வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகும் கூத்தாநல்லூர் ‘தம்ரூட்’ கேக்..!

நேட்டிவ் பிராண்ட் - 16
மன்னார்குடியிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கூத்தாநல்லூர். இஸ்லாமியர்கள் பெருமளவில் வசிக்கக்கூடிய பகுதி. பெரும்பாலானவர்கள் வெளிநாட்டில் வேலை, சொந்தத் தொழில் செய்வதால், பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற்ற ஊராகவும் இருக்கிறது.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு பிரபலமான எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் பல பத்தாண்டு களுக்கு முன்பே கூத்தாநல்லூருக்கு வந்து விட்டது. இந்த ஊர் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு ஒரு சிறு உதாரணம். டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்ட மக்கள் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களை வாங்க கூத்தாநல்லூருக்குச் செல்வது வாடிக்கையான விஷயம்தான்.
வணிகம் செய்ய ஏற்ற ஊராக அமையப் பெற்ற கூத்தாநல்லூரின் மற்றொரு அடையாளமாக ‘மெளலான பேக்கரி’ திகழ்ந்து வருகிறது. ‘மெளலானா பேக்கரி’யில் செய்யப்படும் ‘தம்ரூட்’ கேக் உள்ளூர் தொடங்கி உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
‘‘33 வருடம் பாரம்பர்யம் கொண்ட எங்களோட மெளலானா பேக்கரியில் தனித்துவத்துடன் தரமாகச் செய்யப்படும் ‘தம்ரூட்’ கேக்’கோட தனி சுவையே மக்கள் மனதில் நீங்காமல் இருப்பதற்கும், எங்க நிறுவனம் வளர்வதற்கும் பெரும் காரணம்’’ என்கிறார் ‘மெளலானா பேக்கரி’யின் உரிமையாளர் பரகத் அலி.

மளிகைக்கடை, ஹோட்டல்... பிறகு பேக்கரி...
‘‘என்னோட அப்பா முகமது தமீம், கூத்தாநல்லூரில் மளிகைக் கடை, ஹோட்டல் உள்ளிட்டவை நடத்திவந்தார். ஒரே சமயத்தில், இரண்டு தொழில் செய்தாலும் அதுல கண்ணும் கருத்துமாக இருந்ததால் போதுமான வருமானத்துடன் சக்சஸ்பாதையில் பயணித்தார்.
அப்பா, எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊர்ல உள்ள பிரபலமான பேக்கரியில் ஸ்வீட்ஸ், கேக் வாங்கிட்டு வருவது வழக்கம். அவருக்கு பேக்கரி தொழில் மேல எப்போதும் தனிப்பிரியம் இருந்ததும் அதுக்குக் காரணம். ஏற்கெனவே மளிகை, ஹோட்டல் தொழில் லாபகரமாக நடந்தாலும் நாமளே சொந்தமாக பேக்கரி தொடங்கினால் என்னவென்று யோசிக்கும் அளவுக்கு அதன் மீதான பிரியம் அதிகரித்தது.
தன்னோட ஆசையை சொந்தபந்தங்கள், நண்பர்கள்கிட்ட வெளிப்படுத்த, ஏற்கெனவே செய்ற தொழில் நல்லா போயிட்டு இருக்கும் போது தெரியாத தொழிலில் இறங்குறது ரிஸ்க்னு அட்வைஸ் செய்துள்ளனர். ஆனால், ஹோட்டல் நடத்தியதால், சமையலில் உள்ள நுணுக்கங்கள் எல்லாம் அப்பாவுக்கு அத்துப்படி.
தன் மேல் உள்ள நம்பிக்கையில் 1989-ம் ஆண்டு ஏ.ஆர். சாலையில் ‘மெளலானா பேக்கரி’ என்ற பெயரில் ஆரம்பித்தார். நல்ல சம்பளம் கொடுத்து சிறந்த முறையில கேக் தயாரிப்பவர்களை வேலைக்கு வைத்தார். பேக்கரியில செய்யப்பட்ட சின்ன சீடை தொடங்கி பெரிய கேக் எதுவாக இருந்தாலும் அப்பா டேஸ்ட் பார்த்து ஓகே சொன்ன பிறகே விற்பனைக்காக ஸ்டாலுக்கு எடுத்துச் செல்வார்கள்.

