Published:Updated:

`இவங்க வாழ்வாதாரம் உயரணும்!' கிராம பெண்களுக்கு தொழில்பயிற்சி அளிக்கும் பஞ்சாயத்து தலைவர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பயிற்சி பெறும் பெண்கள்
பயிற்சி பெறும் பெண்கள் ( நா.ராஜமுருகன் )

``கஷ்டப்படுறவங்களுக்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கத்துக்கொடுக்கணும் என்ற ஜப்பானிய பழமொழி ஞாபகத்துக்கு வந்துச்சு. அதனால, மக்களுக்கு நிரந்தர வருமானத்துக்கு வழிபண்ணணும்னு முடிவு பண்ணினேன்."

கொரோனா, 10 மாதங்களுக்கும் மேலாக உலக மக்களுக்கு உயிர் பயத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இன்னமும் அதன் வீரியம் குறையாததால், மக்கள் அனைவரும் ஒவ்வொரு நொடியையும் அச்சத்தோடு கடக்கின்றனர். ஒருபுறம் இப்படி உயிர் பயத்தை ஏற்படுத்திய கொரோனா, மற்றொருபுறம் மக்களின் பொருளாதாரத்தை சின்னாபின்னமாக்கியிருக்கிறது. பெரிய பெரிய கம்பெனிகளே கொரோனா பாதிப்பால் பொருளாதார இழப்பைச் சந்தித்திருக்கும் சூழலில், கீழ்த்தட்டு மக்களின் நிலையோ கவலைக்கிடமாகியிருக்கிறது.

பயிற்சி பெறும் பெண்கள்
பயிற்சி பெறும் பெண்கள்
நா.ராஜமுருகன்

வேலை கிடைக்காமல், வருமானத்துக்கு வழியின்றி, சாப்பாட்டுக்கே சிரமப்படும் நிலையில் இருக்கிறார்கள் பலர். குறிப்பாக, ஏற்கெனவே பெரிதாகப் பொருளாதார ஆதாரம் இல்லாமல் தவித்து வந்த கிராம மக்களின் நிலைமை, கொரோனாவுக்குப் பிறகு இன்னும் சிக்கலாகியிருக்கிறது. இப்படி, கொரோனாவால் வேலையின்றி தவிக்கும் தனது ஊராட்சியைச் சேர்ந்த பெண்களுக்கு, பனை ஓலையில் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சியை அளித்து, அந்த மக்களின் மனதில் நம்பிக்கையை விதைத்திருக்கிறார், ஊராட்சிமன்றத் தலைவர் ஒருவர்.

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது வரவணை. இந்த ஊராட்சியில் 15 குக்கிராமங்கள் உள்ளன. 7,000 மக்கள் வசிக்கிறார்கள். இந்த ஊராட்சியில் உள்ள அனைத்துப் பகுதிகளும் வறட்சி மிகுந்த வானம் பார்த்த பூமி. வருமானத்துக்கு வழியில்லாத மக்கள்தாம் இங்கு அதிகம் வசிக்கிறார்கள். இந்த நிலையில், கொரோனாவால் அவர்களின் பொருளாதார நிலைமை இன்னும் கவலைக்கிடமாக, வரவணை ஊராட்சிமன்றத் தலைவர் கந்தசாமி, தனது சொந்த செலவில் அவர்களுக்கு உணவுப் பொருள்களை வாங்கி வழங்கினார்.

பனை ஓலையில் செய்யப்பட்ட பொருள்
பனை ஓலையில் செய்யப்பட்ட பொருள்
நா.ராஜமுருகன்

ஆனால், தொடர்ந்து மக்களுக்கு உதவி புரிய அவருக்கு பொருளாதார சக்தி இல்லாத காரணத்தால், கிராம மக்களின் பொருளாதார நிலைமையை நிரந்தரமாக சரியாக்க ஒரு வழி செய்திருக்கிறார். தனது ஊராட்சியில் உள்ள பெண்களுக்கு, 'கைத்தொழில் பழகு' என்ற பெயரில் தொழில் பயிற்சியைக் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல் கட்டமாக, பனை ஓலையில் கீ செயின், கூடை, தட்டு, விசிறி உள்ளிட்ட பொருள்களைச் செய்யும் பாரம்பர்ய கைத்தொழிலைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். பெண்களும் ஆர்வத்துடன் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டு, பனை ஒலையில் பொருள்களைச் செய்ய கற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து, வரவணை ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமியிடம் பேசினோம்.

