Published:Updated:

``ஸ்லைம் பிசினஸ்ல 20,000 சம்பாதிச்சுருக்கோம்!'' - அசத்தும் 8 வயது சிறுமிகள்

சு.சூர்யா கோமதி
ராகேஷ் பெ

ஸ்லைம்களை தாங்கள் விளையாடியதோடு அதை வீட்டிலேயே தயார் செய்து பிசினஸ் கிட்ஸ்ஸாக மாற்றியிருக்கிறார்கள் சென்னையைச் சேர்ந்த சிறுமிகளான லக்‌ஷன்யா மற்றும் தீப்ஸிகா சகோதரிகள்.

பிசினஸ்
பிசினஸ்

குழந்தைகள் உலகம் எப்போதுமே புதுமைகளும் தேடல்களும் நிறைந்ததாகத்தான் இருக்கும். ஒவ்வொரு முறையும் புது புது விளையாட்டுப் பொருள்கள் களமிறங்கும் போது அதை எப்படியாவது வாங்கி, அத்துடன் விளையாடி விட வேண்டும் என்ற ஆசை எல்லா குழந்தைகளுக்கும் கனவாக இருக்கும். அந்த வகையில் குழந்தைகளின் உலகிற்கு அறிமுகமாகி இருக்கிறது ஸ்லைம்.

ஸ்லைம்
ஸ்லைம்

பார்ப்பதற்கு ஜெல்லி போன்று இருக்கும் இது, கைகளில் ஒட்டாது. தூக்கிப் போடும் இடங்களில் தவ்விக்குதிக்கும். இந்த ஸ்லைம்களை தாங்கள் விளையாடியதோடு அதை வீட்டிலேயே தயார் செய்து பிசினஸ் கிட்ஸ்ஸாக மாற்றியிருக்கிறார்கள் சென்னையைச் சேர்ந்த சிறுமிகளான லக்‌ஷன்யா மற்றும் தீப்ஸிகா சகோதரிகள். பெரிய கனவுகளுடனும் சிறிய முதலீடுகளுடனும் தாங்கள் தொடங்கிய பிசினஸ் பற்றிப் பேச ஆரம்பித்தார் லக்‌ஷன்யா.

"எங்களுக்குப் பிடிச்ச விஷயத்தை, நாங்க ரசிச்சு விளையாடுற விளையாட்டையே எங்க பிசினஸ் ஆக்கியிருக்கோம். அதனால ரொம்ப ஹேப்பியா இருக்கு. எனக்கு 8 வயசு, என் தங்கை தீப்ஸிகாவுக்கு ஏழு வயசு. சின்ன வயசில் இருந்தே எங்களுக்குக் கொடுக்குற பாக்கெட் மணியைச் சேமிச்சு வெச்சுதான் எங்களுக்கான பொம்மைகள் வாங்குவோம். ஒவ்வொரு முறை பொம்மைகள் வாங்கும் போதும், அடுத்த முறை என்ன பொம்மை வாங்கணும், அதுக்கு எவ்வளவு காசு தேவைப்படும்னு பிளான் பண்ணி உண்டியலில் காசு சேர்க்க ஆரம்பிப்போம். அதே மாதிரி ரெண்டு பேரும் எப்போதும் ஒரே மாதிரி பொம்மை வாங்க மாட்டோம். வேற வேற பொம்மைகள் வாங்கி ஷேர் பண்ணிதான் விளையாடுவோம்.

பிசினஸ் பண்ண வயசும், அனுபவமும் வேணும்னு சொன்னவங்க எல்லாம் இப்போ எங்களை ஆச்சர்யமாகப் பார்க்கிறாங்க.
தீப்ஸிகா

"எனக்கு ப்ளே க்ளேன்னா ரொம்ப பிடிக்கும். எப்போ கடைக்குப் போனாலும் சின்ன க்ளே பாக்ஸ் ஒண்ணு வாங்கிட்டு வந்துருவோம். ஒரு நாள் அம்மாகூட கடைக்குப் போயிந்தப்போ, ஜெல்லி மாதிரி கலர் கலராக சின்னச் சின்ன பாட்டில்களில் ஏதோ இருந்ததைப் பார்த்தோம். 'இது என்ன புது டைப் க்ளேவா?'னு கடைக்கார அங்கிள்கிட்ட கேட்டப்போ, 'இது ஸ்லைம். கைகளில் ஒட்டாது, ஜெல்லி மாதிரி வழுவழுப்பா இருக்கும், ஜாலியா விளையாடலாம்'னு சொன்னாங்க.

அந்த முறை க்ளேவுக்குப் பதிலா ஸ்லைம் வாங்கிட்டு வந்து விளையாண்டோம். விளையாட விளையாட ஜாலியா இருந்துச்சு. அடுத்த முறை கடைக்குப் போனப்போ, வேற கலர்ல ஸ்லைம் வாங்கித்தரச் சொல்லி அம்மாகிட்ட கேட்டோம். ஆனா ஸ்லைம் விலை அதிகம் என்பதால, ஏற்கெனவே வாங்கினதை வெச்சே விளையாடுங்கன்னு அம்மா மறுத்துட்டாங்க.

பிசினஸ்
பிசினஸ்

வீட்டுக்கு வந்ததும் நானும் என் தங்கச்சியும் சேர்ந்து, ஸ்லைம் எப்படிப் பண்றதுனு ஆன்லைன்ல பார்த்து கத்துக்க முடிவு பண்ணோம். ஆன்லைன் பார்த்தப்போதான், அது ரொம்ப ஈஸினு தெரிஞ்சது. ஸ்லைம் செய்ய ஃபெவிக்கால், ஸ்லைம் மிக்ஸர், பெயின்டும் தேவைப்பட்டது. அதை மட்டும் எங்ககிட்ட இருந்த காசில் வாங்கிட்டு வந்து வீட்டில் செய்து பார்த்தோம். முதல் முறை நாங்க ஸ்லைம் செய்தப்போ சரியா வரலை. மறுபடி மறுபடி செய்து பார்த்தோம். சூப்பரா வந்துடுச்சு.

