நடப்பு
Published:Updated:

நாணயம் லைப்ரரி : வாழ்க்கையை மாற்றும் நேரம்!

நாணயம் லைப்ரரி : வாழ்க்கையை மாற்றும் நேரம்!

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்துவது பிலிப் ஜிம்பார்டோ மற்றும் ஜான் பாய்டு என்ற இருவர் இணைந்து எழுதிய ‘தி டைம் பாரடக்ஸ்’ எனும் நேரம் பற்றிய இன்றைய மனநிலையை நம்முடைய முன்னேற்றத்துக்காக உபயோகிப்பது எப்படி எனும் புத்தகத்தை.

ரோம் நகரில் இருக்கும் ஒரு நினைவகத்தில் சொல்லப்பட்டி ருக்கும் விஷயத்தில் இருந்து ஆரம்பிக் கின்றனர் ஆசிரியர்கள். அந்த நினைவகத்தில் இருக்கும் ஓர் அறை முழுவதும் மனித எலும்புகள், மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டதாம். எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகளில் கலரை நீக்கி அதன்மூலம் செய்யப்பட்டிருக்கும் அலங்காரத்தையும், முழு மனித எலும்புக்கூட்டின் அமைப்பை சாண்ட்லியர் விளக்கைப்போல் தொங்கவிட்டிருப்பதையும் பார்த்து சுற்றுலாப் பயணிகள், என்ன ஒரு மாறுபட்ட வேலைபாடு என மூக்கின் மேல் விரலைவைத்துச் சொல்வார்களாம்.

இவர்கள் அனைவருமே ஒரு முக்கியமான விஷயத்தைக் கண்டு கொள்ளாமலே செல்வார்கள். அந்த அலங்காரத்துக்கு கீழே எழுதப்பட்டுள்ள முக்கியமான வாசகத்தை யாருமே படிப்பதில்லை. அப்படி என்ன முக்கியமான வாசகம் என்கின்றீர்களா? ‘இன்றைக்கு நீங்கள் இருப்பதைப்போல, இவர்களும் ஒருநாள் இருந்தார்கள். ஒருநாள் நிச்சயமாக இவர்களைப்போல் ஆகிவிடுவீர்கள்’ என்ற காலத்தின் தத்துவத்தைச் சொல்லும் வாசகம்தான் அது.

பூமியில் நாம் வாழும் காலம் மிக மிகக் குறைவானது. ஆனால், நாம் இதை ஒருபோதும் நினைவில் கொள்வதே யில்லை. இதைத்தான் நினைவூட்டுகிறது இந்த வாசகம். இந்தப் புத்தகத்தின் நோக்கம் நேரமும் உங்களுடைய வாழ்க்கையும் என்பதுதான் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

நேரத்துடன் உங்களுடைய வாழ்க்கை உறவை மேம்படுத்திக்கொள்வது என்பதைச் சொல்வதுதான் இந்தப் புத்தகத்தின் அடிநாதம். நேரம் குறித்த நம்முடைய மனப்பான்மை (ஆட்டிட்யூட்) மற்றும் நம்மைச் சுற்றி யிருப்பவர்களுடைய மனப்பான்மை என்ற இரண்டுமே நம்முடைய வாழ்வில் நாம் என்ன சாதிக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்வதாக இருக்கிறது என்று சொல்கின்றனர் ஆசிரியர்கள்.

நாணயம் லைப்ரரி :  வாழ்க்கையை மாற்றும் நேரம்!

முப்பது வருடங்களாக 15 நாடுகளில் ஏறக்குறைய பத்தாயிரம் பேரிடம் ஆய்வு செய்து கண்டறியப்பட்ட விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள் ஆசிரியர்கள்.

நேரம் குறித்த உங்களுடைய மனப்பாங்கு பெரிய அளவில் உங்களுடைய வாழ்க்கையை முடிவு செய்கிறது என்பதை அடித்துச் சொல்லும் ஆசிரியர்கள், இதை நாம் ஒருபோதும் உணர்வதே இல்லை. இந்தப் புத்தகத்தின் மூலம் நேற்றைய தினத்தை மீட்டெடுக்கவும், இன்றைய தினத்தை அனுபவிக்கவும், நாளைய தினத்தை கைக்குள் கொண்டுவரவும் உதவுவோம். நேற்று நாம் பார்த்த பார்வை, இன்று மற்றும் நாளைய தினத்தில் அது  செயல்படும் விதம் போன்றவற்றை மாற்றுவதற்கு இந்தப் புத்தகம் உத்தரவாதம் தரும் என்கின்றனர்.

ஒரு அமெரிக்க ஜோக்கை பார்ப்போம். அமெரிக்க நகரத்தில் இருந்து கிராமத்துக்கு வந்த ஓர் இளைஞன், பண்ணை ஒன்றில் விவசாயி ஒருவர் வெள்ளைப் பன்றிகளுக்கு மரத்தில் இருக்கும் ஆப்பிள்களை தின்பதற்கு கொடுத்துக் கொண்டி ருப்பதைப் பார்த்தாராம். அவர் நடந்து கொண்ட விதம் ரொம்பவுமே ஆச்சர்யம் அளிப்பதாக இருந்ததாம். பன்றிகளை கையில் தூக்கி மரத்தில் இருக்கும் ஆப்பிள்களைப் பொறுமையாக தேவையான அளவு சாப்பிடச் செய்து கொண்டிருந்தாராம்.

‘பண்ணையில் இருக்கும் பன்றிகளுக்கு இந்த விதத்தில் உணவளிக்க எக்கச்சக்க நேரமாகுமே, பேசாமல் மரத்தில் இருந்து ஆப்பிள்களைப் பறித்து கீழே போட்டால் தேவையான அளவுக்கு பன்றிகளே சாப்பிட்டுக்கொள்ளுமே, நேரமும் மீதமாகுமே’ என்றாராம் இளைஞன். விவசாயியோ, ‘பன்றிகளுக்கு நேரம் பற்றி என்ன கவலை! நேரம் சேமித்தால் அவை என்ன சாஃப்ட்வேரா எழுதப்போகுது’ என்றாராம்.

இந்த ஜோக்கில் முக்கியமானதொரு விஷயம் இருக்கிறது. பன்றிகளுக்கு நேரம் என்பது முக்கியமில்லை என்றாலும், விவசாயியின் நேரமும் கூடவே வீணாகிறது என்பதை அவர் உணரவேயில்லை. அதேபோல்தான் நாம் அனைவருமே நிறைய பன்றிகளை சுமந்து

நாணயம் லைப்ரரி :  வாழ்க்கையை மாற்றும் நேரம்!

கொண்டிருக்கிறோம். அவற்றின் நேரம்தானே வீணாகிறது என்று நினைத்துக்கொண்டு... என்று கலாய்க்கின்றனர் ஆசிரியர்கள்.

நம்மில் பெரும்பாலானோர் வாழ்க்கை என்பது நீண்டநெடும் பயணம். அளவில்லாத நேரம் கையில் இருக்கிறது என்ற மிதப்பிலேயே வாழ்கிறோம். மிகவும் நெருக்கமாக தெரிந்தவர்கள் அகால மரணமடையும் போதோ, 9/11 (இரட்டை கோபுர விமான தகர்ப்பு) போன்ற சம்பவங்கள் நிகழும்போது மட்டுமே வாழ்க்கை என்பது மிகவும் குறுகியது என்பது நமக்குப் புரியும். அதற்குப் பின்னால் குறுகிய காலத்திலேயே அது நமக்கு மறந்தும் போகிறது என்கிறார்கள்.

பணம், தங்கம், வைரம் எல்லாமே மதிப்புமிக்கதுதான். ஆனால், புதியதாக கரன்சி அச்சடிக்கலாம். புதியதாக பூமிக்கடியில் தங்க குவியல் இருப்பதைக் கண்டுபிடிக்கலாம். வைரம் இருப்ப தையும்கூட கண்டுபிடிக்கலாம். ஆனால், யாராவது கொஞ்சம் கூடுதலாக நேரத்தைக் கண்டுபிடித்து தரமுடியுமா? முடியாது இல்லையா? அதுதான் நேரத்தின் சிறப்பு என்கிறார்கள் ஆசிரியர்கள். 

நேரத்தின் முக்கியமான இம்சையே அதை சேமித்துவைக்க முடியாததுதான். நண்பர் ஒருவர் ஆயிரம் ரூபாய் கடன் கேட்கிறார். திரும்பி வராவிட்டால் சிக்கல். பேசாமல் இல்லை என்று சொல்லிவிட்டால், ஆயிரம் ரூபாய் லாபம்தான். நம்முடைய நேரத்தின் மதிப்பு மணிக்கு 333 ரூபாய் என வைத்துக் கொள்வோம்.

 அதே நண்பர் சாயங்காலம் டின்னருடன் கூடிய பார்ட்டிக்குக் கூப்பிடுகிறார். குறைந்தபட்சம் மூன்று மணிநேரம் வீணாகப் போகும். ஆயிரம் ரூபாயை காசாகக் கொடுக்கத் தயங்கிய நாம், அதேசமயத்தில் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நேரத்தை சுலபமாக அவருக்குத் தந்துவிடுகிறோம். இதற்கு முதல் காரணம், நம்முடைய நேரத்தின் மதிப்பு நமக்குத் தெரிவதில்லை.

 இரண்டாவதாக, டின்னரில் இல்லாவிட்டால் வேறெங்காவது நம்முடைய நேரம் வீணாகச் செலவாகத் தானே போகிறது என்ற எண்ணம்தான். ஏனென்றால், நேரத்தை வங்கியில் போட்டு சேமிக்க முடியாதே! பணத்தை புத்திசாலித்தனமாக செலவு செய்யத் தெரிந்த நமக்கு, நேரத்தை அதே கருத்துடன் செலவு செய்யத் தெரிவ தில்லை என்கின்றனர் ஆசிரியர்கள்.

மிகச் சிறந்த சாதனைகளைச் செய்ய இரண்டு விஷயங்கள் வேண்டும். முதலாவதாக, தெளிவான திட்டம். இரண்டாவதாக, தேவைக்கு மிகக் குறைவான நேரம் என்று அறிஞர் ஒருவர் சொல்லியுள்ளார்.

நேரம் குறித்த உங்கள் பார்வையே உங்கள் மனநிலையை அமைக்கிறது என்று சொல்லும் ஆசிரியர்கள் பொதுவாக, மனிதர்களிடையே ஆறு வகையான நேரம் குறித்த பார்வை இருக்கிறது என்பதை அவர்களுடைய ஆய்வின் மூலம் கண்டறிந்தனர் என்கின்றனர்.
 
இழந்த நேரத்தை மனதில்கொண்டு செயல்படுதல், நடுத்தர எதிர்காலத்தை மனதில்கொண்டு செயல்படுதல், இன்றைய தினத்தை  மட்டுமே மனதில்கொண்டு  செயல்படுதல், கடந்தகால நேர இழப்புகளைப் பற்றி மிகக் குறைந்த அளவே உணர்ந்திருத்தல், தற்போதைய நேர இழப்புகளைப் பற்றி சற்றும் உணராதிருத்தல் என்ற ஆறு பிரிவுகளான மனப்பாங்கு மனிதர்களிடையே இருக்கிறது என்றும், இந்தப் பிரிவுகள் குறித்து விளக்கமான உரைகளையும் எழுதியுள்ளனர் ஆசிரியர்கள்.

ஒவ்வொரு மனிதனும் நன்றாகச் சிந்தித்தால், இந்த நிலைகளில் எந்த நிலையில் அவனுடைய மனப்பாங்கு இருக்கிறது என்று உணர்ந்துகொண்டு, தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள முடியும் என்றும், அதற்கான வழிமுறைகளையும் இந்தப் புத்தகத்தில்  சொல்லியுள்ளனர்.
வாழ்க்கை மிகவும் சிறியது என்பதைப் புரிந்து கொள்ளவும், இந்த சிறிய வாழ்க்கையில் எதற்காக நாம் காத்திருக்கிறோம் என்ற கேள்வியைக் கேட்கவும், நேரத்தை ஒரு முக்கியமான விஷயமாகப் பார்க்கவும், அப்படிப் பார்க்க முடிந்த தருணத்திலேயே நம் வாழ்க்கை நம் கையில் என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்பதையும் ஆராய்ச்சிகளின் மூலம் கிடைத்த ஆதாரங் களுடனும், உதாரணங்களுடனும், சிறுசிறு சுவையான நிகழ்வுகளைத் தொகுத்து இந்தப் புத்தகத்தில் கொடுத்துள்ளனர் ஆசிரியர்கள்.

கடந்த காலத்தில் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டவர்கள் மட்டுமே எதிர்காலத்தைக் கட்டுப்படுத்த முடியும். நிகழ்காலத்தைக் கட்டுப்படுத்த முடிகிறவர்களால் மட்டுமே கடந்த காலத்தில் கட்டுப்பாட்டுடன் இருந்திருக்க முடியும் என்று சொல்லி முடிக்கின்றனர்.

காலம் பொன் போன்றது என்று சொல்கிறோம். இல்லை, பொன்னைவிட உயர்ந்தது என்று சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறையேனும் படித்தேயாக வேண்டும்.

- நாணயம் டீம்
(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங்
வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)

குஜராத்தைக் குறிவைக்கும் அமேசான்!

ஆன்லைன் ரீடெயில் நிறுவனமான அமேசான் குஜராத் மாநிலத்தில் இரண்டாவது செயல்பாட்டு மையத்தைத் தொடங்குவதற்கு இரண்டு பில்லியன் டாலர் (ரூபாய் மதிப்பில் 12,280 கோடி) முதலீடு செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் ஏற்கெனவே மும்பை, பெங்களூரு, டெல்லி, சென்னை, ஜெய்பூர், அஹமதாபாத் மற்றும் தாரு (Tauru) ஆகிய ஏழு இடங்களில் தனது மையங்களை அமைத்துள்ளது.