Published:Updated:

நாணயம் லைப்ரரி : பிரச்னைகளைத் தீர்க்க நான்கு வழிகள்!

நாணயம் லைப்ரரி : பிரச்னைகளைத் தீர்க்க நான்கு வழிகள்!

பிரீமியம் ஸ்டோரி

புத்தகத்தின் பெயர்: தி இன்ஸ்டன்ட் சர்வைவர்
ஆசிரியர்: ஜிம் மூர்ஹெட்
பதிப்பகம்: Greenleaf Book Group

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்துவது ஜிம் மூர்ஹெட் எழுதிய ‘தி இன்ஸ்டன்ட் சர்வைவர்’ எனும் புத்தகத்தை. எல்கேஜி முதல் பிஹெச்டி வரை படித்திருக்கும் அனைவருக்குமே புதிரான விஷயம் பிரச்னைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்பதுதான். ஏனென்றால், நம்முடைய சமூக அமைப்பு பிரச்னைகளை உருவாக்குவதில் நிகரற்றதாக இருக்கிறதே தவிர, அவற்றைச் சமாளிப்பது எப்படி என்பதைச் சொல்லித்தருவதில்லை. தாய், தகப்பனும் சொல்லித் தருவதில்லை, பள்ளிகளும் கற்றுத்தருவதில்லை, நாம் வேலைபார்க்கும் நிறுவனத்துக்கும் இதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. இதுமாதிரியான சூழ்நிலைகளை எதிர்கொள்வது எப்படி என்பதைச் சொல்வதுதான் இந்தப் புத்தகம்.

புத்தகத்தின் ஆசிரியர் ஜிம் மூர்ஹெட் முதன்முதலாக வேலைக்குச் சேருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால்தான் அவருடைய அப்பா நுரையீரல் புற்றுநோயால் இறந்துபோனாராம். துக்கம் தொண்டையை அடைத்தாலும் பிழைப்பைப் பார்க்க வேண்டுமே என வேலைக்குப் போக ஆரம்பித்தார். அலுவலகத்தில் அவருடன் வேலை பார்ப்பவர்கள் சிலருக்கு அவருடைய தந்தை இறந்த செய்தி தெரிந்தும், அவர்களுடைய கவனம் மற்றும் அக்கறை எல்லாம் வேறு விஷயங்களில் இருந்ததே தவிர, ஆறுதல் சொல்ல யாருமேயில்லை. ‘என் பிரச்னை எல்லோருக்கும் தெரிந்ததாக இருந்தது. ஆனால், கவனிக்கவோ, ஆறுதல் சொல்லவோதான் ஆளும் இல்லை; நேரமும் இல்லை’ என்கிறார் ஆசிரியர்.

நாணயம் லைப்ரரி : பிரச்னைகளைத் தீர்க்க  நான்கு வழிகள்!

இப்படி வேகமாக ஓடிக்கொண்டி ருக்கும் உலகில் மனிதன் ஏறக்குறைய தனித்தீவாய் ஆகிக்கொண்டு வருகிறான். தன் சங்கடங்கள் மற்றும் கவலைகளை எல்லாம் தன் மனதிலேயே போட்டு மூடிவைத்துக்கொண்டு தனியே தன்னந் தனியே குமைகிறான். இப்படித் தனியாகக் குமைவதால் என்ன குடியா முழுகிவிடப்போகிறது என்கிறீர்களா? அவரவர் பிரச்னையை அவரவர்தானே பார்த்துக்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு கம்பெனியா கூடவந்து ஆறுதல் சொல்லும் என்று சிலர் கேட்கலாம். இப்படிக் கேட்பது சரியல்ல என்பதற்கு அடுத்துவரும் புள்ளிவிவரத்தைப் படியுங்கள்.

வருடத்துக்கு ஏறக்குறைய 75 பில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டம், இதுபோன்று பணியாளர்களைத் தனியாகக் குமையவிடுவதனால் மட்டுமே அமெரிக்காவில் நடக்கிறது. தனிமனித மனக் குமைச்சலால் ஏற்படும் உற்பத்தித்திறன் குறைவு, தவறுகள், விபத்துகள் போன்றவை இத்தனை பெரிய நஷ்டத்தை உருவாக்கிவிடு கின்றன. பொருளாதாரம் நன்றாகப் போகும்போதுகூடப் பரவாயில்லை. ‘பொருளாதாரம் கொஞ்சம் நொண்டி யடிக்கும்போது இந்த மாதிரியான குமைச்சல்களினால் இரட்டிப்பு நஷ்டம் உருவாகும் வாய்ப்புள்ளது’ என்கின்றார் ஆசிரியர்.

