Published:Updated:

லக்ஷ்மி விலாஸ் வங்கி இயக்குநர்கள்மீது குற்றச்சாட்டு - பங்கு விலை சரிந்தது!

ரெலிகேர் ஃபின்வெஸ்ட் என்ற நிதிச்சேவை நிறுவனம், லக்ஷ்மி விலாஸ் வங்கியின்மீது டெல்லி பொருளாதாரக் குற்றப்பிரிவில் அளித்த மோசடிப் புகாரின் அடிப்படையில் விசாரணைசெய்து, முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

லக்ஷ்மி விலாஸ் வங்கி
லக்ஷ்மி விலாஸ் வங்கி ( vikatan )

லக்ஷ்மி விலாஸ் வங்கியின் இயக்குநர்கள்மீது டெல்லி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, அந்த வங்கியின் பங்கு விலை 5% இறங்கி, 'லோ சர்க்யூட்' விலையைத் தொட்டது. இன்று வர்த்தகத் தொடக்கத்தில் 39 ரூபாயாக இருந்த பங்கு விலை, 36.55 ரூபாய்க்கு இறங்கியது. மேலும், இந்த நிறுவனத்தின் 5,920 பங்குகளுக்கு வர்த்தக ஆர்டர் இருந்தும் வாங்குவதற்கு யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

மோசடி
மோசடி
vikatan

ரிலிகேர் ஃபின்வெஸ்ட் என்ற நிதிச்சேவை நிறுவனம், லக்ஷ்மி விலாஸ் வங்கியின்மீது டெல்லி பொருளாதாரக் குற்றப்பிரிவில் அளித்த மோசடிப் புகாரின் அடிப்படையில் விசாரணைசெய்து, முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. லக்ஷ்மி விலாஸ் வங்கியில், ரெலிகேர் ஃபின்வெஸ்ட் நிறுவனம் வைப்பு நிதியாக வைத்திருந்த ரூ.790 கோடியை, அந்த வங்கி முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டியது.

புகாரின்பேரில் முதற்கட்ட விசாரணை நடத்திய போலீஸார், வங்கி இயக்குநர்கள்மீது நம்பிக்கை மோசடி, முறைகேடு மற்றும் சதி ஆகிய குற்றச்சாட்டுகளோடு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இதை எதிர்கொள்வதற்காக, லக்ஷ்மி விலாஸ் வங்கி தரப்பில் பொருத்தமான சட்ட நடவடிக்கைக்கான ஆலோசனை நடத்தப்பட்டுவருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் - லக்ஷ்மி விலாஸ் வங்கி
இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் - லக்ஷ்மி விலாஸ் வங்கி
vikatan

ஏற்கெனவே, இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் லக்ஷ்மி விலாஸ் வங்கியை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து ஒப்புதல் பெறப்பட்டிருந்தது. லக்ஷ்மி விலாஸ் வங்கியின் இயக்குநர்கள்மீது தற்போது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகுறித்து இந்தியா புல்ஸ் தரப்பில் எவ்வித கருத்தும் வெளியிடப்படவில்லை.