கந்தசாமி (ஊராட்சிமன்றத் தலைவர்)
கந்தசாமி (ஊராட்சிமன்றத் தலைவர்)
நா.ராஜமுருகன்

"ஓய்வுபெற்ற ஆசிரியரான என்னை, ஊர் மக்களே விரும்பிக் கேட்டு, தேர்தலில் நிக்க வெச்சு, ஊராட்சிமன்றத் தலைவராக்குனாங்க. அதனால, இந்தப் பணியை 100 சதவிகிதம் சேவை மனப்பான்மையோடு செஞ்சு, இந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தணும்னு முடிவெடுத்தேன். அதற்காக, அமெரிக்காவில் இருக்கும் என் மகன் நரேந்திரன் உதவியோடு, ஊர் பொது இடத்தில் 'சமுதாயக் காய்கறித் தோட்டம்'ங்கிற பெயர்ல, இயற்கை காய்கறித் தோட்டம் போட்டு, அதில் விளையும் காய்கறிகளை ஊர் மக்களுக்கு இலவசமா கொடுத்தேன். அந்த நேரம் கொரோனா வர, அந்தக் காய்கறித் தோட்டம் உண்மையில எங்க ஊர் மக்களுக்குப் பெரிதும் உதவுச்சு. பொருளாதார நெருக்கடியில இருந்த அவங்களுக்கு, காய்கறிகள் இலவசமா கிடைச்சது. கூடவே, அரிசி, மளிகை சாமான்கள் வாங்க வழியில்லாம தவிச்ச 1,565 குடும்பங்களுக்கு, என் சொந்த செலவுல அதையெல்லாம் வாங்கிக் கொடுத்தேன்.

ஆனா, நான் ஒண்ணும் பெரிய பணக்காரன் இல்லை. அதனால, தொடர்ந்து அவங்களுக்கு என்னால உதவ முடியாத சூழல். அப்போதான், 'கஷ்டப்படுறவங்களுக்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கத்துக்கொடுப்பது மேல்' என்ற ஜப்பானியப் பழமொழி ஞாபகத்துக்கு வந்துச்சு. அதனால, மக்களுக்கு நிரந்தர வருமானத்துக்கு வழிபண்ணணும்னு முடிவு பண்ணினேன். அவங்களுக்குப் பல்வேறு தொழில் பயிற்சிகளைக் கொடுக்க முடிவு பண்ணினேன். அந்தத் திட்டத்துக்கு 'கைத்தொழில் பழகு'னு பெயர் வெச்சேன்.

எங்க ஊருக்குப் பக்கத்துல நிறைய பனைமரங்கள் இருக்கு. ஆனா, அதோட அருமை பலருக்கும் தெரியாம போயிட்டு. அதனால, எங்க ஊருப் பெண்களுக்கு பனை ஓலைகள்ல பல்வேறு பொருள்களை செய்யப் பயிற்சி கொடுக்க முடிவெடுத்தேன்.

பயிற்சி பெறும் பெண்கள்
பயிற்சி பெறும் பெண்கள்
நா.ராஜமுருகன்

இதில் நிபுணரான தஞ்சையைச் சேர்ந்த பயிற்சியாளர் விக்டோரியாவை அழைச்சுட்டு வந்து, பெண்களுக்கு பயிற்சி கொடுத்தேன். இதுக்குத் தேவையான ஆலோசனைகளை காட்சன் சாமுவேல் என்பவர் வழங்கினார். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளால முதல் கட்டமா 15 பெண்களுக்கு மட்டும் பயிற்சி கொடுத்திருக்கோம். தொடர்ந்து, எல்லா பெண்களுக்கும் பயிற்சி கொடுக்க இருக்கோம்.

