கறுப்பு கலர்னு மூணு வகை கலர்களையும் விற்பனை செய்திருக்கிறார். உடம்புக்கு எந்தக் கேடும் விளைவிக்காம, உற்சாகம் அடையச் செய்ற மாதிரி இருந்தது அவர் தயாரிச்ச சோடாவும் சர்பத்தும். தவிர, நன்னாரி சர்பத்தை தரமா தயாரிச்சு விற்பனை பண்ணியிருக்கிறார். ஆரம்பத்துல விற்பனை கம்மியா இருந்தாலும், போகப்போக மக்கள்கிட்ட அப்பா கொடுத்த தரம், சுவையால வரவேற்பு கிடைச்சுருக்கு. இதனால, வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிச்சுருக்கு.

எங்க அப்பா தயாரிச்ச சோடா, கலர், நன்னாரி சர்பத்தோட தரத்தைப் பார்த்துட்டு, ‘பெஸ்ட் ஹெல்த் ட்ரிங்ஸ்’ங்கிற அவார்டை, 1927-ம் வருஷம் பிரிட்டிஷ் அதிகாரிங்க எங்கப்பாவுக்கு தந்தாங்க.

படிச்சுக்கிட்டு இருந்த நான், லீவு நாட்கள்ல அப்பாவுக்கு ஒத்தாசை பண்ணிவேன். நான் எஸ்.எஸ்.எல்.சி படிச்சு முடிச்சப்ப, 1960-ம் ஆண்டு எங்கப்பா திடீர்னு இறந்துபோயிட்டார். அதனால, நான் இந்தக் கடைக்கு பொறுப்புக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டுச்சு.

கரூர் கிரவுன் சோடா... தலைமுறைகளைக் கடந்த வெற்றி... சக்சஸ் சீக்ரெட்..!

நான் பொறுப்பெடுத்து நடத்தத் தொடங்கின பிறகு, சிலவற்றைக் கூடுதலா தயாரிக்க ஆரம் பிச்சேன். சர்பத், லெமன், கிரேப், பைன்ஆப்பிள்னு பல பிளேவர்கள்ல சோடாவைத் தர ஆரம்பிச்சேன். கூடவே, ரோஸ் மில்க்கையும் கொடுக்க ஆரம்பிச் சேன். இதுல கெமிக்கல் எதுவும் கலக்காம இயற்கையான பொருள்களைக் கொண்டு, ஃப்ரெஷ்ஷா அப்பப்ப தயாரிச்சு கொடுத்ததால, எங்க பிராண்டுக்கு கூடுதல் வரவேற்பு கிடைச்சது. தினமும் எங்க கடைக்கு 200 கஸ்டமர்கள் வந்துபோற அளவுக்கு தொழிலை வளர்த்தேன். அப்ப ஒருநாள், தேர்தல் பிரசாரம் செய்றதுக்கு பெரும் தலைவர் காமராஜர் வந்தப்ப, அவர்கிட்ட எங்க கடையைப்பத்தி பலரும் சொல்ல, அவருக்கு ஒரு சர்பத் போட்டுக் கொடுத்தேன். அதை வாங்கிக் குடித்த காமராஜர், ‘‘அற்புதமான சுவை. இதே சுவை, தரம் குறையாம மக்களுக்கு தொடர்ந்து கொடுங்க’’ன்னு சொல்லிட்டுப் போனார். அதுக்குப் பிறகு தரம்தான் எனக்குத் தாரக மந்திரமாயிடுச்சு” என்றார்.

அதன்பிறகு, 2000-ம் ஆண்டு தட்சணாமூர்த்தியின் மகனான பாலக்குமரன், மூன்றாவது தலை முறையாக இந்தத் தொழிலுக்கு வந்து பொறுப்பேற்றார். அது பற்றி சொல்லத் தொடங்கினார் பாலக்குமரன்.

“நான் பி.காம் படிச்சேன். ஆரம்பத்துல வேலைக்குப் போகும் எண்ணம் இருந்துச்சு. ஆனால, எங்க சோடாவுக்கு கஸ்டமர்கள் கிட்ட இருந்த பெயரைப் பார்த்ததும், இந்தப் பாரம்பர்ய தொழிலை விடக் கூடாதுனு நான் பொறுப்பேற் றேன். அப்பா இப்பவும் எனக்கு பிசினஸ்ல வழிகாட்டியா இருக் கிறார். அப்பா சில பிளேவர்களை கொண்டு வந்ததுமாதிரி, நானும் இன்னும் சில பிளேவர்களைச் சேர்த்தேன். ஸ்டாபெர்ரி, கிரீன் ஆப்பிள், சாக்லேட், பட்டர் ஸ்காட்ச், சோடா சர்பத்னு கூடுதலான பிளேவர்ல சோடா வைக் கொடுக்க ஆரம்பிச்சேன். கஸ்டமர்கள்கிட்ட அமோக வரவேற்பு கிடைத்தது.

எங்க தாத்தாவும், எங்க அப்பாவும் கரூர் மாவட்டத்தில் மட்டும் வியாபாரம் செஞ்சாங்க. ஆனா, நான் வெளி மாவட்டங் களுக்கும் விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். 20 லிட்டர் கேன்களில் சோடா, சர்பத்தை மொத்தமா வாங்கிட்டுப் போய், அவங்க நேம்ல விற்பனை செய்ய ஆரம்பிச்சாங்க. தமிழ் நாடு முழுக்க நிறைய கஸ்டமர் களும், டீலர்களும் கிடைச்சாங்க. சீஸனுக்கு 400 லிட்டர் வரை விற்பனை செய்ய முடிந்தது.

கரூர் கிரவுன் சோடா... தலைமுறைகளைக் கடந்த வெற்றி... சக்சஸ் சீக்ரெட்..!

ஸ்டாபெர்ரி பிளேவர் சோடா லிட்டர் ரூ.200, நன்னாரி சர்பத் லிட்டர் ரூ.175, ரோஸ்மில்க் லிட்டர் ரூ.175 என விற்பனை செய்கிறேன். ரூ.10-க்கு பாட்டிலில் கஸ்டமர்களுக்குத் தர்றோம். அதோடு, 200, 300 எம்.எல், அரை லிட்டர், ஒன்றரை லிட்டர்னு பாட்டில்களில் நிரப்பி விற்பனை செய்றோம்.

பத்து வருஷத்துக்கு முன்னால கோலி சோடாவை பாட்டில் கள்ல நிரப்பிக் கொடுத்தோம். கோலி சோடா பாட்டில்களைப் பராமரிக்கிறது ரொம்ப கஷ்டம். அதை நாலு பக்கமும் சுத்தி சுத்தி நல்லா கழுவணும். இதுக்கு அதிக தண்ணி செலவாகும். கரூருக்குக் குடிநீர் பிரச்னை வந்ததால, 2011 வருஷம் தொடங்கி, பாட்டிலுக்கு குட்பை சொல்லிட்டு, இப்போ பெட் பாட்டிலைப் பயன்படுத்து றோம். இந்த பெட் பாட்டில் களைக் கோவை, ஓசூர், திருச்சி யில இருந்து வாங்குறோம். நன்னாரி சர்பத் தயாரிக்கும் மூலப்பொருளை கேரளாவின் பல பகுதிகள்ல இருந்து தரமா பார்த்து ரெகுலராக வாங்குறோம்.

2005-க்குப் பிறகு, இதுபோன்ற சோடா, சர்பத்களை ஒதுக்கிட்டு, கார்ப்பரேட் கம்பெனிகள் கொடுத்த கூல் டிரிங்கை மக்கள் விரும்பிக் குடிக்க ஆரம்பிச்சாங்க. அதனால, எங்க தொழில் டல் அடிச்சுச்சு. அப்ப, அந்த கார்ப் பரேட் டிரிங் பாட்டில்களை வாங்கி விற்க ஆரம்பிச்சேன். ஆனா, மனசு ஒப்பலை. அதனால, கார்ப்பரேட் கம்பெனி கூல்டிரிங் பாட்டில்களை ஒதுக்கிட்டு, பழையபடி தொடர்ந்து எங்க சோடா, சர்பத் தயாரிப்புகளைத் தயாரித்தோம். இந்த நிலையில்தான், இளைஞர்கள் ஜல்லிக்கட்டு உரிமைக்காக செய்த புரட்சிக்குப் பிறகு, எங்களைப் போன்ற தரமான உள்ளூர் பானங்களை மறுபடியும் மக்கள் அருந்த ஆரம்பிச்சாங்க. அதன் பிறகு, பழையபடி எங்க தொழிலும் பிக்கப்-ஆக ஆரம்பித்தது. அதே போல், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கானு பல நாடுகளில் செட்டிலான தமிழர்கள் சொந்த ஊர் வரும்போது, எங்க கம்பெனி சோடா, நன்னாரி சர்பத் பாட்டில்களை லிட்டர் கணக்கில் வாங்கிட்டுப் போவாங்க. நாங்க மூணு மாசம் வரை எக்ஸ்பைரி டேட் கொடுத்தி ருந்தாலும், அடுத்தமுறை எங்க கடைக்கு வரும் அவர்கள், ‘அங்க உள்ள கிளைமேட்டுக்கு உங்க கடை சர்பத்தும் சோடாவும் 8 மாசம் வரை தாங்கிச்சு. எங்க பிள்ளைகளுக்கும் உங்க சர்பத் பிடிச்சுருக்கு’னு சொன்னப்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

பழையபடி, கோலி சோடா பாட்டில்ல கொடுக்கணும்ங்கிற எண்ணமும் இருக்கு. அதே போல, மற்ற மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு எங்க பிராண்ட் சோடா, கூல்டிரிங்கைக் கொண்டுபோய் சேர்க்கணும்ங்கிற யோசனையும் இருக்கு. அதற்கான முயற்சியைப் படிப்படியாகச் செய்ய இருக்கிறேன்.

இன்னும் 100 ஆண்டுகள் கடந்தும் எங்கள் நிறுவனம் மக்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்பதே எங்களோட ஆசை. நிச்சயம் அடுத்த சந்ததியினரும் எங்கள் நிறுவனத்தை மக்கள் மனதில் அழியாமல் காப்பார்கள்’’ என்று முடித்தார் பாலக்குமரன்.

தரமும், கடின உழைப்பும், புதுமையான சிந்தனையும் காலம் கடந்து நிலைக்கச் செய்யும்!