தம் அடை...
கேக் வாங்க ஒரு முறை கடைக்கு வந்தவர்கள் பொருளோட தரம், சுவையால மீண்டும் வரத் தொடங்கினாங்க. வியாபாரம் மெள்ள அதிகரித்தது. ‘தம் அடை’ எனச் சொல்லப்படுற, ‘தம்ரூட்’ கேக், கூத்தாநல்லூரோட பாரம்பர்ய உணவு என்றே சொல்லலாம். ரம்ஜான் தொடங்கி வீட்டு விசேஷம் வரை எதுவாக இருந்தாலும் ‘தம்ரூட்’ தவிர்க்க முடியாத உணவாக அங்கம் வகிக்கும்.
எப்படித் தயாராகிறது தம் அடை...
தம் அடைக்கு இருக்குற ரெஸ்பான்ஸ்னால, வீட்டுல செஞ்சு வந்த அதை பேக்கரி யிலேயே செய்யத் தொடங்கினார். ‘தம் அடை’ என்பதை ‘தம்ரூட்’ என மாற்றியதுடன் செய்முறை யிலும் சின்னச் சின்ன மாற்றங் கள் செய்தார்.
ரவா, ஜீனி, முட்டை, மில்க் மேட், உடைத்த முந்திரி, நெய், டால்டா ஆகிய பொருள்கள் ‘தம்ரூட்’ செய்யப் பயன்படுத்தப் படுகின்றன.
முட்டையில ஜீனியைக் கொட்டி கரைய வைக்கணும்.அதன்பின்னர் ரவா, மில்க் மேட், முந்திரி, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் என ஒவ்வொன்றாக அதில் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ள வேண்டும். இட்லி மாவு போன்று கரண்டியில் எடுத்து ஊத்துற பக்குவத்தில் ‘தம்ரூட்’ மாவைத் தயார் செய்ய வேண்டும்.
பின்னர் வட்ட வடிவிலான அச்சில் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைப்போம். பிறகு சூடாக இருப்பதற்காக அதை தம்மில் வைப்போம். அதனாலேயே ‘தம்ரூட்’ என்கிறார்கள்.
சுத்தமான முறையில் தரமான பொருள்களால் டேஸ்டியாக செய்யப்பட்ட ‘தம்ரூட்’ குறுகிய காலத்திலேயே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தது.
10-ம் வகுப்பு படிச்சுட்டு...
தொடக்கத்துல சில்லறை வியாபாரம் மட்டும் செய்து கொண்டிருந்தோம். அப்பா அடிக்கடி வெளிநாட்டுக்குச் செல்வார். அதனால என்னிடம் பேக்கரியை ஒப்படைச்சிட்டார். பத்தாம் வகுப்பு படித்த நான் முழுமையாக பேக்கரியைக் கவனிக்கத் தொடங்கினேன்.
சில்லறை வியாபாரத்துடன் சேர்த்து மொத்த வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன். ஜூஸ்பெரி, பதர் பனியாரம், சீனி வாடா, இஞ்சி கொத்து உள்ளிட்ட அனைத்து கேக் வகைகளையும் தயார் செய்து வந்தாலும் ‘தம்ரூட்’, ஜூஸ்பெரி இரண்டுமே இன்றைக்கும் எங்களோட தனித்துவமிக்கதாக இருந்து வருகின்றன.

முத்துப்பேட்டை to ராமநாதபுரம்...
எங்க கடை ‘தம்ரூட்’டுக்கு கிடைக்கிற வரவேற்பை அறிந்து அதை விற்பனை செய்வதற்கான டீலர்ஷிப் கேட்டு பலர் வந்தாங்க. அவங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கத்தில் டீலர்ஷிப் கொடுத்தேன். முத்துப்பேட்டை தொடங்கி ராமநாதபுரம் வரையிலான கிழக்குக் கடற்கரை சாலைகளில் பேக்கரி அமைத்து எங்களிடம் ‘தம்ரூட்’ வாங்கி வியாபாரம் செய்கின்றனர்.
திருப்பூர், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங் களிலும், பாண்டிச்சேரியிலும் எங்களோட ‘தம்ரூட்’ கிடைக் கிறது. கூரியர் மற்றும் பார்சல் வழியாக குவைத், அபுதாபி, சவுதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர், லண்டன், ஆஸ்தி ரேலியா உள்ளிட்ட பல நாடு களுக்கு ஆர்டரின் பேரிலும் அனுப்பி வைக்கிறோம். ஒரு கிலோ ‘தம்ரூட்’ ரூ.400.
இப்போது பலரும் தங்கள் பேக்கரியில் ‘தம்ரூட்’ செய்கின்றனர். அதுக்கு மூலக்காரணம் நாங்கள்தான் என்பதை பெருமையாக உணர்கிறோம். ஆனாலும் எங்களோட ‘மெளலானா தம்ரூட்’ அவற்றிலிருந்து தனித்து வமாக இருப்பதே எங்களுக்கான சிறப்பு. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல பிரபலங்கள் எங்கள் கடை ‘தம்ரூட்’ கேக்குக்கான கஸ்டர்மர்களாக இருப்பது எங்களுக் கான பெருமிதம். கூத்தாநல்லூர் வர்ற யாரும் ‘தம்ரூட்’டை ருசிக்காம ஊருக்குத் திரும்பிப் போக மாட்டாங்க.
இவையெல்லாம் எங்க உழைப்புக்குக் கிடைச்ச பரிசாக நாங்க கருதுகிறோம். லாபத்தை நோக்கமாகக் கருதாமல் தரம், சுவை இரண்டையும் இரு கண்களாகக் கருதி மெயின்டெயின் செய்வதாலேயே அவை இப்போதும் சாத்தியமாகி வருகின்றன. அப்பா, தன்னோட ஆசைக்காக ரூ.1.5 லட்சம் முதலீட்டில் இந்தத் தொழிலில் கால்பதிச்சாங்க. நான், அதன் வியாபாரத்தை உலகம் முழுவதும் விரிவுபடுத்தி வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வச்சிருக்கேன்.
நூற்றுகணக்கான நபர்களுக்கு வருமான வாய்ப்பை வழங்கி வாழ்வாதாரத்துக்கு உதவி வருகிறது மெளலான பேக்கரி. கூத்தாநல்லூர் மெளலான பேக்கரில் செய்யப்படும் ‘தம்ரூட்’ கப்பல், விமானம் வழியாக உலகை சென்றடைவதே உன்னதமான எங்க உழைப்புக்குக் கிடைத்த கெளரவம்’’ என்றார் பெருமையுடன்.
இனி பட்டுக்கோட்டை, திருவாரூர் பக்கம்போனால், கூத்தாநல்லூர் மெளலானா ‘தம்ரூட்’ கேக்கை சாப்பிட மறக்காதீர்கள்!