இந்த நஷ்டத்தைப் போக்க ஒரே தீர்வு, பிரச்னைகளைத் தீர்ப்பதில் நிர்வாகமும் தனிமனிதர்களும் எப்படி இணைந்து செயல்பட முடியும் என்கிற  வழிமுறைகளைக் கண்டறிவதுதான். இந்தப் புத்தகத்தில், பிரச்னைகளைச் சமாளிப்பதற்கு நான்கு படிநிலைகளை விளக்கமாகச் சொல்லியுள்ளார் ஆசிரியர்.

முதலாவதாக, சும்மா விறைப்பாக சினிமா போலீஸ் போன்ற மனநிலையில் இருந்து டீல் செய்வது. இது எப்படிங்க சாத்தியம் என்பீர்கள். வேறு வழியே இல்லை. சாதாரணமாக ஒரு பிரச்னை வந்தால், நம்மைச் சுற்றியிருப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்? கொஞ்சம் அமைதியாக இருங்க. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று முடிவு எடுக்காதீங்க என்றுதானே!

இப்படி அமைதியாக இருந்து செயல்பட்டு பிரச்னை தனியாகவும், நாம் தனியாகவும் பிரிக்கப்பட்டு உணரப்படும்போது மட்டுமே என்ன பிரச்னை, எதனால் பிரச்னை, நம்மால் அதற்கு என்ன செய்ய முடியும், இதுபோன்ற பிரச்னைகளை நாம் ஏற்கெனவே சந்தித்தபோது என்ன மாதிரியான செயல்களைச் செய்தோம், தற்போது அவற்றில் ஏதும் முன்னேற்றங்களைச் செய்ய முடியுமா என்பது போன்ற கேள்விகளைக் கேட்கவும், அதற்கான விடைகளைப் பெறவும் முடியும் என்கின்றார் ஆசிரியர்.

இரண்டாவதாக, நண்பர்களை நாடுங்கள் என்று சொல்கிறார். நம்மைச் சுற்றியிருப்பவர்களைவிட நண்பர்களே பிரச்னையின்போது அணுகுவதற்குச் சரியான ஆட்கள் என்கிறார் ஆசிரியர். நண்பர்கள், நமக்கு நல்லது மட்டுமே நினைக்கும் உறவினர்கள், ஆலோசகர்கள் போன்றவர்களை அணுகுவதன் மூலம் பிரச்னையை இன்னமும் தெளிவாகப் புரிந்துகொள்ளவும் அதை எதிர்கொள்ளத் தேவையான சரியான அணுகுமுறையைக் கண்டுபிடிக்கவும் முடியும் என்கிறார் ஆசிரியர்.

தனியொரு ஆளாய் பிரச்னையைச் சமாளிப்பது என்பது மிக மிகக் கடினமான விஷயம் என்று சொல்லும் ஆசிரியர், இதில் ராணுவத்தின் அணுகுறையை நினைவில் கொள்ள வேண்டும் என்கின்றார். ராணுவத்தைப் பொறுத்தவரை, ஒத்தையாய் வரும் எதிரியை போட்டுத்தள்ளுவது சுலபம். ஆனால், இரண்டு மற்றும் இரண்டுக்கும் மேற்பட்ட எதிரிகள் சேர்ந்துவரும்போது அவர்களை ஜெயிப்பது அவ்வளவு சுலபமில்லை என்ற கருத்தை வைத்தே செயல்படுவார்கள்.

நாணயம் லைப்ரரி : பிரச்னைகளைத் தீர்க்க  நான்கு வழிகள்!

அதேபோல்தான் பிரச்னையும். ஒத்தை ஆளாய் நாம் அதை எதிர்கொண்டால், அது நம்மைப் போட்டுத்தள்ளிவிடும். நண்பர்களையும், ஆலோசகர்களையும் சேர்த்துக்கொண்டு எதிர்கொண்டால், தாக்குதலின் உக்கிரம் குறைந்து, வெற்றிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்கிறார் ஆசிரியர்.

