அமெரிக்க ஊடக நிறுவனமான ஃபோர்ப்ஸ் (Forbes), உலகம் முழுவதுமுள்ள டாப் பில்லியனர்கள், மில்லியனர்கள், வளர்ந்து வரும் பணக்காரர்களின் பட்டியலை அவ்வப்போது ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஆசியாவின் சமூக தொண்டுக்கான 16-வது பதிப்பு பட்டியலை, டிசம்பர் 6-ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டது.

அதில் கௌதம் அதானி, ஷிவ் நாடார், அஷோக் சூடா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி ரூ.60,000 கோடிக்கு சமூக நலப்பணிகளுக்குச் செலவிடுவதாக உறுதி அளித்ததற்காக இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 1996-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அதானி அறக்கட்டளை இந்தப் பணத்தைச் சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு அளித்து உதவும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அடுத்ததாக ஹெச்.சி.எல் டெக்னாலஜியின் ஷிவ் நாடார் தனது அறக்கட்டளை மூலமாக, 1 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சமூக நலத் திட்டங்களுக்கு அளித்து உதவி வருகிறார். பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங் களுக்கு உதவி வரும் இவர், 1994-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தன்னுடைய அறக்கட்டளைக்கு சுமார் 11,600 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

முதுமை மற்றும் நரம்பியல் தொடர்பான உடல் நலக் கோளாறுகளுக்குத் தீர்வு காணும் வகையில் 2021-ல் தொடங்கப்பட்ட மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்குத் தொழிலதிபர் அசோக் சூட்டா ரூ.600 கோடி வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஆராய்ச்சி அறக்கட்டளையை 200 கோடி ரூபாய் செலவில் இவர் தொடங்கினார்.