என்னோட ஃப்ரெண்ட் பிறந்த நாளைக்கு, நானும் தங்கச்சியும் வீட்டிலேயே ஸ்லைம் செய்து, ஒரு பாட்டில்ல போட்டு அவளுக்கு கிஃப்ட் பண்ணினோம்" என்ற தன் அக்காவை நிறுத்திப் பேச ஆரம்பித்தார் தீப்ஸிகா. "எங்களோட கிஃப்ட்டைப் பார்த்ததும் எங்க ஃப்ரெண்ட் ரொம்ப சர்ப்ரைஸ் ஆகிட்டா. ஸ்லைம் எப்படிச் செய்யணும்னு அவளுக்கும் சொல்லிக்கொடுத்தோம். அடுத்தடுத்து நிறைய ஃப்ரெண்ட்ஸ் கற்றுக்கொடுக்கச் சொல்லிக் கேட்டாங்க. சில ஃப்ரெண்ட்ஸ், ஸ்லைம் செய்யத் தேவைப்படும் பொருள்களைக் கொடுத்து, 'நீங்களே எனக்கும் செய்துகொடுங்களேன்'னு கேட்டாங்க.

ஸ்லைம்
ஸ்லைம்

எங்க அம்மாவோட ஃப்ரெண்ட் ஒருத்தவங்க, நாங்க சூப்பரா ஸ்லைம் செய்றதைப் பார்த்துட்டு, 'விளையாட்டா... இதை நீங்க பிசினஸா செய்யலாம்'னு சொன்னங்க. அதை நாங்க சீரியஸாக எடுத்துக்கிட்டோம். அம்மாகிட்ட கேட்டப்போ "உங்க கிட்ட வந்து யார் வாங்குவா அதெல்லாம் வேண்டாம், படிப்புக் கெட்டுப் போயிடும்னு சொல்ல, நானும் அக்காவும் அழுது அடம் பண்ணி அம்மாகிட்ட ஒருவழியா சம்மதம் வாங்கினோம்.

ஸ்லைம் செய்யத் தேவைப்படும் பொருள்களை மொத்தமாக வாங்கினா செலவைக் குறைக்கலாம்னு பிளான் பண்ணி, அம்மாகிட்ட இன்வெஸ்ட்மென்ட்க்குப் பணம் கேட்டோம். அம்மாவும் ஆயிரம் ரூபாய் செலவு செய்து எல்லா பொருள்களையும் வாங்கிக் கொடுத்தாங்க.

ஸ்லைம்
ஸ்லைம்

ஸ்கூல் விடுமுறை நாள்களில் கல்லூரிகள், எங்களோட உறவினர்களின் திருமண வீடுகளில் ஸ்டால்கள் போட்டு ஸ்லைம்கள் விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். 'குழந்தைங்க ஆர்வமா பண்றாங்க, நாம சப்போர்ட் பண்ணணும்'னு நினைச்சு, நிறைய பேர் எங்ககிட்ட ஸ்லைம் வாங்கினாங்க; எங்களைப் பாராட்டி வாழ்த்தினாங்க. எங்க அப்பாவின் நண்பர்கள், தங்களோட குழந்தைகளுக்கு எங்ககிட்ட ஸ்லைம் வாங்கிட்டுப் போனாங்க. எங்க ஃப்ரெண்ட்ஸும் எங்ககிட்ட ஸ்லைம் வாங்க ஆரம்பிச்சாங்க.

ஒரு சர்ப்ரைஸ் தகவல் சொல்லவா? இதுவரை 20,000 ரூபாய்க்கு ஸ்லைம் விற்று அம்மாகிட்ட பணத்தைக் கொடுத்து சேர்த்து வெச்சிருக்கோம். அம்மா எங்களுக்கு முதலில் கடனாக கொடுத்த இன்வெஸ்ட்மென்ட் பணத்தையும் திரும்பிக் கொடுத்துட்டோம். பிசினஸ் பண்ண வயசும், அனுபவமும் வேணுன்னு சொன்னவங்க எல்லாம் இப்போ எங்களை ஆச்சர்யமாகப் பார்க்கிறாங்க.

சகோதரிகள்
சகோதரிகள்

பிசினஸின் அடுத்த அப்டேட்டாக கிளிட்டர் ஸ்லைம், டெக்கரேட்டிவ் பால் ஸ்லைம்னு புதுசு புதுசா செய்ய ஆரம்பிச்சிருக்கோம். பிசினஸ் ஒரு பக்கம் பரபரப்பா போனாலும், பாடங்களையும் சமர்த்தா முடிச்சிடுவோம். ஸ்லைம் பிசினஸ் ஒரு குறிப்பிட்ட சீசனுக்குதான் இருக்கும்னு எல்லோரும் சொன்னாங்க. அதனால் அடுத்து சாஃப்ட் டாய்ஸ் செய்ய கத்துக்க ஆரம்பிச்சு இருக்கோம். எங்களோட பணத்தை சேமிச்சு வெச்சு, சர்ப்ரைஸா அம்மாவை வெளிநாடு கூட்டிட்டுப் போகப் போறோம்'' என்று உதடுகள் குவித்து சிரிக்கிறார்கள்.