மூன்றாவதாக ஆசிரியர் சொல்வது, நிமிர்ந்து நில் என்பதை. பிரச்னை என்னோடது. நான்தான் எதிர்கொள்ள வேண்டும். பிரச்னையே இல்லாத மனிதர்கள் இருக்கிறார்களா நாட்டிலே என்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டு பிரச்னைகளை நிமிர்ந்து நின்று சமாளிக்கும் மனநிலையினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படி துணிச்சலான அணுகுமுறையை எடுப்பதன் மூலம் பிரச்னையை வெல்லுவதற்கான வழிமுறை உங்களுக்குப் புலப்படும். நீங்கள் வாழும் சமூகத்துக்கு அட, அந்த ஆள் தைரியக்காரனப்பா, பிரச்னை வந்தால் தைரியமாக எதிர்கொள்வான் என்கிற செய்தியும் போய்ச் சேரும். அதனால், புதியதாய் பிரச்னை ஒன்றும் கிளம்பாது (கிளப்பாது!). பெரும்பாலான பிரச்னைகளைக் கிளப்புவதே நாம் சார்ந்திருக்கும் சமூகம்தானே என்கிறார் ஆசிரியர்.

நான்காவதாக ஆசிரியர் சொல்வது, இன்றைய பிரச்னையை மட்டும் தீர்த்துக் கொள்வதில் முனைப்பாக இருந்து பிரயோஜனம் ஏதுமில்லை. நீங்கள் எடுத்துவைக்கும் ஓவ்வொரு அடியும் இனி பிரச்னை என்பது எதிர்காலத்தில் உங்களை நோக்கி வரவேகூடாது என்பதைப்போல் தெளிவான, உறுதியான அடியாக இருக்க வேண்டும் என்கிறார். இப்படி தெளிவான மற்றும் தைரியமான பிரச்னைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தீர்கள் என்றாலே எதிர்காலத்தில் பிரச்னை தரக்கூடிய அளவுக்கு நீங்கள் அசிரத்தையாய் விட்டுவைத் திருக்கும் விஷயங்கள் எல்லாமே வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

நாணயம் லைப்ரரி : பிரச்னைகளைத் தீர்க்க  நான்கு வழிகள்!

அப்படி வெளிச்சத்துக்கு வந்தால், அட, இதுகூட பின்னொருநாளில் பிரச்னையாகலாமே என்பதை நீங்களே கண்டுபிடித்து அதை முளை யிலேயே கிள்ளியெறிந்துவிடுவீர்கள் என்கிறார் ஆசிரியர்.

இந்த நான்கு வழிகளையும் சீரான முறையில் கடைப்பிடித்தால் தற்போது கையில் இருக்கும் பிரச்னைகளைப் புறமுதுகிட்டு ஓடவைத்து எதிர்காலத்தில் பிரச்னைகளுக்கு நீங்கள் ஒரு சிம்மசொப்பனமாக மாறிவிடலாம் என உற்சாகமாகச் சொல்கிறார் ஆசிரியர். நம்மில் பிரச்னை எதுவும் இல்லாத ஆட்கள் யாராவது இருக்கிறோமா என்ன? எனவே, அனைவரும் இந்தப் புத்தகத்தை ஒருமுறை அவசியம் படிக்கலாம்.

- நாணயம் டீம்
(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)

ஐ.டி வேலைகள்  50% குறையும்!

ஐ.டி துறையில் அடுத்த நான்கு ஆண்டுகளில் புதிய வேலைவாய்ப்புகள் 50% குறையும் என்று கிரிஸில்  தெரிவித்துள்ளது. இதன் ஆய்வறிக்கையில் 2017-18-ம் நிதியாண்டில், ஐ.டி துறையில் பணியாட்களை புதிதாத பணிக்கு அமர்த்துவது 1.05 லட்சத்திலிருந்து 55,000-ஆக குறையும் என்று தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில், 31 லட்சம் பணியாளர்கள் ஐ.டி துறையில் வேலை செய்து வருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு