
தொழில்துறை
கொரோனா வைரஸின் தாக்கம் தொழில் துறையைக் கடுமை யாக பாதித்துள்ளது. குறு, சிறு நிறுவனங்களின் மையமான கோவையிலும் தொழில்துறை ஏராளமான சவால்களைச் சந்தித்து வருகிறது. அதில் முக்கியமானது, தொழிலாளர் கள் பிரச்னை. கொரோனாவுக் குப் பிறகு இப்போதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் கோவைக்குத் திரும்பி வரவில்லை.
இந்நிலையில், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக் காக ரோபோடிக்ஸ் கிளஸ்டர் அமைக்கும் முயற்சியில் கோ-இந்தியா அமைப்பு ஈடுபட்டு உள்ளது. மக்கள் தொகை அதிகம் இருக்கும் நம் நாட்டில் ரோபோக்களைக் கொண்டு வருவதன்மூலம் வேலை வாய்ப்பு குறையாதா, இதற்கு இப்போது என்ன அவசியம் என கோ- இந்தியா அமைப் பின் தலைவர் கார்த்திக்கை சந்தித்துக் கேட்டோம்.

“இன்ஜினீயரிங் துறையில் உலக அளவில் இந்தியாவின் பங்களிப்பு 1% மட்டுமே. மக்கள் தொகை மிகுந்த நம் நாட்டில் இந்தத் துறைக்கான பங்களிப்பு மிக மிகக் குறைவு. மக்கள் தொகை அதிகம் இருப்பதால், குறைவான கூலிக்கு மக்கள் கிடைப் பார்கள் என்பது நமக்கு இருக்கும் கூடுதல் சிறப்பம்சம்.
ஆனால், வரும்காலத்தில் இது மாற வாய்ப்புள்ளது. ஜெர்மனி போன்ற நாடுகளில் ‘டார்க் ஃபேக்ட்ரீஸ்’ எனப் படும் மனிதர்கள் இல்லாத தொழிற்சாலைகள் வந்து விட்டன. இந்தியத் தொழில் துறையைப் பொறுத்தவரை, சராசரியாக 7-8% வருமானம், ஊழியர்களின் சம்பளத்துக்கு சென்றுவிடும். ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தைத் தொழில் துறையில் கொண்டு வரும்போது, முதலீடு என்பது சற்று அதிகமாக இருந்தாலும், ஊழியர்களின் சம்பளம் மிச்சமாகிக்கொண்டேதான் இருக்கும். இதற்கு வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்.
உலகம் முழுவதும் ரோபோடிக்ஸ், ஆட்டோ மேஷன் ஆகிவிட்டால், நம்மைவிட குறைவான விலைக்குப் பொருள்களை உற்பத்தி செய்து தரும் சூழல் உருவாகும். அப்போது உலக நாடுகளுடன் நம்மால் போட்டி போடமுடியாத நிலை உருவாகும்.
ஜெர்மன், ஐரோப்பா நாடுகள் சீனாவில் கொடுத்து உற்பத்தி செய்துவந்த நிலை மாறி, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கத் தொடங்கி உள்ளனர்.