அதேபோல, வேறு தொழில்கள் சம்பந்தப்பட்ட பயிற்சிகளையும் தர இருக்கோம். எங்க கிராமத்துப் பெண்கள் தயார் செய்யும் பொருள்களை இடைத்தரர்கள் இல்லாம விற்பனை செய்து, எங்க கிராமத்துக் குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த இருக்கோம்.

நவீன பொருளாதார முன்னேற்றத்துக்கான சிந்தனைகளை, வணிக வாய்ப்புகளை உருவாக்க, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, பொருளாக்கத்தில் முதலீடு, மூலப்பொருள், உழைப்பு என்ற மூன்றை மட்டுமே கருத்தில் கொண்ட வாய்ப்புகளையே பெரும்பாலும் இதுவரை முன்னெடுத்து வர்றோம். ஆனா, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் பற்றாக்குறை, மூலப் பொருள்களுக்கான முதலீடு வற்றிப்போன புதிய உலகில், மாற்று சிந்தனையை நோக்கிப் பயணிக்க வேண்டியுள்ளது. அப்போதான், கிராமங்களைக் காப்பாற்ற முடியும்.

பனை ஓலையில் செய்யப்பட்ட பொருள்
பனை ஓலையில் செய்யப்பட்ட பொருள்
நா.ராஜமுருகன்

கொரோனா காலத்துல மக்கள் பிரச்னைக்கு உதவ பல கட்டமா நிவாரணப் பொருள்கள் வழங்கினோம். ஆனா, அவை மக்களின் ஓரிரு வார தேவைகளை மட்டுமே நிவர்த்தி செய்தது. அதையடுத்து, தற்சார்பு வாழ்வியல் கிராமத்தை உருவாக்க நாட்டு காய்கறித் தோட்டம் மூலம் மக்களின் சேமிப்புக்கு வழிவகுத்தோம். அடுத்தகட்டமா தொழில் முனைவோரை உருவாக்கும் முயற்சியா இப்பயிற்சியை வரவணை ஊராட்சியில சமூக இடைவெளியுடன் அளித்திருக்கோம். தொடர்ந்து, எங்க ஊராட்சி மக்களின் மேம்பாட்டுக்காக இயங்கிக்கிட்டே இருப்பேன்" என்றார் உறுதியுடனும் அக்கறையுடனும்.

இந்தப் பயிற்சியில், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள எழுதியாம்பட்டியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை கலா, தன் மகள் மீனாதேவியோடு ஆர்வமாகக் கலந்துகொண்டார். அந்த அனுபவம் பற்றி, கலாவிடம் பேசினோம்.

கலா (தலைமை ஆசிரியை)
கலா (தலைமை ஆசிரியை)
நா.ராஜமுருகன்

"இப்படி மரபு சார்ந்த கைத்தொழிலை கத்துக்கணும்னு எனக்கு படிக்கிற காலத்திலேயே விருப்பம் இருந்துச்சு. ஆனா, அதற்கான வாய்ப்புக் கிடைக்கலை. இப்போ வரவணை ஊராட்சியில அப்படி பயிற்சி கொடுக்கப் போறாங்கனு கேள்விப்பட்டதும், வந்து ஆர்வமா கலந்துகிட்டேன். என் மகளும் ஆர்வமா கலந்துக்கிட்டா.

அங்க பல பொருள்களை செய்யக் கத்துக்கிட்டோம். நான் கற்றதை, என் மாணவர்களுக்கும் கற்றுக்கொடுத்து, அவங்களுக்கும் தொழில் கல்வி வழங்கப் போறேன்" என்றார் மகிழ்ச்சியாக.

நல்லவை பரவட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு