
நேட்டிவ் பிராண்ட் - 18
இப்போதுள்ள தொழில் போட்டியில் ஒரு கடையை அல்லது ஒரு தொழிலை 10 வருஷம் தொடர்ந்து நடத்துவதே குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஆனால், கரூரில் ஒரு நகைக்கடை 102 வருடங்களாக, நான்காம் தலைமுறையாக வெற்றிகரமாக நடந்துவருகிறது. ஜவஹர் பஜாரில் செயல்பட்டுவரும் கே.பி.ஆர் ஜூவல்லரிதான் சதமடித்த அந்தப் பாரம்பர்ய நிறுவனம். ‘எப்படி இது சாத்தியம்?’ என்று அந்த ஜூவல்லரியின் உரிமையாளர்களில் ஒருவரான ரவீந்திரகுமாரிடம் கேட்டோம்.
“எங்களுக்கு பூர்வீகமே கரூர்தான். என்னோட தாத்தா கே.பி.ராதாகிருஷ்ணன் செட்டியார் ஆரம்பிச்ச கடை இது. அவருக்கு 18 வயசா இருக்கும்போதே திருமணம் ஆகிருச்சு. அவரோட மாமனார் வகையில் சிலர் இங்கே நகை சம்பந்தப்பட்ட தொழில்ல இருந்திருக் காங்க. அதனால சொந்தமாகத் தொழில் செய்ய நினைச்ச என் தாத்தாவுக்கு, அவரோட அத்தையான ராமாம்மாள் ரூ.500 கொடுத்து, ஏதாச்சும் தொழில் செய்யச் சொல்லி இருக்காங்க. உடனே, இவர் 1920-ம் வருஷம் மாரியம்மன் கோயிலுக்குக் கிழக்கே ஒரு வாடகைக் கட்டடத்தில் நகைக்கடையை ஆரம்பித்தார். வெறும் ஜூவல்லரியா மட்டுமல்லாம, நகை செய்யும் ஆசாரிப் பட்டறைக்கு உண்டான கரி, அடுப்பு, மூச (தங்கத்தை உருக்கத் தேவையான குகை), செம்பு, கொரடு, அரம், கத்தரினு எல்லா செட்டப்பையும் செஞ்சார். அதோடு, வெள்ளிக் கொலுசு, வெள்ளி பாத்திரம்னு வெள்ளிப் பொருள்களையும் விற்பனை செய்ய ஆரம்பிச்சார். தரமாகத் தங்கம், வெள்ளி நகைகளை செஞ்சு கொடுத்ததால, கொஞ்ச நாள்லேயே மக்கள் மனதில் இடம்பிடிச்சுட்டாரு.

1926-ம் வருஷம் லட்சுமி விலாஸ் வங்கிக்கு ரூ.1,000 ஈக்விட்டி ஷேர் கொடுத்து, இயக்குநரா ஆகும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். தொடர்ந்து, அந்த வங்கியில் இயக்குநர், 12 வருஷம் பிரசிடென்ட்னு 1962 வரை தாத்தா இருந்தார். 1950-க்குப் பிறகு, லட்சுமி விலாஸ் மணிக்கூண்டுக்கு எதிரே சொந்தமா இடம் வாங்கி, 400 சதுர அடியில் இந்த ஜூவல்லரியை இடமாற்றம் செஞ்சார். அவரோட அண்ணன் மகன் எம்.கோபாலனை பார்ட்னராக வைத்துக்கொண்டுதான், தாத்தா தொழிலை செய்தார். தொடர்ந்து மக்கள் அமோக ஆதரவு தந்திருக்காங்க’’ என்று ஆதிஅந்தம் தொடங்கி கே.பி.ஆர் நிறுவனத்தின் கதை சொல்லத் தொடங்கினார் ரவீந்திரகுமார்.
‘‘எங்க தாத்தாவுக்கு கே.ஆர்.சந்திரசேகரன், கே.ஆர்.கருணாகரன் என இரண்டு மகன்கள். இதில், இளையவரான கருணாகரனின் மகன்தான் நான். 1962-ல் தாத்தா மறைய, அப்பாவும் பெரியப்பாவும் நகைக்கடை தொழிலில் முழுமூச்சாக இறங்கினாங்க. தாத்தா இருந்த காலம் வரை கஸ்டமர்கள் கொடுக்கும் ஆர்டர்படி தங்கத்தை பொற்கொல்லர்களிடம் கொடுத்து, செய்து கொடுத்தாங்க. ஆனா, பெரியப் பாவும் அப்பாவும் தொழிலுக்கு வந்த பிறகு, 1980-கள்ல ரெடிமேட் நகைகள் மார்க்கெட்டை ஆக்ரமிச்சதை உணர்ந்தாங்க. அதனால், பெங்களூரு, சென்னைனு நடக்குற நகைக் கண்காட்சிகளுக்குப் போய் பார்த்து, புதுப்புது டிசைன் நகைகளை ஆர்டர் எடுத்து வந்து, கரூர் மக்களுக்கு அறிமுகப்படுத்தினாங்க. ஆனா, தரத்தில் காம்ப்ரமைஸே பண்ணிக்கலை. இதனால், மக்கள் தொடர்ந்து அமோகமாக ஆதரவு கொடுத்தாங்க.
1992 வரை இருந்த தங்க கட்டுப்பாடு சட்டம் நீக்கப்பட்டதால், நிறைய நகைக்கடைகள் கரூருக்குள் காலூன்றின. இதனால, தொழில்ல கடும் போட்டி உருவானது. ஆனா, நாங்க பல புதுப்புது டிசைன்களை அறிமுகப்படுத்தினோம். கோவை, ராஜ்கோட், கல்கத்தா, பெங்களூருனு பல பகுதிகளில் இருந்து அந்தந்தக் காலத்து டிரெண்டிங் நகைகளை வாங்கி வந்து, விற்பனைக்கு வைத்தோம். லட்சுமி விலாஸ் வங்கியோட இயக்குநரா என் தாத்தா 30 வருஷம் இருந்தாரு. 2006-ல் இருந்து 2013 வரை நான் இயக்கு நராக இருந்தேன். நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தில் தொடர்ந்து தலைவர் பதவியில் இருந்து வருகிறேன்” என்றார் ரவீந்திரகுமார்.

தொடர்ந்து பேசிய, அவரின் பெரியப்பா மகனான ராம்குமார், “அதன் பிறகு, கடையை இன்னும் விரிவாக்கம் பண்ண நினைச்சு, 2005-ம் ஆண்டு பிஸியான இந்த ஜவஹர் பஜார்ல நாங்க வாங்குன சொந்த இடத்தில், 1,800 சதுர அடியில் அமைந்த இந்த இடத்தில் கடையை மாத்தி னோம். தரத்துக்கு தொடர்ந்து மரியாதை தந்ததால, கரூர் மாவட்டம் மட்டுமன்றி, சென்னை, பெங்களூரு, திருச்சினு ஆறுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள்ல எங்களுக்கு 2,500-க்கும் மேற்பட்ட ரெகுலர் கஸ்டமர்கள் இருக்காங்க. திருமணத்துக்குத் தாலிக்கொடி களை வாங்குபவர்கள் நாலாவது தலைமுறையாக எங்க கடையில் வாங்குறவங்க பலர் இருக்காங்க.
எந்தவகை நகையை எடுப்பதுங்கிறதுல கஸ்டமர்கள் கிட்ட மாற்றம் வந்திருக்கலாம். ஆனால், நகைமேல் உள்ள மோகம் இப்போதுள்ள ஜென ரேஷன்கிட்ட கொஞ்சமும் குறையவில்லை. 916 மற்றும் 22 கேரட்னு இருந்தது, இப்போ 18 கேரட் நகைமேல பலருக்கும் ஆர்வம் வந்திருக்கு. அதுக்கு தகுந்தமாதிரி நாங்களும் நகைகளை செய்கிறோம். 18 கேரட்டுல உள்ள நகைகளையே அதிகம் பர்ச்சேஸ் பண்றோம். 18 கேரட் நகையில் 75% தங்கமும், மீதி 25% செம்பு உள்ளிட்ட உலோகங்களும் இருக்கும். அதாவது, லைட்வெயிட்டா நகை களை அணிய ஆசைப்படுறாங்க. 22 கேரட் சாஃப்டா இருக்கும். 18 கேரட் ஸ்ட்ராங்கா இருக்கும். விலையும் குறைவாக இருக்கும். அதனால அதுக்கு வரவேற்பு அதிகமா இருக்கு.
செயின், வளையல், நெக்லஸ், ஆரம் (ஹாரம்), தோடு, மோதிரம், பிரேஸ்லெட்டுனு பலநகைகளையும் 18 கேரட்டுலதான் கேட்குறாங்க. இதுல, செயின், மோதிரம், தாலிக் கொடி, வளையல் உள்ளிட்ட நகைகளை மட்டும் நாங்களே கரூர்ல உள்ள பொற்கொல்லர்கள் கிட்ட கொடுத்து செய்கிறோம். மத்த நகைகளை பல மாநிலங்கள், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாங்குறோம்.

நானும், என்னோட சித்தப்பா பையன் ரவீந்திரகுமாரும் ஒற்றுமையா இருந்து, கடையை நடத்துறோம். எங்க தாத்தாவுக்கு இணக்கமா இருந்த தோடு, பார்ட்ன ராகவும் இருந்த அவரோட அண்ணன் பையன் கோபாலன் 2004-ம் வருஷம் தொழில்ல இருந்து பிரிஞ்சு போயிட்டார். 102 வருஷம் என்பது இன்னும் பலநூறு வருஷ பாரம்பர்யமா தொடர்ந்து நடக்கணும்னு நினைக்கிறோம். அது காலத்தின் கையிலும், அடுத்தடுத்த தலைமுறையினரின் கையிலும்தான் உள்ளது” என்றார்.
இறுதியாகப் பேசினார், இந்த நகைக்கடை தொழிலுக்குள் வந்தி ருக்கும் நான்காம் தலைமுறையைச் சேர்ந்தவரும், ரவீந்திரகுமாரின் மகனுமான விஷ்ணுவர்தன்.
“நான் பி.இ, எம்.பி.ஏ முடிச் சுருக்கேன். எங்க கொள்ளு தாத்தா, தாத்தாக்கள், அப்பா, பெரியப்பான்னு கட்டிக் காத்த / காக்கும் நிறுவனம் இது. அதனால், அவர்கள் வழியில் தரம், நாணயம், கைராசி, சரியான விலை என்ற தாரக மந்திரத்தைதான் நானும் கடைப்பிடிக் கிறேன்.
ஆனா, முன்பை விட புதுசு புதுசா நகை களை, டிரெண்டியான, ஃபேன்ஸி யான நகைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருக்கு. அதனால நகைக் கண்காட்சிகளுக்கு நானே போறேன். முன்பு நல்ல மஞ்சள் கலர்ல இருக்கும் நகையைத்தான் அதிகம் விரும்புவாங்க. ‘அதுதான் நகை’னு நினைச்சாங்க. ஆனா, இப்போ உள்ள ஜெனரேஷன், ஆன்டிக் ஃபினிஷ் நகைகளை விரும்புறாங்க. அதாவது, ப்ரவுனிஷா, இல்லைன்னா டார்க் ப்ரவுனா, கொஞ்சம் பிளாக்கிஷா இருக்குற நகைகளைதான் அதிகம் விரும்புறாங்க. ஜிமிக்கியையே 5 பவுன்ல போட விரும்பு றாங்க இப்போ உள்ள பெண்கள். அதேநேரம், வேலைக்குப் போற பெண்கள் 3, 4 பவுன்ல செயின் போட விரும்புற தில்லை. அரை பவுன் அல்லது அதிகபட்சம் முக்கால் பவுனில் மெல்லிசான சைஸில் உள்ள செயினை அணிய விரும்புறாங்க. அதேபோல், திருமணத்துக்கு பெண்கள் 15, 20 பவுன்ல ஆரம், வளையல்களை அணிய விரும்புறாங்க.
அதேபோல், ‘காஸ்ட்லி, நம்மால வாங்க முடியாது’னு ஒதுக்கிய வைர நகைகளை வாங்குற ஆர்வமும் கரூர் மக்களுக்கு வந்திருக்கு. அதனால், எங்க கடையில் பெங்களூரு, சேலம், கோவையில் இருந்து இப்போ வைர நகைகளையும் பர்ச்சேஸ் பண்ணுறோம். கடந்த பத்து வருஷத்துக்கு முன்னாடி வரை வெள்ளியில் கொலுசு, பாத்திரங்கள்தான் வாங்குவாங்க. ஆனால், இப்போது வெள்ளியில் தோடு, செயின், மோதிரம், பிரேஸ்லெட்னு வாங்கி அணியும் ஆர்வம் வந்திருக்கு. அதனால், வெள்ளியில் பல டிரெண்டியான ஆபரணங்களையும் ஆட் பண்ண ஆரம்பித்திருக்கிறோம்.
இப்போ உள்ள ஜெனரேஷன்களின் டேஸ்டை நாடி பார்த்து லேட்டஸ்ட் மாற்றங்களைத் தொழில்ல கொண்டு வந்துகிட்டு இருக்கிறேன். இந்த நகைக்கடை தொழிலை அடுத்தகட்டதுக்குக் கொண்டுபோக, நிறைய முயற்சிகளைச் செய்ய இருக்கிறோம்” என்றார். பல நூறு ஆண்டுகளுக்கு வெற்றிகரமாக நடக்கட்டும் இந்த நிறுவனம்!