அங்கு இந்த அளவுக்கு வேலையாட்கள் இல்லாத தால், ரோபோவை நம்பிதான் இறங்குகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் நம் எதிர்காலம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். ஒரு கட்டத்தில் ஜெர்மனியில் கிடைக்கும் பொருள் சற்று மலிவாகக் கிடைத்தால், நம் மக்களே அங்கு சென்று வாங்கத் தொடங்கிவிடுவார்கள். அதனால் தொழில்நுட் பத்தை நாம் சரியாகப் பயன் படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அப்போதுதான் சவாலை சமாளிக்கக் கூடிய சக்தி கிடைக்கும்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்துவது மிக மிக அடிப்படையான நிலையில்தான் உள்ளது. இந்தியத் தொழில்துறை ஆட்டோமொபைல்ஸ் உள்ளிட்ட துறைகளில் மொத்தம் 0.1 சதவிகிதம்தான் ரோபோடிக்ஸ் பயன்படுத்துகிறது. உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் 3 சி.என்.சி ரோபோ மெஷின்கள் உள்ளன. இந்த இடத்தில் வேலையாட்களை நியமித் தால், ஒரு ஷிப்ட்டுக்கு மூன்று பேர் வீதம் ஆறு பேர் தேவை. அதுவே ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தில் ஒரு ரோபோ போதும். தேநீர் இடைவெளி, உணவு இடைவெளி, விடுப்பு என எதுவும் தேவையில்லாமல் வேலை செய்துகொண்டே இருக்கும். இதன்மூலம் உற்பத்தித்திறன் 1.5 மடங்கு அதிகமாகும். உற்பத்தித் திறன் அதிகரிக்கும்போது, விலையும் குறையும்.
வளர்ந்து வரும் நாடுகளுக்கு இதுபோன்ற தொழில் நுட்பம் மிகவும் அவசியம். நம் நாட்டில் அதிக ஊழியர்கள் இருப்பதாகச் சொல்கிறோம். உண்மையில் நம் வளர்ச்சிக்கு ஏற்ற அளவில் அது இல்லை. ஒரு பக்கம் வேலையில்லா திண்டாட்டம், மறுபக்கம் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என இருவேறு பிரச்னைகளும் இங்குதான் இருக்கின்றன. அதைச் சரிசெய்ய ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் கை கொடுக்கும். கோவையைப் போல இந்தியாவில், வேறு எங்கும் குறு, சிறு நிறுவனங்கள் அதிகம் இல்லை. பெரு நிறுவனங்களை மட்டுமே நம்பி இயங்கினால் இனி வெற்றி பெற முடியாது. எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமென்றால், குறு சிறு நிறுவனங்களிடம் இந்தத் தொழில்நுட்பத்தை எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு கோவை சிறந்த இடம்.
டென்மார்க் நாட்டில் ஒடென்சி ரோபோடிக்ஸ் கிளஸ்டர் உள்ளது. உற்பத்தி, சோதனை, மார்க் கெட்டிங் என அனைத்து பயன்பாட்டுக்கும் இந்த கிளஸ்டர் உதவி செய்கிறது. அதை மாடலாகக் கொண்டுதான் இங்கேயும் ஒரு ரோபோடிக்ஸ் கிளஸ்டரை உருவாக்கத் திட்ட மிட்டுள்ளோம். இதற்கு தொழில்நுட்பரீதியாக உதவிக்காக பி.எஸ்.ஜி கல்வி நிறுவனம் இணைந் துள்ளது. எங்களின் இந்த யோசனையை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். இதற்கு தகுந்த நிலம் போன்ற விஷயத்தில் அரசின் உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்’’ என்றார்.

அடுத்து, பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி ரோபோடிக்ஸ் துறை தலைவர் வினோத் ரோபோ தொழில்நுட்பம் குறித்து விளக்கினார்.
‘‘ரோபோடிக்ஸ் ஆட்டோ மேஷன் கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகளில் நல்ல வளர்ச்சி யைப் பெற்று வருகிறது. ஆனால், தொழில் துறையில் தற்போது நாம் பயன்படுத்தும் ரோபோக் களில் 99.9% வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவைதான். கொரோனாவுக்கு முன் இந்தியா வில் 4,530 ரோபோக்களை நிறுவினர். அதில் 4,500 ரோபோக் கள் இறக்குமதி செய்யப் பட்டவை. சுமார் 30 ரோபோக்கள் தான் இந்தியாவில் செய்யப் பட்டன.
இறக்குமதி ரோபோக்களுக்குக் காத்திருப்புக் காலகட்டமும் அதிகம். உலக அளவில் இதற்கான தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல நிறுவனங்கள் ஆள்களைக் குறைத்து, ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. இப்போது கோவையில் உள்ள பவுண்டரி களும்கூட ஆங்காங்கே ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தத் தொடங்கிவிட்டன.
இந்தியாவிலும் ரோபோக் களின் தேவை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறது. இன்று ஒரு ரோபோ ஆர்டர் செய்தால், குறைந்தபட்சம் 16 வாரங்களுக்கு பிறகுதான் கிடைக்கும். எனவே, இந்தியா விலேயே ரோபோக்களை தயாரிக்க வேண்டும். இதற்கு உற்பத்தித்திறன் மற்றும் அதற்குத் தகுந்த ஊழியர்கள் அவசியம். கோவையைச் சுற்றி உள்ள கல்லூரிகளில் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் துறை கள் உள்ளன. அங்கு படித் துவரும் இளைஞர்களை இதற்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். அரசின் உதவியுடன் கோவை யில் ரோபோடிக்ஸ் பூங்கா அமைத்தால், எதிர்காலத்தில் இந்தியாவின் ரோபோடிக்ஸ் ஹப்பாக கோவை மாறும்” என்றார் உறுதியாக.
தமிழக அரசாங்கம் கவனிக்குமா?